செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - ஊழி நோய் (வாந்தி பேதி)

            உண்ட உணவு செரிக்காமல் அதிக வாந்தி, கழிச்சல், நீர்வேட்கை, கண் பஞ்சடைத்தல், கெண்டை சதை வலித்தல், கைகால்கள் சில்லிடல், பேச்சொலி குறைதல் எனும் எனும் இயல்பை இந்நோய் கொண்டிருக்கும்.

ஊழி நோய் உண்டாகக் காரணங்கள் :
            பூமியின் தட்பவெப்ப மாறுதலாலும், அருந்தும் நீரில் உள்ள நுண் கிருமியாலும், உடலில் பித்தம் திடீரென குறைந்து ஐயம் அதிகரிப்பதாலும் இந்நோய் உண்டாகிறது. இது 3 வகைப்படும்.

ஊழி நோயின் பொதுக் குணங்கள் :
            உண்ட உணவு செரியாமல் மந்தமாகி, வயிறு இறைந்து, ஏப்பம், விக்கல், குரல் கம்மல், வயிறு ஊதல்,மேல் மூச்சு, நாடிநடை தளறல், பிசுபிசுத்த வியர்வை எனும் குணங்களுடன் வாந்தியும், பேதியும் அன்னம் வடித்த கஞ்சி போல இருக்கும். உடல், நாவு, மூச்சு வாழை தண்டு போல சில்லிடும். கண்கள் குழி விழுந்து உடலும், முகமும் வாடும். விரல் சிறுத்து, வாய், உதடு, உடல் நீலமாகும். வயிற்றிலும், சதைகளிலும் வலி எடுக்கும். சிறுநீர் சுத்தமாக இறங்காது. அதிக தாகம் எடுக்கும்.


ஊழி நோயின் வகைகள் :
1. வாத ஊழிநோய் :
வயிற்றில் இரைச்சல், பேதி, உடல் கறுத்தல், விழி மூடாது இருத்தல், மனக்கலக்கம், சுரம், குடல் குமுறி புரட்டல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த ஊழிநோய் :
பேதி, உடல் சூம்பல், விக்கல், பிதற்றல், வாந்தி, மயக்கத்துடன் அரட்டல் புரட்டல் எனும் குணங்கள் காணும்.

3. ஐய ஊழிநோய் :
நாடி விரைவில் அடங்கி, குறுக்கில் வலி, மேல்பார்வை, நடக்க இயலாமை, புரளல், உடல் வெளுப்பு எனும் குணங்கள் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக