புதன், 12 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - சூலை (Rheumatism - Ghout)

             “நெடுவாத சார்பது வின்றிச் சூலை வராது” என்பது தேரன் வாக்கு. எனவே வாதம் மீறினால் சூலை நோய் கொள்ளும் என்பதை இதிலிருந்து அறியலாம். உணவு வகைகளில் வாதத்தை மீறச் செய்யும் பொருட்களை நெடுநாட்கள் உண்பதாலும், வாதத்தை மீறச் செய்யும் செயல்களை அதிகமாக ஈடுபடுவதாலும் இந்நோய் பிறக்கும். உறுப்புகளில் வாதம் மீறும்போது அந்தந்த பகுதிகளில் குத்தல், குடைச்சல், புரட்டல், வலி என்னும் குணங்களை உண்டாக்குவது சூலை ஆகும்.

                இந்நோயினால் உண்டாகும் வலியானது சூலம் என்னும் ஆயுதத்தால் குத்துவதைப் போன்ற வலியை உண்டாக்குவதால் இது சூலை எனப்பட்டது. ஒருசில நூல்களில் சூலை என்னும் தலைப்பில் மூட்டுவாத நோய்களையும் கூறுவதால் அதைப் பற்றி முன்பே கண்டோம். இனி சூலை நோயின் வகைகள் மற்றும் அவற்றின் குணங்களை காண்போம்.

சூலை நூலை உண்டாகும் வழிகள் :

  1. சூடான பொருட்களை உண்பது.
  2. துவர்ப்பு சுவை கொண்ட பொருட்களை உண்பது.
  3. அதிக கோபத்துடன் சண்டை இடுதல்.
  4. மனச்சலிப்பு கொள்வது.
  5. அதிக ஓட்டம்.
  6. புகை பிடித்தல்.
  7. அதிக கலவி.
சூலை நோயின் வகைகள் :

1) மேகச்சூலை :

கைக்கால்கள் மிகவும் கடுத்து குடைதல், சிறுநீரும், மலமும் கட்டி, கைக்கால்களில் வியர்வை, குளிர், உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி உடல் சிவந்து காணுதல், மன உளைச்சலால் உடல் இளைத்தல், அதிக தாகம், மயக்கம், பிரம்மை காணுதல்.

2) முறிச்சூலை :

ஆண் குறியில் அழற்சி உண்டாகி அது அடி முதுகையும், குடலின் அடியையும் பற்றிப் பரவி உப்புசம், வலியை உண்டாக்கும். தலைவலி, நாபியில் வலி, சுரம், கண்கள் சிவந்து நீர் ததும்பி காணுதல், அதிக கலக்கம் காணும்.

3) வளிச்சூலை :

கைக்கால்களில் உளைச்சல் கண்டு, அங்குத் தடிப்பு, திமிர் காணும். அதிக குளிர், அதிக தூக்கம், சிறுநீர் சிவந்து பிரியும், உடல் முழுவதும் குடைந்து நோகும், உடல் கனத்து, உடலை இழுத்து பிடிக்கும்.

4) அழல்சூலை :

உடல் வற்றிக் கடுப்பு உண்டாகும். கைகால் கனத்து உளையும். தூக்கம் கேட்டு, உடலின் தாதுக்கள் குறைந்து, வலிமையற்றுக் காணும். தோலில் மினுமினுப்பு, அறிவு தெளிவற்றுக் கலங்கி, மயக்கம் காணும்.

5) ஐயச்சூலை :

தொண்டையில் வலி, நெஞ்சில் கோழை கட்டுதல், அடிவயிற்றில் வலி, உடல் முழுவதும் அழன்று புண்போல நோகும். உடல் முழுதும் வியர்த்து உடலும், நகமும் வெளுக்கும். வாயில் அடிக்கடி நீர் ஊறும். உடல் பஞ்சு போலாகும்.

6) ஆமச்சூலை :

அடிக்கடி அசீரணம், அதிக புளிப்பு, கசப்பு, இனிப்புப் பொருட்களை உண்ணுதல், அடிக்கடி பட்டினி, தூய்மையற்ற நீரை பருகுதல் போன்ற செயல்களால் வயிற்றில் உள்ள கபம் (ஆமம்) கூடி மந்தம் உண்டாகும். இதனால் வயிறு மற்றும் விலா புறங்களிலும் வலித்துக் கடுத்து குத்தல் உண்டாகும்.

7) உக்காரச்சூலை :

இதில் ஒரே நேரத்தில் விலா, நெஞ்சு, எலும்பு, உந்தி, கீழ்வாய் என்னும் இடங்களில் அதிகமான கெட்ட சதை வளர்ந்து திரண்ட கட்டிகளைப் போலப் பெருத்து, சிறுநீர்த் தாரையை  நெருக்கிச் சிறுநீர் சிறுநீர் கழியும் பொது மிகுந்த துன்பத்தைத் தரும். மேலும் சிறுநீரில் மணலைப் போலச் சிறு துணுக்குகளும் இறங்கும்.உடல் கடுத்து, தளர்ந்து, அறிவு மயங்கி அடிக்கடி மயக்கம் உண்டாகும்.

8) குன்மச்சூலை :

இதில் சிறுநீரும், மலமும் கட்டும், வயிறு பொருமி இரைச்சலுடன் காணும். வயிற்றைப் பிடித்துத் தாங்க முடியாத வலியும் காணும். மூர்ச்சை உண்டாகும். வாயில் நீர் ஊறல், ஏப்பம் ஆகியவை அடிக்கடி உண்டாகும். உடலின் ஊண் மிகவும் வெதும்பி அழற்சியுற்று உடல் உலர்ந்து காணும்.  நாவின் சுவை மாறும்.

9) உலர்த்துச்சூலை :

இதில் உடலில் உள்ள அழல் (நெருப்பு / பித்தம்) கெட்டு வெப்பம் மிகுந்து உடலில் வறட்சியும், வழியும் கண்டு வீங்கிக் காணும். வாதம் மீறிய காரணத்தால் குடல் வாயு தூண்டப்பட்டு குன்மம் என்னும் வயிற்று வழியும் மிகுந்து காணும்.

10) நிதம்பச்சூலை :

பெண்கள் பிள்ளை பெற்ற பிறகு உண்டாகும் கருவாயின் கோளாறுகளால் அங்குப் புண்ணாகி, இரத்தமும் சீழும் பிடித்து, சதை வளர்ந்து, அது தேங்காயின் முளை போலத் தோன்றி, கருவாயின் வாயை அடைத்து அதிக வலியை உண்டாகும். சிறிது அசைந்தாலும் அந்த முளையிலிருந்து நீர் வரும். உடல் வாடி வெளுத்து, கால், கை, முகம் முதலியன வீங்கும்.

11) கறைச்சூலை :

தோலைப் பற்றி வளையம்போலத் திரண்டு நொந்து காணும். நரம்பில் தங்கி வலியைத் தரும். கீழ்முதுகில் வாயுமீறி பற்றிக் கொண்டு கடுமையாக வலித்து நோயை உண்டாக்கும்.கைகால்களில் அதிக வலியும், உடல் கறுத்தும், கருத்து அழிந்தும் காணும்.

12) சுரச்சூலை :

இரு பக்கங்களிலும் சூலை நோய் தோன்றி நோய் உண்டாகும்.வாய் வழியாக இரத்தம் வெளியாகும்.உடலில் சுரமும் உளைச்சலும் காணும். தேகம் முழுதும் வலி உண்டாகி துன்புறும்.வயிற்றில் அதிக வலியும், நெஞ்செரிச்சலும், செரியாமை,வாய்நீர் ஊறல், வாந்தி முதலியன காணும்.

13) பக்கச்சூலை :

தலைவலி, மார்பின் அடிப்பகுதியில் தாங்க முடியாத குத்தல், உடல் புண்போல நோதல், பக்கங்களில் கனத்து, விலா இடைவெளிகள் தெரியாதபடி வீங்கிக் காணும். கண் புகைதல், கைக்கால் ஓய்தல், மூச்சுவிட முடியாமை, திமிர் கொள்ளல், உருமாறி போதல் போன்ற குணங்கள் காணும்.

14) கற்பச்சூலை :

இது ஈடு மருந்தின் கேட்டாலும், சூனியத்தாலும், வெப்பம் மிகுந்து உடல் வெதும்பியாதாலும், மகப்பேற்றில் குருதி சிக்கலால் உண்டான குருதி பெருக்கு சூலகத்தில் ஊறி, அளவில் பெருத்து வயிறு பெருத்து, வயிற்றுள் புரண்டு, கீழ்வாயில் தாங்க முடியாத வலியைத் தந்து, மயக்கத்தை விளைவிக்கக் கூடியதாய் இருக்கும்.

15) தூரச்சூலை :

உணவு மறுத்து, வாய்நீர் ஊறி, நெஞ்சு எரிச்சல் உண்டாகி ஈரல், பக்கம், தலை, வயிறு ஊதும். மலமும், சிறுநீரும் வெளிப்படாமல் தங்கும். வயிறு திரண்டு, புரண்டு, அடிக்கடி ஏதோ ஒன்று வந்து அமர்ந்து ஒதுங்கி எழும்புவது போலவும், அதுவே கீழ்வயிற்றில் மீள்வது போலவும் தோன்றி, இரத்தத்தை வெளிப்படாமல் சிக்குமாறு செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக