திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - இளைப்பு நோய் (Consumption) & உளமாந்தை

சயம் / ஈளை / இளைப்பு நோய் :

            கபத்தால் விளையும் நோய்களில் மிகவும் முக்கியமானது சயம் என்னும்  இளைப்பு நோயாகும். “கொல்லவரும் நோய்களில் தொல்லை தரும் சயம்” என்று கூறுவதிலிருந்து இதன் கொடுமையை உணரலாம். இந்நோயானது உடலின் வலிமையை குறைத்து, உடலின் 7 தாதுக்கள் மற்றும் அபானன், உதானன் என்னும் வாயுக்களையும் கேடு அடையச் செய்யும். ஈளை அல்லது சயம் என்னும் இளைப்பு நோய் 12 வகைப்படும்.

            மேலும் இந்த 12 வகையான இளைப்பு நோய்களைத் தவிர்த்து உளமாந்தை என்ற குடல் இளைப்பு நோயும் இளைப்பு நோயின் ஒரு பிரிவாக அதற்குரிய குணங்களோடு அறியபடுகிறது. இது 4 வகைப்படும். ஆக இளைப்பு மற்றும் உளமாந்தை நோய்கள் மொத்தம் 16 வகைப்படும்.

இளைப்பு நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அடிக்கடி பட்டினி இருத்தல்
  2. இரவில் விழித்து இருத்தல்
  3. அதிக உழைப்பு
  4. நாட்பட்ட நோய்கள்
  5. மன அழுத்தம்
  6. உடலுக்கு ஊட்டம் இல்லாத உணவை உண்ணுதல்
  7. காற்றோட்டம் இல்லாத இடத்தில் இருத்தல்
  8. கஞ்சா, புகைக்பழக்கம் மற்றும் மருந்தீடு
  9. உப்பு, காரம் உணவில் அதிகம் சேர்த்தல்
  10. அதிக வெப்பமுள்ள இடத்தில் வேலை செய்தல்

இளைப்பு நோயின் வகைகள் :
1) பிரம்மசயம் :
இந்நோயில் உடல் இளைத்தல், இருமல், புண்ணிலிருந்து வடியும் நீர் சளியுடன் காணுதல், கோழையோடு இரத்தம் வருதல், உடல் எரிச்சல், காய்ச்சல், சுவையின்மை, மனக்கலக்கம், வாந்தி எனும் குணங்கள் காணும்.

2) இராசசயம் :
இந்நோயில் தலை - மார்பு நோதல், மஞ்சள் நிறத்தில் கோழை வெளியாதல், மூச்சுக்குழலில் வலி, உடல் வலித்து அனலாகக் கொதித்தல், இருமல், வாந்தி, குரல் மாற்றம் எனும் குணங்கள் காணும்.

3) வைசியசயம் :
இந்நோயில் கைகால் சோர்வு, அதிக வியர்வை, சுரம், வெயிலை தாங்க முடியாமை, வெளுப்பு, மலச்சிக்கல்,  இருமல், கோழை, பசியின்மை, உடல் நடுக்கம், வேதனை, கொட்டாவி எனும் குணங்கள் காணும்.

4) சூத்திரசயம் :
இந்நோயில் கண்ணில் அழற்சி, இருமல், சுவாசக்குழல் புண்ணாதல், மயக்கம், மயிர்க்கூச்செறிதல், அதிகாலையில் குளிர், வலி, வியர்வை, வாந்தி, கோழை, கழுத்தில் கோழை அடைத்தல், குத்தல், எரிச்சல், கொட்டாவி, மலச்சிக்கல் எனும் குணங்கள் காணும்.

5) வாதசயம் :
இந்நோயில் உடல் இளைத்தல், தலைவலி, விக்கல், விலா - நடுமுதுகு - கழுத்து - தோள்பட்டை - கை - கால் வலி, வாந்தி, கோழை, சுரம், தாகம், அதிசாரம், இருமல், உறக்கமின்மை, மார்பு குத்தல், நாவில் கசப்பு எனும் குணங்கள் காணும்.

6) பித்தசயம் :
இந்நோயில் இரைப்பு, விலாவும் கழுத்தும் சுருங்குதல், இரத்த வாந்தி, வெளுப்பு, உணவு செரியாமை, மூத்திரம் மஞ்சள் நிறத்தில் வெளியாதல்,, மயக்கம், குரல் கம்மல், இருமல், கோழை, சுரம், குளிர், வியர்வை, தசையில் வலி, வேதனை, அதிக சீதளம் எனும் குணங்கள் காணும்.

7) கபசயம் :
இந்நோயில் இருமல், வாந்தி, கோழை, ஏப்பம், சுவையின்மை, அதிசாரம், குரல் கம்மல், அசதி, உடல் வெளுத்தல், மூக்கில் நீர் வடிதல், வயிறு கல்லைப் போல இருத்தல், எரிச்சல், செரியாமை, வேதனை எனும் குணங்கள் காணும்.

8) வாதபித்தசயம் :
இந்நோயில் உடலில் கடுப்பு, குத்தல், எரிச்சல், சுரம், தாகம், இருமல், அதிக வாயு, சுவையின்மை, கோழை, மயக்கம், உடல் கறுத்தல், இரைப்பு, தும்மல், வயிறு குத்தல், கண்ணில் நீர் வடிதல், புளித்தல், நெஞ்சு உலர்தல், அதிக குளிர்ச்சி, சிறுநீர் தடைபடுதல் எனும் குணங்கள் காணும்.

9) வாதகபசயம் :
இந்நோயில் குரல் கம்மல், தொண்டை கம்மல், சுரம், இருமல், கோழை, உடலில் கடுப்பு,  உடல் வெளுத்தல், பலவீனம், கைகால் வற்றல், நாடி படபடத்தல், தண்டின் அடியில் திணவு எனும் குணங்கள் காணும்.

10) பித்தகபசயம் :
இந்நோயில் அதிக தூக்கம், அதிக சோம்பல், சுரம், வாந்தி, பேதி, இருமல், கோழையுடன் இரத்தம், கோழை அதிக நாற்றத்துடன் காணுதல், தலைசுற்றல், பிரமை, தாகம், மூக்கடைப்பு, குளிர், நெஞ்சில் சளி கட்டல், மூக்கு வறளல் எனும் குணங்கள் காணும்.

11) விகாரசயம் :
இந்நோயில் காதில் இரைச்சல், கண்கள் வெளுத்தல், உடல் வலிமை குறைதல், உடல் இளைத்தல், புண்கள் உண்டாதல், பிரமேகம், மயக்கம், விலாவில் வலி, வாந்தியில் இரத்தம் காணுதல், மூச்சோடு சேர்ந்து வாய் நாற்றம்,பசி, எரிச்சல், கைகால் குளிர்தல், உள்நாக்கில் பசபசப்பு - திணவு எனும் குணங்கள் காணும்.

12) தொந்தசயம் :
இந்நோயில் குரல் மாறுதல், சுரம், இருமல், கோழையுடன் இரத்தம் காணுதல், நடுக்கல், பேதி, நாக்கு கறுத்தல், வாய் நாற்றம், புலம்புதல், மலம் - சிறுநீர் கட்டுதல், வாந்தி, மேல்மூச்சு, வாயில் கசப்பு எனும் குணங்கள் காணும்.

உளமாந்தை ரோக நிதானம்

            சயத்தின் பிரிவாகிய இந்த நோய் குடலில் உள்ள கபம் குறைவாக  உள்ளபோது உண்ணுவதால் அந்த உணவு செரிக்காமல், வயிறு ஊதல், கழிச்சல், உடல் இளைத்தல், இருமல், வாந்தி எனும் குணங்களை உண்டாக்கும்.

உளமாந்தை நோய் வரக் காரணங்கள் :
  1. பசி எடுக்கும்போது உண்ணாமல், பசி மந்தமானவுடன் உண்ணுதல்
  2. பகலில் உறங்கி, இரவில் கண் விழித்து வேலை செய்தல்
  3. அதிகமாக மாமிச உணவை உண்ணுதல்
  4. புணர்ச்சிக்கு பின் மயங்கி விழுதல்
  5. சாராயம், கள் முதலியவற்றை அதிகமாகக் குடித்தல்
  6. அதிக ஓட்டம்

1) வாத உளமாந்தை :
இந்நோயில் மார்பிலும் - விலாவிலும் நோயை உண்டாக்கி, நினைவு தடுமாறல், இருமல், உள்சுரம், கழிச்சலில் சீழ் கலந்து வெளியாதல், வயிற்றில் கட்டிபோலத் திரண்டு இருத்தல், உடல் இளைத்தல், உணவில் விருப்பமின்மை, செரியாமை, கழித்தல், கைகால் மெலிதல் எனும் குணங்களைக் கொண்டிருக்கும்.

2) பித்த உளமாந்தை :
இந்நோயில் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி, வயிறு கட்டிபோல வீங்கிப் பெருத்து குத்தல் உண்டாகும். அக்கட்டி உருண்டு, திரண்டு வயிறு கனத்து சுரம், இருமல் உண்டாகும். கட்டி முதிர்ந்து பழுத்து உடையும்போது வாந்தி, மயக்கம், சன்னி எனும் குணங்களை உண்டாக்கும்.

 3) சிலேஷ்ம உளமாந்தை :
இந்நோயில் உடல் மெலிந்து, புண்போல நொந்து, அடிக்கடி வாந்தியாகும். மேலும் வாந்தியில் சீழ் கலந்து காணும். மனக்கலக்கம், மயக்கம், உடல் நடுக்கம், உள்சுரம், உடல் வெளுத்தல் எனும் குணங்கள் உண்டாகும்.

4) தொந்த உளமாந்தை :
இந்நோயில் உணவு உண்ணும்போது தொண்டையை அடைப்பது போல் வலி, உணவில் விருப்பமின்மை, நெஞ்சில் குத்தல், மனச்சோர்வு, உடல் வன்மை குறைதல், அதிக தூக்கம், உடல் முழுதும் திணவு, இருமல், அதிக நாற்றத்துடன் கோழை வெளியாதல் எனும் குணங்களைக் கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக