செவ்வாய், 23 அக்டோபர், 2018

பிரயோகத்தின் அடிப்படையில் மருந்துகளின் வகைகள்

சித்த மருத்துவத்தில் பயன்படுகின்ற மருந்துகளைப் பொதுவாக இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
  1. அக மருத்துவம்
  2. புற மருத்துவம்
இவற்றில் ஒவ்வொன்றிலும் பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அவற்றில் அக மருத்துவம் 32 பிரிவுகளையும், புற மருத்துவம் 32 பிரிவுகளையும் கொண்டுள்ளது. இந்த மருந்துகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே அதற்குறிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கும்.  பின் அவை கெட்டுவிடும் பயன்படாது.

இவற்றில் இன்று பெரும்பாலான மருத்துவ முறைகள் புழக்கத்தில் இல்லை. அல்லது அந்த முறைகள் மாற்று மருத்துவ முறைகளில் கையாளப்படுகின்றன.

மருந்து வகைகள்:
  1. மூலிகையின் இலையை இடித்துப் பிழிந்தால் "சாறு"
  2. சாறை சூடுபடுத்தி பயன்படுத்தினால் "சுரசம்"
  3. இலையைச் சிதைத்து தண்ணீரில் போட்டுக் குடித்தால் "ஊறல் நீர்"
  4. மூலிகையை உலர்த்தி பொடி செய்து பயன்படுத்தினால் "சூரணம்"
  5. சூரணத்தை நெய், தேன், சர்க்கரை பாகு கலந்து கிளறினால் "லேகியம்"
  6. மூலிகையை நீரில் போட்டு வடிகட்டி வெல்லம், நெய், தேன் கலந்து பாகு போலக் காய்ச்சினால் "மணப்பாகு"
  7. மூலிகை இலையுடன் நீர்விட்டு அரைத்து பசையாகச் செய்தால் "கல்கம்"
  8. மூலிகையுடன் நீர் சேர்த்து காய்ச்சினால் "கியாழம்"
  9. மூலிகையுடன் பால், எண்ணெய் சேர்த்து காய்ச்சினால் "தைலம்"
  10. மூலிகையை இடித்து நீர்விட்டு காய்ச்சினால் "குடிநீர்"
  11. மூலிகையுடன் சர்க்கரை, வெல்லம், தேன் சேர்த்து களி போலக் கிளறினால் "உட்களி"
  12. மூலிகை பொடியைப் பாலில் அவித்து எடுத்தால் "பிட்டு"
  13. மூலிகை பிட்டை உருண்டையாக உருட்டுவது "வடகம்"
  14. மூலிகை பொடியைப் பால், நெய், வெண்ணெய், வெல்லம் சேர்த்து இரும்பு கரண்டியில் எரித்து எடுப்பது "வெண்ணெய்"
  15. மூலிகைகயை புடமிட்டு எரித்துப் பொடியாக்கினால் "பற்பம்" (பெரும்பாலும் வெந்நிறமாகவோ அல்லது வெளிர் பழுப்பு நிறமாகவோ இருக்கும்)
  16. அதுவே பற்பம் சிவந்து காணப்பட்டால் "செந்தூரம்"
  17. பற்பம் சுண்ணாம்பு போல வெளுத்துக் காணப்பட்டால் "சுண்ணம்"
  18. மூலிகையைப் புடமிட்டு எரித்து மேல் சட்டியில் ஒட்டி இருப்பதை எடுப்பது "பதங்கம்"
அதுபோல இந்த மருந்துகளைத் தயாரிப்பதில் பல்வேறு முறைகள் கையாளப்படுகிறது. அவை,
  • பொடியாக்குதல்
  • சுண்டி நீராக்குதல்
  • கத்தியால் அறுத்தல்
  • களி போலக் கிண்டுதல்
  • மருந்துகளைப் பொடித்தல்
  • பசை போன்று அரைத்தல்
  • மையாக்கி கண்ணிலிடுதல்
  • பொடியாக்கி மூக்கிலிடுதல்
  • துணியில் மருந்தைத் தடவி போடுவதும்
  • சிலாகையால் குத்தி சீழ், நிணநீர் எடுப்பதும்
  • முறிந்த எலும்பைக் கூட்ட கொம்பு கட்டுவதும்
  • குழாய்மூலம் குருதியை வெளிப்படுத்துவதும்
  • பெருந்தூளாக்கி சூடிட்டு ஒத்தடம் பண்ணியதும்
  • மருந்து தூளை நோயாளின் காதில் ஊதும் முறையும்
  • மருந்துக் கலவையை நெருப்பிலிட்டு கிளம்பும் புகையை பிடித்தல்


1) உள் மருந்துகள்:

உள்ளுக்கு கொடுக்கும் மருந்துகள் உள் மருந்துகள் எனப்படும். இவைகள் தயாரிக்கப்படும் முறையைப் பொருத்து பெயர் பெற்றுள்ளன. இவை முப்பத்தி இரண்டு வகைப்படும்.

(1) சாறு:

மருந்துப் பொருட்களை நீர்விட்டு அரைத்து எடுக்கக் கிடைப்பது. 3 மணி நேரம்.

(2) சுரசம்:

மருந்துப் பொருட்களை நீர்விட்டு அரைத்துப் பிழிந்து கொதிக்க வைத்துக் கிடைப்பது. 3 மணி நேரம்.

(3) குடிநீர்:

மருத்துப் பொருட்களை அரைத்து நீர்விட்டு சுண்டக் காய்ச்சி கிடைப்பது. இது கஷாயம், கியாழம் எனவும் அழைக்கப்படும். 3 மணி நேரம்.

(4) கற்கம்:

ஈரமான அல்லது உலர்ந்த சரக்குகளைத் தூய்த்து இரும்புத் தூள் அல்லது இரும்பு சிட்டத்தூளை சில இலைகளுடன் சேர்ந்து கல்லோடு கல்லாக அரைப்பது. 3 மணி நேரம்.

(5) உட்கலி:

மாவுப்பொருட்களில் வெல்லம் சேர்த்து நெய்யூற்றி களிம்பு பதத்தில் கிண்டி எடுப்பதாகவும். களிம்பு பதம் என்பது ஒட்டாத பதம். 3 மணி நேரம்.

(6) அடை:

மாவுப் பொருட்களுடன் சில இலைகளைச் சேர்த்து அடுப்பேற்றி கொஞ்சங் கொஞ்சமாய் நெய் தடவி மாவை அடையாகத் தட்டி வெந்தபின் எடுப்பது. 3 மணி நேரம்.

(7) தூள் (சூரணம்):

ஈரமான மருந்துச் சரக்குகளை உலர்த்தியும், உலர்ந்தவற்றை சுத்தம் செய்தும். வறுக்க வேண்டியவற்றை வறுத்தும், மற்றவற்றை அப்படியே தனித்தனியாக இடித்துச் சலித்து எடுக்கக் கிடைப்பது. (சலித்தல் என்பது மெல்லிய வெள்ளை துணியால் மிக நுண்ணிய தூளாகச் சலிப்பது. இது வஸ்திரகாயம் எனப்படும்.) 3 நாட்கள்.

(8) பிட்டு:

தூளை சுத்தி செய்வது போல் மருந்து சரக்குகளைப் பொடியாக்கி பால் அல்லது தண்ணீரை பயன்படுத்தி ஆவியில் அவித்து எடுப்பது. 3 மாதம்.

(9) வடகம்:

மருந்து சரக்குகளைத் தூளாக்கி நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தோடு சேர்த்து அதை உரலில் இட்டு இடித்துச் சிறிதாக உருட்டி எடுப்பதாகும். 3 மாதம்.

(10) வெண்ணெய்:

மருந்து சரக்குகளைத் தூளாக்கி இரும்பு கரண்டியில் தூளின் எடைக்கு இருமடங்கு பசுவின் நெய் சேர்த்து அடுப்பிலேற்றி நெய் உருகிக் கலந்து உடன் தண்ணீர் உள்ள மண் சட்டியில் ஊற்றி மத்தால் கடைய கிடைப்பது. 3 மாதம்.

(11) மணப்பாகு:

சரக்குகள், வேர்கள், பூக்கள், பழங்கள், போன்றவற்றை குடிநீர் அல்லது சாறு பிழிந்து அதனுள் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து மணம் வரும் வரை காய்ச்சி பின் இறக்கி வைத்து ஆறிய பின் எடுப்பது. 6 மாதம்.

(12) நெய்:

இலைச்சாறு, கிழங்குச்சாறு, கற்கம், குடிநீர் போன்றவற்றுள் ஏதாவது ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ சேர்த்து பசுவின் நெய்யோடு கலந்து அடுப்பேற்றி காய்ச்ச கிடைப்பது. 6 மாதம்.

(13) இரசாயணம்:

மருந்து சரக்குகளைத் தூளாக்கி அவற்றோடு சர்க்கரை மற்றும் நெய் சமனெடை சேர்த்து குழம்பு நிலையில் எடுப்பது. 6 மாதம்.

(14) இளகம் (லேகியம்):

மருத்துவக் குடிநீர் அல்லது மூலிகைச் சாறோடு சர்க்கரை சேர்த்து அடுப்பேற்றி சிறுதீயாகச் சுண்ட வைத்து மணம் வரும் நேரத்தில் தேன் அல்லது நெய் போன்றவற்றை கலந்து கிளறக் கிடைப்பது. 6 மாதம்.

(15) நெய் (கிருதம்):

விதை, பட்டை போன்றவற்றை நன்றாக உலர்த்தி பின்பு செக்கிலிட்டு ஆட்டிப் பெறப்படுவது. இது தைலம் எனவும் அழைக்கப்படும். ஒரு வருடம்.

(16) மாத்திரை:

சிறு சரக்குகளைச் சேர்த்து மூலிகை இலைச்சாறு அல்லது குடிநீர் கொண்டு அரைத்துப் பல அளவுகளில் உருட்டக் கிடைப்பது. ஒரு வருடம்.

(17) கடுகு:

மருந்துச் சரக்குகளை நெய் முதலியவற்றுடன் காய்ச்சி திரண்டு வரும்போது கடுகு பதத்தில் எடுக்கப்படுவது ஆகும். (கடுகு பதம் என்பது பாகுக்கு அடுத்த இறுகக்கூடிய நிலையாகும்.). ஒரு வருடம்.

(18) பக்குவம் (பதம்):

மருந்துகளைப் பக்கவப்படுத்த பொடித்தல், ஊற வைத்தல் போன்ற செயல்களைச் செய்வது. ஒரு வருடம்.

(19) தேனூறல்:

இஞ்சி, நெல்லிக்காய். கடுக்காய் முதலியவற்றை நன்றாகக் கழுவி ஊசியால் பல துளையிட்டு தேன் அல்லது சர்க்கரை பாகில் ஊற வைத்து எடுப்பது. ஒரு வருடம்.

(20) தீநீர்:

சரக்குகளைத் தண்ணீர் உள்ள சட்டியிலிட்டு அடுப்பிலிருந்து இறக்குவதாகும். ஒரு வருடம்.

(21) மெழுகு:

சரக்குகளுடன் சாறு அல்லது நெய் போன்றவற்றை சேர்த்து அரைத்து மெழுகு பதத்தில் காய்ச்சி எடுப்பதாகும். 5 வருடங்கள்.

(22) குழம்பு:

சாறுகள், சர்க்கரை, மருந்துப் பொடிகள் முதலியவற்றை காய்ச்சி குழகுழப்பான பக்குவத்தில் எடுப்பது. இதில் இரசாயணம் போல நெய் சேராது. 5 ஆண்டுகள்.

(23) பதங்கம்:

பாதரசம் அல்லது இரசம் கலந்த பொருட்களைச் செங்கல் தூள், உப்பு ஆகியவற்றிற்கு இடையில் வைத்துச் சீலைமண் செய்து மேல் சட்டியில் படிந்து இருப்பதை வழித்தெடுப்பது பதங்கம் ஆகும். 10 வருடங்கள்.

(24) செந்தூரம்:

உலோகம், பாடாணம் முதலியவற்றை இலைச்சாறு, புகைநீர், செயநீர் முதலியவற்றைக்  கொண்டு புடம் போடக் கிடைப்பது. இது செந்நிறமாக இருக்கும்.75 வருடங்கள்.

(25) பற்பம் (பஸ்பம்):

உலோகம், பாடாணம் முதலியவற்றை இலைச்சாறு, புகைநீர், செயநீர் முதலியவற்றைக் கொண்டு புடம்போட்டு நீற்றக் கிடைப்பது. இது வெண்ணிறமாக இருக்கும். 100 வருடங்கள்.

(26) கட்டு:

பாடாணங்களைச் சுருக்குக் கொடுத்துப் பற்பம், செந்தூரம் போன்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து  மாத்துரையாகச் செய்வது. 100 வருடங்கள்.

(27) உருக்கு:

பாடாணம், உலோகம்,  இவற்றுடன் நட்பு, பகை பொருட்களைக் கூட்டி எரித்து எடுப்பது. 100 வருடங்கள்.

(28) களங்கு:

ரசம், பாடாணம் போன்ற மருந்துகளை மூலிகை, செயநீர், புகைநீர் முதலியவற்றால் சுருக்கு கொடுத்து, புடமிட்டு மணியாக்கி தங்கம், நாகம் சேர்த்து கூட்டி எடுப்பது. 100 வருடங்கள்.

(29) சுண்ணம்:

ரசம், பாடாணம், உலோகம் இவைகளை தனியாகவோ, கலந்தோ மூலிகை, செயநீர், புகைநீர் இவற்றில் அரைத்துச் சீலைமண் செய்து நெருப்பால் ஊதி எடுப்பது. 500 வருடங்கள்.

(30) கற்பம்:

மூலிகை, உலோகம், உபரசங்கள் போன்ற பலவற்றை பக்குவத்துடன் செய்வது. 1000 வருடங்களுக்கும் மேல்.

(31) சத்து:

காந்தம், இரும்புத்தூள் முதலியவற்றுடன் பல பாடாணங்களை சேர்த்து அரைத்து ஊதி ரசம், கந்தகம், தங்கம் சேர்த்து எரித்து எடுப்பது. 1000 வருடங்களுக்கு மேல்.

(32) குருகுளிகை:

வாலை இரசத்தை சில சரக்குகளால் கட்டி மணியால் செய்து எடுத்துக் கொள்வது. 1000 வருடங்களுக்கு மேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக