வியாழன், 15 அக்டோபர், 2020

ரோக நிதானம் - பைத்தியம் (வெறிநோய், உன்மத்தம்)

            இது மனநிலை மாறி, அறிவழிந்து, கண்டது கண்டவாறாக பேசுதல், ஆடல், பாடல், அடாவடி செய்தல், அடித்தல், திட்டல், துணிகளைக் கிழித்தல் முதலிய இயற்கைக்கு மாறான செய்கைகளை கொண்டது. இது ஆறு வகைப்படும்.

வெறிநோய் வரக் காரணங்கள் :
            உடல் நிலையும் மனநிலையும் கெடுவதாலும், பொருளின் மீது அளவுகடந்த இச்சை வைத்தல்,அளவுகடந்த இன்பம் அல்லது துன்பம் அனுபவித்தல், வாதம் மீறுதல், பெற்றோர் வழியில் வருதல், யோக நிலையில் ஆதாரங்களைக் கடந்து துரிய நிலையை அடையும்போதும் இந்நோய் உண்டாகும்.

வெறிநோயின் பொதுக் குணங்கள் :
            இதில் மனநிலை குன்றல், எதற்கும் அஞ்சுதல் அல்லது துணிச்சல் கொள்ளுதல், பெண்களின் மேல் விருப்பம் அல்லது வெறுப்பு, மெலிந்து பேசுதல் அல்லது உரத்துப் பேசுதல்,முணுமுணுத்தல், செயல் பேச்சு இவைகளில் இயற்கைக்கு மாறாக இருத்தல்.

வெறிநோயின் வகைகள் :
1. வாத வெறி :
இந்நோயில் உணவில் வெறுப்பு அல்லது குளிர்ந்து ஆறிய உணவு, தாழ்ந்த வகை உணவில் விருப்பம், ஆடுதல், பாடுதல், அழுதல், வாயைக் கோணி பேசுதல், இயற்கை நடைமாறி நடத்தல், கைகளை தட்டுதல், நகைத்தல், ஒருவனை பிடிக்க எழுந்திருத்தல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த வெறி :
இந்நோயில் பரபரப்புடன் ஓடுதல், பொறுமையின்மை, துணியை அவிழ்த்தெறிந்து உலாவல், கடிந்து பேசுதல், யாவரையும் பயப்படுத்தல்,  சீதள உணவில் விருப்பம் எனும் குணங்கள் காணும்.

3. ஐயவெறி :
இந்நோயில் பெண்கள் மேலும் விருப்பம், அடிக்கடி தூக்கம், வாயின் சுவை கெடுதல், வாய்நீர் ஊறி எச்சில் வடிதல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. முக்குற்ற வெறி :
இந்நோயில் முன்சொன்ன மூன்று நோய்களின் குணங்களும் காணும்.

5. சோக வெறி :
இந்நோய் பணத்தை இழந்த துன்பத்திலும், மனைவியை இழந்த துக்கத்திலும், இன்னும் பற்பல மனவியாதிகளாலும், பயம் போன்ற காரணங்களால் உடல் வெளுத்து, காரணமில்லாமல் அழுதல், அடிக்கடி சிரித்தல், மனதிலுள்ளதை வெளிப்படையாக கூறிவிடுதல், ஆச்சரியப்படுதல், உறக்கமின்மை எனும் குணங்கள் காணும்.

6. நச்சு வெறி :
இந்நோய் இடுமருந்து, மூளையை கெடுக்கக்கூடிய நஞ்சு வகைகளை உண்ணுதல் முதலியவைகளினால் உண்டாகி முகம் கறுத்தல், உடல் ஒளி, நிறம், ஐம்புலன்களின் செயல்கள் குறைதல், உடல் கறுத்தல், கண்கள் சிவத்தல் எனும் குணங்கள் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக