புதன், 26 ஆகஸ்ட், 2020

ரோக நிதானம் - ஊண் (நிண) கழிச்சல் / கிராணி (Chronic Dysentery)

            வயிற்றில் உள்ள பசித்தீ கேடு அடைந்து உண்ட உணவு செரிக்காமல் வயிற்றில் புளித்து, இடைவிடாது கழிச்சல் உண்டாகி, எளிதில் குணம் ஆகாமல், குடலைப் புண்படுத்தி மலத்துடன் நிணம் கலந்து வருவதால் இது நிணக்கழிச்சல் என்றும், குடல் சதை இற்று அதனுடைய ஊண் மலத்துடன் கலந்து வெளியேறுவதால் ஊண்கழிச்சல் என்றும் அழைக்கப்படும். இது 11 வகைப்படும் என்று கூறுவர்.

கிராணி உண்டாகக் காரணங்கள் :
  1. அதிசார நோயை சரியாக கவனிக்காமல் விட்டு குடல் புண்ணாவதால்
  2. உடலின் 7 தாதுக்களை அதிகப்படுத்துவதால்
  3. எளிதில் செரிக்காத, சரியாக சமைக்காத உணவை உண்பதால்
  4. சுனைநீர், சுண்ணாம்பு கலந்த நீர் போன்றவற்றை பருகுவதால்
  5. மலம் இளக்கும் மருந்துகளை அடிக்கடி உண்ணுதல்
  6. இரத்த இயக்க மாறுபாடு
  7. குடல் வாதம், குடல் இயக்க பாதிப்பு
  8. குடலில் இரத்தக்கட்டி இருப்பதால் இந்நோய் உண்டாகும்

கிராணி நோயின் வகைகள் :
1) வாதக் கிராணி :
இந்நோயில் நடுவயிற்றில் வலியும், பசியும் எடுக்கும். உடம்பு இளைத்து சீதக்கழிச்சல் உண்டாகும். மலத்துடன் காற்று அதிகமாக பிரிவதால் மலம் சிதறும். மேலும் மலம் கறுத்து, பழைய வெல்லப்பாகு போல இருக்கும்.

2) பித்தக் கிராணி :
இந்நோயில் நாடு வயிற்றில் தாங்க முடியாத வலி உண்டாகி மலம் பலநிறத்துடன் கழியும். உறக்கம் கெடும், நரம்புகள் தளரும். இற்றுப்போன வயிற்றில் ஊண் வெளியாகும்.உணர்வு அற்றுப்போகும். பேன் தலையை விட்டுப்போகும். கொடுக்கும் மருந்து பலனற்றுப் போகும்.

3) கபக் கிராணி :
இந்நோயில் மலம் கழியும்போது ஆசனவாய் எரிச்சலுடன் கடுக்கும். மேலும் மலம் அதிக நாற்றத்துடன் வெளுத்து இருக்கும். கைகால்கள் தளர்ச்சி அடையும். உட்காய்ச்சல், கண்கள் சிவந்து, மூக்கு - நாக்கு வரளும், குடல் நைந்து மலத்துடன் மெல்லிய தோல் வெளியேறும், அதிக விக்கல், உடல் சத்து குறையும், நினைவு கெடும் என்னும் குணங்கள் தோன்றும்.

4) தொந்தக் கிராணி :
இந்நோயில் அதிக காய்ச்சல், அதிக இரைச்சலுடன் மலம் வெளியேறுதல், குளிர், நடுக்கம், தலைவலி, உடல்சூடு, எரிச்சல், பால் போன்ற நிறத்தில் மலம் கழியும், அதிகமாக காற்று பிரியும் என்னும் குணங்கள் தோன்றும்.

5. உஷ்ண வாயு கிராணி :
இந்நோயில் வயிறு கனத்து ஊதும், வயிற்றில் இரைச்சல், கைகால் அசதி, மலம் தீய்ந்து வெளியேறுதல், உணவு செரிக்காமல் புளியேப்பம், உடல் வன்மை கெட்டு கறுத்து மெலியும் என்னும் குணங்கள் தோன்றும்.

6. அந்தர வாயு கிராணி :
இந்நோயில் உண்ட உணவு செரிக்காமல், கீழ்நோக்கியும் செல்லாமல் வயிற்றிலயே இருந்து புளிக்கச் செய்து, புளித்த ஏப்பம், வாந்தி, உணவில் சுவையின்மை, விலாவில் வலி, தாகம், விக்கல், உடலில் வெப்பம் அதிகரித்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

7. மூல வாயு கிராணி :
இந்நோயில் மூலவாயு (அபானவாயு) கீழ்க்குடலில் தங்கி உடலை வாட்டி, பசித்தீயைக் கெடுத்து, மந்தத்தை உண்டாக்கி, உண்ட உணவைச் செரிக்காமல் செய்யும். செரிக்காத உணவும், அபான வாயுவும் சேர்ந்து வயிற்றில் இரைச்சலையும், அடித்தொடையில் குத்தலையும் உண்டாக்கி, முளையை வெளியேத் தள்ளும். உடல் கிழத்தன்மை அடையும் என்னும் குணங்கள் தோன்றும்.

8. குன்ம கிராணி :
இந்நோய் நாட்பட்ட குன்ம நோயால் உண்டாகும். இந்நோயில் பேச இயலாமை, கண் ஒளி குறைந்து பீளை சேர்ந்து, தலை வியர்த்தல், தலைக்கனம், தலை நடுக்கல், உறக்கம், உடல் எரிச்சல், வயிறு உப்பி இரைதல், வயிற்றில் ஒருபுறம் மட்டும் வலித்து கழிச்சலை உண்டாதல் என்னும் குணங்கள் தோன்றும்.

9. கருப்பக் கிராணி :
இந்நோய் பெண்கள் கருவான ஒருசில மாதத்தில் தோன்றும். ஒருசில பெண்களுக்கு குழந்தை பெற்ற பிறகு உண்டாகும். இந்நோயில் வாந்தி, வயிறு இறைந்து கழிதல், வயிறு கடுத்து பலநிறமாக கழிதல், அடிக்கடி களைத்துப் போதல், கண்கள் மஞ்சளாதல், உடல் வெளுத்தல், கைகால் எரிச்சல், பெருமூச்சு என்னும் குணங்கள் தோன்றும்.

10. ஒட்டுக் கிராணி :
இந்நோயில் நோயாளிகள் படுக்கையில் இதமாக படுத்தல், இளைப்பு, அதிக வயிற்றுவலி, மார்பு, விலா, முதுகு வலி முதலியன தோன்றும்.ஒரே முறையில் மலம் கழியாமல் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக கழிதல், கொப்பூழில் வளையம் போல இழுத்துப் பிடித்து வலித்தல் என்னும் குணங்கள் தோன்றும்.

11. சங்கர (எரிச்சல்) கிராணி :
இந்நோயில் உண்ட உணவு செரியாமல் வயிறு பொருமல், இரைந்து செரியாத கழிச்சல், ஆசனவாய் எப்போதும் ஈரமாக இருத்தல், உடலில் சிறுவியர்வை, சுரம், வாந்தி, மனத்துயரம், மார்பில் கோழை கட்டுதல், மயக்கம், கண்கள் குழி விழுந்து இருள் அடைதல் என்னும் குணங்கள் தோன்றும்.

2 கருத்துகள்: