ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - வாயில் உண்டாகும் நோய்கள்

                சித்த மருத்துவத்தில் பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய வாய் (உதடு) நோய் என்ற பிரிவில் 11 வகைகள், நாக்கு நோய் என்ற பிரிவில் 7 வகைகள் என 18 வகையான நோய்களும், குழந்தைகளுக்கு வரக்கூடிய அக்கரம் என்ற 7 வகையான நோய்களும், மேலும் நாமுள், நா நாற்றம் என்ற இரண்டு வகை நோய்கள் என்ற 9 நோய்களும் என மொத்தம் 27 வகையான நோய்கள் கூறப்படுகிறது. (இவற்றில் அக்கரம், நாமுள், நாநாற்றம் போன்றவற்றை குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்கள்பற்றிக் காணும்போது விரிவாகக் காண்போம்.)

உதட்டு நோய் ரோக நிதானம்

உதட்டில் வரும் வியாதிகள் வாதம், பித்தம், கபம், முக்குற்ற கலப்பு (தொந்தம்), சதை, நீர், மினுமினுப்பு, குருதி, குட்டம், வெடிப்பு, அடிபட்ட வீக்கம் என்று 11 வகைப்படும்.

உதட்டு நோய் வகைகள் :

1. வாத உதட்டு நோய் :

இதில் உதடுகளில் கத்தியின் வாயைப் போல் கூர்மையான வெடிப்புகளும், மறத்தலும் அதிக நோய் உண்டாகும்.

2. பித்த உதட்டு நோய் :

உதடுகளில் அதிக எரிச்சலுடன் கடுகை போல் மஞ்சள் நிறமான கொப்புளங்கள் உண்டாகும். அப்போது அதிலிருந்து வியர்வை கசிவு உண்டாகும். அக்கொப்புளங்கள் சீக்கிரத்தில் உடைவதாயிருக்கும்.

3. சிலேத்தும உதட்டு நோய் :

உதடுகளில் அதிக சீதளத்தைக்கொண்டு சகிக்கக்கூடாத நோயையும், வீக்கத்தையும், வெளுப்பான சிறிய கொப்புளத்தையும் உண்டாக்கும். அதிலிருந்து வியர்வை பெருகும்.

4. முக்குற்ற கலப்பு (தொந்தம்) உதட்டு நோய் :

உதடுகளில் வெடிப்பு, அதிக நோய் மரத்தல், கொப்புளங்கள் எழும்புதல், அதில் மாறாது சலம் வடிதல், துர்கந்தம், ஒரு வேளை வாடுதல், ஒரு வேளை உப்புதல், வறளல் என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

5. சதை உதட்டு நோய் :

உதடுகளில் சிவந்த மாமிசத்தை ஒத்த இரணத்தை உண்டாக்கி அதிலிருந்து அந்த நிறமான கிருமிகள் நெளிவதும், நமைச்சலும் நோயும் உண்டாகும்.

6. நீர் உதட்டு நோய் :

உதடுகளில் வாத சிலேத்துமங்களால் நீர்க்குமிழியைப் போல் மாமிசத்தை வளரும். இதில் சலமும் சீழும் கசியும்.

7. மினுமினுப்பு உதட்டு நோய் :

உதடுகளில் எண்ணெய் தடவினது போல் மினுமினுத்த வீக்கம், அதில் கொழுப்பைப் போல் நல்ல மிருது வியர்வை, மிகுந்த தினவு என்னும் இக்குணங்களை உண்டாக்கும்.

8. இரத்த உதட்டு நோய் :

உதடுகள் ரத்த நிறமாகவும், ரத்தத்தை கக்குவது போலவும் இருக்கும்.

9. குட்ட உதட்டு நோய் :

உதடுகளில் சிறிய பேரிச்சங்காயை போன்ற வீக்கத்தை உண்டாக்கி மேலும் சிவந்த நிறத்தையும் உண்டாக்கும்.

10. வெடிப்பு உதட்டு நோய் :

இது வாய்வு உதட்டில் சேரும்போது பிறந்து அவ்வுதடுகளில் வெடிப்பை உண்டாக்கும்.

11. வீக்கம் உதட்டு நோய் :

உதடுகளில் காயங்கள் படும்போது பிறந்து அந்த இடத்தில் கட்டிகளை உண்டாக்கி அவை உடையும் படிச்செய்து இரணம் அல்லது வெடிப்பை உண்டாக்கும். அவைகளில் தினவும் அற்ப வலியும் இருக்கும்.


நாக்கு நோய் ரோக நிதானம்

            நாவில் ஏற்படும் நோய்கள் நாக்கரணை, நாக்குப்புற்று, நாக்குப் பிளவை, நாக்குக் கிரந்தி, நாக்குச் சிலந்தி, உள்நாக்கு 6 வகைப்படும். சிலர் நாக்குப்புண் என்ற நோயையும் சேர்த்து 7 வகையாகக் கூறுவர். இவை ஆண்களுக்கு நாக்கின் வலது புறத்திலும், பெண்களுக்கு நாக்கின் இடது புறத்திலும் உண்டாக்கும். இவற்றில் நாக்கரணை, நாக்குப்புற்று, நாக்குப் பிளவை ஆகிய நோய்களில் நாக்கின் கீழ் சோறு போல வெளுத்த நிறத்தோடு குருக்கள் தோன்றி, காதில் குத்தல், தலைவலி, வாயில் நீர் வடிதல், ஒக்காளம், பிடரியில் திமிர், நாவின் ஒருபுறத்தில் தடித்து சுண்ணாம்பு பட்டு வெந்ததுபோலப் புண்ணாகி, தொண்டை வறண்டு, பேசும்போது நாக்கு தடுமாறி குழறும் போன்ற குணங்கள் தோன்றும்.

நாக்கு நோய் வகைகள் :

1. நாக்கரணை :

நாக்கு முழுதும் வெடித்தல், அவ்வெடிப்புகளில் முள்தைத்தது போல் அருகுதல், மரத்தல், பழுத்த இலையைப்போலிருத்தல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

2. நாக்குப்புற்று :

நாக்கு முற்றிலும் காங்கையை கொண்டு சிவப்பாகி அதில் மாமிச நிறமான சிறு சிறு கொப்புளஙகளை உண்டாக்கும்.

3. நாக்குப்பிளவை :

நாவெல்லாம் இலவமுட்களைப் போல் தடித்தும் வெளுத்தும் நெருங்கியும் நோயைத் தருகின்ற கொப்புளங்களை உண்டாக்கும்.

4. நாக்கு கிரந்தி :

சிலேத்தும பித்தங்களை கொண்டு நாவின் கீழ் வீக்கத்தை யுண்டாக்கும். இதனால் நாமரத்து தடித்து உயரும். அவ்வீக்கம் பழுத்தால் புலால் நாற்றம் வீசுவதும் மாமிசம் கரைவது மாயிருக்கும்.

5. நாக்குச் சிலந்தி :

அடிநாவின் கீழ் நுனிநாவைப் போல் தடித்த வீக்கத்தை உண்டாக்கும். இதனால் மரத்தல் அந்த இடத்தில் சிறு சிறு முளைகளைப் போல் கொப்புளம் எழும்புதல், தினவும் நோயும் அதிகரித்தல், வாயில் எரிச்சலுடன் நீர் வடிதல், உணவு உண்ண இயலாமை என்னும் குணங்களை உண்டாக்கும்.

6. உள்நாக்கு :

உண்ணாக்கில் வீக்கத்தை உண்டாக்கும். அப்போது முன்பு சொல்லிய நாக்குச் சிலந்தி நோயின் குணங்களுடன் இருமலும், அருகுதலும் உண்டாகும். இதனை உண்ணாக்கென்பர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக