வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - சுவையின்மை / அரோசிகம்

        சுவையின்மை நோய் உடலின் கேடாலும், மனதின் கேடாலும் உண்டாகிறது. இதனால் உண்ணும் உணவின் சுவையை அறிய முடியாமல் போகும். உடலின் கேட்டினால் உண்டாகும் சுவையின்மை நோயானது வாதம், பித்தம், கபம் போன்ற தாதுக்களின் பாதிப்பினால் உண்டாகும். மனதின் கேட்டினால் வரும் சுவையின்மை நோயானது மனக்கலக்கம், பீதி, மிகுந்த மனமகிழ்ச்சி ஆகிய மனதின் வேறுபாட்டால் உண்டாகும்.


சுவையின்மை நோயின் வகைகள் :

1) வாதச் சுவையின்மை :

வாதம் மாறுபாடு அடைவதால் உண்டாகும் இந்நோயில் வாய் எப்போதும் துவர்ப்பாகத் தோன்றுவதுடன், உண்ணும் எந்தப் பொருளும் துவர்ப்பாக இருக்கும். மேலும் பல்கூச்சம், ஒக்களித்தல் முதலிய குணங்கள் தோன்றும்.

2) பித்த சுவையின்மை :

பித்தம் மாறுபாடு அடைவதால் உண்டாகும் இந்நோயில் வாயில் கசப்பு அல்லது புளிப்பு சுவையுடன் இருக்கும், உண்ணும் பொருட்களும் இச்சுவையுடன் காணப்படும், வாய் குமட்டிக் குமட்டி ஒக்களித்தல் என்னும் குணங்களுடன் தோன்றும்.

3) கபச் சுவையின்மை :

கபம் மாறுபாடு அடைவதால் உண்டாகும் இந்நோயில் வாய் புலால் மனத்தோடு, கோழை அதிகரித்து, ஒருவித வெறுப்பு தோன்றுவதுடன், கோழையும் வாய்நீரும் இனிப்புச் சுவையுடன் காணும். அடிக்கடி ஒக்காளமும் காணும்.

4) தொந்தச் சுவையின்மை :

மூன்று தாதுக்களும் கேடு அடைவதால் உண்டாகும் இந்நோயில் முன்சொன்ன மூன்று குணங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து காணும். ஒக்காளம் மிகவும் அதிகமாகத் தோன்றும்.

5) மனச் சுவையின்மை :

இந்நோயில் மனக்கலக்கம், பீதி, துயரம், கோபம் போன்ற காரணங்களால் மனநிலை மாறி, எப்போதும் வாயில் நீர் ஊறி, உண்ணும் உணவில் வெறுப்பு, ஒருவிதமான சுவையும் இல்லாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக