வாத பந்தமலாது குன்மம் வராது என்பது தேரையர் வாக்கு. எனவே இதுவும் வாத மீறலால் உண்டாகும் நோய் என்று அறியலாம். இது வயிற்றில் காற்று கூடி உருண்டையை போல திரண்டு இங்கும் அங்குமாக உலவித் துன்புறுத்தும். இது 8 வகைப்படும்.
குன்மம் உண்டாக காரணம் :
- அதிக சூடுள்ள உணவையும், கல், மண், தூசு, மயிர் கலந்த உணவை உண்ணுதல்.
- சுனைநீர், சுண்ணாம்பு கலந்த நீர், தேங்கிய நீரை அருந்தல்.
- மந்தம் தரும் பொருட்களை உண்ணுதல்.
- அதிக கோபம்.
- பட்டினி இருத்தல்.
- மனச்சலிப்பு,
- துக்கம்.
குன்ம நோயின் வகைகள் :
1) வளி (வாத) குன்மம் :
உடல் கனத்து கடுத்தல், கைகால் சந்துகளில் உளைத்து ஓய்தல், தலைவலி, மலச்சிக்கல், நடை குறைதல், தூக்கம், பலவீனம், அற்ப உணவு, வாந்தி, கிறுகிறுப்பு, ஈரலும், நெஞ்சும் வற்றல், ஒரு பக்கத்தைப் பற்றி வயிறு எரிந்து உளைதல், குடலைப் புரட்டி வலித்தல்,இரவில் தொல்லைகள் கூடுதல் முதலியன தோன்றும்.
2) அழல் (பித்த) குன்மம் :
உடல்சூடு, கண், முகம், சிறுநீர் மஞ்சளாதல், கைகால் ஓய்தல், மனக்கோளாறு, வெய்யிலில் மயக்கம், வாந்தி வருதல், வயிறு மந்தம் மற்றும் வலி, நெஞ்செரிச்சல், கோழை, ஒக்காளம், வியர்வை, வாய் கசப்பு, உணவில் வெறுப்பு, மலத்தில் பித்தம் ஏறிக் கடுத்து இறங்கல், மேல்மூச்சு முதலிய குணங்கள் தோன்றும்.
3) ஐயக் (கபம்) குன்மம் :
உடல் வற்றி கருத்தல், பலவீனம், உணவில் வெறுப்பு, வாயில் நீர் ஊறல், நாவு வழுவழுத்து இனித்தல், கபம் சீழாய் விழுதல், விக்கல், தும்மல், இருமல், இளைப்பு, கொட்டாவி,தலைக்கனம், வயிற்றில் இரைச்சல், நீர் - மலம் கட்டி, பயம், நடுக்கல், நெஞ்சில் புகை கம்மியது முதலிய குணங்கள் தோன்றும்.
4) சன்னிக் (முக்குற்றம்) குன்மம் :
உடல் உஷ்ணம் -குளிர்ச்சி, தயக்கம், மயக்கம், திடுக்கிடல், குளிர், உணவில் வெறுப்பு,அடிவயிற்றில் இரைச்சல், உப்புசம், கிழிச்சல், வாய் நீர் ஊறல், புகைச்சல், அதிக சுவாசம், வாய்த் துவர்ப்பு முதலிய குணங்கள் தோன்றும்.
5) வலி குன்மம் :
உடல் வற்றிக் கருத்தல் - கடுத்தல், வயிற்றில் முள்ளைச் சொருகியது போல பலவாறு வலித்தல், உப்புசம், அற்ப உணவு, நெஞ்செரிச்சல், எதிரெடுத்தல், முதுகுத்தண்டு வலி, இடுப்பு நோய், கடும் சுரம், பொய்ப்பசி, விலாச் செருகல், தூக்கம் முதலிய குணங்கள் தோன்றும்.
6) சக்தி குன்மம் :
உடல் வெளுத்து வற்றல், திமிர், நடைக் குறைதல், பலவீனம், வாயு கூடி வயிறு பொருமல், உணவைத் தள்ளல், செரியாமை,வாந்தி, நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், மலம் கருகல், ஆயாசம், ஏக்கம், மயக்கம், தயக்கம், வாந்தி, வயிற்றில் அற்பவலி, சிறு நரம்புகள் புடைத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.
7) எரி குன்மம் :
உடல் இளைத்தல், எரிச்சல், குடலைப் புரட்டி குமட்டல், வாய் நீர் ஊறல், வயிறு சதா இரைதல் - பொருமல், ஏப்பம், தலை கனத்தல், கிறுகிறுப்பு,மயிர்க்கால் வழி வியர்த்தல்,பேதி, உணவு செரியாமை, அடிவயிற்றிலும்,நெஞ்சிலும் எரிதல் முதலிய குணங்கள் தோன்றும்.
8) சூலை குன்மம் :
உடல் வெதுவெதுப்புடன் குளிரல், எலும்பு பொருத்துகள் உளைந்து குத்தல், மேல்வயிறு வலித்து எரிதல், வாய் நீர் ஊறல், ஏப்பம், செரியாமை, உணவு செல்லாமை,வயிறு உப்பலுடன் அசதி, நடைக்குறைவு,கை கால் எரிவு, அடிவயிற்றில் குடல் புரண்டு வில்போல இழுத்தல் முதலிய குணங்கள் தோன்றும்.
9) இரத்த குன்மம் :
இது பெண்களுக்கு வரக்கூடியது. பூப்பு தோஷங்கள் காரணமாக கர்ப்பம் போன்ற குறிகுணங்கள் தோன்றும். 10 மாதங்கள் சென்ற பின்பே சிகிச்சை செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக