செவ்வாய், 23 அக்டோபர், 2018

பிரயோகத்தின் அடிப்படையில் மருந்துகளின் வகைகள்: (தொடர்ச்சி....)

2)வெளி மருந்துகள்:

உடலின் வெளிப்புறத்துக்கு இடப்படும் மருந்துகள் வெளி மருந்தாகும். இந்த மருந்துகள் செயல்படுத்தப்படும் முறைகளைப் பொறுத்து பெயர் பெற்றுள்ளன. இவை முப்பத்தி இரண்டு வகைப்படும்.

(1) அட்டைவிடல்:

உடம்பில் நோயுள்ள இடத்தின் கெட்ட இரத்தத்தை எடுப்பதற்கு அட்டையைக் கடிக்க விடுவது.

(2) அறுவை:

வீக்கமான பகுதியைக் கத்தி முதலிய கருவிகளைக் கொண்டு அறுத்துத் தைத்துவிடுவது.

(3) உறிஞ்சுதல்:

தேவையற்ற இரத்தம், சீழ் முதலியவற்றை அதற்குரிய கருவி கொண்டு உறிஞ்சி எடுப்பது.

(4) ஊதல்:

சில இலைகள் அல்லது உப்பு சரக்குகளில் ஒன்றை மென்று நோயாளியின் காதுகளில் ஊதிச் செலுத்துவது.

(5) உதிர்பொடி:
கானம், மஞ்சள் பொடி முதலியவற்றை சூடத்துடன் சேர்த்தோ சேர்க்காமலோ அரைத்து உடலில் தேய்ப்பது.

(6) ஒற்றடம்:

சுண்ணக்காரை, தவிடு, செங்கல்தூள். மணல், சில இலைகள் இவற்றல் ஏதாவது ஒன்றையோ, பலவற்றையோ சூடு செய்து ஒரு துணியில் கட்டி உடலில் கட்டி, வீக்கம் உள்ள இடங்களில் ஒற்றி எடுப்பது.

(7) கட்டு:

இலைகள், பட்டைகளை நைய இடித்தோ, வதக்கியோ  அல்லது புளித்த நீர் விட்டு வேக வைத்தோ ஊறு உள்ள இடத்தில் கட்டுவது.

(8) களிக்கம்:

சில சரக்குகளைச் சாறுடன் அரைத்து மாத்திரை வடிவில் தேவையானபோது தேனிலோ, பிற சாற்றிலோ இழைத்து கண்களில் போடுவது.

(9) களி:

விதைகளை அரிசி மாவுடன் கூட்டி பால்விட்டு அரைத்துக் கிளறி எடுப்பது.

(10) களிம்பு:

பாடாணங்களை துவர்ப்பான சரக்குகளுடன் பொடியாக்கி பசு வெண்ணெயை சேர்த்து நன்றாக அரைத்துப் பசை வடிவில் தயாரிப்பது.

(11) காரம்:

புண்ணை ஆற்றவோ, உண்டாக்கவோ வைத்துக் கட்டப்படும் நச்சுப் பொருள்.

(12) கீறல்:

கட்டி, கொப்புளங்களில் உள்ள குருதியை வெளியேற்றக் கீறிவிடுவது கீறல்.

(13) குருதி வாங்கல்:

தேங்கியுள்ள கெட்ட இரத்தத்தை வெளியேற்றக் குருதி குழலைக் கீறியோ அல்லது குத்திவிடுவது.

(14) கொம்புகட்டல்:

ஒடிந்த எலும்பை மரச்சட்டம் வைத்துத் தக்க கருவிகளால் கட்டுவது.

(15) சீலை:

மருந்துப் பொருட்களைப் புடமிடும்போது  அவை வைக்கப்படும் பாத்திரங்களைக் காற்று புகாமல் இறுக மூடிவைக்க பயன்படும் துணி.

(16) சலாகை:

புண்களைக் கீறிவிடுவதற்கும் அறுவைக்கும் பயன்படும் கருவி.

(17) சுட்டிகை:

மண், மரம், ஊசி முதலியவற்றை சூடாக்கி ஊறு வெளிப்படும் இடத்தில் ஒற்றி எடுக்கும் முறை. (சுட்டிகை - சூடு போடுதல்)

(18) தொக்கணம்:

உடல் வலியை நீக்கத் தைலம் தடவி உடலை நீவிவிடுவது அல்லது பிடித்து விடுவது.

(19) நசியம்:

சில மருந்து சரக்குகளைச் சாறுடன் அரைத்து மாத்திரை போலாக்கி தேவையானபோது துணியில் முடித்து ஊறவைத்து நாசியில் பிழிவது.

(20) நாசிகாபரணம் (பொடி போடுதல்):

மருந்தைத் தனித்தோ, பாலிலோ, சில வகை சாற்றிலோ ஊறவைத்து நிழலிலுலர்த்தி இடித்துத் துணியில் கட்டி மூக்கினால் உறியப்படுவது.

(21) நீர்:

மருந்து பொருட்களைக் குடிநீரில் காய்ச்சியோ அல்லது அரைத்தோ திரவம்போல எடுத்துக் கொள்வது.

(22) பசை:

குங்கிலியம் போன்றவற்றை மெழுகு அல்லது நெய் சேர்த்து உருக்கிக் குழம்பு நிலையில் பெறுவது.

(23) பீச்சு:

மலம் அடைபட்டு இருந்தால் மருந்து கலந்த நீரை ஆசனவாயில் பீச்சி மலத்தை வெளியேற்றப் பயன்படுவது. இது காது இரணத்திற்கும் பயன்படுவது.

(24) பூச்சு:

கொதிக்க வைத்த இலைச் சாற்றையோ, தைலத்தையோ பூசுவது.

(25) பற்று:

இலை, பட்டை, வேர் ஆகியவற்றின் சாறு அல்லது பசையை சுடவைத்து பற்று போடுவது.

(26) புகை:

மயிலிறகு, சீரகம், விலங்குகளின் குளம்புகள், மாடு, எருமைக் கொம்பின் சீவல், பாம்புச்சட்டை போன்றவற்றை நேரடியாகவோ, துணியில் வைத்துச் சிறுதீயாக எரித்துப் புகையுண்டாக்குவது.

(27) பொட்டணம்:

சில சரக்குகளை இடித்துச் சிறு முடிச்சாக்கி சில எண்ணெய்களில் நனைத்து ஒற்றி எடுப்பது.

(28) பொடி:

புண்களில் தூவுவதற்கு பயன்படுத்தப்படும் தூள்.

(29) முறிச்சல்:

முறிந்த எலும்புகளைச் சரியான நிலையில் வைத்து ஒழுங்குபடுத்துவது.

(30) வத்தி:

நச்சுச் சரக்குகளை அரைத்து, பொடித்து துணியில் சுருட்டி வைத்துக் கொள்வது திரிவத்தியாகும். இது புரையோடிய புண்ணில் வைத்துக் கட்டப்படுவது.

(31) வேது:

சில சரக்குகளைப் பொடித்து துணியில் திரிபோலச் சுருட்டி வேப்பெண்ணெய் அகலில் அதனை எரித்து முக்காடு போட்டு அந்தப் புகையை ஆவிபிடிப்பது.

(32) மை:

இது மூன்று நிலையில் தயாரிக்கப்படுவது.
  • சில செடிகளைக் கருக்கி தேன்விட்டரைப்பது.
  • குடிநீரில் சரக்குகளையும் கலாச்செடியின் பூச்சாறு முதலியவற்றையும் தேன்விட்டு காய்ச்சுவது.
  • சில சரக்குகளை அஞ்சனக்கல் கொண்டு அரைத்து உலர்த்தி பிறகு தேன்விட்டு மைப்பதத்தில் அரைத்தெடுப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக