வியாழன், 15 அக்டோபர், 2020

ரோக நிதானம் - வலிப்பு நோய் (இசிவு)

            இது அறிவு குன்றித் தன்நிலை கெட்டு, தன்னை அறியாமல் கையும், காலும் வலித்து இழுத்தல்,வாயில் நுரைத் தள்ளல், வாய்க் கோணிக் கொள்ளுதல், கண்பார்வை ஒருபுறமாக இழுத்துக் கொள்ளுதல், எனும் குணங்களைக் கொண்டது. இது 21 வகைப்படும்.

வலிப்பு நோய் வரக் காரணங்கள் :
            உடல்நிலை மற்றும் மனநிலை கெடுவதாலும், ஐயம் அதிகரிப்பதாலும், அதிக பென்போகத்தாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது.

வலிப்பு நோயின் பொதுக் குணங்கள் :
            வலிப்பு வருவதற்கு முன்பு அதிக கோபம், மயக்கம், மனச்சோர்வு, சோம்பல், அதிக பசி, வெருண்ட பார்வை எனும் குணங்கள் காணும். மேலும் அடிக்கடி தும்முதல், கொட்டாவி, சதை துடித்தல், வாயில் நுரையும்  இரத்தமும் தள்ளல், கைகால் விரல்கள் கொருக்குவலி போல மடங்கி துடித்தல், தலையும் கண்ணும் ஒருபுறமாக இழுத்தல், அறிவு குறைந்து மயங்குதல், உடலை வளைத்து கூக்குரலிடுதல், வாய் கோணி பற்களைக் கடித்தல், மூச்சு திணறல், தொண்டைக் கட்டி உடல் கறுத்தல் எனும் குணங்களும் காணும்.

வலிப்புநோயின் வகைகள் :
1) குமரக்கண்ட வலிப்பு :
இந்நோயில் நாக்கும் முகமும் கோணும். கழுத்தும்,தோளும் விம்மும். காதுகள், கண்கள், தாடை, உதடு இவைகள் ஒருபக்கமாக சாய்ந்து நிற்கும். மயக்கமும் வயிற்றில் வலியும் காணும்.

2) அமரக்கண்ட (குதிரை) வலிப்பு :
இந்நோயில் வலிப்பு வருமுன் உடலில் தினவு கண்டு, கைகள் அடித்தது போல குத்தல் குடைச்சலுடன் மயக்கம் காணும். பிறகு வலிப்பு வந்து பல் இளிக்கும், கழுத்து - தோள் - முகம் - தலை பகுதிகளில் அதிக வியர்வை, நாவும் முகமும் ஒருபுறமாக இழுத்துக் கொள்ளும். வலிப்பு நின்ற பிறகு தொண்டை - தோள் - முதுகு பகுதிகளில் வீக்கமும் எரிச்சலும் வலியும் காணும்.

3) பிரமகண்ட (குரங்கு) வலி :
இந்நோயில் கைகால்கள் நீட்டியபடியே உதறுதல், கண்களை சிமிட்டாது மேல்நோக்கியே பார்த்துக் கொள்ளுதல்,பற்களை கடித்தல், உடல் முழுதும் வலி எனும் குணங்கள் காணும்.

4) காக்கை வலி :
இந்நோயில் கண்கள் மேல்நோக்கி மலரமலர விழித்தல்,தொடை மடக்க முடியாமல் விரித்துக் கொள்ளல், தொண்டையும் நாவும் உலர்தல், தொண்டையில் கோழை கட்டிக்கொண்டு கக்குதல், அதிக மலமும் சிறுநீரும் வெளியாதல்,வியர்வை உண்டாதல் எனும் குணங்கள் காணும்.

5) முயல் வலி :
இந்நோய் தலையில் நீரைக் கொட்டினாலும், உடலில் நெருப்பு பட்டாலும் வலித்து இழுக்கும். பிறகு வயிற்றில் வலி, வாயில் நுரைத் தள்ளல், கைகால், கண் இவைகள் விறைத்துக் கொள்ளுதல் எனும் குணங்கள் காணும்.

6) திமிர் வலிப்பு :
இந்நோயில் அதிக கொட்டாவி, படுக்கை பொருந்தாமை, உடல் குளிரல், நரம்புகள் நோதல், தூக்கமின்மை எனும் குணங்கள் காணும்.

7) கோணு வலிப்பு :
இந்நோயில் உடலில் சொரியும் கட்டிகளும் தோன்றும், மூக்கில் மணம் அரிய இயலாமை, தொண்டை கம்மல், பேச்சொலி குன்றல், அறிவு தடுமாறல், சுரம் எனும் குணங்கள் காணும்.

8) சண்டாள வலிப்பு :
இந்நோயில் உடல் பதைபதைத்து முறுக்கி வலி தோன்றும்,திமிருடன் பெருமூச்சுவிடும், சிணுக்கு இருமல், வாந்தி, விக்கல், மேல்மூச்சு, நரம்புகள் வலிமையற்று போதல், கழுத்து நோதல் எனும் குணங்கள் காணும்.

9) மரண வலிப்பு :
இந்நோய் ஒருவர் மரணிக்கும் தருவாயில் வரும். இதில் தொண்டை கம்மல், நரம்புகள் அசைந்து துடித்தல், உடல் நடுக்கம், வாந்தி, கைகால்கள் முடக்கி வலித்து உயிர் பிரிதல் எனும் குணங்கள் காணும்.

10) மனோ வலிப்பு :
இந்நோய் தாங்க இயலாத துன்பத்தின் காரணமாக கண்களில் நீர் வடிதல், கண்டவாறு பேசல், அழுதல் எனும் குணங்களுடன் வலிப்பு உண்டாகும்.

11) நஞ்சு வலிப்பு :
இந்நோய்நஞ்சுத்தன்மையுள்ள ஈடுமருந்து, எட்டி, நாபி போன்றவற்றை உண்பதால் கண்கள் மிரண்டு, சித்தம் கலங்கி, நரம்புகளை இழுத்து வலிப்பு காணும்.

12) முக்குற்ற வலிப்பு :
இந்நோய் வாத - பித்த - ஐயம் எனும் முக்குற்றங்களின் கேட்டால் விளையும்.

13) ஐய வலிப்பு :
இந்நோயில் விலா புறத்தில் குத்தல், இருமல், கண்ணிமை கோணி பார்வை கெடுதல், காதுகேளாமை, உடல் வியர்த்தல், மயக்கம், அறிவு கலங்கல் எனும் குணங்களைக் காட்டி வலிப்பு காணும்.

14) தனுர் வலிப்பு :
இந்நோயில் உடலை வில்போல வளையச் செய்யும். இதில் உடல் முன்புறமாக வளைவது முன்இசிவு என்றும், பின்புறமாக வளைவது, பின்இசிவு என்றும், பக்கவாட்டில் வளைவது பக்கஇசிவு என்றும் அழைக்கப்படும்.

15) சுர வலிப்பு :
இந்நோய் அதிகளவு சுரத்தின் காரணமாக உண்டாகிறது.

16) விக்கல் வலிப்பு :
இந்நோயில் விக்கலுடன் வலிப்பு காணும்.

17) தலை வலிப்பு :
இந்நோயில் தலையில் நீர்க் கோர்த்து ஐயம் அதிகமாகி, பேச இயலாமல், தலை இடித்து நோதல், மூட்டுகளில் வலி, பிடரி வலித்து நோதல், ஈட்டியால் குத்துவது போல குத்தல் காணும்.

18) கோழை வலிப்பு :
இந்நோயில் வாதம் மிகுந்து மார்பில் கோழைக் கட்டல், வாய் பிதற்றல், மூச்சடைத்தல், குறட்டைவிடல், வாந்தியாதல், கோழைக் கக்கல் எனும் குணங்களுடன் வலிப்பு காணும்.

19) ஓடு வலிப்பு :
இந்நோயில் அதிக சுரம், தொண்டையில் ஓய்ச்சல், நா உலர்தல், வியர்த்தல், கால்கள் வலிமையற்று போதல், மிகுதியாக நுரையுடன் கழிதல், கண்கள் நோதல், விரல் திமிர்தல் எனும் குணங்கள் காணும்.

20) மார்பு வலிப்பு :
இந்நோயில் தொண்டையில் கோழைக் கட்டல், இடைவிடாத சுரம், இருமல், கோழையோடு கூடிய வாந்தி, உடலி முறுக்கி வலிப்பு காணும்.

21) தமரக வலிப்பு :
இந்நோயில் அடிக்கடி திடுக்கிடல், மார்பில் கோழை கட்டல் எனும் குணங்களுடன் வலிப்பு காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக