உடலில் கபமானது அதிகமாகும்போது மூக்கில் நீர் வடிதல், தொண்டையில் கோழை கட்டல், குரல் கம்மல், இருமல், வயிறு கடுத்து இரைதல், வெண்மையாகவும் - சீதம் கலந்தும் பேதியாதல், இரைப்பு, உடலிலும், முகத்திலும் மினுமினுப்பு, குடைச்சல், நடுக்கல், தலைபாரம், நெஞ்சில் கபம் கட்டிக் கொள்ளுதல், நாற்றம், வாந்தி, சுரம், தும்மல், பசிமந்தம் போன்ற குணங்கள் தோன்றும். கப நோய்களின் எண்ணிக்கை 96 என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் பல்வேறு நூல்களில் 20 வகையான கப நோய்கள் மட்டுமே கூறப்பட்டு இருக்கின்றது.
கப நோய்களின் வகைகள் :
1) இருமல் ஐயம் :
இந்நோயில் உடலில் குளிர் உண்டாகி, முகத்தில் நீரேறி, ஊதித் தளதளத்துக் காணும், மேலும் மார்பில் கட்டிய சளி இளகி இனிப்பாக வெளியேறும். உடல் வெளுக்கும்,மலத்தில் சீதம் கலந்து வெளுத்து கழியும், உடல் உஷ்ணம் கூடி, உள்சுரம் கண்டு, சிறுநீர் மஞ்சளாக இறங்கும் என்னும் குணங்கள் காணும்.
2) காச ஐயம் :
இந்நோயில் உடல் குளிர்ந்து, கனத்து பாரமாகும். மேலும் நாடிகள் தளர்ந்து வலிமை குறையும், வாய் வறண்டு அதிக சூடு உண்டாகும். அடிமூக்குத் தண்டு வீங்கி, ஓயாத இருமல், திணவு காணும்.
3) சுவாச ஐயம் :
இந்நோயில் நெஞ்சில் கோழை கட்டி இருமல் உண்டாகும். மேலும் மூக்கடைத்து குறட்டை விடுவது போல மேல்மூச்சு வாங்கும், குளிர்சுரம், மயக்கம், மூக்கில் நீர் பாய்தல், மார்பும் - நெஞ்சும் அடைக்கும், வாய் வரளும், நீர் வேட்கை அதிகரிக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.
4) தீபன ஐயம் :
இந்நோயில் அதிக பசி, உடலில் எரிச்சல், நெஞ்சடைத்து அதிக துன்பம் உண்டாகும், உடல் முழுதும் வலித்து உடல்சூடு அதிகரிக்கும், கைகால்கள் குளிரும், உடல் கனத்து பருத்துக் காணும், உள்நாக்கில் பிசுபிசுப்பு என்னும் குணங்கள் தோன்றும்.
5) மந்த ஐயம் :
இந்நோயில் வயிறு மந்தம், அடிவயிறு கனத்தல், உடல் முழுதும் வியர்வை, பெருமூச்சு வாங்குதல், நெஞ்சு வறண்டு அதிக இருமல், வாயில் கசப்பு - துவர்ப்பு சுவைகள் தோன்றல், சிறுநீர் - மலம் கட்டும், கபம் அதிகரிக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.
6) வளி (வாத) ஐயம் :
இந்நோயில் வயிறு பொருமி, அடிவயிறு வழித்து நீர் இறங்கும், நீர் தாரையில் கடுப்பு, உடல் வீங்கி அழுத்தினால் குழி விழும், உதடும் பற்களும் கறுக்கும், உடல் முழுதும் வலி, மேக நோய் கண்டவரை போல சிறுநீரில் வெள்ளை கலந்து இறங்கும் என்னும் குணங்கள் தோன்றும்.
7) அழல் (பித்த) ஐயம் :
இந்நோயில் கண்கள் மயங்கி தலை கிறுகிறுக்கும், உறக்கமின்மை, வயிறு உப்பல், உணவு உண்ணாமை, வாய்நீர் அதிகமாக ஊறல், தொண்டையில் கோழை கட்டல், இருமலோடு பெருமூச்சு வாங்குதல், உடல் மஞ்சள் நிறமாதல் என்னும் குணங்கள் தோன்றும்.
8) இருதாது கலப்பு ஐயம் :
இந்நோயில் கபத்துடன் வாதம் அல்லது பித்தம் சேர்ந்து பாதிப்படைந்து நோயை உண்டாக்கும். இதனால் உடல் முழுதும் உஷ்ணம் அதிகரித்து, விக்கல், இருமல், பெருமூச்சு, அதிக சுரம், உடல் வலிமை குறைதல், உடல் எங்கும் எரிச்சல், உணவு உண்ணாமை, இருமலின் போது கோழை வெளியேறுதல், உடல் குளிர்ந்து மயிர்கூச்செறிதல் என்னும் குணங்கள் தோன்றும்.
9) முத்தாது கலப்பு (சன்னி) ஐயம் :
இந்நோயில் கபத்துடன் வாதம் மற்றும் பித்தம் இரண்டும் சேர்ந்து பாதிக்கும். இதனால் நா வறண்டு, உடல் குளிர்ந்து, எரிச்சலும் உண்டாகும். மேலும் இசிவு (வலிப்பு), உடல் வன்மை குறைதல், ஞாபகமறதி, தாடை, கன்னம், காது, மூக்கு, புருவம், உச்சி போன்ற இடங்கள் துடித்து படபடக்கும்.
10) சுர ஐயம் :
இந்நோயில் விட்டு விட்டு சுரம் காயும், உடல் கனத்து வலிக்கும். அடிக்கடி சுரம், சுரம் விடும்போது எல்லாம் உடலில் வியர்வை, உணவு உண்டவுடனே வாந்தி, வயிறு நொந்து உப்பும், மேல்மூச்சு, இருமல், நா கறுத்து வறண்டு நீர் வேட்கை என்னும் குணங்கள் தோன்றும்.
11) பெருங்கழிச்சல் ஐயம் :
இந்நோயில் வயிற்றில் குத்தல், சூலை நோயைப் போல வயிறு சுழன்று வீங்குதல், விலாப் பகுதியில் இரைச்சல், சிவந்த நிறத்தில் கழிதல், உடல் சோர்வு, மார்பும் நெஞ்சும் நோதல், வாய் வறண்டு இருமலோடு மூச்சு வாங்குதல், மிகுந்த நீர் வேட்கை, உடல் எரிச்சல் எனும் குணங்கள் தோன்றும்.
12) நீர் ஐயம் :
இந்நோயில் நீர் வேட்கை மிகுந்து, அடிக்கடி நீரை பருகச் செய்யும், நீரைக் குடிக்கும் போதெல்லாம் தொண்டையில் தடைபட்டு இறங்கும், அடிக்கடி சிறுநீர் வெளியாகும், குரல் கம்மல், இருமிக் கோழை கக்கல், பற்கள் குடைதல் என்னும் குணங்கள் தோன்றும்.
13) நெருப்பு ஐயம் :
இந்நோயில் அதிக கபத்தோடு வெப்பம் கூடி இருமலும் கோழையும் மிகும், உடல் நெருப்பு போன்று மிகுதியாக காயும், கைகால்கள், மூக்கு ஆகிய இடங்களில் எரிச்சல் உண்டாகும், நீர்வேட்கை கூடும், சில நேரங்களில் கையும் கால்களும் சில்லிடும், வயிறு நிறைய உண்டாலும் பசி எடுக்கும் என்னும் குணங்கள் தோன்றும்.
14) பூத ஐயம் :
இந்நோயில் வெறி கொண்டவரைப் போல கண்களை உருட்டி விழித்துப் பார்த்தல், ஊமையை போன்று பேசாதிருத்தல், திடீரென்று உரத்துப் பேசுதல், குறட்டையோடு மூச்சு வாங்குதல், இருமலோடு கொடி கொடியாக சளி வெளியாதல், உடலெங்கும் மிகுதியாக வியர்த்தல், பல்லை மிகக் கடித்தல், இனிமையுடன் பேசிக் கொண்டு இருக்கும்போதே சண்டையிடுதல் என்னும் குணங்கள் தோன்றும்.
15) முயலக ஐயம் :
இந்நோயில் உடல் முழுதும் வலிப்பு உண்டாகி உணர்ச்சியற்று தளரும், கண் சிவந்து காணும், கண்ணில் அதிக நீர் வடியும், உடல் கன்றி கறுத்துக் காணும், தன்னை அறியாமல் சிறுநீரும், மலமும் வெளியாகும். இருமலோடு பெருமூச்சு வாங்கும் என்னும் குணங்கள் காணும்.
16) வெறி ஐயம் :
இந்நோயில் வெறி நோயின் குணங்களான கண்களை விழித்துப் பார்த்தல், அடிக்கடி மீசையை முறுக்குதல்,பிறர்மேல் பாய்தல், பல்லைக் கடித்தல், கண் சிவத்தல், உடல் கறுத்தல், உறுமுதல், உதடு காய்ந்து போதல் என்னும் குணங்கள் தோன்றும்.
17) விகார ஐயம் :
இந்நோயில் உடலின் எல்லா இடத்திலும் ஏதோ ஓடுவது போன்ற எண்ணம், மனம் போனபோக்கில் பலவகைப் பாடல்களை மிடுக்குடன் பாடுதல், பெண்களின் மேல்கொண்ட இச்சையால் வேறொன்றிலும் மனம் செல்லாமல் இருத்தல், மனம் வருந்தி பலவாறாகக் பேசுதல், உணவின் விருப்பமின்மை, மயக்கம், முகம் வேறுபாடு அடைதல் என்னும் குணங்கள் தோன்றும்.
18) சுரோணித ஐயம் :
இந்நோயில் முழங்கால் குடைதல், முதுகு விலா உளைந்து நோதல், முழங்கால் முழங்கை பூட்டுகள் வீங்கி குடைச்சல் உண்டாதல், இருமிக் கோழை கக்கல், பெருமூச்சு, தொண்டையில் சளி கட்டல், நா வறண்டு நீர் வேட்கை மிகுதல், நா இனித்தல் என்னும் குணங்கள் தோன்றும்.
19) விரண ஐயம் :
இந்நோயில் தொண்டை புண்ணாகி சளியும் சீழும் கலந்து வெளியாதல், புறங்கழுத்து, கன்னம் ஆகியவை வீங்கி சுரம் உண்டாதல், குளிர் எடுத்தல், உடம்பு எரிதல், கொக்கென்ற இருமல் கூவல் உண்டாதல், தொண்டையும் நாவும் புண்ணாதல் என்னும் குணங்கள் தோன்றும்.
20) துர்கந்த ஐயம் :
இந்நோயில் தொண்டையில் புண் உண்டாகி, அதில் சீழும் குருதியும் தோன்றி, இருமல் பெருகி, மீன் கழுவிய நீர் போன்று ஒழுகி நாற்றம் உண்டாகும். மேலும் உணவை விழுங்க முடியாமல் போகும், அடிவயிறு, கை, கால்கள் வீங்கும், உடல் வற்றும், நீர்வேட்கை, வியர்த்தல் என்னும் குணங்கள் தோன்றும்.
21) நித்திய ஐயம் :
இந்நோயில் தும்மல், இருமல் உண்டாகி உடலை கறுகி வற்றச் செய்து, உடல் முழுதும் எரிச்சல் உண்டாகும். மேலும் குருதியைக் கெடுத்து உடல் வெளுக்கும், வாந்தி, குரல் கம்மல், பேச முடியாமை, தலை கிறுகிறுத்து கீழே விழுதல் என்னும் குணங்கள் தோன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக