திங்கள், 29 அக்டோபர், 2018

சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை


அறுவை சிகிச்சை இன்றைய நவீன கால மருத்துவத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகும். சாதாரண மருந்து, மாத்திரைக்குக் கட்டுப்படுத்த முடியாத பல்வேறு நோய்களுக்கும் இன்று அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு இன்றைய நவீன மருத்துவத்தின் தவிர்க்க மிடியாத அங்கமாக உள்ள அறுவை மருத்துவமானது நமது தமிழ் சித்தர்கள் உலகிற்கு தந்த கொடை எனில் அது மிகையாகாது.

ஆம் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை இல்லை எனறு கூறுபவர்களுக்கு இந்தப் பதிவு போதுமான விளக்கம் தருவதாக இருக்கும். இக்கால நவீன மருத்துவம் எந்த அளவுக்கு முன்னேறி இருப்பினும் அது அத்தனைக்கும் நமது தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவமே அடிப்படையாகும். இன்று உள்ள கல்வித் திறனுக்கு அக்கால சித்த மருத்துவர்கள் சற்றும் சளைத்தவர் அல்லர். மாறாக அன்றைய சித்த மருத்துவர்களின் கல்வித் திறனும், வாதத் திறனும், நாடி சோதிக்கும் திறனும், அவர்கள் அறிந்து வைத்திருந்த கைபாகம், செய்பாகம், ரோக நிதானம், வர்ம அறிவு, மருந்து செய் திறன் எதுவும் அந்த அளவுக்கு இந்தக் கால நவீன மருத்துவரிடத்தே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நமது சித்தர்கள் மாத்திரைகள், குளிகைகள், லேகியம், கியாழம், சூரணம், சாறு, குடிநீர், களி, நெய், பாகு, குழம்பு, பதங்கம், கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, புகை, தொக்கணம், ஊதல், கலிக்கம், களிம்பு போன்ற சாதாரண மருந்துகள் முதல் களங்கு, செயநீர், சுண்ணம், பஸ்பம், குரு மருந்து, சத்து, பதங்கம், மெழுகு, தீநீர் போன்ற உயர்ரக மருந்துகளின் செய்முறைகள்வரை நமக்குத் தந்தருளியுள்ளனர்.

அவ்வாறே அவர்கள் கீறல், அட்டை விடல், சலாகை, அறுவை, பீச்சு, குருதி வாங்கல் போன்ற முறைகளையும் கொடுத்துச் சென்றுள்ளனர். இக்காலத்தில் அறுவை சிகிச்சையானது முழுவதுமாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் நடைபெறுகிறது. ஆனால் அக்காலத்தில் அறுவை சிகிச்சை அறைகள் வேப்பிலை, சாம்பிராணி, வெண்கடுகு ஆகிய இலைகளைப் போட்டு, புகைமூட்டம் உண்டாக்கிய பிறகு, அறுவை சிகிச்சையில் ஈடுபடுவார்கள்.

இந்தப் பதிவில் சித்தர்களின் நூல்கள், பக்தி இலக்கியங்கள், இதர நூல்களில் அறுவை மருத்துவம் பற்றி நமக்குத் தெறிந்தவரை உள்ள குறிப்புகளைப் பார்க்கலாம். மற்றவைகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

சித்தர்களின் நூல்களில் அகத்தியர் இரண வைத்தியம், இரண வைத்திய சிந்தாமணி, தேரையர் தரு, தேரையர் கரிசல், அகத்தியர் நயனவிதி, நாகமுனிவர் நயன விதி, சத்திராயுத விதி எனும் நூல்கள் தரும் குறிப்புகள்மூலம் நமது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் அறுவை முறைகளும், அத்தகைய சிகிச்சைக்கான கருவிகளும் இருந்ததை அறியலாம்.

அதுமட்டுமின்றி உடலில் கற்களை அகற்றும் முறை, உடலில் அழுகிய பாகங்களை அறுத்து எடுத்து நீக்கும் முறை, கண் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளான கண்புரை சிகிச்சை, கண் படலங்களில் உண்டாகும் நோய், கருவிழியில் உண்டாகும் கருநாக படலத்திற்கான அறுவை முறைகள், பிரசவத்தின்போது செய்யப்படும் சிசேரியன், செயற்கை பாகங்கள் பொருத்தும் முறைகள், பிரேத பரிசோதனை முறைகள் போன்றவை பற்றிய குறிப்புகள் சில சங்க தமிழ் இலக்கியங்களிலும், ஆயுர்வேத மருததுவத்திலும் உள்ளது. இவைகளை பற்றிய குறிப்புகள் நமது சித்த மருத்துவத்திலும் இருந்திருக்கலாம். பிறகு கடல்கோள், அன்னிய படையெடுப்பு போன்ற காரணிகளாலும் அவை அழிந்து போயிருக்கலாம்.

இது போன்ற குறிப்புகள் நமது சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் நிரம்ப காணப்படுகின்றன. எவ்வாறெனில், நமது சித்த மருத்துவர்கள் அக, புற மருத்துவம் செய்வது மட்டுமின்றி அறுவை சிகிச்சையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தனர் என்பதை,


"உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்ததன் உதிரம்
ஊற்றிக் கடபெறச் சுட்டு வேறோர் மருந்தினாற் றுயரந்தீர்வர்"
(கம்ப இராமாயணம்)

கம்ப இராமாயண வரிகளால் அறியலாம். ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்,


"வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயானன் போல்"
(திவ்ய பிரபந்தம் - 691)

என்று கூறுவதால் நம் முன்னோர் அறுவை மருத்துவத்திலும் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதை அறியலாம்.

அடிபட்ட அல்லது கூர்மையான வாள்பட்டு உடலில் குருதி வழிய இரணம் ஏற்பட்டால் குருதி வருவதை தடுத்து தூசு படாமல் புண்ணுக்கு மருந்திட்டு கட்டுவதை,


"கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர் ..........."
(புறம் - 353)

என்ற புறநானூற்று அடியால் அறியலாம். அம்புகள் தைப்பதாலும், வெட்டு காயங்கள் முலம் அதிக இரத்தம் வெளியேறுவதால் அதிர்ச்சி, நா வறட்சி, உடல் வற்றி சுருங்குதல் போன்ற குறிகள் தோன்றும் என்பதை,


"உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயர்"
(கலித்தொகை - 6)

எனும் அடியால் அறியலாம். மேலும் அக்காலத்தில் காயங்களைத் தைக்க பயன்பட்ட ஊசிக்கு "நெடு வெள்ளூசி" என்று பெயர். இது இக்காலத்து மருத்துவமனையில் பயன்படும் Stainless needles போன்று இருந்தது என்பதை அதன் பெயரிலிருந்து அறியலாம்.


"மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த ..........."
(பதிற்றுபத்து - 42)

எனும் அடியால் காயம்பட்ட இடத்தில் ஊசி கொண்டு தைப்பது என்பது, நீர் நிறைந்த தடாகத்தில் வாழும் மீனானது நீரிலிருந்து துள்ளி எழுந்து மீண்டும் நீருக்குள் செல்லும் நிகழ்வுக்கு ஒப்பாக உள்ளது எனப் புலவர் உவமைபட கூறுகிறார். இந்த ஊசியானது நெட்டை எனவும் பெயர்படும்.

போரில் காயம்பட்ட வீரர்களின் உடலில் பாய்ந்த ஆயுத துண்டுகளை வலிமையான காந்தங்களை கொண்டு அகற்றி செய்யும் சிகிச்சை முறையை,


"அயில்வேல் .......... நீங்கலது இப்பொழுதகன்றது
.......... காந்தமாம் மணியின்று வாங்க"

என்ற வரிகளால் அறியலாம்.

சித்த மருத்துவத்தில் மருத்துவர்களுக்குரிய இலக்கணம் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


"காங்கு சிவப்பு பலபுள்ளி
கமழும் பட்டு மாவுரிகள்
நீங்க வேண்டும் துகிலுடுக்க
நேரே யாகா மருத்துவர்க்கே
ஓங்கும் வெள்ளைத் துகிலுடுத்தி
யுண்மை நினைத்து மருந்துசெயின்
பாங்கு பெறவே பிணிதீரும்
பாரிற் பாரும் பண்டிதரே"

மருத்துவர்கள் வெள்ளை நிற மேல் அங்கி (White coat) அணியும் வழக்கம் பன்னெடுங் காலந்தொட்டே இருந்து வருவதை இதன் மூலம் அறியலாம்.

கீழ்கண்ட பாடல்மூலம் காலையில் நரம்பு குத்தல் எனும் சிகிச்சையினையும், மத்தியான வேளையில் கொம்பு வைத்து உதிரம் வாங்கும் சிகிச்சையினையும், அட்டைவிடல் போன்ற சிறப்புச் சிகிச்சை முறைகளை மாலையிலும் மேற்கொண்டதை அறியலாம்.


"களவுறு நரம்பு குத்தல் கருவிக ளாடல் காலை
யளவுறு கொம்பு வைத்தங் குதிரம்வாங் குதல்மத் தியானம்
அளவுறு அட்டை விட்டு ஆற்றுவது அந்திக் காலம்
தளவுறு நகைப்பால் வெய்யோர் புரஞ்செற்றார் சாற்றினாரே"

சித்த மருத்துவத்தில் கட்டு போடுதல் என்ற முறையில் பதினான்கு வகைகளைச் சொல்லியுள்ளார்கள். அதாவது,
  1. உறையிடுதல்
  2. சுற்றுக் கட்டுதல்
  3. இரட்டை கட்டுதல்
  4. முறுக்கிக் கட்டுதல்
  5. மேற்கூரை கட்டுதல்
  6. சுருக்குமுடி கட்டுதல்
  7. கொம்புருவில் கட்டுதல்
  8. ஒளிக்கற்றைக் கட்டுதல்
  9. ஐந்து உறுப்புகள் கட்டுதல்
  10. படுக்க வைத்துக் கட்டுதல்
  11. வளையம்போலக் கட்டுதல்
  12. மெல்லிய கயிற்றினால் கட்டுதல்
  13. வெற்றிலை பெட்டிபோலக் கட்டுதல்
  14. குறுக்குக் கோடுகள் உருவில் கட்டுதல்
என்று பதினான்கு வகையாகப் பிரித்தார்கள்.

காசி பல்கலைக்கழகத்தில், எலும்பு முறிவுச் சிகிச்சைக்குப் போடப்பட்ட கட்டு முறைகளை, அப்படியே இன்றும் வைத்துப் பாதுகாக்கின்றனர். இக்காலத்து நவீன எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், அதைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

இது போன்ற அறுவை கருவிகள்பற்றிய குறிப்புகள் ஆயுர்வேத நூலான சுஸ்ருத சம்ஹிதையிலும் உள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை கருவிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதில் அறுவை சிகிச்சைகளை அவர்
  • சேத்யம்
  • பேத்யம்
  • லேக்யம்
  • ஈஷ்யம்
  • அஹர்யம்
  • விஸ்ரவ்யம்
  • லீவயம்
எனவும், அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் கருவிகள
  • ஸ்வஸ்திகா
  • நாடீ
  • சாலகம்
  • சஸ்த்ரம்
  • உபயந்த்ரம்
எனவும் பிரிக்கிறார். இவற்றைத் தவிர்த்து அறுவை சிகிச்சை முடிந்தபின் அந்த இடத்தில் தையல் போடக் குதிரை முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு, கட்டெறும்பு போன்றவற்றை பயன்படுத்தும் முறைகளையும் கூறியுள்ளார்.

மேலும் வேறுபல அறுவை சிகிச்சை கருவிகளும் நம் தமிழ் சித்த மருத்துவத்தில் இருந்திருக்கலாம். அவற்றைப் பற்றிய குறிப்புகள் யாரேனும் வைத்திருந்தால் அதனைப் பற்றிப் பகிரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக