செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - மூட்டு வாதம்

            வாத நோய்களில் மிகவும் முக்கியமானது மூட்டுகளில் வாயு சேர்ந்து உண்டாகும் மூட்டு வாத நோய்கள். இதன் காரணமாகவே பல்வேறு நூல்களில் இவை தனியாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நோய் பெரும்பாலும் வாதம் மீறிக் கீல்களை பாதிப்பதால் “கீல்வாதம்” என்றும், மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதால் “மூட்டுவாதம்” என்றும், மேக நோய்க்குத் தொடர்புடன் வருவதால் “மேகசூலை” என்றும், எலும்பு மூட்டுகளை முடக்குவதால் “முடக்குவாதம்” என்றும், வயிற்றில் மந்தம் உண்டாக்கி கபம் பெருகி வருவதால் “ஆமவாதம்” என்றும் அழைக்கப்படும்.

            இவை பெரும்பாலும் 10 வகைப்படும். ஆயினும் சில நூல்களில் வேறு விதமாகவும் கூறப்படுகிறது. இந்த மூட்டு வாதநோய்கள் பெரும்பாலும் பல்வேறு நூல்களில் சூலை நோயின்  கீழ் இவை வகைப்படுத்தப்படுகிறது.

மூட்டு வாத நோயின் வகைகள் :

1) வளி சூலை :

உடல் கனத்து திமிராய் விறுவிறுத்து பிடரியையும், பாதத்தையும் பற்றி இழுத்து, கைக்கால் விரல்கள், மொளி முதலிய மூட்டுகள் வீங்கி, கறுத்து உளைந்து, நடக்க இயலாமல் செய்யும். மலம் கட்டும். குளிர் காலத்தில் இதன் பாதிப்புகள் அதிகமாகும்.

2) வளி வாயு சூலை :

பிடரி, கழுத்து, மூட்டுகள், முள்ளந்தண்டு, நெஞ்சு, விலா மூட்டுகள் உளைந்து, குத்தி வலித்து, காலை நேரத்தில் வயிறு இரையும்.

3) வளி நீர் சூலை :

உடல் புண்போல உளைந்து, கைகால் விரல்கள் வீங்கித் திமிராய் விறுவிறுத்து, உடல் வியர்த்துக் குளிர்ந்து, முகம், தலை வெதும்பி ஐயமும் பித்தமும் மீறி ஓடும்.

4) வளி சுரோணித சூலை :

நரம்பு வழி நீர் சென்று உடலில் பாய்ந்து அசைவுகள் வீங்கி வலிக்கும்.

5) வளி பித்த சூலை :

கை, கால் பொருத்துகளில் கரடு கட்டி, உடல் முழுதும் துடித்துப் புண்ணாகும்.

6) சன்னி வளி சூலை :

கை, கால் மூட்டுகளில் கரடு கட்டி, உடல் வீங்கி, அயர்ந்து நரம்பு தோன்றி, நாக்குழறி, செவி மந்தமாகும்.

7) அழல் சூலை :

உடம்பு உஷ்ணத்தால் வறண்டு கடுத்து, அசதியால் நடுங்கி, தலை வலித்து, வாய் கசந்து, கண், மூக்கு நீர் மஞ்சளாகி, கைகால் பொருத்துகள் உளைந்து விறுவிறுத்து கரடு கட்டும்.

8) ஐய சூலை :

கைக்கால், நெஞ்சு இவைகளில் குத்தல் வழியும், நெஞ்சு வறண்டு இருமிக் கபம் கட்டும்.

9) சுக்கில பிரமேக சூலை :

தேகத்தில் சூடு அதிகரித்து, நீர் தாரையில் சுக்கிலம், சீழ், இரத்தம் போல் இறங்கி உடலில் குத்தலும், வலியும், கைக்கால் மூட்டுகளில் வீக்கமும் காணும்.

10) கிரந்தி சூலை :

கிரந்தி நோயால் கைக்கால் பொருத்துகளில் நீர் கட்டி வீங்கிக் கடுத்து, கரடு கட்டி, வெடித்து சீழும், சலமும் வடிந்து, இந்திரியம் முறிந்து, நீர் கடுத்து இறங்கும்.

11) மாங்கிச சூலை :

மூட்டு முதலான அசைவு உண்டாகும் இடங்களில் வீக்கம் ஏற்பட்டு, வெடித்து, நொந்து, புலால் நாறி, தேகம் வற்றும்.

12) நீர்ச் சூலை :

புறங்காலில் திணவு உண்டாகி வீங்கிப் பொருத்துகள் உளைந்து குத்தி, வாயில் கொப்புளம்போலத் திரண்டு உடையும்.

13) விடநீர் சூலை :

கிரந்தி நோயால் விடநீர் நரம்பு வழியாகத் தேகத்தில் பரவி, அக்கினி போல எரிச்சலும் குத்தலும் கண்டு, விரல் முதலான இடங்கள் வீங்கி, மூட்டுகளில் கரடு கட்டி வெடித்து எலும்புகள் தெரித்து விழும்.

14) எலும்பு சூலை :

முழங்கால், முழங்கை முதலிய இடங்களில் மூட்டுகளில் கரடு கட்டி குத்தி உளைந்து கடுத்து வழித்துச் சீழும், சலமும் சிந்தி, எலும்பு தெரித்து விழுந்து கைகால் முடங்கித் தாது கெடும்.

15) விடப்பித்த சூலை :

விழிகள், உதடு, நா, பல் கறுத்து, உடல் வீங்கி, பொருத்துகள் உளைந்து நொந்து கரடு கட்டும்.

16) பாண்டு சூலை :

உடல் வற்றி, நரம்பெல்லாம் மிகுந்து, நெஞ்சில் குத்தி, சுரம் மாறாமல் இருந்து கைக்கால் கனத்து மூட்டுகளில் கரடு கட்டி இருமல் எடுக்கும்.

17) வாதப் பாண்டு சூலை :

முகம், வயிறு, அரை, தொடை, புறங்கால் முதலியன பதைத்து அயர்ந்து, விறுவிறுத்து, அசைவுகளில் கரடு கட்டும்.

18) பித்தப் பாண்டு சூலை :

வயிறும், தொடையும் வீங்கிப் பொருத்துகளில் குத்தல் எடுத்துக் கிறுகிறுத்து, கண், முகம், நீர், மலம் முதலியன கறுக்கும். அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

19) விடப் பாண்டு சூலை :

உடலின் ஒரு பக்கம் வீங்கி உளைந்து கடுப்பெடுத்து, கண் வெளுத்துத் தாகம் மிகுந்து சோம்பலும், பெருமூச்சும் காணும்.

20) சுரச் சூலை :

உடலில் சுரம் மிகுந்து, கைகால்கள் ஓய்ந்து, இடுப்பிலும், மூட்டுக்களிலும் குத்தல் உண்டாகி, விரல்கள் எல்லாம் விறுவிறுத்து வலிக்கும்.

21) அத்தி சுரச் சூலை :

தேகம் மிகக் கொதித்து பாவைப் போல வற்றி, நகக்கண்ணில் குத்தல் எடுத்து, புத்தி மயக்கம் கண்டு பொருத்துகள் வீங்கி வலிக்கும்.

22) சுரமுறு சூலை :

சுரம், தலைவலி, உடலில் வீக்கம், பலவீனம் உண்டாகி மூட்டுகள் வீங்கிக் கரடு கட்டும்.

23) ஆண்ட வாயு சூலை :

முகம், வயிறு, முதுகு, இடுப்பு, தொடை, புறங்கால் முதலியன நொந்து அயர்ந்து விறுவிறுத்து அசைவுகளில் கரடு கட்டும்.

24) மூலப்பாண்டு சூலை :

தேகம் வறண்டு வெளுத்துத் திமிர் ஏறி வீங்கி, கைகால் உளைந்து, பொருத்துகளில் கரடு கட்டி, மலம் சிறுத்து, தூக்கம், அசதி, ஆயாசம் காணும்.

25) வளிப்பாண்டு சூலை :

முகம், வயிறு, முதுகு, இடுப்பு, தொடை, புறங்கால் முதலியன நொந்து அயர்ந்து விறுவிறுத்து, அசைவுகளில் கரடு கட்டும்.

26) அந்தரவாயு சூலை :

குறுக்கு, பிடரி நொந்து சுரம் காய்ந்து, ஒருபக்க விரையில் வாயு இறங்கி மேல் ஏறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக