திங்கள், 29 அக்டோபர், 2018

சுத்தி முறைகள் (கடைச்சரக்குகள்)

1) சுக்கு - ஓர் எடை சுக்குக்கு 2 எடை சுண்ணக்கல் சேர்த்து தாளித்து, ஒரு சாமம் சென்றபின் கழுவி உலர்ததி மேல்தோலை சீவி கழிக்க வேண்டும்.

2) மிளகு - புளித்த மோரில் ஒரு சாமம் ஊறபோட்டு எடுத்துலர்த்தி கொள்ளவும்.

3) திப்பிலி - கொடிவேலி இலைச்சாற்றில் ஒரு நாழிகை ஊறப் போட்டு பின்னர் இரவியில் உலர்த்தவும்.

4) திப்பிலி மூலம் - கணுக்களை போக்கி உலரவைத்து எடுத்துக் கொள்ளவும்.

5) ஆனைத்திப்பிலி - காடியில் ஒரு சாமம் ஊறவைத்து ரவியில் உலர்த்தி எடுக்கவும்.

6) செவ்வியம் - மேல் தோல் சீவிச் சிறு சிறு துண்டுகளாக்கி இரவியில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

(மரமஞ்சள், மஞ்சள், அதிவிடயம், சிறுதேக்கு, சாதிக்காய், அரத்தை இவைகளையும் இதேபோல் சுத்தி செய்து கொளளவும்)

7) சித்திரமூலம் - உள்நரம்பை நீக்கி மேல்பட்டையை மாத்திரம் இடித்துச் சூரணம் செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால்விட்டு, ஏடுகட்டி, அதன் மேல் சூரணத்தை பரப்பி, மேல்சட்டி மூடி, ஒரு சாமம் சிறு தீயாக எரித்து சூரணத்தை வடித்துலர்த்தி, மறுபடியும் கல்வத்தில் இட்டரைத்து வைத்து கொள்ளவும்.

8) ஓமம் - இதனை சுண்ணநீரில் நனைத்து உலர்த்திக் கொள்ளவும்.

9) புளி - கொட்டை, ஓடு இவைகளை நீக்கி 3 நாள் ரவியில் உலர்த்தவும்.

10) கொறுக்காப்புளி - சலம் தெளித்து பிசறி, நிழலில் ஒரு  நாள் ஆறப்போட்டு எடுத்துக் கொள்ளவும்.

11) சீரகம் - மண் முதலியவையன்றி ஆய்ந்து புடைத்து ரவியிலுலர்த்தி வைத்து கொள்ளவும்.

12) கருஞ்சீரகம் - நன்றாய் ஆய்ந்து இரவியிலுலர்த்தி பொன்மேனியாக வறுத்துக் கொள்ளவும்.

13) சதகுப்பை, வாய்விளங்கம், தாளிசபத்திரி, சிறுநாகப்பூ, ஏலம், கிராம்பு, சடாமஞ்சில், சாதிபத்திரி, காட்டுசதகுப்பை - இவைகளில் வேறொன்றும் இன்றி ஆய்ந்து ரவியில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

14) வெந்தயம் - நீராகாரத் தெளிவில் அரை நாழிகை ஊறப்போட்டு உலர்த்தி கொள்ளவும்.

15) கொத்தமல்லி - வெந்நீரிலேனும், பழரசத்திலேனும் கிழிகட்டி எரித்து இரவியில் உலர்த்தி எடுக்கவும்.

16) வசம்பு - நெருப்பில் சுட்டு கரியாக்கி கொள்ளவும்.

17) கடுக்காய் - அரிசி கழுவிய நீரில் ஊறப்போட்டு மஞ்சள் நீரைப் போக்கி கொட்டையை நீக்கி உலர்த்தவும்.

18) நெல்லிவற்றல் - பால்விட்டு வேகவைத்து கொட்டையை நீக்கி உலர்த்தவும்.

19) தான்றிக்காய் - தாழை விழுது சாற்றில் 1 சாமம் ஊறவிட்டு விதையை நீக்கி ரவியில் உலர்த்தவும்.

20) கடுகு, வெண்கடுகு - நன்றாக ஆய்ந்து 2 நாள் கடு வெயிலில் உலர்த்தவும்.

21) கடுகுரோகிணி - வேப்பிலை சாறு அல்லது நொச்சியிலை சாற்றில் ஒரு சாமம் ஊறவைத்து ரவியில் உலர்த்தவும்.

22) மந்திட்டி, கிச்சிலி கிழங்கு - கடும் வெய்யிலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவும்.

23) கற்கடகசிங்கி - வாதுமை எண்ணையில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

24) அதிமதுரம் - சுத்தமான நீரில் அலம்பி மேல்தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக்கி உலரத்தவும்.

25) கார்போக அரிசி - திருநீற்று பச்சிலை சாற்றில் நனைத்து உலரத்தவும்.

26) வாலுழுவை, சிறுவாழுவை - சோற்றுக் கற்றாழை சாற்றில் கழுவி இரவியில் உலர்த்துக.

27)பெருங்காயம் - இதனை கரிநெருப்பில் பொரித்தெடுத்தோ அல்லது தாமரை இலைச்சாற்றில் ஒரு நாழிகை ஊறவைத்து எடுத்தோ உபயோகிக்கலாம்.

28) சேங்கொட்டை - இதனுடைய மூக்கை வெட்டி கழுநீரிலும் எருமை பாலிலும் ஒவ்வொரு சாமம் ஊறவைத்து நீரில் அலம்பி இரவியில் உலர்த்தவும்.

29) கருங்குட்டம், கெந்தமாஞ்சில் - கடுரவியில் ஒரு நாழிகை உலர்த்தி எடுக்கவும்.

30) அரக்கு - இதனை நறுக்கி உள்ளிருக்கும் குச்சிகளை நீக்கி உபயோகிக்கவும்.

31) தாமலபத்திரி - பெருநரம்புகளை நீக்கஇ ரவியில் உலர்த்தவும்.

32) கோஷ்டம் - நன்றாக ஆய்ந்து ரவியில் உலர்த்தவும்.

33) தேன்மெழுகு - உருக்கி தளளிய வைத்து வடிகட்டி கொள்ளவும்.

34) குங்கிலியம் - திரிபலாதி கஷாயத்தில் தோலாந்திரமாக கட்டி 2 சாமம் எரித்தெடுக்க எல்லா வித குங்கிலியங்களும் சுத்தியாகும்.

35) குந்திரிக்கம் - சாராயத்தில் ஒரு நாள் ஊறவைத்தஉ எடுக்கவும்.

36) கூகைநீர் - 7 முறை சலம் விட்டு கரைத்து கழுவி தெளிந்தபின் வடிகட்டி இரவியில் உலர்த்தவும்.

37) கஸ்தூரி, கோரோசனை - இவைகளுக்கு சுத்தியில்லை. ஆயினும் வைப்பு சரக்கறிந்து சேர்க்கவும்.

38) குங்குமப்பூ - இதனை கடுதாசியின் மேற்பரப்பி, நெருப்பனலில் காட்டி நொருங்கும் பதத்தில் எடுத்துக் கொள்க.

39) சந்தனம், செஞ்சந்தனம், கறுப்பு அகரு - வைர பாகத்தை எடுத்துக் கொண்டு மற்ற பாகத்தை நீக்கவும்.

40) தூநீயாங்கிசம் (பிசின்) - இதனை கடுரவியிலுலர்த்தி கொள்ளவும்.

41) செவ்வள்ளி - இரவிலுலர்த்தி கொள்ளவும்.

சுத்தி முறைகள் (வனமூலிகை )

1) காட்டுமிளகு - வெற்றிலை சாற்றில் அரை நாழிகை ஊறப்போட்டு ரவிலுலர்த்தவும்.

2) வால்மிளகு - காம்புகளை ஆய்ந்து இரவிலுலர்த்தவும்.

3) கஸ்தூரி மஞ்சள், பீதரோகிணி, அக்கரகாரம், வட்டத்திப்பி - இவைகளை மேல்தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.

4) பறங்கிசக்கை, நிலம்பனங்கிழங்கு, அமுக்கராகிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு - இவைகளை நன்கு உலர்த்தி தனித்தனியாக இடித்து சூரணம் செய்து ஒரு பாத்திரத்தில் பாலைவிட்டு சீலையால் ஏடுகட்டி அதில் இச்சூரணத்தை வைத்து மேற்சட்டி மூடி ஒரு சாமம் எரித்தபின் சூரணத்தை ரவியில் உலர்த்தி அரைத்து எடுக்கவும்

5) மகரப்பூ - அடிக்காம்மையும், மகரந்தத்தையும் விலக்கி காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

6) இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, தக்கோலம், வெட்பாலை அரிசி - இவைகளை ரவியில் உலர்த்தி எடுக்கவும்.

7) சிற்றேலம் - மொன்வறுவலாக வறுத்து எடுக்கவும்.

8) புகையிலை - அகத்திக்கீரையின் மத்தியில் இதனை சுருட்டி வைத்து நீர் விட்டரைத்து வெயிலில் உலர்த்தி கொள்ளவும்.

9) கஞ்சா - விதை, காம்பு முதலியவற்றை நீக்கிவிட்டு பிறகு ஓரிரவு சுத்த நீரில் சோற்றுப்பு போட்டு ஊரவைத்து அடுத்த நாள் 7 முறை பிசைந்து கழுவிக் கெட்டியான துணியில் பிழிந்து ரவியில் உலர்த்தவும்.

10) இருவி - சிறு துண்டுகளாக நறுக்கி சிறுநீரில் 3 நாள் ஊறப் போட்டு எடுத்து உலர்த்தவும்.

11) நாவி - சிறு துண்டுகளாக நறுக்கி கோநீரில் 3 நாள் ஊறப்போட்டு பின் உலர்த்தவும்.

12) வெட்டிவேர், விளாமிச்சைவேர் - சிறு துண்டாக நறுக்கி இரவியில் உலர்த்தவும்.

13) அகில், தேவதாரு - வயிர பாகத்தை எடுத்துக் கொண்டு பொன்வறுவலாக வறுத்து எடுக்கவும்.

14) குரோசாணி ஓமம் - இதனை நன்றாய் புடைத்து தேய்த்து மண்ணை போக்கி உலர்த்தவும்.

15) நேர்வாளம் - எருமை சாணியில் வேகவைத்து எடுத்து கழுவி ஒவ்வொன்றாய் பிளந்து தோல், நஞ்சு முளை ஆகியவற்றை நீக்கி, மெல்லிய துணியில் தளர்வாக முடிந்து பிறகு அதனை பச்சரிசியுடன் சேர்த்து பொங்கி அரிசி வெந்ததும் அம்முடிப்பை எடுத்தலம்பி மறுபடியும் முன்போல முடிப்பு கட்டி பாலில் அவித்து கழுவி, நிழலில் உலர்த்தி ஒரு சட்டியில் கொஞ்சம் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி போட்டு வறுத்து எடுக்கவும்.

16) சிவதைவேர் - இதன் நடுநரம்பை களைந்து பாலில் போட்டு அடிகாந்தாமல் வேகவைத்து எடுத்து இரவியில் உலர்த்தவும்.

17) நாகணம் - இதனை வில்லை வில்லையாக அறுத்து ஒரு சட்டியில் நெய்தடவி அதில் வில்லைகளை போட்டு அவை வளையும்படி வறுத்து எடுக்கவும்.

18) சீந்தில் - இதன் மேல் தோலை சீவிக் கிழிக்கவும்.

19) கடலுராய்ஞ்சிப்பட்டை, வலம்புரிக்காய், தலைச்சுரிளிப்பட்டை, கோரைக்கிழங்கு, நிலவேம்பு - இவைகளை கடுரவியில் உலர்த்தி எடுக்கவும்.

20) சமுத்திரசோதி விதை - ஓடு நீக்கி உள்ளிருக்கும் பருப்பை எடுக்கவும்.

21) எட்டி விதை - இதனை நெல்லுடன் சேர்த்து அவித்து சிறுகீரை சாற்றில் ஒரு சாமம் ஊறப்போட்டு கழுவி எடுக்கவும்.

22) தேற்றான்கொட்டை - இதனை பசும்பாலில் ஒரு நாழிகை ஊறப்போட்டு நீரில் அலம்பி உலர்த்தவும் (அல்லது) இதன் எடைக்கு 4 பங்கு சிறுகீரை சாறிட்டு அதை அரைபாகமாக சுண்டக்காய்ச்சி பின் நீரில் அலசி எடுக்கவும்.

23) கழற்சிவித்து - மேலோட்டை நீக்கி வெந்நீரில் கழுவி உலர்த்தவும்.

24) ஊமத்தை விதை - பழரசத்தில் ஒரு சாமம் ஊறவிட்டு எடுத்து இரவியில் உலர்த்தவும்.

25) கரும்பு - மேல் தோலையும், கணுக்களையும் நீக்கவும்.

26) சர்க்கரை - அம்மியில் வைத்து கட்டியெல்லாம் நொருங்கும் படி அரைத்து முறத்திலிட்டு கொழித்துக் கொள்ளவும்.

27) காட்டாத்திப்பூ - இலை, காம்பு நீக்கி ஆய்ந்து இரவியில் உலர்த்தவும்.

28) நில ஆவாரை - இதை இடித்து சூரணித்து ஒரு பாண்டத்தில் விட்டு ஏடுகட்டி சூரணத்தை நடுவில் வைத்து மேற்சட்டி மூடி ஒரு சாமம் எரித்து எடுக்கவும்.

29) பிரண்டை - கணுக்களை தெரித்து மேல்தோல் சீவி புளிப்பு மோரில் சிறிது உப்பு சேர்த்து 3 நாள் ஊறப்போட்டு இரவியில் உலர்த்தவும்.

சுத்தி முறைகள் (மூலிகைகள் - பொது சுத்தி)

வேர் வகை சுத்தி:

செடி, கொடி, புல், பூண்டு, மரம், விருட்சம் முதலிய சகல தாவரங்களின் வேர் வகைகளையும் ஆற்று நீரில் கழுவி எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.

கிழங்கு வகை சுத்தி:

சகல விதமான கிழங்கு வகைகளையும் நன்றாக கழுவி மேல் தோலையும், உள் நரம்பையும் நீக்கி துடைத்துக் கொள்ளவும்.

பட்டை வகை சுத்தி:

சுத்தமான துணியால் தூசி, மண் முதலியவற்றை துடைத்து சிறிய கத்தியால் மேல்தோலை மிருதுவாக சீவியெடுத்து நீக்கிவிட வேண்டும்.

இலை வகை சுத்தி:

இவற்றை தண்ணீரில் கழுவாமல் சுததமான துணியால் துடைத்து பழுப்பு, அழுகல். பூச்சிக்கடி போன்றவற்றை நீக்க வேண்டும்.

புட்ப வகை சுத்தி:

காம்பு, புல்லி இதழ். மகரந்தம் முதலியவற்றை நீக்கி இதழாக எடுத்துக் கொளளவும்.

சுத்தி முறைகள் (பால் மற்றும் நெய் வகைகள்)

பால் வகைகள்:

1) பசும்பால் - கன்றுக்கு ஊட்டியபின் அதன் வாய்பட்ட வேகம் தணியப் பசுவின் மடியை சுத்த நீரால் கழுவி கறந்து, நுரை அடங்கியபின் வடிகட்டுக.


2) வெள்ளாட்டு பால் - இதனை 7 முறை முரட்டு துணியால் வடிகட்டுக.


3) தயிர் - தோய்ந்த தயிரிலிருந்து வரும் நீரை பிரித்தெடுத்து பயன்படுத்தலாம்.


4) மோர் - சிறிது சோற்றுப்பு சேர்த்த பின்பு உபயோகிக்கவும்.


5) முலைப்பால் - இதில் சிறிது தும்பை பூவை போட்டு கால் நாழிகை சென்ற பின் வடிகட்டவும். அல்லது ஒரு வெள்ளி கிண்ணத்தை நெருப்பிலிட்டு சூடேற்றி அதில் பாலைவிட்டு உடனே வடிகட்டவும்.




நெய் வகைகள் சுத்தி:

1) வெண்ணெய் - சுத்தமான நீரில் புளிப்பற பிசைந்து கழுவி எடுக்கவும்.


2) நெய் - வெண்ணெயை பாத்திரத்திலிட்டு அடுப்பேற்றி அதிலுள்ள நீர் சுண்ட, நெய் காந்தாமல் காய்ச்சி வடிகட்டவும்.


3) வாதுமை நெய் - இதனை படிக பாத்திரத்தில் நிரைத்து. அரைபாகம் மறைய மணலிற் புதைத்து 2 சாமம் இரவியில் வைத்து அடிவண்டல் கலங்காமல் தெளிவை மாத்திரம் பஞ்சினால் தோய்த்து மறு குப்பியில் பிழிந்து வடிகட்டுக.


4) ஆமணக்கு நெய் - குப்பியில் வைத்து கால்குப்பி மறையும்படி மணலில் புதைத்து 2 நாள் ரவிபுடம் வைத்து தெளிவை வடிகட்டுக. இவ்வாறே மற்ற எண்ணெய்களையும் சுத்தி செய்யவும்.


5) புன்கின் நெய் - இந்த நெய்க்கு சமமாக இதன் பாலை விட்டுக் காய்ச்சி வடித்துக் கொள்க.


6) தெங்கின் நெய் - இந்த நெய்க்கு சமமாக இதன் பாலைவிட்டுக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.


7) இலுப்பை நெய் - எலுத்தாணிப்பூண்டு கஷாயத்தை இதற்கு சமமாக கூட்டி காய்ச்சி வடித்துக் கொள்ளவும்.



8) வேம்பு நெய் - வேம்பாடம்பட்டையை இடித்து கஷாயம் வைத்து இதற்கு சமமாக கூட்டி எரித்தெடுத்து கொள்ளவும்.

சுத்தி முறைகள் (நீர் வகை சுத்தி)

1) பனிநீர் - மெல்லிய சலவை செய்த பருத்தித் துணியை சுத்த நீரில் கசக்கி பிழிந்து தூசுபாடமல் உலர்த்தி, இதனை நெற்பயிரின் மீதோ அல்லது அரும்புல்லின் மீதோ இரவில் விரித்து வைத்து காலை சூரிய உதயத்திற்கு முன் எடுத்து பாத்திரத்தில் பிழிந்து வடிகட்டி எடுக்கவும்.

2) ஆலங்கட்டி - இதை மண்பாத்திரத்தில் விட்டு சிறிது கரிமஞ்சள் தூள் சேர்த்து 7 நாள் சூரிய புடமிட்டு சீலையில் வடிகட்டி எடுக்கவும்.

3) வெந்நீர் - கரி நெருப்பில் தக்கபடி காய்ந்த நீரை 3 முறை கரிய நிற சீலையால் வடிகட்டி எடுக்கவும்.

4) சுத்த நீர் - இதனே 7 மடிப்பாக மடித்த முரட்டு துணியால் 7 முறை வடிகட்டவும்.

5) கழுநீர் - அரிசியை 2வது முறை கழுவும் நீரை ஒரு சாமம் தெளிய வைத்து எடுக்கவும்.

6) காடிநீர் - காடியுள்ள மண்பாத்திரத்தை 3 நாள் கடும் வெய்யிலில் வைத்து 4வது நாள் வண்டலை நீக்கி வடிகட்டி கொள்ளவும்.

7) இளநீர் - இதனை கத்தியால் சீவி நீரை உடனே வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

8) கோ மூத்திரம் - இதனை மண்பாத்திரத்திலிட்டு மத்தினால் அரை நாழிகை கடைந்து உண்டாகும் நுரையை நீக்கி சீலையில் வடிகட்டவும். இதேபோல் ஏழுமுறை செய்யவும். (இம்முறையில் வெள்ளாடு, குதிரை, கழுதை, யானை, எருது போன்ற விலங்குகளின் மூத்திரத்தையும் சுத்தம் செய்யவும்.)

சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை


அறுவை சிகிச்சை இன்றைய நவீன கால மருத்துவத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகும். சாதாரண மருந்து, மாத்திரைக்குக் கட்டுப்படுத்த முடியாத பல்வேறு நோய்களுக்கும் இன்று அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வாறு இன்றைய நவீன மருத்துவத்தின் தவிர்க்க மிடியாத அங்கமாக உள்ள அறுவை மருத்துவமானது நமது தமிழ் சித்தர்கள் உலகிற்கு தந்த கொடை எனில் அது மிகையாகாது.

ஆம் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை இல்லை எனறு கூறுபவர்களுக்கு இந்தப் பதிவு போதுமான விளக்கம் தருவதாக இருக்கும். இக்கால நவீன மருத்துவம் எந்த அளவுக்கு முன்னேறி இருப்பினும் அது அத்தனைக்கும் நமது தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவமே அடிப்படையாகும். இன்று உள்ள கல்வித் திறனுக்கு அக்கால சித்த மருத்துவர்கள் சற்றும் சளைத்தவர் அல்லர். மாறாக அன்றைய சித்த மருத்துவர்களின் கல்வித் திறனும், வாதத் திறனும், நாடி சோதிக்கும் திறனும், அவர்கள் அறிந்து வைத்திருந்த கைபாகம், செய்பாகம், ரோக நிதானம், வர்ம அறிவு, மருந்து செய் திறன் எதுவும் அந்த அளவுக்கு இந்தக் கால நவீன மருத்துவரிடத்தே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நமது சித்தர்கள் மாத்திரைகள், குளிகைகள், லேகியம், கியாழம், சூரணம், சாறு, குடிநீர், களி, நெய், பாகு, குழம்பு, பதங்கம், கட்டு, பற்று, ஒற்றடம், பூச்சு, வேது, புகை, தொக்கணம், ஊதல், கலிக்கம், களிம்பு போன்ற சாதாரண மருந்துகள் முதல் களங்கு, செயநீர், சுண்ணம், பஸ்பம், குரு மருந்து, சத்து, பதங்கம், மெழுகு, தீநீர் போன்ற உயர்ரக மருந்துகளின் செய்முறைகள்வரை நமக்குத் தந்தருளியுள்ளனர்.

அவ்வாறே அவர்கள் கீறல், அட்டை விடல், சலாகை, அறுவை, பீச்சு, குருதி வாங்கல் போன்ற முறைகளையும் கொடுத்துச் சென்றுள்ளனர். இக்காலத்தில் அறுவை சிகிச்சையானது முழுவதுமாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் நடைபெறுகிறது. ஆனால் அக்காலத்தில் அறுவை சிகிச்சை அறைகள் வேப்பிலை, சாம்பிராணி, வெண்கடுகு ஆகிய இலைகளைப் போட்டு, புகைமூட்டம் உண்டாக்கிய பிறகு, அறுவை சிகிச்சையில் ஈடுபடுவார்கள்.

இந்தப் பதிவில் சித்தர்களின் நூல்கள், பக்தி இலக்கியங்கள், இதர நூல்களில் அறுவை மருத்துவம் பற்றி நமக்குத் தெறிந்தவரை உள்ள குறிப்புகளைப் பார்க்கலாம். மற்றவைகளைப் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

சித்தர்களின் நூல்களில் அகத்தியர் இரண வைத்தியம், இரண வைத்திய சிந்தாமணி, தேரையர் தரு, தேரையர் கரிசல், அகத்தியர் நயனவிதி, நாகமுனிவர் நயன விதி, சத்திராயுத விதி எனும் நூல்கள் தரும் குறிப்புகள்மூலம் நமது தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் அறுவை முறைகளும், அத்தகைய சிகிச்சைக்கான கருவிகளும் இருந்ததை அறியலாம்.

அதுமட்டுமின்றி உடலில் கற்களை அகற்றும் முறை, உடலில் அழுகிய பாகங்களை அறுத்து எடுத்து நீக்கும் முறை, கண் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளான கண்புரை சிகிச்சை, கண் படலங்களில் உண்டாகும் நோய், கருவிழியில் உண்டாகும் கருநாக படலத்திற்கான அறுவை முறைகள், பிரசவத்தின்போது செய்யப்படும் சிசேரியன், செயற்கை பாகங்கள் பொருத்தும் முறைகள், பிரேத பரிசோதனை முறைகள் போன்றவை பற்றிய குறிப்புகள் சில சங்க தமிழ் இலக்கியங்களிலும், ஆயுர்வேத மருததுவத்திலும் உள்ளது. இவைகளை பற்றிய குறிப்புகள் நமது சித்த மருத்துவத்திலும் இருந்திருக்கலாம். பிறகு கடல்கோள், அன்னிய படையெடுப்பு போன்ற காரணிகளாலும் அவை அழிந்து போயிருக்கலாம்.

இது போன்ற குறிப்புகள் நமது சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் நிரம்ப காணப்படுகின்றன. எவ்வாறெனில், நமது சித்த மருத்துவர்கள் அக, புற மருத்துவம் செய்வது மட்டுமின்றி அறுவை சிகிச்சையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தனர் என்பதை,


"உடலிடைத் தோன்றிற்று ஒன்றை அறுத்ததன் உதிரம்
ஊற்றிக் கடபெறச் சுட்டு வேறோர் மருந்தினாற் றுயரந்தீர்வர்"
(கம்ப இராமாயணம்)

கம்ப இராமாயண வரிகளால் அறியலாம். ஆழ்வார்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்,


"வாளாலறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயானன் போல்"
(திவ்ய பிரபந்தம் - 691)

என்று கூறுவதால் நம் முன்னோர் அறுவை மருத்துவத்திலும் தேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதை அறியலாம்.

அடிபட்ட அல்லது கூர்மையான வாள்பட்டு உடலில் குருதி வழிய இரணம் ஏற்பட்டால் குருதி வருவதை தடுத்து தூசு படாமல் புண்ணுக்கு மருந்திட்டு கட்டுவதை,


"கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணர் ..........."
(புறம் - 353)

என்ற புறநானூற்று அடியால் அறியலாம். அம்புகள் தைப்பதாலும், வெட்டு காயங்கள் முலம் அதிக இரத்தம் வெளியேறுவதால் அதிர்ச்சி, நா வறட்சி, உடல் வற்றி சுருங்குதல் போன்ற குறிகள் தோன்றும் என்பதை,


"உண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத்
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயர்"
(கலித்தொகை - 6)

எனும் அடியால் அறியலாம். மேலும் அக்காலத்தில் காயங்களைத் தைக்க பயன்பட்ட ஊசிக்கு "நெடு வெள்ளூசி" என்று பெயர். இது இக்காலத்து மருத்துவமனையில் பயன்படும் Stainless needles போன்று இருந்தது என்பதை அதன் பெயரிலிருந்து அறியலாம்.


"மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த ..........."
(பதிற்றுபத்து - 42)

எனும் அடியால் காயம்பட்ட இடத்தில் ஊசி கொண்டு தைப்பது என்பது, நீர் நிறைந்த தடாகத்தில் வாழும் மீனானது நீரிலிருந்து துள்ளி எழுந்து மீண்டும் நீருக்குள் செல்லும் நிகழ்வுக்கு ஒப்பாக உள்ளது எனப் புலவர் உவமைபட கூறுகிறார். இந்த ஊசியானது நெட்டை எனவும் பெயர்படும்.

போரில் காயம்பட்ட வீரர்களின் உடலில் பாய்ந்த ஆயுத துண்டுகளை வலிமையான காந்தங்களை கொண்டு அகற்றி செய்யும் சிகிச்சை முறையை,


"அயில்வேல் .......... நீங்கலது இப்பொழுதகன்றது
.......... காந்தமாம் மணியின்று வாங்க"

என்ற வரிகளால் அறியலாம்.

சித்த மருத்துவத்தில் மருத்துவர்களுக்குரிய இலக்கணம் பற்றியும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.


"காங்கு சிவப்பு பலபுள்ளி
கமழும் பட்டு மாவுரிகள்
நீங்க வேண்டும் துகிலுடுக்க
நேரே யாகா மருத்துவர்க்கே
ஓங்கும் வெள்ளைத் துகிலுடுத்தி
யுண்மை நினைத்து மருந்துசெயின்
பாங்கு பெறவே பிணிதீரும்
பாரிற் பாரும் பண்டிதரே"

மருத்துவர்கள் வெள்ளை நிற மேல் அங்கி (White coat) அணியும் வழக்கம் பன்னெடுங் காலந்தொட்டே இருந்து வருவதை இதன் மூலம் அறியலாம்.

கீழ்கண்ட பாடல்மூலம் காலையில் நரம்பு குத்தல் எனும் சிகிச்சையினையும், மத்தியான வேளையில் கொம்பு வைத்து உதிரம் வாங்கும் சிகிச்சையினையும், அட்டைவிடல் போன்ற சிறப்புச் சிகிச்சை முறைகளை மாலையிலும் மேற்கொண்டதை அறியலாம்.


"களவுறு நரம்பு குத்தல் கருவிக ளாடல் காலை
யளவுறு கொம்பு வைத்தங் குதிரம்வாங் குதல்மத் தியானம்
அளவுறு அட்டை விட்டு ஆற்றுவது அந்திக் காலம்
தளவுறு நகைப்பால் வெய்யோர் புரஞ்செற்றார் சாற்றினாரே"

சித்த மருத்துவத்தில் கட்டு போடுதல் என்ற முறையில் பதினான்கு வகைகளைச் சொல்லியுள்ளார்கள். அதாவது,
  1. உறையிடுதல்
  2. சுற்றுக் கட்டுதல்
  3. இரட்டை கட்டுதல்
  4. முறுக்கிக் கட்டுதல்
  5. மேற்கூரை கட்டுதல்
  6. சுருக்குமுடி கட்டுதல்
  7. கொம்புருவில் கட்டுதல்
  8. ஒளிக்கற்றைக் கட்டுதல்
  9. ஐந்து உறுப்புகள் கட்டுதல்
  10. படுக்க வைத்துக் கட்டுதல்
  11. வளையம்போலக் கட்டுதல்
  12. மெல்லிய கயிற்றினால் கட்டுதல்
  13. வெற்றிலை பெட்டிபோலக் கட்டுதல்
  14. குறுக்குக் கோடுகள் உருவில் கட்டுதல்
என்று பதினான்கு வகையாகப் பிரித்தார்கள்.

காசி பல்கலைக்கழகத்தில், எலும்பு முறிவுச் சிகிச்சைக்குப் போடப்பட்ட கட்டு முறைகளை, அப்படியே இன்றும் வைத்துப் பாதுகாக்கின்றனர். இக்காலத்து நவீன எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள், அதைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

இது போன்ற அறுவை கருவிகள்பற்றிய குறிப்புகள் ஆயுர்வேத நூலான சுஸ்ருத சம்ஹிதையிலும் உள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட அறுவை கருவிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதில் அறுவை சிகிச்சைகளை அவர்
  • சேத்யம்
  • பேத்யம்
  • லேக்யம்
  • ஈஷ்யம்
  • அஹர்யம்
  • விஸ்ரவ்யம்
  • லீவயம்
எனவும், அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் கருவிகள
  • ஸ்வஸ்திகா
  • நாடீ
  • சாலகம்
  • சஸ்த்ரம்
  • உபயந்த்ரம்
எனவும் பிரிக்கிறார். இவற்றைத் தவிர்த்து அறுவை சிகிச்சை முடிந்தபின் அந்த இடத்தில் தையல் போடக் குதிரை முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு, கட்டெறும்பு போன்றவற்றை பயன்படுத்தும் முறைகளையும் கூறியுள்ளார்.

மேலும் வேறுபல அறுவை சிகிச்சை கருவிகளும் நம் தமிழ் சித்த மருத்துவத்தில் இருந்திருக்கலாம். அவற்றைப் பற்றிய குறிப்புகள் யாரேனும் வைத்திருந்தால் அதனைப் பற்றிப் பகிரலாம்.

வியாழன், 25 அக்டோபர், 2018

சித்த மருத்துவச் செயல்முறை விதிகள்

நோயாளியைக் கண்டவுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவத்தின் செயல்முறை விதிகளில் காணப்படவில்லை. மாறாக நோயாளியைக் கண்ட மருத்துவன் நோய் உண்டாகக் காரணமான அகக் காரணிகள் மற்றும் புறக் காரணிகள் ஆகியவற்றை முதலில் கண்டறிய வேண்டும்.

அதன்பின் மருத்துவம் பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பிறகு, வேர்களைக் கொண்டு மருந்துகளைக் கொடுக்கவும், அதன் பின்னர் மூலிகைகளைக் கொண்டு மருந்து செய்து கொடுக்கவும். இவற்றினால் நோயின் குணம் தணியவில்லை என்றால், பற்பம், செந்தூரம் என்னும் மருந்து வகைகளைப் பயன்படுத்தவும் என்று செயல்முறை விதிகள் கூறப்பட்டுள்ளன.

நோயையும் நோயாளனையும் கணித்தறியாமல் செய்யும் மருத்துவம், முறைப் படுத்தப்பட்ட மருத்துவமாகக் கருதப்பட மாட்டாது.

  • நோயாளியின் உடல் பருமன்–மெலிவு இவற்றின் தன்மை
  • நோயின் தன்மை, நோயின் ஆற்றல்
  • நோய் குணமாகுமா? குணமாகாதா என்னும் கணிப்பு
  • நோயாளி தூங்கிய தூக்கத்தின் அளவு
  • நோயாளிக்கு உடல் உறவுக்காகப் பெண்ணிடம் உண்டாகும் மயக்கத்தின் அளவு
  • நான்கு வகையான உடலின் இலக்கணத்தில் நோயாளியின் வகை, ஆள், நாள், குணம், நோய், நாடு, பேதம், நிலை
  • கோள்களின் ஆட்சி–வீழ்ச்சி 
“ஆரப்பா நாலுலட் சணமும் பாரு
ஆள்பாரு நாள்பாரு குணமும் பாரு
நோய்பாரு தேசபேதங்கள் பாரு
நிலைபாரு கிரக வுச்சம் நீச்சம் பாரு
பேர்பாரு இவனை, நீ பிறகு பாரு
போதிலே கீர்த்திழின் றன்மன் பாரு
வேர்பாரு தழைபாரு மிஞ்சி னாக்கால்
மெல்ல மெல்ல பற்பஞ் செந்தூரம் பாரே.’’

நோயின் வன்மை–மென்மைகளையும், நோயாளியின் உடல் மன உறுதிகளையும் ஆராய்ந்தே மருத்துவ முயற்சிக்கு மருத்துவன் முயல வேண்டும்.அதுவும் ஆரம்ப நிலையிலேயே கடுமையான மருந்துகளைத் தந்துவிடாமல், மெள்ள மெள்ளக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று செயல்முறை விதிகளில் அடுக்கு முறை கையாளப்படுகிறது. இதனால் மருத்துவத்தின் பக்குவமும் முதிர்ச்சியும் அறியப்படுகிறது.


“உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்''

என்று குறள் கூறும் மருத்துவச் செயல் விதி இதனைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் உரைக்கிறது.

சித்த மருத்துவ உறுப்புகள்

சித்த மருத்துவத்தின் உறுப்புகள் என்பது, உடல் உறுப்புகளைப் போல இயற்கையாக அமைய வேண்டியவை எனலாம். உடல் உறுப்பில் ஏதேனும் ஒன்று குறைந்தாலே ஊனம் என்றாகும். அதிலும் சில உறுப்புகள் குறைந்தால் உடல்தான் இருக்கும்; உயிர் இருக்காது.

அதுபோல மருத்துவ உறுப்புகள் என்பதில் ஒன்று குறைந்தாலும் மருத்துவம் ஊனம் ஆகிவிடும். ஒரு சில உறுப்புகள் குறைந்தால் மருத்துவமே உயிரற்றுப் போகக்கூடும் என்பது உணர்ந்து, மருத்துவம் பார்க்க வேண்டும் எனக் கருதி உறுப்புகள் கூறப்பட்டது.

அப்படி சித்த மருத்துவம் 36 உறுப்புகளைக் கூறுகிறது. அவை மூன்று கண்கள், நான்கு தலைகள், ஐந்து முகங்கள், ஆறு கைகள், எட்டு உடல்கள், பத்துக் கால்கள் ஆகும். இவை 36-ம் மருத்துவர்க்குரிய செயல்களாகவும், மருத்துவத்துக்கு மிகவும் தேவையான கருவிகளாகவும் உள்ளது. இவற்றில் எவையேனும் குறைந்தால் மருத்துவம் குற்றமுடையதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அவை,

  • கண்கள் - 3 : மருந்து, மருந்தின் சுத்தி, மருந்தின் குணம்
  • தலைகள் - 4 : வாதம், பித்தம், ஐயம், தொந்தம்
  • முகங்கள் - 5 : வாந்தி, பேதி, குடல் சுத்தி, நசியம், இரத்தத்தை வெளியாக்கல்
  • கைகள் - 6 : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு
  • உடல்கள் - 8 : எண்வகைத் தேர்வு முறைகள்.
  • கால்கள் - 10 : நாடிகள் பத்து அல்லது வாயுக்கள் பத்து.



அகத்தியர் சூடாமணி கயிறு சூத்திரம்: மின்னூல்



அகத்தியர் இயற்றிய பற்பல நூல்களின் வரிசையில் "சூடாமணி கயிறு சூத்திரம்" எனும் இந்நூல் சற்றே வித்தியாசமானதும், ஆச்சரியமான தகவல்களைக் கொண்டதுமாகும்.

அதாவது பெதுவாகச் சித்தர் நூல்களில் நோய்களை அறிய நாடி பார்த்தும், எட்டுவித பரிசோதனைகளைச் செய்தும் ஒருவருக்கு வந்துள்ள நோய்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்நூலில் சற்றே வித்தியாசமாகச் சாதாரண சிறிய கயிறினை கொண்டு ஒருவருக்கு வந்துள்ள நோய்களையும், இனி வரப்போகும் நோய்களையும் அறியலாம்.

அது எவ்வாறென்றால் ஒருவரின் கை மணிக்கட்டு பகுதியிலிருந்து நான்கு விரற்கடை தள்ளிக் கயிறு கொண்டு அளந்து பார்த்துக் கிடைக்கும் நீளத்தை அவரவர் விரற்கடை அளவாக அளக்க கயிற்றின் நீளம் முறையே நான்கு முதல் பதினொன்று விரற்கடை அளவு வரையிலும் இருக்கும். அந்த அளவுகளைக் கொண்டு ஒருவருக்கு உள்ள நோயைக் கண்டறியலாம்.

இந்த மணிக்கடை நூலை மின்னூலாகப் பெறுவதற்க்கு கீழே சொடுக்கி எனது தனிப்பட்ட புலனத்தில் நூலை பெற்றுக் கொள்ளலாம். (Google Drive மூலம் நூலை பெறுவதில் சில சிக்கல்கள் தொடர்ந்து இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நூல் கேட்டு கிடைக்காதவர்கள் எமது புலனத்தை தொடர்பு கொண்டு நூலை பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.) இந்த நூலில் உள்ள பாடல்கள் அனைவருக்கும் எளிதில் புரியும்வண்ணம் இருப்பதால் அந்தப் பாடல்களுக்கு விளக்கம் அளிக்கவில்லை. 




நாடி சாஸ்திரம் - தொடர்ச்சி..

நாடிகளின் குணம் :

வாத குணம்:



காணப்பா வாதமீறில் கால்கைகள்பொருந்தி நோகும்
பூணப்பா குடல்புரட்டும் மலஞ்சலம் பொருமிக்கட்டும்
ஊணப்பா குளிருங்காய்ச்ச லுடம்பெல்லாம் குத்துவாய்வு
வீணப்பா குதமிறுகும் வேர்வையும் வேர்க்குந்தானே.

பித்த குணம்:


தானென்ற பித்தமீறில் சடலமெல்லாங் காந்தல்காணு
மூனென்ற வாந்திவாய்நீ ரூரியேவொழுகுங்சாவான்
வானென்ற மட்டில்வேகும் மண்டையில் குத்துண்டாகும்
தேனென்ற விக்கல்மூர்ச்சை செவியடைப்புண்டாகும்பாரே.

சிலேத்தும குணம்:


பாரப்பா அய்யமீறில் பாசத்தினனல்தான்மீறும்
நேரப்பாயிளைக்குந்தேகம் நெஞ்சுடன்விலாவுநோவாந்
தாரப்பாசுரமுங்காயும் சாதமுமொருக்குநாளில்
ஓரப்பாரெத்தங்கக்கு முடல்வற்றுஞ்சுரம்பேறாமே.



நாடிகள்
நாடி நடை 
உண்டாகும் நோய்கள்
வாதத்தில் வாதம் 
வாத நாடி அதிகமாக நடக்கும்
உடல் நொந்து வலியோடு நடுங்கும் 
வாதத்தில் பித்தம்
பாரஞ்சுமப்பது போல்நடக்கும்
வாய் குளறும், பேச்சு தடுமாறும், நடைதளரும், கால்கள் நடுங்கும் 
வாதத்தில் சிலேத்துமம்
முறிந்த அரணை வால் துடிப்பது போல் நடக்கும் 
உடல் வீங்கி வலிக்கும், தலைவலி ஏற்படும், மனம் தடுமாறும், உணவைத் தள்ளும் 
பித்தத்தில் வாதம்

வீணை அடிப்பது போல் நடக்கும்
கழுத்து, பிடரி, கை, கால்களில் குத்தல், வலி ஏற்படும். 
பித்தத்தில் பித்தம் 
பித்த நாடி அதிகமாக நடக்கும் 
தலை சுற்றல், இளைப்பு, களைப்புடன் உடல் வெளுத்து வீங்கும் 
பித்தத்தில் சிலேத்துமம்
பிள்ளை தொட்டிலில் ஆடுவது போல் நடக்கும் 
வாய் பேச முடியாமல் குளறும், தலை சுற்றல், வயிறு வலி, பிதற்றல், வாயில் நீர் ஒழுகும்
சிலேத்துமத்தில் வாதம்
புணர்ச்சி போல நடக்கும்
நரம்புகள் வலித்து இழுக்கும், பிடரியில் வலிக்கும், கண்கள் மேலே ஏறும், பேச்சு தடுமாறும் 
சிலேத்துமத்தில் பித்தம்
வண்டி சக்கரம்போல் நடக்கும் 
உணவு கசக்கும், நாவில் கசப்பு மிகும், பேச்சு தடுமாறும் 
சிலேத்துமத்தில் சிலேத்துமம்
சிலேத்தும நாடி அதிகமாக நடக்கும்
கண்களைச் சுற்றி வட்டமேற்படும், கால் வழியே குளிர் ஏறி விரைவில் உடல் குளிரும். பின் சில்லிட்டு நடுங்கச் செய்து உயிர் பிரியும்.


நாடி சாஸ்திரம்



இருதயம் சுருங்கி விருயும்போது நாடி நரம்புகளும் விரிந்து சுருங்கும். இருதயத்தின் துடிப்பும் நாடிகளின் நடையும் ஒன்றுபோல் இருப்பதால் நமது தேகத்தில் உண்டாகும் நோய்களை இருதயமானது நாட்களின் வழியாகத் தெரிவிக்கிறது. பொதுவாக நாடியானது வாதம், பித்தம், சிலேத்துமம் அல்லது கபம் என்று மூன்று வகைப்படும்.

நாடி பார்க்கும் விதம்:

"கரிமுகனடியை வாழ்த்திக் கைதனினா டிபார்க்கில்
பெருவிரலங்குலத்திற் பிடித்தடி நடுவே தொட்டால்
ஒருவிரலோடில் வாதம் உயர்நடு விரலிற்பித்தந்
திருவிரல் மூன்றிலோடிற் சேத்தும நாடியாகும்"

பொருள்:

கையின் பெருவிரல் பக்கமாய் ஓடும் நாடியை, மணிக்கட்டுக்கு ஒரு அங்குலம் மேலாக   மூன்று விரல்களால் அழுத்தியும், தளர்த்தியும், சமமாகவும் மாறி மாறிப் பரிசோதித்து நாடி நடையை அறியலாம். அவ்வாறு பரிசோதிக்கும்போது சுட்டு விரலால் (ஆள்காட்டி விரல்) வாதத்தையும், நடுவிரலால் பித்தத்தையும், மோதிர விரலால் சிலேத்துமத்தையும் அறியலாம். மேலும் நாடி பார்க்குங் காலத்தில் ஆண்களுக்கு வலது கையும், பெண்களுக்கு இடது கையும், மூன்றாம் பாலினத்தவர்க்கு அவர்களின் இனக்குறியை பொருத்தும் நாடி பார்க்க வேண்டும். எனினும் இரண்டு கையிலும் நாடி பார்த்தலே உத்தமம்.

நாடி பார்க்கும் இடங்கள்:
  1. கைகள்
  2. குதிகால்
  3. உந்தி
  4. மார்பு
  5. மணிக்கட்டு
  6. கைகளின் சந்து
  7. கால்களின் சந்து
  8. கண்டம்
  9. காதடிகள்
  10. லிங்கம்
  11. யோனி
  12. ஆசனவாய்
இந்தப் பன்னிரு இடங்களும் நாடி பார்க்க உகந்தவை. எனினும் மணிக்கட்டில் பார்ப்பது உத்தமம்.

நாடிகளின் நடை :

 "காணவே புருடருக்கு வாத நாடி
கானகத்து மயில்போலும் அன்னம் போலும்
தோணவே கோழிநடை நடக்குஞ் சொன்னேன்
துரியமென்ற பித்தத்தின் நாடி கேளு
ஏணவே யாமை யுடனடை யப்போலும்
என்மகனே அட்டையைப் போலநடக்கும் பாரு
வேணவே சேத்துமந்தான் பாம்புபோலும்
வேணபடி தவளைகுதி போலாம் பாரே"

ஆண்களுக்கு,
          வாத நாடி - மயில், அன்னம், கோழி போலவும்,
          பித்த நாடி - ஆமை, அட்டை போலவும்,
          சிலேத்தும நாடி - பாம்பு, தவளை போலவும் நடக்கும்.


"பார்க்கவே பெண்களுக் கிடதுபக்கம்
பதிவாகப்பார்த்திடவே பகரக்கேளும்
காக்கவே வாதமது சர்ப்பம் போலாஞ்
சேர்க்கவே யையமென்ற நாடிதானுஞ்
சிறுநடையன்னம்போற் செழிப்பாய்க்கானும்
ஆர்க்குமேதோன்றுமிந்த நாடிமூன்றும்
அனுதினமுநல்லறிவா லறிந்துதேறே"

பெண்களுக்கு,

           வாத நாடி - சர்ப்பம் போலவும்,
           பித்த நாடி - தவளை போலவும்,
           சிலேத்தும நாடி - அன்னம் போலவும் நடக்கும்.


பொதுவாக,
  • வாதம் அதிகரித்தால் - அட்டையை அல்லது சர்ப்பத்தை போலவும்,
  • பித்தம் அதிகரித்தால் - காகம் அல்லது தவளை போலவும்,
  • கபம் அதுகரித்தால் - அன்னம் அல்லது புறாவைப் போலவும்,
  • முத்தோஷமும் அதிகரித்தால் - கௌதாரி போலவும் இருக்கும்.
  • வாதபித்தம் அதிகரித்தால் - சர்ப்பம் மற்றும் காகத்தின் நடை போலவும்,
  • வாதகபம் அதுகரித்தால் - சர்ப்பம் மற்றும் அன்னத்தின் நடை போலவும்,
  • பித்தகபம் அதிகரித்தால் - காகம் மற்றும் அன்னத்தின் நடை போலவும் இருக்கும்.

குணபாடம் (மருந்துகளின் தொகை-4)

கடை சரக்கு வகைகள்:

கடைச் சரக்குகள் என்பவை நாம் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தும் பொருட்களெயாகும். இவைகளில் பெரும்பாலும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் தான். ஆனாலும் இவற்றின் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம். பொதுவாகக் கடைச் சரக்குகள் 64 என்று கூறினாலும், உண்மையில் 70க்கும் மேற்பட்ட கடைச் சரக்குகள் உள்ளன. அவை,
  1. சுக்கு
  2. மிளகு
  3. திப்பிலி
  4. ஓமம்
  5. சீரகம்
  6. கடுகு
  7. வெந்தயம்
  8. கருஞ்சீரகம்
  9. சதகுப்பை
  10. வசம்பு
  11. கடுக்காய்
  12. நெல்லிக்காய்
  13. தான்றிக்காய்
  14. மஞ்சள்
  15. அதிவிடயம்
  16. சிறுதேக்கு
  17. அரத்தை
  18. அதிமதுரம்
  19. கடுகுரோகிணி
  20. புளி
  21. வாய்விளங்கம்
  22. கீச்சிலி கிழங்கு
  23. கர்கடகசிங்கி
  24. காற்போக அரிசி
  25. வாலுழுவை அரிசி
  26. பெருங்காயம்
  27. அரக்கு
  28. சேங்கொட்டை
  29. தாளிசபத்திரி
  30. கிராம்பு
  31. சிறுநாகப்பூ
  32. சடாமாஞ்சில்
  33. கோஷ்டம்
  34. மெழுகு
  35. குங்கிலியம்
  36. குந்திரிக்கம்
  37. கூகைநீறு
  38. கஸ்தூரி
  39. கோரோசனை
  40. குங்குமப்பூ
  41. சந்தனக் கட்டை
  42. சாதிபத்திரி
  43. பாக்கு
  44. சித்திரமூலம்
  45. திப்பிலி மூலம்
  46. சாதிக்காய்
  47. யானை திப்பிலி
  48. கொடுக்கை புளி
  49. கருங்கொடிவேலி
  50. வெண் கடுகு
  51. செவ்வியம்
  52. காட்டு சதகுப்பை
  53. மரமஞ்சள்
  54. கடுக்காய் பூ
  55. மஞ்சிட்டி
  56. சிறுவாலுழுவை
  57. ஏலக்காய்
  58. நிலாவிரை
  59. பேரீச்சங்காய்
  60. இலவங்கப்பட்டை
  61. இலவங்கப் பூ
  62. இலவங்கப்பத்திரி
  63. மாசிக்காய்
  64. கசகசா
  65. வலம்புரிக்காய்
  66. தக்கோலம்
  67. அரிசிவிதை
  68. கொத்தமல்லி
  69. வெள்ளைப்பூண்டு
  70. போளம் (போளம் - கற்றாழையின் பால்)
  71. சிவதை வேர்
  72. நேர்வாளம்
  73. சாம்பிராணி
  74. கர்ப்பூரம்
  75. புழுக்குச்சட்டம்
  76. சவ்வாது
  77. குக்கில்
  78. அக்கரகாரம்
  79. ஐவித நெய்
  80. தாமலபத்திரி
  81. பிசின்


செவ்வாய், 23 அக்டோபர், 2018

குணபாடம் (மருந்துகளின் தொகை-3)

உபரசச் சரக்குகள்:
  1. அஸ்திபேதி
  2. அஞ்சனம்
  3. அப்பிரகம்
  4. அயமலை
  5. அன்னபேதி
  6. ஆட்டுக்கொம்பு
  7. ஆமையோடு
  8. இந்திரகோபம்
  9. இரசிதச்சிலை
  10. இரசிதநிமிளை
  11. இரசிதமணல்
  12. இராசவர்த்தனக்கல்
  13. ஈரக்கல்
  14. உலோகநிமிளை
  15. உலோகம்
  16. உவர்மண்
  17. ஊசிக்காந்தம்
  18. எலிமுள்
  19. எலும்பு
  20. ஏமமலை
  21. ஏமம்
  22. ஓட்டுக்கல்
  23. ஓட்டுக்காந்தம்
  24. கஞ்சநிமிளை
  25. கடல்நுரை
  26. கடற்பாசி
  27. கண்டகச்சிலை
  28. கதண்டு
  29. கஸ்தூரியெலும்பு
  30. கருங்கல்
  31. கருஞ்சுக்கான்
  32. கருடப்பட்சிக்கல்
  33. கருமணல்
  34. கருவண்டு
  35. கலைக்கொம்பு
  36. கல்நார்
  37. கற்காந்தம்
  38. கண்மதம்
  39. காஸ்மீரப்படிக்கல்
  40. காகச்சிலை
  41. காகநிமிளை
  42. கரடி
  43. காண்டாமிருகம்
  44. காந்தம்
  45. காரியமணல்
  46. காரூரச்சிலை
  47. காவிக்கல்
  48. கானற்கல்
  49. கிருஷ்ணாப்பிரகம்
  50. குருந்தக்கல்
  51. கோமேதகம்
  52. கோரோசனை
  53. கோழி
  54. சங்கு
  55. சாத்திரபேதி
  56. சாலக்கிராமம்
  57. சிப்பி
  58. சிலாநாகம்
  59. சிலாவங்கம்
  60. சிவப்பு
  61. சுக்கான்கல்
  62. சுத்தக்கருப்புமண்
  63. சுவேதஅப்ரேகம்
  64. சூடாலைக்கல்
  65. செங்கல்
  66. செம்புமணல்
  67. செம்புமலை
  68. செம்மண்
  69. செவ்வட்டை
  70. செவ்வப்பிரகம்
  71. சொர்ணபேதி
  72. தங்கம்
  73. தந்தம்
  74. தவளைக்கள்
  75. திராமலை
  76. துருசு
  77. தேகக்கல்
  78. நண்டு
  79. நத்தை
  80. நவரத்தினம்
  81. நாகப்பச்சை
  82. நாகமலை
  83. நரகம்
  84. நாகரவண்டு
  85. நீலம்
  86. பச்சை
  87. பவளம்
  88. பன்றிமுள்
  89. பித்தளைமலை
  90. புட்பராகம்
  91. புற்றான்பழம்
  92. பூநாகம்
  93. பொன்னப்பிரகம்
  94. பொன்னிமிளை
  95. மஞ்சட்கல்
  96. மண்டூகம்
  97. மந்தாரச்சிலை
  98. மயிர்
  99. மயிலிறகு
  100. மரகதப்பச்சை
  101. மல்லி
  102. மனோசிலை
  103. மாக்கல்
  104. மாங்கீசச்சிலை
  105. மாட்டுக்கொம்பு
  106. மாந்துளிற்கல்
  107. மீனெலும்பு
  108. முடவாட்டுக்கால்
  109. முட்சங்கு
  110. முட்டை
  111. முத்து
  112. முத்துச்சிப்பி
  113. வயிரம்
  114. வராகக்கொம்பு
  115. வெண்கலமலை
  116. வெண்சுக்கான்
  117. வெள்ளி
  118. வெள்ளீயமணல்
  119. வெள்ளீயமலை
  120. வைடூரியம்
ஆக மொத்தம் 120 சரக்குகள். இருப்பினும் உபரசங்களின் எண்ணிக்கை 120க்கும் அதிகமாகவும் இருப்பதாக மகா சித்தர் போகர் கூறுகிறார். இவை மருந்து தயாரித்தல், இரசவாதம் போன்றவற்றில் உபச் சரக்குகளாக பயன்படுகின்றன.

குணபாடம் (மருந்துகளின் தொகை-2)

பாடாணங்கள்:

பாடாணம் அல்லது பாஷாணம் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படும் அடிப்படை மூலகங்களில் ஒன்று. இது விஷத்தன்மை கொண்டது நேரடியாக உண்டால் உயிரை மாய்க்கும். ஆனால் பக்குவம் அறிந்து சுத்தி செய்து பயன்படுத்தும்போது நோய்களை நீக்கி உயிர் வளர்க்கும். மொத்தம் 64 பாடாணங்கள் உள்ளன. அவற்றில் 32 பிறவி பாடாணங்களும், 32 வைப்பு பாடாணங்களும் ஆகும்.

பிறவிப் பாடாணங்கள் - 32:
  1. அஞ்சனப் பாடாணம்
  2. அப்பிரக பாடாணம்
  3. ஔபலம் (ஆவுபல்) பாடாணம்
  4. கந்தக பாடாணம்
  5. தாளக பாடாணம்
  6. கற்கடகசிங்கி பாடாணம்
  7. காய்ச்சற் பாடாணம்
  8. கற்பாடாணம்
  9. கற்பரி பாடாணம்
  10. காந்த பாடாணம்
  11. கார்முகில் பாடாணம்
  12. குதிரைப்பல் பாடாணம்
  13. கௌரி பாடாணம்
  14. வீர பாடாணம்
  15. கோளகம் பாடாணம்
  16. சங்கு பாடாணம்
  17. சரகண்ட பாடாணம்
  18. சாலாங்க பாடாணம்
  19. சிலாமத பாடாணம்
  20. சீதாங்க பாடாணம்
  21. சிரபந்த பாடாணம்
  22. அரிதார பாடாணம்
  23. சூத பாடாணம்
  24. தாலம்ப பாடாணம்
  25. துத்த பாடாணம்
  26. தொட்டிப் பாடாணம்
  27. பலண்டுறக பாடாணம்
  28. மனோசிலை
  29. இலிங்க பாடாணம்
  30. மிருதார பாடாணம் (மிருதார சிங்கி)
  31. அமிர்த பாடாணம்
  32. வெள்ளை பாடாணம்
வைப்பு பாடாணங்கள் - 32:
  1. பொற்றொட்டி வைப்பு பாடாணம்
  2. செப்புத்தொட்டி வைப்பு பாடாணம்
  3. அயத்தொட்டி வைப்பு பாடாணம்
  4. புத்தொட்டி வைப்பு பாடாணம்
  5. தொட்டி வைப்பு பாடாணம்
  6. இரத்தசிங்கி வைப்பு பாடாணம்
  7. இரசிதசிங்கி வைப்பு பாடாணம்
  8. ஏமசிங்கி வைப்பு பாடாணம்
  9. தீமுறுகல் வைப்பு பாடாணம்
  10. சாதிலிங்க வைப்பு பாடாணம்
  11. வெள்ளை வைப்பு பாடாணம்
  12. கௌரி வைப்பு பாடாணம்
  13. சவ்வீர வைப்பு பாடாணம்
  14. கோழித்தலை வைப்பு பாடாணம்
  15. பவளப்புற்று வைப்பு பாடாணம்
  16. கோடாசூரி வைப்பு பாடாணம்
  17. கெந்தி வைப்பு பாடாணம்
  18. அரிதார வைப்பு பாடாணம்
  19. சொர்ண வைப்பு பாடாணம்
  20. பஞ்சபட்சி வைப்பு பாடாணம்
  21. கோமுக வைப்பு பாடாணம்
  22. துருசு வைப்பு பாடாணம்
  23. குங்கும வைப்பு பாடாணம்
  24. இரத்தவர்ண வைப்பு பாடாணம்
  25. சூத வைப்பு பாடாணம்
  26. நீலவர்ண (நீலி) வைப்பு பாடாணம்
  27. துத்த வைப்பு பாடாணம்
  28. சோர வைப்பு பாடாணம்
  29. சொர்ண வைப்பு பாடாணம்
  30. இந்திர வைப்பு பாடாணம்
  31. இலவண வைப்பு பாடாணம்
  32. நாக வைப்பு பாடாணம்
இவை தவிர வேறுசில வைப்பு பாடாணங்களின் பெயரும், தயாரிக்கும் முறைகளும் சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவை,
  1. பூர வைப்பு பாடாணம்
  2. சீன வைப்பு பாடாணம்
  3. காக வைப்பு பாடாணம்
  4. காசு வைப்பு பாடாணம்
  5. தைல வைப்பு பாடாணம்
  6. இரத்த வைப்பு பாடாணம்
  7. இரசசிங்கி வைப்பு பாடாணம்
  8. கார்முகில் வைப்பு பாடாணம்
  9. சுரைக்கெந்தி வைப்பு பாடாணம்
  10. வாரண கெந்தி வைப்பு பாடாணம்
  11. எருமை நாக்கு தொட்டி பாடாணம்
  12. வெள்ளி இரசித வைப்பு பாடாணம்
  13. கார்வங்க இரசித வைப்பு பாடாணம்
  14. சொர்ண கருணை வைப்பு பாடாணம்
  15. வங்கப்பச்சை (பச்சை துருசு) வைப்பு பாடாணம்
இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட வைப்பு பாடாணங்கள் நமது சித்த வைத்தியத்தில் பயன்பட்டு வந்ததை நாம் அறியலாம்.

குணபாடம் (மருந்துகளின் தொகை-1)

முந்தைய பதிவுகளில் கூறியது போலச் சித்த மருத்துவத்தில் உலோகங்கள், பாடாணங்கள், உபரசங்கள், இலவண உப்புகள், கடைச் சரக்குகள், மூலிகைகள் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. இவ்வாறு பயன்படும் ஒவ்வொரு பொருளிலும் குற்றங்களும் (தோஷங்கள்), மருத்துவத்திற்கு உதவாத மற்றும் நோயாளிக்கு ஊறு செய்யும் நஞ்சு பாகங்களும் உள்ளது. அதுபோல ஒவ்வொரு மருந்து சரக்கிற்கும் அதன் மருத்துவ குணத்தை கெடுக்கும் சத்ரு சரக்குகளும், அதனதன் குணத்தை அதிகப்படுத்தும் மித்ரு சரக்குகளும் உள்ளன.

மருந்துப் பொருட்களின் விபரம்:
  1. உலோகங்கள்             -  11
  2. லவண உப்புகள்         -  25
  3. பாஷாணங்கள்           -  64
  4. கடைச் சரக்குகள்       -  64
  5. உபரசங்கள்                 -  120
  6. மூலிகைகள்               -  1008
உலோகங்கள்:
  1. தங்கம்
  2. வெள்ளி
  3. செம்பு
  4. நாகம் (துத்தநாகம்)
  5. எஃகு
  6. வெண்கலம்
  7. தரா
  8. பித்தளை
  9. இரும்பு
  10. வெள்வங்கம்
  11. கருவங்கம்
இவற்றில் வெண்கலம், பித்தளை, தரா எனும் மூன்றும் கலப்பு உலோகம், அதாவது இரண்டுக்கு மேற்பட்ட உலோகக் கலவை. மற்றவை தனித்த உலோகங்கள்.

காரசாரம் (உப்புகள்):

நமது சித்த மருத்துவத்தில் 25 வகையான உப்புகள் மருந்தாகப் பயன்படுகிறது. இதில் 10 வகை இயற்கை இலவணம் (உப்புகள்), மீதமுள்ள 15 வகையானவை செயற்கை இலவணங்கள் (உப்புகள்).
  1. வழலை
  2. பூநீறு
  3. நவசாரம்
  4. எவச்சாரம்
  5. கெந்தியுப்பு
  6. வளையலுப்பு
  7. வெங்காரம்
  8. ஏகம்பச்சாரம்
  9. அமுரியுப்பு
  10. பச்சை கற்பூரம்
  11. கற்பூரம்
  12. சத்திசாரம்
  13. வெடியுப்பு
  14. மீனம்பர்
  15. பொன்னம்பர்
  16. சவுட்டுப்பு
  17. திலாலவணம்
  18. பிடாலவணம்
  19. இந்துப்பு
  20. சிந்துப்பு
  21. கல்லுப்பு
  22. காசிச்சாரம்
  23. அட்டுப்பு
  24. சீனம்
  25. கடல்நுரை

மருந்துகளின் செய்முறைகள்

மேற்கண்ட அறுபத்தி நான்கு வகையான அக மருந்துகளும் மற்றும் புற  மருந்துகளும் செய்யப்படும்போது இருபத்தி நான்கு வகையான வினைகளால் செய்யப்படுகிறது.
  1. கருக்குதல்
  2. அரைத்தல்
  3. கசக்கல்
  4. கலக்கல்
  5. வறுத்தல்
  6. சுழற்றுதல்
  7. உருக்குதல்
  8. இறுக்குதல்
  9. உலர்த்தல்
  10. உறைதல்
  11. குழைதல்
  12. உடைதல்
  13. நறுக்குதல்
  14. உருட்டுதல்
  15. நகத்துதல்
  16. நசுக்குதல்
  17. பொசுக்குதல்
  18. நனைதல்
  19. எரித்தல்
  20. வழித்தல்
  21. இறுக்குதல்
  22. இழைத்தல்
  23. குழைத்தல்
  24. எடுக்குதல்