வியாழன், 25 அக்டோபர், 2018

நாடி சாஸ்திரம்



இருதயம் சுருங்கி விருயும்போது நாடி நரம்புகளும் விரிந்து சுருங்கும். இருதயத்தின் துடிப்பும் நாடிகளின் நடையும் ஒன்றுபோல் இருப்பதால் நமது தேகத்தில் உண்டாகும் நோய்களை இருதயமானது நாட்களின் வழியாகத் தெரிவிக்கிறது. பொதுவாக நாடியானது வாதம், பித்தம், சிலேத்துமம் அல்லது கபம் என்று மூன்று வகைப்படும்.

நாடி பார்க்கும் விதம்:

"கரிமுகனடியை வாழ்த்திக் கைதனினா டிபார்க்கில்
பெருவிரலங்குலத்திற் பிடித்தடி நடுவே தொட்டால்
ஒருவிரலோடில் வாதம் உயர்நடு விரலிற்பித்தந்
திருவிரல் மூன்றிலோடிற் சேத்தும நாடியாகும்"

பொருள்:

கையின் பெருவிரல் பக்கமாய் ஓடும் நாடியை, மணிக்கட்டுக்கு ஒரு அங்குலம் மேலாக   மூன்று விரல்களால் அழுத்தியும், தளர்த்தியும், சமமாகவும் மாறி மாறிப் பரிசோதித்து நாடி நடையை அறியலாம். அவ்வாறு பரிசோதிக்கும்போது சுட்டு விரலால் (ஆள்காட்டி விரல்) வாதத்தையும், நடுவிரலால் பித்தத்தையும், மோதிர விரலால் சிலேத்துமத்தையும் அறியலாம். மேலும் நாடி பார்க்குங் காலத்தில் ஆண்களுக்கு வலது கையும், பெண்களுக்கு இடது கையும், மூன்றாம் பாலினத்தவர்க்கு அவர்களின் இனக்குறியை பொருத்தும் நாடி பார்க்க வேண்டும். எனினும் இரண்டு கையிலும் நாடி பார்த்தலே உத்தமம்.

நாடி பார்க்கும் இடங்கள்:
  1. கைகள்
  2. குதிகால்
  3. உந்தி
  4. மார்பு
  5. மணிக்கட்டு
  6. கைகளின் சந்து
  7. கால்களின் சந்து
  8. கண்டம்
  9. காதடிகள்
  10. லிங்கம்
  11. யோனி
  12. ஆசனவாய்
இந்தப் பன்னிரு இடங்களும் நாடி பார்க்க உகந்தவை. எனினும் மணிக்கட்டில் பார்ப்பது உத்தமம்.

நாடிகளின் நடை :

 "காணவே புருடருக்கு வாத நாடி
கானகத்து மயில்போலும் அன்னம் போலும்
தோணவே கோழிநடை நடக்குஞ் சொன்னேன்
துரியமென்ற பித்தத்தின் நாடி கேளு
ஏணவே யாமை யுடனடை யப்போலும்
என்மகனே அட்டையைப் போலநடக்கும் பாரு
வேணவே சேத்துமந்தான் பாம்புபோலும்
வேணபடி தவளைகுதி போலாம் பாரே"

ஆண்களுக்கு,
          வாத நாடி - மயில், அன்னம், கோழி போலவும்,
          பித்த நாடி - ஆமை, அட்டை போலவும்,
          சிலேத்தும நாடி - பாம்பு, தவளை போலவும் நடக்கும்.


"பார்க்கவே பெண்களுக் கிடதுபக்கம்
பதிவாகப்பார்த்திடவே பகரக்கேளும்
காக்கவே வாதமது சர்ப்பம் போலாஞ்
சேர்க்கவே யையமென்ற நாடிதானுஞ்
சிறுநடையன்னம்போற் செழிப்பாய்க்கானும்
ஆர்க்குமேதோன்றுமிந்த நாடிமூன்றும்
அனுதினமுநல்லறிவா லறிந்துதேறே"

பெண்களுக்கு,

           வாத நாடி - சர்ப்பம் போலவும்,
           பித்த நாடி - தவளை போலவும்,
           சிலேத்தும நாடி - அன்னம் போலவும் நடக்கும்.


பொதுவாக,
  • வாதம் அதிகரித்தால் - அட்டையை அல்லது சர்ப்பத்தை போலவும்,
  • பித்தம் அதிகரித்தால் - காகம் அல்லது தவளை போலவும்,
  • கபம் அதுகரித்தால் - அன்னம் அல்லது புறாவைப் போலவும்,
  • முத்தோஷமும் அதிகரித்தால் - கௌதாரி போலவும் இருக்கும்.
  • வாதபித்தம் அதிகரித்தால் - சர்ப்பம் மற்றும் காகத்தின் நடை போலவும்,
  • வாதகபம் அதுகரித்தால் - சர்ப்பம் மற்றும் அன்னத்தின் நடை போலவும்,
  • பித்தகபம் அதிகரித்தால் - காகம் மற்றும் அன்னத்தின் நடை போலவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக