செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - வாதம் (Paralysis - Palsy)

            அதிகப் புணர்ச்சி, பகல் உறக்கம், இரவு கண் விழித்தல், அதிக பாரம் சுமத்தல், மிகப்பட்டினி, அதிக உழைப்பு, கவலை, அதிர்ச்சி, உடல் மெலியும்போது உடலின் 14 வேகங்களை அடக்குதல், இரைப்பை குற்றம், யானை, ஒட்டகம், இவற்றில் அமர்ந்து விரைதல், கீழே விழுந்து வர்மத்தில் அடிபடுதல், சீதள இடத்தில் உறைதல், குளிர்ந்த பொருள்களை அதிகமாக உண்ணுதல், உப்பு - புளி - காரம் கசப்பு - துவர்ப்பு பதார்த்தங்களை அதிகம் விரும்பி உண்ணுதல், சூடு ஆரிய உணவுகள் - வாயுப் பதார்த்தங்களை அதிகம் உண்ணுதல் போன்ற காரணங்களால் (குறிப்பாக ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில்) வாத நோய் உண்டாகிறது.

            இது நரம்புகளில் பற்றுவது, நோயின்றி உடலில் ஒன்று அல்லது பல பகுதிகளில் உணர்வு கெடுவது, அசையும் தன்மை கெடுவது என்று பலவகைப்படும். பொதுவாக இது பாதிக்கும் பகுதிக்கு ஏற்ப 80 வகைப்படும். ஒருசில நூல்களில் 84 என்றும் கூறப்படுகிறது. இன்னும் சில நூல்களில் வேறு விதமான எண்ணிக்கையிலும் கூறப்படுகிறது. எனவே அவை அனைத்தையும் இங்கு காணலாம். பொதுவாக வாத நோய் ஏழு தாதுக்களில்,

  1. தோலைப் பற்றினால் ஒருவித விறுவிறுப்பான சூடு - குளிர்ச்சி காணும். வெடிப்புகளுடன் உணர்வு குன்றி, இலேசாகவும் - கருமை நிறமாகவும் மாறிக் குத்தலும், அகன்று விரிவது போன்ற துன்பமும் தரும்.
  2. இரத்தத்தை பற்றினால் இரத்தத்தில் அழற்சியும், நோவும் கூடி, உடல் கறுத்து இளைக்கும். உணர்வின்மை, மயக்கம், அரோசகம், பொறுமல், ஒருவித விறைப்பு, விரணம் காணும்.
  3. மாமிசம்  மற்றும் கொழுப்பை பற்றினால் உடல் வறண்டு அடிபட்டது போல குத்தி வலிக்கும், சோர்வு, கிரந்தி, தலைச்சுற்றல் காணும்.
  4. மச்சை மற்றும் எலும்பில் பற்றினால் தொடைச்சந்து நோகும். எலும்புக் கணுக்களில் கடும் வலியுடன், தசை இணைப்பு வன்மை குன்றி வேதனை காணும். தூக்கமின்மை, உடல் நோவு மெலிவு காணும்.
  5. சுக்கிலத்தில் பற்றினால் விந்து எளிதில் வெளிப்படும். அல்லது முற்றிலும் வராமல் கட்டுப்படும். விந்து நாசமுற்று நரம்புகள் சோர்ந்து, பலவீனமுடன் உடல் வெளுக்கும்.
  6. உடல் முழுதும் பற்றினால் திமிர், தினவு, குத்தல், குடைச்சல் துடிப்பு, இசிவு, நடுக்கல், உணர்வின்மை, சந்து கோணல், செயலற்று போதல், பலக்குறைவு, புலன்கெடுதல், முதலியன காணும்.
  7. குடல், இறைப்பையில் பற்றினால் மலநீர்க்கட்டு, விரைவாயு, மூலம், பக்கசூலை, குன்மம், வயிறு - விலா - இருதயம் - நாசியில் கடும் வலி, உடல் எரிவு, வறட்சி, இருமல், பெருமூச்சு, தொண்டை வறட்சி, குடல் இறைந்து பேதி, கைகால் இடுப்புக் குடைச்சல் முதலியன காணும்.

வாதத்தின் வகைகள் :

1) ஊர்த்துவ வாதம் :

மேல்மூச்சு, இருமல், சுவையின்மை, பொருமல், மந்தம், அனல், மலபந்தம், மயக்கம் எனும் குணங்கள் உண்டு.

2) சிரோ வாதம் :

நச்சுத் தலைவலி, ஒரு பக்க உடல்வலி ஆகியன உண்டாகும். இரவில் தூக்கம் வராது. அதிகப் பசி, ஏக்கம் முதலியன உண்டாகும். வாய் புலம்பும்.

3) பாரிசச் சூலை வாதம் :

உடலின் ஒரு பாகத்தில் பாதிப்பை ஏற்படுத்திப் பந்திக்கச் செய்து, குத்துவது போல் வலி உண்டாகும். ஒருநாளும் இரவில் தூக்கம் வராது. கைகால்களில் நடுக்கம் உண்டாகும். தாங்க இயலாத துன்பம் தரும்.

4) கம்ப வாதம் :

கை, கால், தலை இவைகளில் நடுக்கல் காணும். உடல் அழல்வது போலிருக்கும். உடம்பெல்லாம் வலி உண்டாகும். இரவிலும் தூக்கமின்மை, உடல் இளைத்துக் காணும். ஏது செய்வது என்றறியாது வாய் புலம்பும்.

5) ஊர்த்தக் கம்பவாதம் :

வாயுவை தன்வழியே செல்லவிடாமல் தடுக்கும். இதனால் கை, கால் மூட்டுகள் மற்றும் கீல்கள் அனைத்தும் செயலிழக்கும். உடல் தளர்ந்து மனமும் கலக்கம் அடையும். உணர்வுகள் மாறுபாடு அடையும்.

6) கிக்கிச வாதம் :

இடுப்பில் இருந்து கால் வரை குத்துவது போல வலி இருக்கும். மூட்டுகள் கெட்டியாகி கடினமாக பிடிப்புடன் காணும். எழுந்து நடக்க முடியாது.

7) சோண வாதம் :

இரத்த வாந்தி, விக்கல், மயக்கம் உண்டாகும். உருவம் மாறி தேஜஸ் கெடும்.

8) ஆமில வாதம் :

ருசியின்மை, பசியின்மை, மந்தம், செரியாமை, உடல் முழுதும் வலி இருக்கும்.

9) இரசு வாதம் :

இரவும், பகலும் ஏங்கிப் புலம்பும். உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும், தாகம், பிரம்மை, மயக்கம் ஏற்படும். மிக்க வேதனையும், துன்பமும் உண்டாகும்.

10) சந்தியா வாதம் :

உடல் முழுவதும் உள்ள வாயுவானது இரவில் மட்டும் பாதித்து உடலில் குத்தல் வழியை உண்டாக்கும். மூட்டுகள் அனைத்தும் குத்தல், குடைச்சல் இருக்கும், உடல் நடுங்கி, தூக்கமில்லாது, அரற்றல் காணும்.

11) தனுர் வாதம் :

உடலை வில்லை போல வளைக்கச் செய்யும். உடல் நடுங்கும், தாகம், பசியின்மை, மயக்கம் காணும். உடலில் தள்ளாட்டம் காணும்.

12) திமிர் வாதம் :

மேல்தோல் திமிர்ந்து யானையின் தோலைப் போல பருமனாக காணப்படும். உடலை நிமிர விடாமல் மெதுவாக நடக்கச் செய்யும். நடையில் தள்ளாட்டம் மற்றும் அதிக துன்பம் காணும்.

13) அந்தி வாதம் :

நெற்றியில் பிளப்பது போல வலிக்கும், மூர்ச்சை கொள்ளும், பேசமுடியாமல் துயரம் கொண்டிருக்கும்.

14) காக வாதம் :

தலையும் கண்களும் சுழன்று, கைகால் நடுங்கி அரற்றலுடன் கீழே விழும்.

15) நயன வாதம் :

கண்ணில் சூடு கொண்டு, சிவந்து, கண்ணீர் ததும்பும், தூக்கமின்மை,அதிக வலி, கண்ணில் கட்டி தோன்றும். வயிற்றில் உளைச்சல், இரைச்சல் காணும்.மார்பு கனப்பது போல இருக்கும்.

16) நாசிக வாதம் :

வாய் பேசாமல், கொட்டாவி விட்டவுடன் உதடும், பல்லும், ஒட்டாமல் இருக்கும்.

17) அவையாங்க வாதம் :

உடல் முழுவதிலும், மூட்டுகளிலும் இழுத்துப் பிடிப்பது போல வலிக்கும். தூக்கமின்மை, மலம், சிறுநீர் கட்டும்.

18) சிம்மாங்க வாதம் :

காதிரைச்சல், சுரம், தாகம், உடல் முழுவதும் அடிப்பது போல வலிக்கும்.

19) நர வாதம் :

பாம்பு போல நாடிகள் எங்கும் ஓடி வலிக்கும்.

20) கர்ண வாதம் :

காதில் இரைச்சல், காது மந்தம், காதில் அதிக வலி உண்டாகி காது செவிடாகும்.

21) சர்ப்ப வாதம் :

பாம்பு உடலில் ஊருவது போல தலை முதல் பாதம் வரை வலிக்கும்.

22) விருச்சிக வாதம் :

தேள் கொட்டியது போல உடல் முழுதும் கடுத்து, கைகால் எரிச்சல், காந்தல் காணும்.

23) முடக்கு வாதம் :

உடலை முடக்கி, குறுக்கும். நடை தடுமாறி, கைகால் மூட்டுகள் செயலிழந்து விடும்.

24) சன்னி வாதம் :

உடலில் வியர்வையே இல்லாமல் உடல் முழுதும் வெதும்பும். உடல் இளைத்து சோர்வடையும். மலம் கட்டும், கைகால் அசைக்க முடியாதபடிக்கு இருக்கும். உயிர் பிரியும்.

25) அங்குலி வாதம் :

கைவிரல் சுருங்கி, நரம்பு இழுத்து உடலில் வலி உண்டாகும்.மெதுவாக வாழ்நாள் குறையும்.

26) பிரம வாதம் :

உடல் சுழல்வது போல தோன்றி தாகம், தளர்ச்சி, உடல்சோர்வு, மனச்சோர்வு ஏற்பட்டு மயக்கம் உண்டாகும்.

27) மலபந்த வாதம் :

மலம், மூத்திரம், அபானவாயு கட்டும்.

28) மூத்திர வாதம் :

சிறுநீர் கழியாமல் கட்டும், இருமல் உண்டாகும்.

29) குன்ம வாதம் :

வயிற்றில் குத்துவது போல வலி, மந்தம், அசீரணம், விக்கல், வாந்தி, தேகம் இளைத்தல், தலைவலி, எப்போதும் சோகத்துடன் இருத்தல் போன்ற குணங்கள் உண்டாகும்.

30) பாகு வாதம் :

இரண்டு தோள்களிலும் வலி, கடுப்பு, இரவும், பகலும் அரற்றல் காணும்.

31) பாரிசபாகு வாதம் :

தூக்கம் இராது. ஒரு தோள் பகுதியில் மட்டும் வலி இருக்கும்.

32) பாத வாதம் :

காலில் விடாது குடைச்சல் காணும்.

33) விசூசை வாதம் :

அதிசாரம், சுரம், வாந்தி, அனல், தாகம், பிரம்மை, விகாரம், மயக்கம் காணும்.

34) தூம வாதம் :

அதிக ஏப்பம், உணவு செரியாமை, வயிற்றில் வலி காணும்.

35) விதூம வாதம் :

மிகுந்த புளித்த ஏப்பம், வயிறு பொருமல் காணும்.

36) விச்சுவட்ட வாதம் :

உடல் முழுதும் வலி இருந்து கொண்டு வருத்தம் செய்வது.

37) இரசசேட வாதம் :

தலை வலிக்கும், உடல் புண்ணாகி நோகும்.

38) சுர வாதம் :

காதிரைச்சல், தும்மல், சுரம், உடல் நடுக்கம், வாந்தி, தலை, உடல்வலி, கழிச்சல், கொட்டாவி காணும்.

39) சோப வாதம் :

சுரம் மிகும், புத்தி தடுமாறும், உடலில் வலி காணும்.

40) கோபச்சல வாதம் :

வாய் விறுவிறுப்பாக இருக்கும், நரம்புகளில் வாயு சென்று வலி உண்டாக்கும்.

41) அசீரண வாதம் :

உணவு செரியாது, வயிறு மந்தம், வயிற்றில் வலி, சுவையின்மை, காதிரைச்சல், கண்கள் கலங்கும்.

42) சய வாதம் :

உடல் இளைத்து, தாகம், சுரம், மந்தம் உண்டாகி, உடலில் பலம் குறைந்து வலி உண்டாகும்.

43) சுட்க வாதம் :

உடலில் வியர்வை தோன்றாது, கண் ஒளி மங்கும், உடலில் மந்தம் உண்டாகி, உடல் இளைக்கும்.

44) திவா வாதம் :

பகலில் உடலில் சூலை உண்டாகி உடல் முழுதும் வலி ஏற்படும். இரவில் சாதாரணமாக இருக்கும். எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கும் நிலையினை உண்டாக்கும்.

45) சல வாதம் :

கானல் நீர், குளம், ஆறு, கடல், கழிமுகம் இவற்றில் எதைப் பார்த்தாலும் மயக்கம் வரும். தாகம், உடல் நடுக்கம், வியர்வை தோன்றும். காத்து செவிடாகும்.

46) ஆதித்த வாதம் :

கோடையில் சூரியனை பார்க்க கண்கள் வலித்துச் சுழன்று விழச் செய்யும். காதில் இரைச்சல் உண்டாகி, உடலில் அவதியும், விகாரமும் கொள்ளும்.

47) அக்கினி வாதம் :

அனலின் ஒளியைக் கண்டதும் தூக்கம் உண்டாகி உடல் நடுங்கி சோர்ந்து விழச் செய்யும். விக்கி விக்கி அழுதல், கண்களில் கண்ணீர் மிகுதல், உடலிலும், முகத்திலும் விகாரம் ஆகியன தோன்றும்.

48) திதி வாதம் :

தயிர் உண்டால் வாதம் மீறி மயக்கம் உண்டாகும். வாந்தி, தாகம், மலக்கட்டு, உடல் வற்றி ஒளி கெடல், அடிக்கடி கோபம் உண்டாகுதல் போன்ற குணங்கள் தோன்றும்.

49) மது வாதம் :

தேன் உண்டால் வாதம் மீறும். உடல் விறுவிறுக்கும், தாகம் அதிகரிக்கும், உடல் விகாரமடையும்.

50) ஸ்நான வாதம் :

தலை நனையும்படி தண்ணீரில் குளிக்கும் போதெல்லாம் தலைவலி உண்டாகும்.

51) உன்மாத வாதம் :

தன்னை மறந்து பிதற்றுதல், பேய் பிடித்தது போல பேசுதல் போன்றவை உண்டாகும்.

52) கடி வாதம் :

பின் இடுப்பில் கல்லை கட்டியது போல பாரம் அதிகமாகி வலிக்கும்.

53) வாயு வாதம் :

அதிகமாக காற்றடிக்கும் போது அதனூடே வந்தால் உடல் முழுதும் வலி உண்டாகும்.

54) சுக்கில வாதம் :

சுக்கிலம் (விந்து) அடிக்கடியும், விரைவிலும் வெளியாகி அதனால் உடலில் தாது கேடு அடையும்.

55) சம்போக வாதம் :

இது பெண்ணுடன் சேரும்போது ஏற்படும். ஆண்குறி தளரும், பலம் குறைந்து, தாகம், மூர்ச்சை ஏற்படும்.

56) கந்த வாதம் :

மிகவும் மணம் கொண்ட பொருட்களை நுகரும்போது கடும் சூலை உண்டாகும்.

57) கீர வாதம் :

பால் அருந்தும்போது வாந்தி உண்டாகும். உடல் முழுதும் கடும் சூலைப் போல வலி ஏற்படும்.

58) தாம்பூல வாதம் :

தாம்பூலம் கொண்டதும், காது கேளாமை, கழுத்தில் வியர்வை, கலக்கம், பிரம்மை, உண்ட உணவை வாந்தி எடுத்தல் போன்ற குணங்கள் ஏற்படும்.

59) சீரான்ன வாதம் :

பால்சோறு உண்டதும் வாந்தியாகி மயக்கம் ஏற்படும். காதிரைச்சல், வயிற்றில் வலி, வாய் புலம்பிக் கொண்டே இரத்தல் ஆகிய குணங்கள் உண்டாகும்.

60) பூத வாதம் :

ஓரிடத்திற்கு செல்ல பயம் கொண்டு வேறொருவரை துணைக்கு அழைத்தல், அதிக பயம், பேய்ப் பிடித்தது போல ஓடுதல், பிதற்றுதல், மூர்ச்சையாகி விழ்தல் போன்ற குணங்கள் தோன்றும்.

61) மோகன வாதம் :

மனதில் தோன்றும் போருட்களிடத்தில் ஆசை கொள்ளுதல், அப்பொருளை பெற முயற்சித்தல் அல்லது யாசித்தல், அப்பொருள் கிடைக்காது போனால் காய்ச்சல் காணுதல், விகாரம் கொள்ளுதல் போன்ற குணங்கள் காணும்.

62) பவன வாதம் :

குய்யத்தை பிடித்து இழுத்து மலச்சிக்கல் தோன்றும். மயக்கம், உடலில் வாயு அதிகரிக்கும்.

63) துக்க வாதம் :

மார்பில் அடித்துக் கொண்டு துன்பமுறும். தலை நாடுகள், வாய் அரற்றல், உடல் குளிர்ந்து போதல், தலைவலி, மயக்கம், காதிரைச்சல் காணும்.

64) கலக வாதம் :

கோபித்துக் கண்டித்தால் உடலில் வாயு அதிகரித்து நிலை தளரும், உடல் இளைக்கும், மூர்ச்சை உண்டாகும், விகாரமும், பலமும் உண்டாகும்.

65) மேக வாதம் :

கார் காலத்தில் மின்னல், மழையை பார்த்தாலும், மேகம் மந்தாரமாக இருப்பதைப் பார்த்தாலும் உடலில் வாயு அதிகரித்து உடலில் சூலை தோன்றும். மழைக்காலம் நீங்க நோய் நீங்கும்.

66) சூலை வாதம் :

உணவு உண்டவுடன் சூலைபோல வலி உண்டாகும். கோபம் கொள்ளச் செய்யும், இரவு முதல் காலை வரை அரற்றிக் கொண்டே இருப்பார். அசீரணம் உண்டாகும். தேகம் வியர்க்கும்.

67) கட்க வாதம் :

கத்தியால் வெட்டுவதைப் பார்த்தால் வாயு அதிகரித்து தலை சுற்றி மயக்கம் கொண்டு கீழே சாய்வார். பேய் பிடித்ததைப் போல அரற்றுவார்.

68) இரண வாதம் :

யாரேனும் சண்டையிட்டு வெட்டிக் கொள்வதைக் கண்டால் விகாரம், மயக்கம், பிரம்மை, வியர்வை உண்டாகும்.

69) சாக்கிர வாதம் :

தூங்கும்போது உடல் வலிக்கும், அசீரணம் உண்டாகி உணவு செரிக்காது.

70) ஆத்மரிய வாதம் :

அதிக தாகம், உடல் நோதல், மிகு காய்ச்சல்,விந்து விடல், உடல் நடுக்கம் என்னும் குணங்களைக் கொண்டது.

71) கன்ம வாதம் :

பாதகமான செயல்களைச் செய்வதால் வாயு மீறுதல் கன்ம வாதமாகும்.

72) நாட்டிய வாதம் :

கொட்டு இசைப்பதாலும், நாட்டியம் ஆடுவதாலும் வாதம் மீறும்.

73) தூம்பிர வாதம் :

குதிரை ஓட்டத்தை காண்பதாலும், பசுக்கள் கூட்டமாய் வருவதைப் பார்த்தாலும் வாயு மீறி நோய்க் காணும்.

74) கபால வாதம் :

ஆயுதத்தால் தலையை வெட்டுவதைப் போல அதிக வலியும், தூக்கம் வராமலும் இருக்கும்.

75) நித்திரை வாதம் :

உடலில் அதிகச் சூடு, பசி மந்தம், உடல் விகாரம், உறங்கச் சென்று கண்ணை மூடினால் உடல் பதைக்கும்.

76) வாதம் :

உடல், கை, கால்கள் நொந்து கடுத்து, உளைந்து பலம் கெட்டு, அதிசொம்பல், தூக்கம் முதலிய குணங்கள் காணும்.

77) துடி வாதம் :

உடலின் பல இடங்களில் துடித்து அடங்கும்.

78) நடுக்கு வாதம் :

உடல் வெதும்பி, உளைந்து, கிறுகிறுத்து நடுங்கும்.

79) அண்ட வாதம் :

விரை வீங்கி வலித்து, மேல் நோக்கி ஏறும்.

80) சந்து வாதம் :

மூட்டுகளில் பிடிப்பு உண்டாகி விடாமல் உளைச்சலுடன் வலி உண்டாகும். இதனால் உடல் மெலிந்து கொண்டே வரும்.

81) ஓடு வாதம் :

தேகம் மெலிந்து, உளைந்து, உடலின் பலம் குறையும். நாவும், பல்லும் வறட்சி காணும்.

81) தோள் வாதம் :

தோள்கள் வீங்கி, கண்டம், பிடரி வலித்துக் கடுக்கும்.

82) பக்க வாதம் :

ஒரு பக்கத்தில் கையும் காலும் செயல்படது  இருக்கும்.

83) கழுத்து வாதம் :

கழுத்தை திருப்பிப் பார்க்க முடியாமல் செய்யும்.

84) சிரசு வாதம் :

இரவும், பகலும் தலையில் விடாமல் வலி இருந்து கொண்டே இருக்கும்.

85) தம்பன வாதம் :

திருத்தமாக பேச முடியாமல் இருப்பதுடன் காலை இழுத்துக் கொண்டு நடக்க முடியாமல் செய்யும்.

86) தந்த வாதம் :

வாதம் அதிகரித்து பற்கள் வலியுடன் ஆட்டம் காணும்.

87) கரணி வாதம் :

வாதம் அதிகரிப்பதால் காதுகள் மந்தமடைந்து கேட்கும் திறன் பாதிக்கும்.

88) அங்குலி வாதம் :

விரல்கள் விறைத்துக் கொண்டு எதையும் பிடிக்க முடியாமல் இருக்கும்.

89) முன்கை வாதம் :

முன்னங்கைகள் இரண்டும் வீங்கி வலியும் ஏற்படும்.

90) வதன வாதம் :

முகம் ஊதிக் கடுக்கும்.

91) இடுப்பு வாதம் :

இடுப்பு, தொடை ஆகிய இடங்களில் கடுத்து, குனிந்து நிமிர முடியாது.

92) வருளை வாதம் :

ஆசனத் துளை நொந்து கடுக்கும்.

93) தொடை வாதம் :

தொடை கடுத்து நடக்க முடியாது.

94) தொடை வாதம் :

தொடை கடுத்து நடக்க முடியாது.

95) முழங்கால் வாதம் :

முழங்கால் வீங்கிக் கடுக்கும்.

96) கெண்டைக்கால் வாதம் :

கெண்டைக்கால் வீங்கி கடுத்து காணப்படும்.

97) குதி வாதம் :

குதிகால்கள் மட்டும் வீங்கிக் கொண்டு வலிக்கும்.

98) வாய் வாதம் :

வாய் கடுத்து, அலகு கிட்டி வியர்த்து பேச இயலாமல் போகும்.

99) தண்டு வாதம் :

முதுகுத்தண்டுதண்டு பொருமி தடித்துக் காணப்படும்.

100) வாண வாதம் :

கை கால்கள் சுருக்கிக் கொண்டு இழுத்துக் கடுக்கும்.

101) தனுர் வாதம் :

அடிக்கடி தேகத்தை வில் போல வளைத்து, வியர்வை, நாக்கு, பல், கிட்டிக் கொண்டு மேல்மூச்சு வாங்கும்.

102) அசீரண வாதம் :

தூரமான இடங்களுக்கு நடக்க முடியாமல் போதலும், உண்ட உணவு சரியாகச் சீரணிக்காமல் இருப்பதும், ஏப்பம் அதிகமாக அதிகமாக வருவதும் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.

103) சுரோனித வாதம் :

இரு காதுகளிலும் இரத்தம் கட்டிக் காணப்படும்.

104) கப வாதம் :

உதரத்தின் மேல்நரம்பு சுமையாகத் தோன்றி, மூலாக்கினி மந்தமாகி, உடல் வெளுக்கும்.

105) குடல் வாதம் :

குடல் புரண்டு, குமுறி இரைந்து, மந்தித்து பறந்தோடி வலித்துக் கால் உளையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக