திங்கள், 29 அக்டோபர், 2018

சுத்தி முறைகள் (வனமூலிகை )

1) காட்டுமிளகு - வெற்றிலை சாற்றில் அரை நாழிகை ஊறப்போட்டு ரவிலுலர்த்தவும்.

2) வால்மிளகு - காம்புகளை ஆய்ந்து இரவிலுலர்த்தவும்.

3) கஸ்தூரி மஞ்சள், பீதரோகிணி, அக்கரகாரம், வட்டத்திப்பி - இவைகளை மேல்தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.

4) பறங்கிசக்கை, நிலம்பனங்கிழங்கு, அமுக்கராகிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு - இவைகளை நன்கு உலர்த்தி தனித்தனியாக இடித்து சூரணம் செய்து ஒரு பாத்திரத்தில் பாலைவிட்டு சீலையால் ஏடுகட்டி அதில் இச்சூரணத்தை வைத்து மேற்சட்டி மூடி ஒரு சாமம் எரித்தபின் சூரணத்தை ரவியில் உலர்த்தி அரைத்து எடுக்கவும்

5) மகரப்பூ - அடிக்காம்மையும், மகரந்தத்தையும் விலக்கி காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

6) இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, தக்கோலம், வெட்பாலை அரிசி - இவைகளை ரவியில் உலர்த்தி எடுக்கவும்.

7) சிற்றேலம் - மொன்வறுவலாக வறுத்து எடுக்கவும்.

8) புகையிலை - அகத்திக்கீரையின் மத்தியில் இதனை சுருட்டி வைத்து நீர் விட்டரைத்து வெயிலில் உலர்த்தி கொள்ளவும்.

9) கஞ்சா - விதை, காம்பு முதலியவற்றை நீக்கிவிட்டு பிறகு ஓரிரவு சுத்த நீரில் சோற்றுப்பு போட்டு ஊரவைத்து அடுத்த நாள் 7 முறை பிசைந்து கழுவிக் கெட்டியான துணியில் பிழிந்து ரவியில் உலர்த்தவும்.

10) இருவி - சிறு துண்டுகளாக நறுக்கி சிறுநீரில் 3 நாள் ஊறப் போட்டு எடுத்து உலர்த்தவும்.

11) நாவி - சிறு துண்டுகளாக நறுக்கி கோநீரில் 3 நாள் ஊறப்போட்டு பின் உலர்த்தவும்.

12) வெட்டிவேர், விளாமிச்சைவேர் - சிறு துண்டாக நறுக்கி இரவியில் உலர்த்தவும்.

13) அகில், தேவதாரு - வயிர பாகத்தை எடுத்துக் கொண்டு பொன்வறுவலாக வறுத்து எடுக்கவும்.

14) குரோசாணி ஓமம் - இதனை நன்றாய் புடைத்து தேய்த்து மண்ணை போக்கி உலர்த்தவும்.

15) நேர்வாளம் - எருமை சாணியில் வேகவைத்து எடுத்து கழுவி ஒவ்வொன்றாய் பிளந்து தோல், நஞ்சு முளை ஆகியவற்றை நீக்கி, மெல்லிய துணியில் தளர்வாக முடிந்து பிறகு அதனை பச்சரிசியுடன் சேர்த்து பொங்கி அரிசி வெந்ததும் அம்முடிப்பை எடுத்தலம்பி மறுபடியும் முன்போல முடிப்பு கட்டி பாலில் அவித்து கழுவி, நிழலில் உலர்த்தி ஒரு சட்டியில் கொஞ்சம் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி போட்டு வறுத்து எடுக்கவும்.

16) சிவதைவேர் - இதன் நடுநரம்பை களைந்து பாலில் போட்டு அடிகாந்தாமல் வேகவைத்து எடுத்து இரவியில் உலர்த்தவும்.

17) நாகணம் - இதனை வில்லை வில்லையாக அறுத்து ஒரு சட்டியில் நெய்தடவி அதில் வில்லைகளை போட்டு அவை வளையும்படி வறுத்து எடுக்கவும்.

18) சீந்தில் - இதன் மேல் தோலை சீவிக் கிழிக்கவும்.

19) கடலுராய்ஞ்சிப்பட்டை, வலம்புரிக்காய், தலைச்சுரிளிப்பட்டை, கோரைக்கிழங்கு, நிலவேம்பு - இவைகளை கடுரவியில் உலர்த்தி எடுக்கவும்.

20) சமுத்திரசோதி விதை - ஓடு நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுக்கவும்.

21) எட்டி விதை - இதனை நெல்லுடன் சேர்த்து அவித்து சிறுகீரை சாற்றில் ஒரு சாமம் ஊறப்போட்டு கழுவி எடுக்கவும்.

22) தேற்றான்கொட்டை - இதனை பசும்பாலில் ஒரு நாழிகை ஊறப்போட்டு நீரில் அலம்பி உலர்த்தவும் (அல்லது) இதன் எடைக்கு 4 பங்கு சிறுகீரை சாறிட்டு அதை அரைபாகமாக சுண்டக்காய்ச்சி பின் நீரில் அலசி எடுக்கவும்.

23) கழற்சிவித்து - மேலோட்டை நீக்கி வெந்நீரில் கழுவி உலர்த்தவும்.

24) ஊமத்தை விதை - பழரசத்தில் ஒரு சாமம் ஊறவிட்டு எடுத்து இரவியில் உலர்த்தவும்.

25) கரும்பு - மேல் தோலையும், கணுக்களையும் நீக்கவும்.

26) சர்க்கரை - அம்மியில் வைத்து கட்டியெல்லாம் நொருங்கும் படி அரைத்து முறத்திலிட்டு கொழித்துக் கொள்ளவும்.

27) காட்டாத்திப்பூ - இலை, காம்பு நீக்கி ஆய்ந்து இரவியில் உலர்த்தவும்.

28) நில ஆவாரை - இதை இடித்து சூரணித்து ஒரு பாண்டத்தில் விட்டு ஏடுகட்டி சூரணத்தை நடுவில் வைத்து மேற்சட்டி மூடி ஒரு சாமம் எரித்து எடுக்கவும்.

29) பிரண்டை - கணுக்களை தெரித்து மேல்தோல் சீவி புளிப்பு மோரில் சிறிது உப்பு சேர்த்து 3 நாள் ஊறப்போட்டு இரவியில் உலர்த்தவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக