உணவு மாறுபாடு, கல்லீரல், மண்ணீரல் கோளாறு, அதிக புணர்ச்சி, தூக்கமின்மை, அதிக அலைச்சல் - ஓய்வின்மை, உஷ்ணம் கூடுமளவில் நடப்பது, பித்தம் தன்னிலையில் இருந்து கூடுவது - குறைவது, புல்லிப்பு, காரம், உப்புள்ள பொருட்களை அதிகமாக உண்ணுதல், மனக்கவலை,அதிகமாக கோபம் கொள்ளுதல், சரியாக வேகாதப் பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் பித்த நோய் உண்டாகிறது. மேலும் குறிப்பாக ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் பித்தம் மிகுந்து, மார்கழி, தை மாதங்களில் தணிந்து, பிறகு மீண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகரித்து உடல் முழுதும் பரவும். பொதுவாக பித்த நோய்கள் 40 என்று சித்தர் நூல்கள் கூறினாலும் ஒருசில நூல்கள் 42 என்றும் கூறுகிறது.
வாய்நீர் ஊறல், ஆயில் கசப்புச் சுவை தோன்றுதல், தாகம், விக்கல், ஒக்காளம், உடல் அனலாய் கொதித்தல், வியர்த்தல், கற்றாழை நாற்றம், தலைசுற்றல், மயக்கம், குருதி வன்மை கெடுதல், பித்தமாக வாந்தி எடுத்தல்,s திணவெடுத்தல், சொறி, சிரங்கு உண்டாதல், தோல் வறண்டு காணுதல், கண்ணொளி குன்றல், முகம் வெளுத்தல் அல்லது மஞ்சளாதல், சிறுநீர்க்கட்டு, எரிச்சல், அடிக்கடி கழிதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
பித்த நோயின் வகைகள் :
1) ஆவுரு பித்தம் :
இந்நோயில் உடல் வெதும்புதல், நீர் வேட்கை, இருமல், சளி, உடல் பருத்தல், வெப்பமாதல், வாய் புளிப்பு, மலமும் சிறுநீரும் மஞ்சளாதல், வாய் அதிகமாக பேசாமல் அங்கும் இங்கும் பார்த்தல், கூத்தாடுதல்,ஆரவாரித்துக் கூவுதல், அடிக்கடி எழுந்தோடல், மனஎழுச்சி (Mania) , தூக்கமின்மை போன்ற நோய்கள் காணும்.
2) ஆமிலப் பித்தம் :
இந்நோயில் உடல் கறுத்தல், ஆவேசம் கொண்டதுபோல தலையைத் திருப்புதல், உண்ட உணவு செரியாமல் மறுநாள் அப்படியே வாந்தியாதல், மேலும் அவை புளிப்பும் கசப்புமாக இருத்தல், கைகால் சோர்ந்துபோதல், விக்கல், வயிறு உப்பல் போன்ற குணங்கள் இருக்கும்.
3) உன்மாத (வெறிப்) பித்தம் :
இந்நோயில் உடல் மிடுக்குடன் இருத்தல், அதிகப்பசி, தலைகனத்தல், ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல், பிறருடன் பேசாது ஊமைப் போல இருத்தல், உறக்கமின்மை, வாய்நீர் வடிதல், மனக்கலக்கம் ஏற்படல் போன்ற குணங்கள் காணும்.
4) தமந்தப் பித்தம் :
இந்நோயில் கள் உண்டவனைப் போல தன்னை மறந்து கிடத்தல், உடல் துடித்தல், நாவறட்சி, நாவடி நரம்பு மஞ்சள் நிறமாதல், பலமுறை அழைத்தாலும் பிணத்தைப் போல பேசாதிருத்தல், அடிக்கடி நீர்வேட்கை,மிகுந்த உணவு உண்ணுதல், மௌனமாக இருத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.
5) வாதப் பித்தம் :
இந்நோயில் கண் புகைந்து இரைச்சலுண்டாகி கண்ணை மறைத்து, மேலும் கண்ணை மின்மினிப்பூச்சி போல சுழலச் செய்யும், கண்ணீர் வடிந்து கலங்கச் செய்யும். மேலும் உடல் முழுதும்,வியர்வை, மயக்கம், தயக்கம், வாந்தி, உணவு வேண்டாமை போன்ற குணங்கள் தோன்றும்.
6) வன்னிப் பித்தம் :
இந்நோயில் வயிறு நொந்து கனல் போல எழுந்து மண்டை வரையிலும் சென்று சீதமும், இரத்தமும் கலந்து கழிதல், சிலவேளைகளில் கறுத்துக் காணுதல், உடல் வெளுத்து மயக்கமும், தயக்கமும் உண்டாதல், உணவில் வெறுப்பு, நாக்கு வெந்து வாய் புளிப்புச் சுவையுடன் இருத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.
7) சிலேத்துமப் பித்தம் :
இந்நோயில் பித்தத்துடன் கபமும் சேர்ந்து உடல் வெளுத்து, குளிர் உண்டாகி உடல் நோதல், சினம் உண்டாதல், மயக்கம், அறிவழிதல், இருமல், அதிக பசி, அடிக்கடி தும்மல், தலை கனத்தல், கண்கள் பச்சை நிறமாதல் போன்ற குணங்கள் தோன்றும்.
8) சுரோணிதப் பித்தம் :
இந்நோயில் சுரோணிதம் அதிகம் வெதும்பி உடல் முழுதும் குடைந்து கீல்களில் நோய் உண்டாகும். மேலும் உடம்பில் முள் சொருகியது போல குத்தல், நீர்வேட்கை, உடல் நைதல், தலைநோய் அதிகமாதல், மனச்சோர்வு, வாந்தி, கோழை கக்கல் போன்ற குணங்கள் தோன்றும்.
9) விகாரப் பித்தம் :
இந்நோயில் தூக்கமின்மை, வாய்க்கசப்பு,பேசுவதை விரும்பாமை, கண் சிவந்து கலங்கிக் கானல்,உடல் வெளுத்து கடுத்துத் தீய்தல், வாந்தியாதல், மயக்கம், கலக்கம், வாய்நீர் ஊறல், உணவு கொள்ளாது பட்டினியாக இருத்தல் போன்ற குணங்கள் காணும். இதே குணங்கள் மனஅழுத்தச் சிதைவு நோயில் (Depressive Psychosis) காணும் குணங்களை ஒத்திருக்கும்.
10) விரணப் பித்தம் :
இந்நோயில் உடல் முழுதும் திமிர் உண்டாகி, உடல் கனத்து திணவு உண்டாகி புண்ணாதல், வாயில் கசப்பு சுவை தோன்றல், நாடி படபடத்து துடித்தல், ஆண்குறி சிவத்தல், வாய்நீர் ஊறல், திடுக்கிட்டு துயில் எழுதல் போன்ற குணங்கள் காணும்.
11) உரத்தப் பித்தம் :
இந்நோயில்அதிக கோபம் உண்டாதல், அடிக்கடி சண்டையிடல், அதிக கூச்சலிட்டு இரைச்சலை உண்டாக்கல், வயிறு அடிக்கடி கழிதல், நன்மை, தீமை அறிய முடியாமை, கண் சிவத்தல், தூக்கமின்மை, உடல் நாளுக்கு நாள் பருத்துக் கொண்டு வருதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
12) இரத்தப் பித்தம் :
இந்நோயில் மிகுந்த இருமலை உண்டாக்கி, இரத்தம் கோழையோடு மிகுதியாக வெளிப்படுதல், உடல் மிகுதியாக நாளுக்கு நாள் இளைத்துக் கொண்டே வருதல், அடிவயிற்றை சுருக்கி வற்றச் செய்யும்.
13) காசப் பித்தம் :
இந்நோயில் இருமல் அதிகரித்து வயிறு புரட்டல், விக்கல், வாந்தி, உடல் முற்றும் வலி, உடல் வெப்பத்தால் வெதும்பல், குரல் கம்மல், வாய்நீர் ஊறல், இனிப்புப் பொருள்களில் விருப்பம்,மனத்துயரம், நெஞ்சு கனமாக இருப்பது போலத் தோன்றுதல் போன்ற குணங்கள் காணும்.
14) சுவாசப் பித்தம் :
இந்நோயில் இரைப்பு இருமலின் குணங்களாகிய மூச்சிரைப்பு, வயிறு ஊதிக் கொள்ளுதல், உடல் முழுதும் வலி, வாய்நீர் ஊறல், மயக்கம், கண்பார்வை மறைத்தல், மார்பில் தாங்க முடியாத வலியோடு இருமல், வயிறு பசி இல்லாமை ஆகிய குணங்கள் தோன்றும்.
15) செம்பித்தம் :
இந்நோயில் செம்பின் களிம்பைப் போல சுவையை உண்டாக்கி வாந்தியை உண்டாக்கும். வாந்தியும் செந்நிறமாக இருக்கும். மலம் கட்டி அதுவும் செந்நிறமாக இறங்கும். உடல் வியர்த்து மயக்கம் உண்டாகும். அந்த வியர்வையும் கூட செந்நிறமாக வெளியாகும். அடிக்கடி திடுக்கிட்டு பயப்படச் செய்யும். உடலை இளஞ்சூரியனைப் போல சிவக்கச் செய்யும்.
16) கரும் பித்தம் :
இந்நோயில் சோர்வு, தலையும் உடலும் நடுங்கல், தலைவலி உண்டாகி கண் உறங்கச் செய்தல், கடைக்கண் சிவந்து மின்மினி போலத் தோன்றுதல், பித்தம் மிகுந்து உடல் கனத்து வருதல், நாக்கில் சுவை இல்லாதிருத்தல், பசி இன்மை, கருநிறத்தில் வாந்தியாதல் போன்ற குணங்களை கொண்டிருக்கும்.
17) கரப்பான் பித்தம் :
இந்நோயில் உடல் முழுதும் சொறி உண்டாகி, வலி மிகுந்து கட்டிகளாக எழும்பும். அத்துடன் அடிக்கடி கழித்தல், வயிறு இரைதல், இருமல், இழுத்துப் பிடித்துக் கொள்ளுதல், கால்கள் துவண்டு போதல், இடுப்பில் வலியும் திமிரும் உண்டாதல், உடல் கறுத்து கன்றிப்போதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
18) அசீரணப் பித்தம் :
இந்நோயில் மந்தம், பசியின்மை, உடல் கறுத்துக் குளிர்தல், மலக்கட்டு, கண் கரித்து நீர் பாய்தல், அதிக தலைவலி, வயிறு இரைதல், அடிவயிறு இழுத்துப் பிடித்தது போல நோதல், உணவில் விருப்பமின்மை, கைகால்கள் ஓய்ந்துபோதல், புளித்த தேங்காய் பாலைப் போல வாய்நீர் ஊறல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
19) அருசிப் பித்தம் :
இந்நோயில் உணவை மறுத்தல், குடலைப் பிரட்டி வாந்தியாதல், சுவையின்மை, மனக்கலக்கம், மயக்கம், தலைசுற்றல், அடிநாக்கு தடித்து நாவில் உணர்ச்சியற்று இருத்தல், உறக்கமின்மை, வாய் மற்றும் உடல் எரிச்சல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
20) எரிப் பித்தம் :
இந்நோயில் அடித்தொடை, இருபாதங்கள், கண், உள்ளங்கால், உள்ளங்கை இவைகளில் எரிச்சல் உண்டாகும். இரு காதும், மூக்கும் வறண்டு போகும். முதுகு, கை, கால் இவைகளில் மிகுந்த விறுவிறுப்பும், எரிச்சலும் உண்டாகும்.
21) அழல் பித்தம் :
இந்நோயில் இளமையில் மயிர் நரைத்துப் போதல், உடல் வெளுத்தல், கடைக்கண் சிவத்தல், பல கலைகளையும் அறிந்த ஞானி போல பலவற்றைப் பேசச் செய்தல், பெண் இச்சையில் ஈடுபடுதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
22) துடிப்பித்தம் :
இந்நோயில் உடம்பெல்லாம் துடிக்கும். பாண்டு நோய் வந்து உடல் பச்சை நிறம் போல காட்சியளிக்கும் (அலிமுகப்பாண்டு), வாய் சுவை அறியாமல் உணவு உண்ண விருப்பம் இன்மை, சிறிது தூரம் ஓடினாலும் பெருமூச்சு வாங்குதல், பெண்களின் மேல் வெறுப்பு,அடிக்கடி சண்டையிடல் போன்ற குணங்கள் காணும்.
23) விடப் பித்தம் :
இந்நோயில் உடல் சோர்ந்து வீழும். அடுத்தவரிடம் தன்நோயின் கடுமை பற்றி புலம்பத் தோன்றும், உடல் முழுவது வலி காணும். மேலும் இந்நோயில் விசத்தன்மையானது உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கும். இந்நோய் தீராது.
24) அதிசாரப் பித்தம் :
இந்நோயில் வயிறு இரைதல், அடிவயிறு நொந்து பேதியாதல், வயிறு ஊதல், விலாவில் குத்தல், குடைச்சல், பொருத்துகளில் வலி, கல்லீரல் - மண்ணீரல்களில் எரிச்சலும்,குத்தலும் உண்டாகி, அதிக தாகம், மயக்கம், மனச்சலிப்பு, சுவையின்மை தோன்றும்.
25) மூலப் பித்தம் :
இந்நோய் வயிறு இரைந்து, உண்ட உணவின் சாரத்தை அப்படியே கழியச் செய்யும். மனம் சலித்து கோபம் கொள்ளல், மனத் தடுமாற்றம், ஆசனவாயில் முளை வெளிவருதல், அடித்தொடையில் கடுப்பு, உடல் வெளுத்தல், உடல் ஊதல், தூக்கம் அதிகமாகி சோம்பல் அதிகரித்தல், கண் கரித்தல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
26) முதிர் பித்தம் :
இந்நோயில் உடல் முழுதும் அம்மையால் உண்டாகும் கொப்புளங்களைப் போல சிறிசிறு கொப்புளங்கள் உடல் முழுதும் உண்டாகி புண்ணாகும். உடம்பில் புழுதியை அள்ளி பூசியது போல மஞ்சளாகும். மலமும், சிறுநீரும் அளவில் குறைந்து சுருங்கி வெளியாகும். நாடி மெலிந்து நடக்கும்.
27) கண்டப் பித்தம் :
இந்நோயில் உடல் வெப்பம் அதிகமாகி குரல்வளையை தாக்கி வீங்கச் செய்யும். அதிக கசப்பில் வாந்தியாகும்போது தொண்டையும் ,கழுத்தும் புண்போல நோதல், தொண்டை குழகுழத்து, நா வறண்டு, பாதம் கனத்தும், காதில் கடல் இரைதல் போலும், செம்பட்டை மயிரும், நரம்புகள் இழுத்துக் கொண்டு வலிப்பு போலும் அடிக்கடி காணும்.
28) ஓடுப் பித்தம் :
இந்நோயில் பார்ப்பவர்கள் மனம் இரங்குமாறு வெறியனைப் போல பேசிக்கொண்டும், பிறரை இகழ்ச்சியாக பேசிக் கொண்டும், இங்கும் அங்குமாக ஓடித் திரிதல், அடிக்கடி பற்களை கடித்தல், நெருப்பைப் போல கண்கள் சிவத்தல், கண்கள் அடிக்கடி சிமிட்டல், பிறரிடம் கோபமாக கூச்சலிடல், கொக்கரித்தல், கூத்தாடல், உற்றுப் பார்த்தல், ஆண்மையோடு பிறரை எதிர்த்தல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
29) மூடு பித்தம் :
இந்நோயில் தன்கையில் கிடைத்த செல்வத்தை புதைத்து வைத்தல், மற்றவர்களை இழிவாக பேசுதல், தனக்குத்தானே பேசுதல், கைகால்கள் சும்மா இராமல் ஏதாவது செய்துகொண்டே இருத்தல், உணவில் விருப்பமின்மை, நாள்பட்ட மனச்சிதைவு (Chronic Schizophernia) போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
30) நடுக்குப் பித்தம் :
இந்நோயில் தலை, மண்டை, நெற்றி, பிடரி, முதுகுத்தண்டு, கழுத்து இவைகளில் மிகுதியாக வெப்பம் உண்டாகி நடுங்கும். மேலும் கசப்பாக வாந்தியாதல், சிணுக்கிருமல், தூக்கமின்மை, வாய்நீர் ஊறி மார்பில் வடிதல் போன்ற குணங்களைக் கொண்டிருக்கும்.
31) கபாலப் பித்தம் :
இந்நோயில் தலை நடுக்கல், குளிர் உண்டாகி உடம்பெங்கும் நோதல், அம்பைக் கொண்டு பாய்ச்சுதல் போல தலைக் குத்தல், உடல் மன்சள் நிறமாதல், மூக்குத்தண்டு நோதல், முகம் வீங்கிக் காணல், மயக்கம் உண்டாதல், மேலும் படுக்கையில் தாங்காமல் அடிக்கடி எழுந்திருத்தல் போன்ற குணங்கள் காணும்.
32) சர்த்திப் பித்தம் :
இந்நோயில் உடம்பில் திமிருண்டாதல், ஈரலில் வலி, வாயில் கசப்பு தட்டி வாந்தி உண்டாதல், தலையை தூக்க முடியாமல் மயக்கம் உண்டாதல், உடலில் அதிக வெப்பம், சுவையின்மை, ஆண்மைக் குறைவு, அடிக்கடி நீர்வேட்கை, செரியாமை போன்ற குணங்கள் காணும்.
33) தாகப் பித்தம் :
இந்நோயில் அடிவயிற்றில் துன்பம் உண்டாகி உடம்பெல்லாம் நெருப்புபோல அழற்சி உண்டாகும். இதனால் நீர்வேர்த்கை மிகுந்து நீரை நீர் வேட்கை, அதிகமாக பருகச் செய்யும். மேலும் குளிர்ச்சி தரும் பொருட்களிலும், புளிப்பு தரும் பொருட்களிலும் விருப்பம் உண்டாகும். கழுத்தில் வியர்க்கும். கழுத்தின் அடியிலும், நாவின் அடியிலும் இழுத்துப் பிடிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும்.
34) விக்கல் பித்தம் :
இந்நோயில் நீர்வேட்கையும், வாந்தியும் உண்டாகி விக்களும் எழுந்து தவிப்பை உண்டாக்கும். உடல் குளிர்ச்சி அடைந்து, தலைபுரட்டல், படுக்கையில் தங்காமை, பாலைப் போல வாயிலிருந்து நுரை தள்ளுதல், உடல் அனல் போல வெதும்பி தளர்ச்சி மற்றும் சோகம் அடைந்து, கைகால்கள் ஓய்தல் போன்ற குறிகுணங்கள் உண்டாகும்.
35) சயப் (க்ஷய) பித்தம் :
இந்நோயில் இளைப்பும், இருமலும் உண்டாகும். மேலும் வெளியே தெரியாத வண்ணம் சுரம் (உள்சுரம்), உடல் வாடல், உடல் பஞ்சுபோல வெளுத்தல், தொண்டையில் கோழை சேர்ந்து குருதி கக்கல், சளி கட்டியாக வெளிப்படுதல், நெஞ்செரிச்சல், தூக்கமின்மை போன்ற குணங்கள் தோன்றும்.
36) திமிர்ப் பித்தம் :
இந்நோயில் பித்தம் அதிகரித்து மயக்கம் உண்டாகும். மேலும் வயிற்றிலே முள் சொருகியது போல குத்தல், தினமும் காலையில் வாந்தி,தூக்கத்திலும் நினைவு மாறாமல் இருத்தல், உடல் சோர்தல், தனது கருத்தே சரியென்று அதிலேயே பிடிவாதமாய் இருத்தல், உடம்பெங்கும் கனத்து திமிர் உண்டாதல், உடலில் அழுக்குப் படித்தல், வேகமாக நடக்க முடியாமை போன்ற குணங்கள் உண்டாகும்.
37) வளிப் பித்தம் :
இந்நோயில் நடக்க முடியாமை, அடிவயிற்றில் இழுத்துப் பிடித்தது போல வலி, நா வறட்சி, தலை கனத்தல், சந்துகள் தோறும் நோதல், ஈரலில் வலி, பச்சை நிறமாக மலம் கழிதல், உடல் படபடத்து நோதல், வயிற்றில் மிகவும் அதிக எரிச்சல், மார்பு அடைத்தல் போன்ற குணங்கள் உண்டாகும்.
38) சீதப் பித்தம் :
இந்நோயில் உடல் முழுதும், வியர்த்து தண்ணி போல வடிதல், மயக்கம்,உடல் கனத்துப் பளுவாதல், புறங்கழுத்தில் வெடுக்கென்ற வலி, வயிறு பொருமி ஊதல், மிகுதியும் இருமல் உண்டாதல், மனம் நோதல், வாய்நீர் உப்புக்கரித்தல், சிறுநீர் சிவந்து இருத்தல் போன்ற குணங்கள் தோன்றும்.
39) கிருமிப் பித்தம் :
இந்நோயில் சீதத்தினால் வயிற்றில் திமிர் உண்டாகி, உடல் முழுதும் திணவும் வழியும் உண்டாகும். வாத நோயில் காணப்படுவது போல மலமும், சிறுநீரும் கட்டும். மேலும் கைகால்கள் கனத்து வாழைத்தண்டு போலச் சில்லிட்டு மலத்தில் கிருமியும் கலந்து கழியும்
40) அசாத்தியப் பித்தம் :
இந்நோயில் போதைப் பொருட்களை உண்டவர் போல உணர்ச்சியற்று, நினைவிழந்து காணப்படுவர். உடல் வெப்பம் அதிகரித்து நீர்வேட்கை அதிகரிக்கும். கண்கள் சிவந்து வாய் வறட்சி அடைதல், பிறரோடு வாதிட்டு பல வார்த்தைகளைப் பேசுதல் போன்ற குணங்கள் உண்டாகும்.
41) மார்க்கப் பித்தம் :
இந்நோயில் தான் கற்றவற்றை எல்லாம் பேசுதல், உட்காருதல், உடனே எழுந்து ஓடல், தான் உடுத்த துணியைக் கிழித்தல், புலம்பல், வாய்க்கு வந்தவாறு பாடுதல், தலையிலும் புறங்கழுத்திலும் வெடுக்கென்ற வலி போன்ற குணங்கள் தோன்றும். மேலும் உடலி வலிமை குறைந்து, மனநிலை அழிந்து, பிறரைப் பழித்தல் போன்ற செயல்களையும் செய்ய வைக்கும்.
42) மருந்தீடு பித்தம் :
இந்நோய் ஈடு மருந்தால் உடலின் பித்தம் கேடடைந்து பிறக்கிறது. இந்நோயில் யாரிடமும் பேசாமல் ஓரிடத்தில் அமர்ந்து இருத்தல், உடல் ஊதிக் காணல், நெஞ்சு வறண்டு போதல், ஊக்கமின்மை, உடல் அசதி, உணவும் தூக்கமும் இல்லாமல் எங்கும் சுற்றிக் கொண்டு திரிதல், அடிக்கடி sதிடுக்கிட்டு புத்தி தடுமாறல், வயிற்றில் கட்டி போல திரண்டு அடிக்குடலில் வலி உண்டாதல் போன்ற குணங்கள் தோன்றும்.