வியாழன், 25 அக்டோபர், 2018

சித்த மருத்துவச் செயல்முறை விதிகள்

நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவத்தின் செயல்முறை விதிகளில் காணப்படவில்லை. மாறாக நோயாளியைக் கண்ட மருத்துவன் நோய் உண்டாகக் காரணமான அகக் காரணிகள் மற்றும் புறக் காரணிகள் ஆகியவற்றை முதலில் கண்டறிய வேண்டும்.

அதன்பின் மருத்துவம் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பிறகு, வேர்களைக் கொண்டு மருந்துகளைக் கொடுக்கவும், அதன் பின்னர் மூலிகைகளைக் கொண்டு மருந்து செய்து கொடுக்கவும். இவற்றினால் நோயின் குணம் தணியவில்லை என்றால், பற்பம், செந்தூரம் என்னும் மருந்து வகைகளைப் பயன்படுத்தவும் என்று செயல்முறை விதிகள் கூறப்பட்டுள்ளன.

நோயையும் நோயாளனையும் கணித்தறியாமல் செய்யும் மருத்துவம், முறைப் படுத்தப்பட்ட மருத்துவமாகக் கருதப்பட மாட்டாது.

  • நோயாளியின் உடல் பருமன்–மெலிவு இவற்றின் தன்மை
  • நோயின் தன்மை, நோயின் ஆற்றல்
  • நோய் குணமாகுமா? குணமாகாதா என்னும் கணிப்பு
  • நோயாளி தூங்கிய தூக்கத்தின் அளவு
  • நோயாளிக்கு உடல் உறவுக்காகப் பெண்ணிடம் உண்டாகும் மயக்கத்தின் அளவு
  • நான்கு வகையான உடலின் இலக்கணத்தில் நோயாளியின் வகை, ஆள், நாள், குணம், நோய், நாடு, பேதம், நிலை
  • கோள்களின் ஆட்சி–வீழ்ச்சி 
“ஆரப்பா நாலுலட் சணமும் பாரு
ஆள்பாரு நாள்பாரு குணமும் பாரு
நோய்பாரு தேசபேதங்கள் பாரு
நிலைபாரு கிரக வுச்சம் நீச்சம் பாரு
பேர்பாரு இவனை, நீ பிறகு பாரு
போதிலே கீர்த்திழின் றன்மன் பாரு
வேர்பாரு தழைபாரு மிஞ்சி னாக்கால்
மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரே.’’

நோயின் வன்மை–மென்மைகளையும், நோயாளியின் உடல் மன உறுதிகளையும் ஆராய்ந்தே மருத்துவ முயற்சிக்கு மருத்துவன் முயல வேண்டும்.அதுவும் ஆரம்ப நிலையிலேயே கடுமையான மருந்துகளைத் தந்துவிடாமல், மெள்ள மெள்ளக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று செயல்முறை விதிகளில் அடுக்கு முறை கையாளப்படுகிறது. இதனால் மருத்துவத்தின் பக்குவமும் முதிர்ச்சியும் அறியப்படுகிறது.


“உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்''

என்று குறள் கூறும் மருத்துவச் செயல் விதி இதனைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக