வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - மேக நோய் / நீரிழிவு (Diabetes)

            வளிநாடியும், அழல் நாடியும் கூடி நடந்தால் மேகம் உண்டாகும். அல்லது வளிநாடியின் இடது பக்கத்தில் ஐய நாடி கூடி நடந்தாலும் மேகம் உண்டாகும். எனவே மேக நோயில் முதலில் வாதம் கேடடைந்து பின்னர் பித்தத்தையும், கபத்தையும் கேடடையச் செய்யும். இது 20 வகைப்படும். இவற்றில் வாதத்தின் தொடர்பால் வருவது 4 என்றும், பித்தத்தின் தொடர்பால் வருவது 6 என்றும், கபத்தின் தொடர்பால் வருவது 10 என்றும் கூறுவர். இந்த 20 வகையான மேக நோய்களுடன், மருந்தீட்டினால் உண்டாகும் மேக நோயையும் சேர்த்து 21 என்றும் கூறுவர்.


மேக நோய் உண்டாகக் காரணங்கள் :

1) அளவு கடந்த இனிப்புச் சுவையுள்ள போர்ட்களை உண்ணுதல்.

2) எப்போதும் மனம் வருந்தியது போல இருத்தல்.

3) அதிகநேரம் அமர்ந்து இருத்தல்.

4) அதிக கலவியில் ஈடுபடுதல்.

5) சோம்பித் திரிதல்.


மேகத்தால் உண்டாகும் துன்பங்கள் - 10 :

1) கீழ்வயிற்றில் சங்கடம்.

2) நீர் இறங்கியவுடன் சோர்வு.

3) வாயு மிகுந்து துன்பம் உண்டாதல்.

4) சுக்கில நாசம்.

5) அதிக தாகம், இளைப்பு.

6) நீரில் மேகம் காணுதல்.

7) உடலில் கட்டிகள் தோன்றல்.

8) பேதி அதிகரித்தல்.

9) சரீரம் கனத்து, சுவாசம் அதிகரித்தல்.

10) மனக்கலக்கம், நினைவுகுன்றி உயிர் பிரிதல்


மேக நோயின் வகைகள் :

வாதத்தால் உண்டாகும் மேகம் - 4 :

            வாதத்தின் பாதிப்பால் உண்டாகும் மேகத்தில் பொதுவாகக் கைகால் - கண் - உடல் அழற்சி, பல், நாக்கு, நடுத்தொண்டை கறுப்படைதல், அரட்டல், புரட்டல், மயக்கம், அதிக உணவு - நீர் வேண்டுதல், துர்நாற்றமுடன் அபானவாயு, நாடிபேதம், நாவறட்சி, தூக்கமின்மை,  இருமல், இரைப்பு, வயிற்றுவலி, நடுக்கம், இருதயத்துடிப்பு, நிற்க இயலாமை, நிணம் - கட்டிச்சளி - நீளநரம்பு - முதிர்ந்த சுக்கிலம் போன்ற குணங்கள் தோன்றி, சிறுநீர் சிதறிய கள் போல வழுவழுத்து இறங்கும். ஈ மொய்க்கும்.

1) நெய்மண நீர் :

இதில் கழியும் சிறுநீரானது நெய்யின் மணத்தையும், பிசுபிசுப்பையும் கொண்டிருக்கும். இதைத் துணியில் நனைத்துக் கொளுத்த எரியும். இறங்கும் நீர் மிகுதியாகக் காணும். உடல்வாடிக் கொண்டே வரும். மூர்ச்சை, சோர்வு காணும். நோய்கண்ட 7 நாட்களில் கொல்லும்.

2) பசுமண நீர் :

இதில் கழியும் சிறுநீர் பசுவின் சிறுநீர் போன்ற மணத்தை ஒத்திருக்கும். ஒரு நாழிகைக்கு ஒரு படியளவு சிறுநீர் இறங்கும். இதுவும் துணியில் நனைத்துக் கொளுத்த எரியும். உடல் மெலிந்து சோர்வுண்டாகும். முகத்தின் ஒளி குறைந்து சோர்வு, இளைப்பு காணும். நோய்கண்ட 15 நாட்களில் கொல்லும்.

3) சீழ் (பிரமிய) நீர் :

இதில் சிறுநீர் கவிச்சு மணம் வீசும். மேலும் சிறுநீரானது கொழுப்புப் போலக் கனத்து மாமிச நாற்றமுடனும் - தேன் போன்ற மணத்துடனும் இறங்கும். இது நோய்கண்ட 6 மாதத்தில் தீங்கு இழைக்கும்.

4) சதை நீர் :

இதில் சிறுநீர்த்தாரை, சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் உள்ள சதை மற்றும் சவ்வு இற்று சிறுநீருடன் கலந்து ஆட்டுக்குட்டியின் கறியைக் கழுவிய நீர்போலவும், ஆட்டின் கொழுப்பு போலவும், புளித்த கரும்புச்சாரின் மணம் போலவும் இறங்கும். இது 6 மாதத்தில் தீங்கு இழைக்கும்.


பித்தத்தால் உண்டாகும் மேகம் - 6 :

            பித்ததத்தின் பாதிப்பால் உண்டாகும் மேகத்தில் பொதுவாக உடல் அழற்சி, கடுப்பு - கவிச்சு நாற்றம் - மஞ்சள் நிறத்தில் நீர் இறங்குதல் - எரிச்சல் - உடல் வற்றல் போன்ற குணங்கள் இருக்கும். சோர்வு, மயக்கம், தயக்கம், அரட்டல், புரட்டல், நாவறட்சி, விக்கல், வாந்தி, வாய்ப்புண்ணாகி நாற்றம், சுரம், ஆண்குறி குத்தல், வெடித்தல், நாவில் புளிப்புச்சுவை - துவர்ப்பு -பேதி, மலச்சிக்கல்சிறுநீர் சாம்பல் இறைச்சி கழுவிய நீர் - மஞ்சள் - கரி போன்ற நிறத்திலும், புளிப்புச் சுவையுடனும் கழிதல் போன்ற குணங்கள் காணும். இந்தச் சிறுநீரில் சீழ், கற்றாழை, தேன் போன்ற மணம் வீசும்.

5) யானைக் கொழுப்பு மணநீர் :

யானையின் மதநீர் போல அதிவிரைவாய் இறங்கும். இந்தச் சிறுநீர் படிந்த இடத்தில் சிறிது நேரத்தில் உவர்மண்போல அடியில் படிந்திருக்கும். 8 மாதத்தில் தீங்கிழைக்கும்.

6) கற்றாழை மணநீர் :

கற்றாழையின் மணம் மற்றும் நாற்றத்துடன் சிறுநீர் இறங்கும். அதிக துர்நாற்றமுடன் இருக்கும். இது 7 ஆண்டில் தீங்கிழைக்கும்.

7) சுண்ண மணநீர் :

சுண்ணாம்பு போலக் காரமும், நாற்றமும் கொண்டு சிறுநீர் இறங்கும். அந்த இடத்தில் ஈயும், எறும்பும் அரிக்கும். இது 2 ஆண்டில் தீங்கிழைக்கும்.

8) இனிப்பு  (மதுமேகம்) மேகநீர் :

இதில் விரையும், தண்டும் கடுத்து, மஞ்சளாய் சிறுநீர் இறங்கும். சிறுநீர் கழிந்த இடத்தில் சிறிது நேரத்தில் வண்டல் போலப் படியும். சிறுநீர் தேன் போன்ற மனத்தில் இருக்கும். உடல் - கண்  வெளுக்கும். இது 5 ஆண்டில் தீங்கிழைக்கும்.

9) பளிங்கு நீர் :

இதில் தாண்டும், விரையும் கடுத்து சீழ் போன்ற நாற்றமுடனும், தாழை விழுதியின் சாற்றைப் போலவும் நிறமும், மணமும் கொண்டு கழியும். இதுவும் 5 ஆண்டில் தீங்கிழைக்கும்.

10) முயல் குருதிநீர் :

இதில் தாண்டும், வ்விரையும் கடுத்து குருதி போலவும், உப்பு நாற்றமுடனும், புலால் மனத்துடனும் வீசும். இது 9 மாதத்தில் தீங்கிழைக்கும்.


கபத்தால் உண்டாகும் மேகம் - 10:

உடல் கருத்தல் - வெளுத்தல் - திணவு, உணவு - நீர் வேட்கை, இருமல், உளைச்சல், உடல் சோர்வு, கோழை, தூக்கம், செரியாமை, வாந்தி, காணும். சிறுநீர் அடிக்கரும்புச்சாறு - தேன்பாகு - சர்க்கரை - கரைத்த மாவு - பன்னீர் - தயிர் - பால் போலக் கடுத்து இறங்கும். ஈயும், எறும்பும் மொய்க்கும்.

11) ஐய நீர் :

இதில் சிறுநீரில் கொழுப்பு நிறைந்து நிணத்தின் வாசனையுடன் இறங்கி ஆடை கட்டும். ஆண்குறியும், விரையும் வலிக்கும். இது 7 ஆண்டில் தீங்கிழைக்கும்.

12) தூமை  (தூய்மை) நீர் :

இதில் நல்ல தண்ணீர் போலச் சிறுநீர் இறங்கும். இது 10மாதத்தில் தீங்கிழைக்கும்.

13) மூளை (மச்சை) நீர் :

இதில் சிறுநீரானது எலும்பின் உள்ளே இருக்கும் மச்சையை நீரில் கரைத்தது போலக் கழியும். சிறுநீரானது நிணத்தின் நாற்றத்தை கொண்டிருக்கும். இது 5 ஆண்டில் தீங்கிழைக்கும்.

14) இளநீர் மேகம் :

இதில் சிறுநீர் இளநீர் போலத் தெளிவாக இறங்கும். சிறுநீரின் மணம் இளநீர் அல்லது தேங்காய் எண்ணையின் மணத்தைக் கொண்டிருக்கும். மேலும் அதிக தாகம், கவலை உண்டாகி, உடல் இளைக்கும். இது 7 ஆண்டில் தீங்கிழைக்கும்.

15) கள் நீர் :

இதில் சிறுநீர் வெளுத்து, நுரைத்து கள்ளைப் போன்ற நிறமும், மணமும் கொண்டிருக்கும். மயக்கம் உண்டாகும். இது 7 ஆண்டில் தீங்கிழைக்கும்.

16) சுக்கில மேகம் :

இதில் சிறுநீர் குழகுழத்து விந்து போலவும், தாழையின் சாறு போலவும் காணும். இதனால் உடல் கருக்கும். இது 3 ஆண்டில் தீங்கிழைக்கும்.

17) கழுநீர் மேகம் :

இதில் சிறுநீர் அடைத்துச் சிக்கி கழுநீர் போல இறங்கும். சிறுநீர் கழிந்த இடத்தின் அடியில் சங்கைச் சுட்ட சுண்ணாம்பு போலப் படிந்திருக்கும். உடல் நாற்றமடிக்கும். இது ஒரு ஆண்டில் தீங்கிழைக்கும்.

18) தேன் நீர் :

இதில் நீர் தேன் போன்ற மணத்துடன் இறங்கும். சிறுநீர் கழிந்த இடத்தில் மெழுகு போல அடியில் தாங்கும். ஈயும், எறும்பும் மொய்க்கும். இது 5 மாதத்தில் தீங்கிழைக்கும்.

19) இலவண (உப்பு) நீர் :

இதில் சிறுநீர் சுண்ணாம்பு கரைத்தது போலக் கலங்கியும், வெளுத்தும் இறங்கும். இதன் மணம் சுண்ணாம்பு நீரினை ஒத்திருக்கும். சிறுநீர் கழிந்த இடத்தில் சுண்ணாம்பு போலப் படிந்திருக்கும். இது 15 வருடத்தில் தீங்கிழைக்கும்.

20) கவிச்சி நீர் :

இதில் சிறுநீர் இறைச்சி கழிவிய நீரைப் போன்ற நிறத்திலும், மணத்திலும் இறங்கும். நீர் இறங்கும் போதெல்லாம் ஆண்குறியை புரட்டி நீரடைத்தது போல வலிக்கும். இது 3 ஆண்டில் தீங்கிழைக்கும்.

21) மருந்தீடு மேகம் :

இதில் சுடலைச் சாம்பல் மற்றும் கரைத்த சுண்ணாம்பு இவை இரண்டையும் கலந்த நிறத்திலும், மனத்திலும் சிறுநீர் இறங்கும். சில நேரங்களில் சிகைக்காயின் மனத்திலும் இருக்கும்.

2 கருத்துகள்:

  1. பெயரில்லாஜூலை 29, 2024 7:09 PM

    மேற்சொன்ன வியாதி மருந்து என்ன எப்படி சாப்பிடா வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு பகிரப்படும் விவரங்கள் அனைத்தும் பொதுவான தகவல்கள் மட்டுமே. மருந்துகள் பற்றிய தகவல்கள் வேண்டும் என்றால் தகுந்த மருத்துவரை அணுகவும்.

      நீக்கு