இது குடியின் காரணமாக கண்டவாறு பேசுதல், சீறி விழுதல், சினம் கொள்ளுதல், காரணமின்றி மகிழ்ச்சி அடைதல் எனும் குணங்களை உண்டாக்கும். இது ஏழுவகைப்படும்.
மதநோய் வரக் காரணங்கள் :
அதிக குடியின் காரணமாக இந்நோய் உண்டாகிறது.
மதநோயின் பொதுக் குணங்கள் :
குடியின் கேட்டால் அறிவு மங்கி, உடல் வலிமை குறைந்து,உடல் இளைத்தல், சுவை அறியும் திறம் குறைதல், நீர் வேட்கை, உடல் எப்போதும் சூடாக இருத்தல், மார்பு துடித்தல் எனும் குணங்கள் காணும்.
மதநோயின் வகைகள் :
1. வாதமதம் :
இந்நோயில் உடல் வலிமை குறைந்து, உடல் கறுத்து, தோல் சுருங்கி,முகம் வறண்டு, விக்கல், மேல்மூச்சு, நாடி தளறல், கை கால் தலை நடுங்குதல், தூக்கமின்மை, உடல் குத்தல், பக்கசூலை, குரல் கம்மல், வாய் பிதற்றல் எனும் குணங்கள் காணும்.
2. பித்தமதம் :
இந்நோயில் நாவறட்சி, உடல் சூடாக இருத்தல், வியர்த்தல், தலை சுற்றல், கிறுகிறுத்தல், சுரம், தாகம், மயக்கம், கழிச்சல், உடல் மஞ்சள் அல்லது சிகப்பாக மாறுதல் எனும் குணங்கள் காணும்.
3. ஐயமதம் :
இதில் உடல் பருத்தல், பளுவாக தோன்றுதல்,உடல் சில்லிட்டு இருத்தல், வாந்தி, நாக்கு சுவை அறியாமை, மார்பு துடித்தல், சோம்பல், அதிக தூக்கம் எனும் குணங்கள் காணும்.
4. தொந்தமதம் :
இந்நோயில் முன்சொன்ன மூன்று மதநோயின் குணங்களும் சேர்ந்து காணும்.
5. இரத்தமதம் :
இந்நோயில் குடிவெறியின் காரணமாக குருதி கொதிப்படைந்து பெருகிக் கண்கள் சிவந்து, பித்தமத நோயின் குணங்களும் சேர்ந்து கொள்ளும்.
6. மத்தியபான மதம் :
உடலில் பலவித கெடுதி, முகத்தில் ஒளி நீங்குதல், குரல்கம்மல், எவரிடத்தும் விருப்பமின்மை என்னும் குணங்களுடையது.
7. விஷமதம் :
இந்நோயில் மற்ற மதநோயின் குணங்களை விட அதிகமான கெடுதல்களை உடையது. உடல் நடுக்கல், மிக அதிக தூக்கம் எனும் குணங்கள் காணும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக