புதன், 21 அக்டோபர், 2020

ரோக நிதானம் - குஷ்ட ரோகம்

            இந்நோயில் உடல் பளபளப்பு, நிறமாற்றம், தோல் தடித்து கடினமடைதல் , தோலில் தினவு வியர்வை, எரிச்சல், மயிர்க்கூச்சம், கொஞ்சம் காயம் பட்டாலும் அது உலராமல் பெரிதாதல், அதில் கறுத்த உதிரம் வடிதல், அதிக ரணம், குழி ரணம் முதலிய குணங்களைப் பெற்றிருக்கும். இதற்குக் குறைநோய், தொழுநோய், பெரும்வியாதி என வேறு பெயர்களுமுண்டு. இது 18 வகைப்படும்.


பெருநோய் உண்டாகக் காரணங்கள் :
            இந்நோய் அழுகிய மீன், நண்டு, நத்தை, சிப்பி இவற்றை தொடர்ந்து அதிகமாக உண்ணுதல், சரியாக வேகாத பொருட்களை உண்ணுதல், மந்தமான பொருட்களை உண்ணுதல், வயிறு நிறைய உண்டவுடன் யோக நிலைகளில் இருத்தல், இந்நோய் கொண்டவர்களுடன் நெருங்கி இருத்தல், அவர்கள் படுக்கையில் படுத்தல், அதிக உஷ்ணம், அதிக குளிர்,அழற்சி, வாந்தி, தகாத பெண்களுடன் உறவு கொள்ளுதல், தாய் தந்தையர் வழியில் வருதல் எனும் காரணங்களால் உண்டாகிறது.

பெருநோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் முகம், கை, கால்கள், மார்பு, தொடை, காது, மூக்கு பகுதிகள் மினுமினுத்துக் காணும். நாட்கள் செல்லச் செல்ல தோல் கடினப்பட்டு, தோலின் நிறம் மாறுபாடு அடைந்து, மயிர்க்கால்களின் இடைவெளி அகன்று அதிக வியர்வை காணும். பின் தோல் உருண்டு திரண்டு கறுத்து அல்லது சிவந்து காணும். அந்த இடங்களின் தினவு காணும். மேலும் தோலில் திமிருடன் அல்லது உணர்ச்சியற்று காணும். கைகால்களில் அடிபட்ட புண்கள் உலராது பெரிதாகிக்கொண்டே வரும்.

பெருநோயின் வகைகள் :
1. கபால (மண்டை) குஷ்டம் :
கபாலத்தைப்போல் வெளுத்த கொப்புளங்களும் இரணங்களும் உண்டாகி பின்னர் குழிவிழுந்து சினைத்தண்ணீர் ஒழுகுதல் காணும்.

2. அத்திக்காய் குஷ்டம் :
அத்திப்பழம் போன்ற கொப்புளங்களும் இரணங்களையும் உடையது. இரணத்தில் இரத்தம் வடிதலும், புழு ஊருவதும், தினவும், உடல் உளைச்சல், மயக்கம் காணும்.

3. மண்டல (வளைய) குஷ்டம் :
இதில் கொப்புளங்கள் பலவித நிறம் கொண்டு மினுமினுத்து பின் உடைந்து ஒன்றாகச் சேர்ந்து வளைவான இரணத்தை உண்டாகும். அதில் புழுக்களும் சீழும் ஒழுகும். இரணத்தை சுற்றி மஞ்சள் நிறமான தோல் உண்டாகும். தலையிலும், உடலிலும் இரணங்கள் தடித்து கறுத்து இரத்தம் வடிதல் எனும் குணங்கள் காணும்.

4. சொறி குஷ்டம் :
இதில் கொப்புளங்கள் கறுப்பு நிறமாயும் பின்பு உடைந்து விரணமாகி அவைகளில் சினைநீர் ஒழுகுதல், அதிக ஊரல், எண்ணைய் தடவியது போல இருத்தல், வெளிறல், எரிச்சல், வேதனை, சிவந்த தடிப்பு காணும்.

5. முள் குஷ்டம் :
கொப்புளங்கள் முள்ளைப்போல் மெல்லியதாய் நீண்டும் பிசுபிசுத்தும் சுறசுறத்தும் உள்ளில் கறுத்தும் முனையில் சிவந்தும் நெருக்கமாக எழும்பி விரணங்களாகி அவைகளில் புழுக்களும் எரிச்சலும் உண்டாகும்.

6. தோல் குஷ்டம் :
தோலானது மஞ்சள் நிறமாயும் சிவந்த நிறமாயும் மீன்களின் செதிலைப் போல சுறசுறத்து தடித்து கிள்ளினாலும் காயம்பட்டாலும் உணர்ச்சியற்று இருக்கும். தோல் தடித்தல், சீழ்வடிதல், சொறியுண்டாதல், எரிச்சல், துண்டு துண்டான தடிப்பு எனும் குணங்கள் காணும். இதனை மேகப்படை திமிர்படை என்றும் கூறுவர்.

7. யானைத்தோல் குஷ்டம் :
உடலின் தோல் முழுதும் யானையின் துதிக்கைபோல் தடித்து பார்வைக்கு விகாரமாயிருக்கும். உடல் முழுதும் தோல் உரிந்து சிவத்தல், வறவறப்பு, சொறி, தினவு, திமிர், கால் விரல்கள் கனத்தல் உடலில் வீக்கம் எனும் குணங்கள் காணும்.

8. பன்றித்தோல் குஷ்டம் :
இதில் தோலின் நிறம் பச்சை நிறத்தில் பன்றியின் தோல் போல தடித்து, தினவும், சொறியும் உண்டாகும். அதில் அதிக நமைச்சல், தடித்தல், அடிக்கடி சிவந்த நிறத்தில் சிறுநீர் இறங்கல், தேகத்தில் சினைநீர் வடிதல், தாங்க முடியாத துர்நாற்றம் எனும் குணங்கள் காணும்.

9. நாக்கு குஷ்டம் :
இதில் உடல் சுரைப்பூ நிறத்தில் வெண்மையாகி பின் பசுமஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். உடல் முழுதும் திமிருடன் தடித்தல், மஞ்சள் நிறம், அதில் ரத்தம் கசிதல்,தாங்க முடியாத திமிர், மறதி எனும் குணங்கள் காணும்.

10. அலச குஷ்டம் :
இதில் இரத்த நிறமான சிறு கூழாங்கற்களைப்போல் கொப்புளங்கள் பெரிதாக உண்டாகி உடைந்து இரணங்களாகி அதில் அதிக நமைச்சல் உண்டாகும்.

11. செங்குஷ்டம் :
கால்களிலும் கைகளிலும் சிவந்த கடினமான கொப்புளங்களாகி இரணங்களாகும். தேகத்தில் வெடித்தலுடன் தாங்க முடியாத அருவருப்பு, கை, கால், கண், கழுத்து இவைகளில் வெடிப்புடன் வீக்கம் பாம்பைப் போன்ற மணம் எனும் குணங்கள் காணும்.

12. தடிப்பு குஷ்டம் :
முதலில் வளைந்த கொப்புளங்கள் எழும்பி பிறகு கலங்கி கறுப்பு அகத்திப்பூ நிறங்களைப் போல் இரணங்களாகும். உடலில் சிவந்த தடிப்பு, ஊறலுடன் திமிர் எனும் குணங்கள் காணும்.

13. புரைக்குஷ்டம் :
சிவந்தும் கறுத்தும் அடி அகன்றும் அதிக கொப்புளங்கள் உண்டாகி உடல் முழுதும் இரணங்களாகி அதில் எரிச்சல், வலி, புழு ஊறுதல், மூக்கு, கண், காது, கன்னம் இவைகளில் தடிப்பு காணும்.

14. படர்தாமரை குஷ்டம் :
கொப்புளங்கள் மிக உயர்ந்து முனையில் சிவந்தும், நடுவில் வெளுத்தும், பின்னர் தாமரைப்பூ நிறத்திலும் இரணங்களாகி, எரிச்சல், நமைச்சல், சினைநீர் வடிதல் எனும் குணங்கள் காணும்.

15. கொப்புள குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்தும் வெளுத்தும் பெரிதாக எழும்பி இரணமாகி தினவு, எரிச்சல், தோல் மிருதுவாக இருத்தல், விஷ எரிச்சல், எனும் குணங்கள் காணும்.

16. சிரங்கு குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்தும் கறுத்தும் பருத்தும் நெருக்கமாக இரண்டு முனையிலும் முழங்காலிலும் தொண்டையிலும் இரணங்களாகி அதில் வறவறப்பும், தினவும், சினைத்தண்ணீர் கசியும், தோல் விரிந்து வீக்கம் கால் கை குறைதல் எனும் குணங்கள் காணும்.

17. தோல் வெடிப்பு குஷ்டம் :
கொப்புளங்கள் தோன்றும் இடங்களில் சிவந்து, அதிக தினவு, குத்தல், எரிச்சல், உண்டாகும். உடலில் கீற்று கீற்றாக வெடித்தல், தாங்க முடியாத வேதனை, இரத்தம் வடிதல், வயிற்றுவலி எனும் குணங்கள் காணும்.

18. காகச குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்த நிறத்துடன் உண்டாகி பிறகு கறுகி கிராம்பு மொக்கின் உருவத்தை பெற்று உடைந்து விரணங்களாகி அவைகளில் அதிக எரிச்சல் நோய் முதலிய குணங்களும் உண்டாகும்.

19. கர்ண குஷ்டம் :
உடலில் பச்சை வண்ணத்துடன் பொரி பொரியாக வெடித்தல், உடல் பருத்து திமிருடன் காணும். காதுகளின் விளிம்புகள் காக்கட்டான் பூபோல கறுத்த நீல நிறத்தில் காணும்.

20. கருங்குஷ்டம் :
உடல் முழுதும் கறுத்து தோலில் திமிருடன் நாற்றம் வீசுதல், உடலில் சூடும் வலியும் காணும். இடுப்பு புறங்கால், தலை பகுதியில் இந்நோய் உண்டாகும்.

21. அபரிச குஷ்டம் :
உடல் முழுவதும் கறுத்த ரத்தம் வடிதல், வீக்கம், வெடிப்பு எனும் குணங்கள் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக