செவ்வாய், 23 அக்டோபர், 2018

சித்த மருத்துவ பிரிவுகள்

            சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்களின் அடிப்படையில் அது மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை,
  1. தாவர வர்க்கம்,
  2. விலங்கு வர்க்கம்,
  3. தாது வர்க்கம்.
1) தாவர வர்க்கம் :
            இம்முறையில் செடி, கொடி, மரம் போன்றவற்றின் தாவர பாகங்களான தளிர், துளிர், குருத்து, அரும்பு, பூ, பிஞ்சு, காய், பழம், விதை, பிசின், பருப்பு, பட்டை, உள்மரம், வேர், வேர்ப்பட்டை, மரத்தில் வடியும் பால், புல், இலை, கீரை, தானியம், வித்திலிருந்து எடுக்கப்படும் எண்ணைய், சமூலம் (தாவர பாகங்கள் அனைத்தும்) போன்ற பகுதிகள் பயன்படுகிறது.

            இம்முறையில் பச்சையாக உள்ள தாவர பாகங்கள் மட்டுமல்லாது, உலர்ந்த பாகங்களும் பயன்படுகிறது. மேலும் இம்முறையில் 1008க்கும் அதிகமான தாவர வகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது சித்தர் பாடல்களிலிருந்து தெரிய வருகிறது. அதனோடு இதில் சாதாரணமாகக் கிடைக்கும் தாவரங்கள் மட்டுமில்லாது அரிதாகக் கிடைக்கும் தாவர்களும் பயன்படுகிறது.

            உதாரணமாகச் சர்க்கரை வேம்பு, வட்டத்திருப்பி, பேய் பீர்க்கு, எலிக்காதிலை, மான்செவிக்கள்ளி, கல்பிரமி, செங்கற்றாழை, ஏரழிஞ்சில், சதுரகள்ளி, முதியோர் கூந்தல், வெள்ளை காக்கணம், மயூர்சிகை, கருநெல்லி, தாம்பரசிகை, உரோமவிருட்சம், எருமைக் கணைச்சான், சேந்தாடு பாவை, சாயாவிருட்சம், திகைப்பூண்டு போன்றவை பயன்படுகிறது.

2) விலங்கு வர்க்கம் :
            இம்முறையில் பறவை மற்றும் விலங்குகளிடமிருந்து பெறப்படும் மாமிசம், எலும்பு, பால், முட்டை, பித்து, பீசம், சாணம், மூத்திரம், இரத்தம், நெய், கொழுப்பு, பற்கள், முடி, முள், கொம்பு, தோல், பாம்புச்சட்டை, மண்புழு, வண்டுகள், நஞ்சு, மண்டை ஓடு, ஆமை ஓடு, நத்தை, நண்டு, ஆலைமீன், விரால் மீன், சுறா, மீன், தேன், கோழி, உடும்பு, மான் கறி, பறவைகள், புனுகு, கஸ்தூரி, கோரோசனை, சிட்டுக்குருவி போன்றவைகள் பயன்படுகிறது.

            மேலும் இம்முறையில் வெள்ளாடு, கொடியாடு, வரையாடு, செம்மறியாடு, பண்ணையாடு, குறும்பாடு, மான், கடமான், ஊர்பன்றி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முயல், உடும்பு, புலி, கரடி, மாடு, முதலை, பூனை, புனுகுப்பூனை, காட்டுப்பூனை, கீரி, மரநாய், எலி, வெள்ளெலி, பெருச்சாலி போன்ற உயிரினங்களின் இறைச்சி பயன்படுகிறது.

            அதனோடு கோழி, கருங்கோழி, கானாங்கோழி, வான்கோழி, சம்பங்கோழி, வாத்து, கோழிமுட்டை, காடை, கௌதாரி, ஊர்க்குருவி, வானம்பாடி, விச்சுளி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, சிட்டுக்குருவி, உள்ளான், மயில், குயில், கொக்கு, நாரை, கிளுவைப்பட்சி, ஆள்காட்டிகுருவி, புறா, மணிபுறா, மாடப்புறா, மனைப்புறா, வண்ணப்புறா, வரிப்புறா, வெண்புறா, பச்சைப்புறா, தவிட்டுப்புறா, நீர்க்காக்கை, கோட்டான் போன்ற பறவைகளின் இறைச்சியும். மீன், கருவாடு, நண்டு, ஆமை, நத்தை, வௌவால் போன்றவையும் பயன்படுகிறது.

3) தாது வர்க்கம் :
            இம்முறையில் 11வகையான உலோகங்கள், 25 வகையான லவணங்களும் (உப்புக்களும்), 64 வகையான பாடாணங்களும், 120-க்கும் அதிகமான உபரசங்களும், மலைபடு திரவியங்களும், காடுபடு திரவியங்களும், கடல்படு திரவியங்களும் இன்னபிற தாது, இரச, இரசாயணங்களும் பயன்படுகிறது.

            இம்முறையில் தங்கம், வெள்ளி, இரும்பு, செம்பு, நாகம் எனும் ஐந்து மூல உலோகங்களும், இவற்றின் கலப்பான மற்ற உலோகங்களும் பயன்படுகிறது. மேலும் 10 விதமான இயற்கை உப்புகள். 15 விதமான செயற்கை உப்புகள், 32 விதமான இயற்கை பாடாணங்கள், 32 விதமான செயற்கை பாடாணங்கள், 64 வகையான கடைச் சரக்குகள், நவமணிகள், கற்கள்,  பல வகையான கார சாரங்கள், செயநீர், முப்பு, அண்டக்கல், பலவகையான மண், பல விதமான நீர், அனைத்து சரக்கையும் கட்டும் உதகநீர் போன்றவை இம்முறையில் பயன்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக