இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பு மூலக்கூறுகள் அளவில் குறைவதால் உடலின் இயற்கை நிறம் வேறுபட்டு கண்கள், நகக்கண்கள், நாக்கு முதலியன வெளுத்துக் காணப்படுவது வெளுப்பு அல்லது பாண்டு எனப்படும். இந்நோய் 5 வகைப்படும். சில நூல்களில் 6 வகை என்றும் கூறப்பட்டுள்ளது.
பாண்டு உண்டாகக் காரணங்கள் :
குருதியின் வன்மையை குறைக்கும் புளிப்பு, உப்புச் சுவையுள்ள பொருட்களை அதிகமாக உண்பதாலும், தாம்பூலம் (வெற்றிலை - பாக்கு, புகையிலை) அதிகமாக எடுத்துக் கொள்வதாலும், கள், சாராயம் போன்றவற்றை அதிகமாக குடிப்பதாலும், அதிசாரம் என்னும் நோயால் துன்புற்றவர்களும், நெருப்பிற்கு அருகில் இருந்து நெடுநேரம் வேலை செய்பவர்களுக்கும், பகல் உறக்கம் கொள்பவர்களுக்கும், சரியாக செய்து முடிக்காத மருந்துகளை தேவைக்கு அதிகமாக உட்கொண்டாலும்,குறிப்பிட்ட நாள் அளவிற்கு மேல் நீண்ட நாட்கள் மருந்து உட்கொண்ட நிலையிலும் இந்நோய் உண்டாகும்.
மேலும் இரத்தவாந்தி, இரத்தக் கழிச்சல், நிணக்கழிச்சல், குன்மம், இரத்தமூலம், எருவாய் சிறுமூலம், செண்டுமூலம், பெருமூலம், தமரகமூலம், சித்த மூலம், முக்குற்ற மூலம், சுருக்கு மூலம், உணவுக்குழல், வயிறு, குடல் பகுதிகளில் உண்டாகும் புற்றுநோய், இளைப்பு, குருதி மூக்கடைப்பு, பெரும்பாடு போன்ற நோய்கள் நீண்டகாலம் இருந்தாலும் இந்நோய் உருவாகும்.
பாண்டு நோயின் வகைகள் :
1) வாதப்பாண்டு :
இந்நோயில் குடல் புரட்டி, அடிவயிற்றில் வலி, நீர்வேட்கை, பசி இல்லாமை, இரத்த நாளங்கள் கறுத்து பரபரப்பாகி காணுதல், உடல் நடுக்கம், கண் வெளுப்பு, உடல் வெளுத்து வீங்குதல், வீங்கிய இடங்களில் வலி, தலைவலி, மலம் தீய்ந்து வெளிப்படுதல் போன்ற குணங்கள் காணும்.
2) பித்தப்பாண்டு :
இந்நோயில் உடல் வெளுத்து மஞ்சள் நிறம் அடைந்து நாக்கு, கைகால்கள் வெளுத்து, கண் பார்வை மங்கும். அதிக தாகம், மயக்கம், வாய் காரம் அல்லது கசப்புச் சுவையுடன் இருத்தல், நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போல மூச்சு முட்டுதல், தலை கிறுகிறுத்தல், குளிர்ச்சி தரும் பொருட்களில் விருப்பம், புளியேப்பம், வாய் நாற்றம், வாய் புண்ணாதல், அடிக்கடி மஞ்சள் நிறத்தோடு கழிதல் போன்ற குணங்கள் காணும்.
3) சிலேத்துமப்பாண்டு :
இந்நோயில் தோல் மிக வெளுத்து, நரம்புகள் புடைத்து, நா உப்புக் கரித்தல், மயிர் சிலிர்த்தல், வாந்தியாதல், குரல் கம்மல், அடிக்கடி தும்மல், இருமிக் கோழையைக் கக்கல், மயக்கம், இடுப்பு நோதல், ஆண்மைக்குறைவு, அடிக்கடி சீறிச் சினம் கொள்ளுதல், சோர்வும், தளர்வும் உண்டாதல் போன்ற குணங்கள் காணும்.
4) முக்குற்றப்பாண்டு :
இந்நோயில் சுவையின்மை, இரைப்பு, மேல்மூச்சு வருதல், அதிக இளைப்பு, உடல் வன்மை குறைதல், இதயம் அதிகமாக துடித்தல், உடல் சூடு கண்டு அடிக்கடி சிறுநீர் கழிதல், வெப்பமும், தயக்கமும் உண்டாதல், தும்மல், உடல் முழுமையும் ஊதல் போன்ற குணங்கள் காணும்.
5) விஷப்பாண்டு :
இந்நோயில் உடலுக்கு ஒவ்வாத பொருட்களை உண்டதால் பிறந்த நஞ்சின் காரணமாக உடல் வெளுக்கும். மேலும் அதிக நீர்வேட்கை, வாந்தி, விக்கல், இருமல், சுவையின்மை, பெருமூச்சு வாங்குதல், உடல் முழுமையும் வீங்கி, நரம்புகள் புடைத்து, உடல் சூடாகும்.
6) மண்ணுன் பாண்டு :
இந்நோய் சிறுகுழந்தைகளும், சிறு வயதினரும், கருவுற்றவரும் மண், சாம்பல், செங்கல், திருநீறு, கற்பூரம் போன்றவற்றின் மீது விருப்பம் கொண்டு அளவுக்கு அதிகமாக உண்பதால் உண்டாகிறது. இந்நோயில் உண்ட பொருளுக்கு ஏற்ப வயிறு ஊதல், செரியாமை, வாந்தி, கழிச்சல், சுரம், வயிற்றுப்புழு, போன்ற குணங்கள் கண்டு, உடல் மெலிந்து குருதி வற்றி, உடல் வெளுத்து, வீங்கி, இதயம் அதிகமாகத் துடிக்கும்.
இதுவரை கூறிய 6 வகையான பாண்டு நோய்களைத் தவிர உடலில் இரத்தத்தின் அளவு குறைவதால் உடற் கட்டுகள் ஏழும் குறைந்து மெலிந்து, உடல் வீங்கி, நிறம்மாறி, மஞ்சள் அல்லது நீலநிறம் அடைந்து, அதிக தாகம், அடிக்கடி மயக்கம், மனச்சோர்வு, அறிவு தடுமாற்றம், ஆண்மைக்குறைவு போன்ற குணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்ட நீலப்பாண்டு, அலசப் பாண்டு, அலிமுகப்பாண்டு என்ற மூன்று வகையான நோய்களும் உண்டாகும். இவை முன்கூறிய குணங்களையே கொண்டிருப்பதால் இவற்றை தனியாகக் கூறவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக