பாண்டு நோய் முற்றிய நிலையில் பித்தத்தை அதிகரிக்கும் உணவை உண்பதாலும், அசுத்தமுள்ள நீரை பருகுவதாலும், பருவநிலை மாறுபாடு அடைவதாலும் காமாலை உண்டாகிறது. மேலும் பித்தப்பை குழாயில் அடைப்பு உண்டாகி பித்தம் குடலுக்கு செல்லாமல் இரத்தத்தில் கலப்பதாலும், பித்தப்பை குழாயில் அடைத்திருக்கும் கற்கள், குடல் புழுக்கள், பித்தப்பை மற்றும் அதன் அருகில் உள்ள உறுப்புகளில் புற்று, கட்டி, தொற்று, அழற்சி, நிணநீர் நாளங்களில் வீக்கம், பித்தப்பை சுருக்கம் போன்றவற்றின் காரணமாகவும் இந்நோய் உண்டாகிறது.
மேலும் துருசு, செம்பு, காரீயம், வெள்ளை பாடாணம் போன்றவற்றைக் கொண்டு செய்யும் மருந்துகள் சரியாக முடிக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில் அதை உண்பதாலும், பாம்புக்கடி, கள், சாராயம், ஈரலில் தொற்று, அழற்சி, பாதிப்பு போன்ற காரணங்களாலும், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும் இந்நோய் உண்டாகிறது என்று அறியப்படுகிறது. இந்நோயில் மொத்தம் 13 வகைப்படும்.
காமாலை நோயின் வகைகள் :
1. ஊது காமாலை :
இந்நோயில் கண்களிலும், வாயிலும் நீர் வடிதல், உடல் முழுதும் வீக்கத்துடன் கனத்தல், திமிர், எரிச்சல், உள்ளங்கை - கால் - கண் - உடல் இவைகளில் வெளுப்பு, கை கால் ஒச்சல், நடுக்கல், இளைப்பு, மலம் கட்டுதல், முகத்தில் மஞசள் நிறம், காது மந்தம், தலைபாரம், தலைசுற்றல், தயக்கம், மஞ்சள் மூத்திரம் என்னும் குணங்கள் தோன்றும்.
2. வறள் காமாலை :
இந்நோயில் கைகால் வற்றல், அசதி, மலம் கருத்தல், சிறுநீர் சிவந்து அல்லது கறுத்து அருகலுடன் கழிதல், பார்வை மந்தம் உடல் கறுத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.
3. வாத காமாலை :
இந்நோயில் வயிறு பொருமல், வீக்கம், மலபந்தம், புறங்கால் - முகம் அதைத்தல், சோம்பல், உடல் கடுத்தல், கண்கள் வீங்குதல், உறக்கமின்மை என்னும் குணங்கள் தோன்றும்.
4. பித்த காமாலை :
இந்நோயில் மயக்கம், தயக்கம், உறக்கமின்மை, படுக்கையாகக் கிடத்தல், அசீரணம், மேல்மூச்சு, உண்ட உணவு அப்படியே பேதியாதல், வயிறு இரைச்சல், அசதி என்னும் குணங்கள் தோன்றும்.
5. சிலேத்தும காமாலை :
இந்நோயில் தேகம் உருவழிந்து போதல், இருமல், தலை - முகம் இவற்றில் வியர்வை, மேல்மூச்சு, உடல் நடுக்கம், நெஞ்சு கனத்தல், நடை தளரல், கண்கள் சிவத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.
6. வாத சிலேத்தும காமாலை :
இந்நோயில் வாத, சிலேத்தும காமாலைகளின் குணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.
7. சிலேத்தும பித்த காமாலை :
இந்நோயில் சிலேத்தும, பித்த காமாலைகளின் குணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.
8. தொந்தக் காமாலை :
இந்நோயில் வாத, பித்த, சிலேத்தும காமாலைகளின் குணங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்றும்.
9. மஞ்சள் காமாலை :
இந்நோயில் மஞ்சள் நிறமான சிறுநீர், உடல் முழுதும் ஊதல், தளர்ச்சி, முகம் - கால் - கை - உண்ணாக்கு - கண்ணின் வெண்படலம் இவைகள் மஞ்சள் நிறமாதல், முகத்தில் மினுமினுப்பு, உணவில் வெறுப்பு, அழுகை, மனச்சலிப்பு, சுவாசத்தில் மஞ்சள் நாற்றம் வீசுதல், தாதுநஷ்டம், மலபந்தம் என்னும் குணங்கள் தோன்றும்.
10. அழகு காமாலை :
இந்நோயில் கைகால் அசதி, கண் - சிறுநீர் இவைகளில் மஞ்சள் நிறம், ஆண்குறியில் எரிச்சல், அசீரணம், வயிற்று உப்புசம், உடல் வெப்பத்துடன் மினுமினுத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.
11. செங்கமலக் காமாலை :
இந்நோயில் தாமதகுணம், உடல் தளர்த்தல், சோம்பல், சிறுநீர் சிவந்து அல்லது மஞ்சள் நிறத்துடன் அகுறைந்த அளவில் கழிதல், உடலும் நகமும் வெளுத்தல், சுரம், உண்ணாக்கு - நாவு - உமிழ்நீர் இவைகளில் மஞ்சள் நிறம் என்னும் குணங்கள் தோன்றும்
12. கும்ப காமாலை :
இந்நோயில் உடல் கண்டுகண்டாக வீங்குதல், அடிக்கடி களைத்தல், வியர்த்தல், உடலும் சிறுநீரும் மஞ்சள் நிறமாகக் காணுதல், மாலைநேரத்தில் வியர்வை, கண்சிவத்தல், உடல் சோர்வு, வாதத்தின் ஆதிக்கம் உடலில் அதிகமாக இருத்தல் என்னும் குணங்கள் தோன்றும்.
13. குன்ம காமாலை :
இந்நோயில் உணவு செரிக்கும் காலத்தில் அடிவயிறு வலித்தல், வாந்தி, கண்களில் மஞ்சள்நிறம், மஞ்சள் நிறத்துடன் குழம்பிய சிறுநீர், வாய் வெளிர்ந்து போதல், பிரமை, இருமல், இளைப்பு என்னும் குணங்கள் தோன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக