சனி, 15 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - பிளவைகள்

            நீரிழிவு நோய் உடலில் ஊறி, உடல் வன்மையை குறைத்து, ஆங்காங்கு சிறு பருக்கள் அல்லது பெருங்கட்டிகளை உருவாக்கும். சில வேளைகளில் பருக்கள அல்லது கட்டிகள் உருவாகாமல் சொறிந்த இடத்திலாவது, அடிபட்ட இடத்திலாவது புண் உண்டாகி துன்பம் உண்டாக்கும். இது 10 வகைப்படும்.

பிளவை நோயின் வகைகள் :

1) கடுகுப் பிளவை :

கடுகைப் போன்ற வடிவில் சிறிசிறு கட்டிகளாய் ஒவ்வொன்றாய், உடல் முழுவதும் பரவி வலியை உண்டாக்கும்.

2) கடலைப் பிளவை :

கடலை அளவில் உடல் முழுதும் சிறிது உடல் முழுதும் பரவித் தாங்க முடியாத வலியை உண்டாக்கும்.

3) நிலப்பூசணி பிளவை :

நிலப்பூசனியின் அளவில் கட்டி உண்டாகி அதில் தாங்க முடியாத வலியையும் உண்டாகும்.

4) கட்டிப் பிளவை :

தோலின் மேல்புறம் அல்லது சதையின் மேல்புறத்தில் கட்டிபோலப் பெருத்து வட்டமாகவோ, நீளமாகவோ வளர்ந்து, சில நேரங்களில் உடைந்து சீழ் வடியும். சில நேரங்களில் உடையாமல் அழுந்திப் போகும். மேலும் ஒரு கட்டி குணமாகும் முன்னரே இன்னொரு கட்டி உண்டாகி உடலில் துன்பத்தை உண்டாக்கும்.

5) மடக்குப் பிளவை :

இது பெரும்பாலும் சதைப்பற்றுள்ள பிட்டம், தொடை போன்ற இடங்களில் உண்டாகும். இது தோன்றும்போதே அந்த இடங்களில் கனத்து வீங்கியும், அந்த இடத்தைச் சுற்றி தோல் தடித்து சிவந்தும், நடுவில் குழி விழுந்தும் காணும். இது தாங்க முடியாத வலியையும் உண்டாக்கும்.

6) ஆமையோட்டுப் பிளவை :

ஆமையோட்டைக் கவிழ்த்தது போலக் கட்டி நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே வந்து அதில் சிறுசிறு கண்கள் தோன்றி அதிலிருந்து சீழ் வடியும். பல்வேறு கெடுதிகளை உண்டாக்கும்.

7) பேய்ச்சுரைப் பிளவை :

இது உண்டாகும் இடத்தில் நெருப்பால் சுட்டது போல எரிச்சல் உண்டாகி, பிறகு அங்குக் கருஞ்சிவப்பு நிறத்தில் கட்டி உண்டாகும். இதன் அடிப்பகுதி கனத்து வீங்கி வலிக்கும். இதனுடன் சுரம், மயக்கம், சோர்வு, கழிச்சல் உண்டாகும்.

8) கூன் பிளவை :

இது வயிற்றிலாவது, முதுகிலாவது உண்டாகி பெருத்துத் திரண்டு, மேல்பக்கம் பூசினது போலவும், உள்பக்கம் அழுந்தினது போலவும் அடர் கருப்பு நிறத்திலும் இருக்கும். வியர்வை, தாங்கமுடியாத வலி, சுரம் முதலிய குணங்கள் தோன்றும். மேலும் கட்டியிலிருந்து நாற்றத்துடன் சீழ் வடிந்து கூன் விழுந்ததைப் போல நிமிரவும் முடியாமல், குனியவும் முடியாமல் துன்பம் தரும்.

9) வலைக்கண் பிளவை :

இது உண்டாகும்போதே அந்த இடத்தில் எரிச்சல், குத்தல், குடைச்சல் போன்ற குணங்களைக் காட்டும். மேலும் கட்டி வந்த இடத்தில் தடித்து சிவந்து வீங்கி இருக்கும். பின்பு நாளுக்கு நாள் பெருத்து வலையின் கண்கள்போலச் சிறுசிறு கண்கள் உண்டாகி, சீழ் வடிந்து உடல் முழுவது பரவித் துன்புறுத்தும்.

10) கூட்டுப் பிளவை :

சிறுசிறு கட்டிகள் ஒரே கூட்டமாய் தோன்றி அவைகள் வளர வளரச் சிறுசிறு கட்டிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கட்டியாக மாறித் தாங்க முடியாத வலியும், எரிச்சலும், சீழும் உண்டாக்கும்.


            இதுவரைக் கண்ட 10 வகையான பிளவைக் கட்டிகள் போக மேலும் 5 விதமான பிளவைக் கட்டிகளைப் பற்றிச் சில நூல்களில் உள்ளது. அவை மார்புப் பிளவை, பக்கப் பிளவை, இராஜ பிளவை, கண்டமாலை, பேய்ச்சொறி.


11) மார்புப் பிளவை :

மார்பின் தண்டுபோலத் திரண்டு காணும்.

12) பக்கப் பிளவை :

முள்ளந்தண்டின் அருகில் உரைபோலத் திரண்டு பல கண்களும், புரியும், சீழும் உண்டாகி, சுரம், கழிச்சலை உண்டாக்கும்.

13) இராஜ பிளவை :

நடுமுதுகின் முள்ளந்தண்டின் மேல் மாங்காய் அல்லது தாமைரைக்காய் அளவில் வீங்கி, கண் உண்டாகி, புரையும், சுரமும், சோகமும், கவலையும் காணும்.

14) கண்டமாலை :

கண்டத்தைச் சுற்றி அரித்துத் தடித்துப் புண்ணாகி சீழ்க்கட்டி புரையோடும்.

15) பேய்ச்சொறி :

உடலில் அடிக்கடி திணவு கண்டு, காசுபோலத் தடித்துச் சிவந்து மறைந்து விடுவதும், அதிக நாட்கள் சென்றால் இருமலும், கபமும் காணவும் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக