புதன், 26 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - பெருங்கழிச்சல் / அதிசாரம் (Diarrhea)

            நோயால் இளைத்த மிருகமாமிசம், கெட்டு உலர்ந்த அல்லது அழுகிய மாமிசம், அழுகிய உணவுகள், நன்றாக வேகாத பதார்த்தங்கள், எளிதில் செரிக்காத உணவுவகைகள், கள் சாராயம் குடித்தல், காரமான பொருட்கள், வயிற்றில் புழுக்கள் அதிகமாகக் காணப்படுதல், அபானவாயு, தும்மல், மலம், சிறுநீர், கொட்டாவி, பசி, தாகம், இருமல், நித்திரை, கண்ணீர், சுக்கிலம், சுவாசம், வாந்தி, இளைப்பு என்னும் உடலின் 14 வேகத்தை அடக்குதல் போன்ற காரணங்களால் இந்நோய் உண்டாகிறது.

            மேலும் வாயு அதிகரித்து 7 தாதுக்களையும், பசியையும், கெடுத்து மலப்பையில் சேர்த்துக் கொண்டு கெட்டியாயிருக்கிற மலத்தை நீராகக் கறைத்து ஆசன வாயின் வழியாய் ஒழுகச் செய்யும். இது மார்பு, குதம், வயிறு இவ்விடங்களில் நோதல், உடம்பு இளைத்தல், அசீரணம் என்னும் குணங்கள் கொண்டது. மேலும் இரைப்பை புற்று, இரைப்பை சுரப்புகள் அதிகமாகச் சுரத்தல், இரைப்பை புண், சிறுகுடலில் உண்டாகும் இளைப்பு, சிறுகுடல் ஊட்டச்சத்தைச் சரியாக உறிஞ்ச இயலாத நிலையில், ஒட்டுண்ணிகள், நுண்கிருமிகள், குடல் புற்று, அடிக்கடி மலமிளக்கும் மருந்துகளை உண்ணுதல், கணைய புற்று, பெருங்குடல் பாதிப்பு, நாட்பட்ட நோய்களுக்கு நீண்டநாட்கள் மருந்து உண்ணுதல் போன்ற காரணங்களாலும் இந்நோய் உண்டாகிறது. இந்நோய் 8 வகைப்படும். சில நூல்கள் அசீரணத்தால் உண்டாகும் கழிச்சளையும் சேர்த்து 9 வகைப்படும் என்றும் கூறுகிறது.

அதிசார நோயின் வகைகள் :
1. வாத அதிசாரம் :
இந்நோயில் வயிறு பொருமி நொந்து, சூலைபோல வலித்து, வயிற்றில் காற்று கூடி இரையும். நீர் இறங்காத, அடிக்கடி கழியும். உண்ட உணவு சரியாகச் செரியாமல் கழியும் மலம் மஞ்சள் - கறுப்பு நிறத்தில் அதிக துர்நாற்றத்துடன் கழியும். உடல் வெளுக்கும். உணவு சீரணிக்காமல் கழியும், புளிப்பு நெஞ்சில் தங்கி இருத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

2. பித்த அதிசாரம் :
இந்நோயில் வயிறும் ஆசனவாயும் கடுத்து, மலமானது முதலில் மஞ்சள் நிறத்திலும், பிறகு இரத்தம் கலந்தும், வறண்டு, நுரை கூடி, மிகுந்த காற்று பரிந்து துர்நாற்றத்துடன் கழியும். உடல், கைகால் வீங்கி, காய்ச்சல் கண்டு, உடல் வெளுத்து, தலை நோதல், வாந்தி என்னும் குணங்கள் தோன்றும்.

3. சிலேத்தும அதிசாரம் :
இந்நோயில் மலம் கேட்ட நாற்றத்துடன், நுரைத்து, வயிறு அடிக்கடி வலித்து, ஊனுடன் சேர்ந்து கழியும். மேலும் சுவையின்மை, இருமல், மார்புச்சளி, பெருமூச்சு, மயிர் சிலிர்த்தல், ஆசனவாய் கடுத்தல், உடல் முழுதும் திணவு எடுத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

4. திரிதோஷ அதிசாரம் :
இந்நோயில் வாத - பித்த -சிலேத்தும அதிசாரங்களில் தோன்றும் அனைத்து குணங்களும் சேர்ந்து தோன்றும். மேலும் உள்காய்ச்சல், வெளியில் குளிர்ச்சி, விக்கல், வாந்தி, இருமல், மேல்மூச்சு, வயிறு இரைந்து இரத்த சீதமாய் கழிதல், உறக்கம், உடல் கடுப்பு, மேல் வலி, உணர்ச்சியற்று இருத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

5. சுர அதிசாரம் :
இந்நோய் சுர நோய்க்குத் துணை நோயாக வரும். இதைப் பற்றிச் சுர நோயின் ரோக நிதானத்தில் விரிவாகக் காணலாம்.

6. தோஷ அதிசாரம் :
இந்நோய் குழந்தைகளுக்குப் பறவைகளின் பார்வையால் உண்டாகும் தோஷத்தால் ஏற்படும் என்று கூறுவர்.

7. பய துக்க அதிசாரம் :
இந்நோய் அதிக பயம் மற்றும் துக்கத்தால்  தூக்கத்தின் காரணமாக வாத - பித்த - கப தாதுக்கள் தம் இயல்புமாறி கழிச்சலை உண்டாக்கும். இந்நோயில் தாதுக்களின் நிலை அறிந்து அவற்றைத் தன்நிலைக்கு கொண்டு வருவதால் கழிச்சலை குணமாக்கலாம்.

8. மந்த அதிசாரம் :
இந்நோய் உண்ட உணவு செரியாமல் செரியாமல் பேதியாகும். இந்நோயில் மலம் மந்தத்துடன் துர்நாற்றத்துடன் பேதியாதல், வயிற்றில் நோய், வாயில் நீருறல் என்னும் குணங்கள் தோன்றும். இதனை அசீரண பேதி என்றுங் கூறுவர்.

9. ரத்த அதிசாரம் :
இந்நோய் அதிக காரம், புளிப்பு கொண்ட உணவுகளை உண்பதாலும், இரசம், பாடாணம் கூடிய மருந்துகளை அதிகமாகவோ அல்லது அதிக நாட்கள் உண்பதாலும், மேலும் வயிற்றை புண்ணாக்கும் குன்றிமணி, சித்திரமூலம், மூசாம்பரம், சேங்கொட்டை போன்ற பொருட்களைக் கொண்டு செய்த மருந்துகளை அளவு தெரியாமல் உண்பதாலும் மலத்துடன் இரத்தம் கலந்து பேதியாகும். இந்நோயில் சில வேளைகளில் மலத்துடன் சீதம் அல்லது பச்சை இரத்தமும் கலந்து வெளிப்படுவதை சீதக் கழிச்சல் (சீதபேதி) என்று கூறுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக