செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - வெள்ளை வெட்டை (பிரமியம்)

            சிறுநீர் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ வெண்ணிற சீழ் போன்ற திரவம் இறங்குதல். சிறுநீர்த்தாரையில் எரிச்சலுடன்  கடுப்பு உண்டாதல் என்பதை வெள்ளை வெட்டை என்பர். இது 21 வகைப்படும்.

வெள்ளை வெட்டை உண்டாகக் காரணங்கள் :
            அதிக புணர்ச்சி, இந்நோய் கண்டவருடன் கூடுதல், யோகத்தில் நிலைத்து மூலக்கனலை எழுப்பும்போதும் இந்நோய் உண்டாகும்.

வெள்ளை வெட்டை நோயின் பொதுக் குணங்கள் :
            கலவி செய்த ஒருசில தினங்களுக்குள் குறியில் நமைச்சல், நீர்த்தாரையில் எரிச்சல்,சிறுநீர் இறங்கும்போது அதனுடன் சீழ் கலந்து வெளியாதல், நூல் தொங்குவதுபோலும், வெண்டைக்காய் கழுவிய நீர் போலும் வெளியாதல் எனும் குணங்கள் காணும்.

வெள்ளை வெட்டை நோயின் வகைகள் :
1. வாதப் பிரமியம் :
இந்நோயில் பசுமூத்திரம் போல் நீரிறங்கல், தண்டின் அடியில் வலி, வெளுத்து கட்டியாக சீழ்வடிதல், அடிவயிற்று மற்றும் அதன் இரு பக்கத்தில் பரபரத்த வேதனை, கனகனப்பு, வயிற்றில் இசிவு, உடல் வற்றல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த பிரமியம் :
இந்நோயில் உடல் கறுத்தல், தயக்கம், கீல்களில் வலி, எரிச்சல், ஆசனவாய் மற்றும் குறியில் கடுப்பு, மஞ்சள் நிறமான சீழ்வடிதல், கைகால் ஓய்ச்சல் எனும் குணங்களை உண்டாக்கும்.

3. ஐய பிரமியம் :
இந்நோயில் குறியில் கடுப்பு, அடிக்கடி வெண்மையாக நீர் இறங்கல், நீர்த்தாரையில் எரிச்சல், தேகத்தில் வெளுத்த நிறம் எனும் குணங்கள் காணும்.

4. வாத பித்த பிரமியம் :
இந்நோயில் சர்வாங்கத்திலும் நோய், குறியில் அடைத்தது போல் இருத்தல், மாவைக் கரைத்ததுப் போல் சுருக்குடன் நீரிறங்கல், வயிற்றில் கட்டி எழும்புவதுப்போல் இருத்தல், மலமிறுகல் எனும் குணங்கள் காணும்.

 5. பித்த ஐய பிரமியம் :
இந்நோயில் வாய் கசத்தல், அடிவயிற்றில் பொருமலுடன் இசிவு, கோசம் சுருங்குதல், மஞ்சளாயும் வெண்மையாயும் நீரிறங்கல், கீல்களிலே வலி, பகல் நித்திரை, பசிஇன்மை, சரீரம் ஊதல் எனும் குணங்கள் காணும்.

6. தொந்தப் பிரமியம் :
இந்நோயில் உடலில் புழுக்கள் ஊருதல் போல் இருத்தல், அடிக்கடி கடுத்து நீரிறங்கல், வெள்ளை பலநிறமாகதல் எனும் குணங்கள் காணும்.

7. கட்டிப் பிரமியம் :
இந்நோயில் உடல் முழுதும் கட்டிகள் தோன்றி உடல் வற்றும், தண்டில் சொறியுடன் தினவு, பருக்கைப்போல் சீழ் வடிதல், குறியில் நீர் கசிதல் எனும் குணங்கள் காணும்.

8. நீர்ப் பிரமியம் :
இந்நோயில் வாந்தி, மயக்கம், சிறுநீருடன் வெளுத்த நீரிறங்குதல், அடிவயிற்றில் வலி, மலத்தில் சீதம் விழுதல், இடுப்பில் கட்டிகள் தோன்றுதல் எனும் குணங்கள் காணும்.

9. தந்திப் பிரமியம் :
இந்நோயில் அடிவயிற்று புண்போல் நோதல், குறியின் அடியில் விருவிருப்பு விம்மல், நீர் இறங்கியவுடன் கம்பிபோல் வெள்ளை விழுதல், எப்போதும் வெள்ளை கசிந்து உள்ளாடை நனைதல், கைகால் எறிவு எனும் குணங்கள் காணும்.

10. ரத்த பிரமியம் :
இந்நோயில் முயல் ரத்தம் போல சிவந்த சுருக்குடன் அடிக்கடி வேதனையுடன் நீர் இறங்குதல், அடிக்கடி நீர் சிவந்து இரங்கல், பேய்போல் அலைதல் எனும் குணங்கள் காணும்.

11. கீழ்ப் பிரமியம் :
இந்நோயில் குறியின் துவாரத்தில் கடுப்புடன் வெள்ளைக் காணல், இடுப்பில் கட்டி, பவுத்திரம், நாபியில் புண், கணுக்காலில் குடைச்சல், அடிக்கடி நீர் இறங்குதல், அதிக குளிரோடு சுரம், மயக்கம், வேதனை எனும் குணங்கள் காணும்.

12. ஒழுக்கு பிரமியம் :
இந்நோயில் இது குறியின் துவாரத்திலிருந்து சீழும் ரத்தமும் கலந்து சிறுநீர் இறங்குதல், உடல் முழுதும் கருமையுள்ள கட்டிகள் உண்டாகி உடைந்து புண்ணாதல், குடைச்சல், எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

13. மஞ்சள் பிரமியம் :
இந்நோயில் மஞ்சள் நிறமான வெள்ளை காணும், சூடாக நீர் இறங்க, அந்த இடத்தில் நெருப்பைக் கொளுத்தினது போல் எரிச்சலுடன் கூடிய கடுப்பு, விருவிருப்பு, அதிக உஷ்ணம், முகத்தில் மஞ்சள் நிறம், நாவில் கசப்பு, மனது திடுக்கிடல் எனும் குணங்கள் காணும்.

14. நீர்ச்சுருக்கு பிரமியம் :
இந்நோயில் குத்தலுடன் மஞ்சள் நிறத்தில் கடுப்புடன் நீர் இறங்கல்,  சிறுநீர்க்கட்டு, உறக்கமின்மை, உஅன்வில் வெறுப்பு, மனசஞ்சலம், உடல் உளைச்சல் எனும் குணங்கள் காணும்.

15. கரப்பான் பிரமியம் :
இந்நோயில் வயிற்றில் உளைச்சல், சீதத்துடன் மலம் இறங்கல், நீரானது உஷ்ணமாக கடுப்புடன் இறங்கி நீர்துவாரத்தைப் புண்ணாக்கி, சுண்ணாம்புக் கல்லைக் கரைத்த சலம்போல் குத்தலுடன் இறங்கல், கைகால் உளைச்சல், உடம்பெல்லாம் வெப்பத்தால் பொங்கி எழும் புண்கள் கரப்பான் நோய் போல உடல் முழுதும் பரவும்.

16. கல் பிரமியம் :
இந்நோயில் குறியில் கள்ளைப்போல் வெள்ளை கசிதல், உடலில் கற்றாழை நாற்றம் வீசுதல், சிறுசிறு கற்கள் நீர்ப்புழையை அடைத்துக் கொண்டு வயிறு விம்மும், வயிறு முதல் விலா வரையில் விறுவிறுத்து நோதல் எனும் குணங்கள் காணும்.

17. தந்துப்பிரமியம் :
இந்நோயில் குறியில் சிலந்தி நூலைப்போல வெள்ளை இறங்கும், குறி விம்மி வலி கண்டு குருதி காணும், விலாவில் குத்தல், சிறுநீர் துளி துளியாக விழுதல் எனும் குணங்கள் காணும்.

18. நீச்சுப் பிரமியம் :
இந்நோயில் கள்ளை ஒத்த சிறுநீருடன் வெளுத்த சீழ் வடிதல், குறியின் தண்டு வீங்கி விம்மும்போது குத்தல், விருவிருப்பு, நரம்பு சுருங்குதல், அடிவயிற்றில் சூலை, குளிர் எனும் குணங்கள் காணும்.

19. வலி பிரமியம் :
இந்நோயில் குறியின் அடிநரம்பு, பிட்டம் ஆகியவை குத்தலுடன் வலித்தல், உடல் வற்றி மயக்கம், நாவு கசத்தல், புறங்காலில் திமிர், வெள்ளை காணுதல், குறித்தண்டு வீங்கி நீர் இறங்கும்போது இற்றுப்போன சதைத் துணுக்குகள் சேர்ந்து இறங்குதல் எனும் குணங்கள் காணும்.

20. மதுப் பிரமியம் :
இந்நோயில் ஆண்குறி நொந்து தேன் போல் வண்டலாய் நீரிறங்கல், அதில் எறும்பு மொய்த்தல், நீர்த்தாரை புண்ணாகி நீர் இறங்கும் போது ஒருவித நாற்றம், நா வறட்சி, சுவையின்மை, மயக்கம் எனும் குணங்கள் காணும்.

21. விரண பிரமியம் :
இந்நோயில் உடல் முழுதும் பொங்கி புண்ணாகி குறி வீங்கி சிறுநீருடன் குருதியும் கலந்து இறங்குதல், முட்டிக்கீல்கள் நொந்து கறடு கட்டியது போல நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் இருத்தல், கீல்களில் அதிகவலி, உடல் வெதும்பல், விறுவிறுத்தல் எனும் குணங்கள் காணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக