திங்கள், 24 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - நீர்வேட்கை

            இந்த நோயானது அடிக்கடி நீரைப் பருக வேண்டும் என்ற உணர்வைக் கொடுக்கும். இது தனி நோயாகவும், சில நோய்களுக்குத் துணை நோயாகவும் வரும். அதாவது விரைவில் செரிக்காத உணவை உண்பதால் அந்த உணவு செரிக்கும்வரை நீர்வேட்கையை உண்டாக்கும். அல்லது பித்தம் அதிகரித்து அதனால் உண்டாகும் நோய்களிலும் உடலின் நீர்சத்து குறைதல், மற்றும் அதிகளவு நீர் வெளியேறுதல், வாந்தி, பேதி, நீரிழிவு போன்ற நோய்களாலும், அதிக ஆடல், பாடல், ஓடுதல் போன்ற செயல்களாலும் இந்நோய் உண்டாகிறது.

            இந்நோயில் நா வறண்டு போதல், நீரைப் பருக வேண்டும் என்ற இச்சை, நீரைப் பருகினாலும் தாகம் அடங்காமை, இளைப்பு, மயக்கம், உடலில் ஒருவித நடுக்கம், உடல் எங்கும் எரிச்சல், உதட்டை நாவால் நனைத்தல், குரல் கம்மல் போன்ற குணங்கள் உண்டாகும். இந்நோய் தாகம், நாவறட்சி என்ற வேறு பெயரிலும் கூறப்படும். இது 6 வகைப்படும்.


நீர்வேட்கை நோயின் வகைகள் :

1. வாத தாகம் :

இந்நோயில் உடல் வாடிக் கறுத்தல், தலை சுற்றல், மனக்கலக்கம், சுவையை உணர இயலாமை, காதுமந்தம், அதிக தூக்கம், உடல் வலிமை குறைதல், குளிர்ந்த நீரைப் பலமுறை பருகினாலும் தாகம் அடங்காமை போன்ற குணங்கள் உண்டாகும்.

2. பித்த தாகம்:

இந்நோயில் உடல் எப்போது வெப்பமாக இருத்தல், நாக்கு, உதடு, அண்ணாக்கு வறண்டு போதல், தொண்டை, நாக்கு சிவந்து முள்போல இருத்தல், நா எரிதல், தொண்டை புகைத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.

3. கப தாகம் :

இந்நோயில் தொண்டை அடைத்துக் கொண்டதுபோல உணர்வு, வாய் இனித்தல், வயிருப் பொருமல், பசியின்மை, தலைநோய், உடல் குளிர்தல், வாய் சுவை அறியாமை, உணவு செரியாமை போன்ற குணங்கள் தோன்றும்.

4. தொந்த தாகம் :

இந்நோயில் சன்னி, நீரிழிவு, இளைப்பு நோய்கள் முற்றி, வாத-பித்த-கப தாக நோய்களின் குணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.

5. இரசக்குற்ற தாகம் :

இந்நோய் உடலின் ஏழு தாதுக்களில் இரசம் என்ற தாது இரத்தமாக மாறும்போது உண்டாகும். மேலும் அதிகமான இரத்தம் வெளியேறினாலும் உண்டாகும். இதனால் அதிக தாகம், நா வறண்டு போதல், மூளைக் கலங்கி அடிக்கடி இளைப்பு உண்டாதல் போன்ற குணங்கள் காணும். சில நேரங்களில் மரணமும் ஏற்படும். 

6. செரியாமை தாகம் :

இந்நோய் இனிப்பு, உப்பு, எளிதில் செரிக்காத உணவு வகைகளை உண்பதால் உண்டாகிறது. மேலும் நோயுற்ற காலங்களில் அதிக தூரம் நடப்பதாலும், அதிக உணவை உண்பதாலும் இந்நோய் உண்டாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக