வியாழன், 15 அக்டோபர், 2020

ரோக நிதானம் - மயக்க நோய் (மூர்ச்சை)

            இது திடீரென கண்கள் இருண்டு, சுரணையற்று, அறிவழிந்து, மூச்சடைத்து, மயக்கமுற்று, மரம் போல விழச் செய்யும் இயல்புடைய நோய். இது 5 வகைப்படும்.

மூர்ச்சை உண்டாகக் காரணங்கள் :
            செரிக்கக்கூடாத உணவுகளை உண்ணுதல், உடல் வலிமை கேட்டு குருதி குறைதல், நாடி நரம்புகள் தளர்தல், குருதியை பார்த்தல், காற்றில்லாத இடத்தில் அடைத்து வைத்தல் எனும் காரணங்களால் மூர்ச்சை உண்டாகும்.

மூர்ச்சை நோயின் பொதுக் குணங்கள் :
            இதில் தலைசுற்றல், வாய் குமட்டல், வாய் நீரூறல், வாயில் நுரை தள்ளல், கொட்டாவி விடல், கைகால்கள் சோர்வடைதல், கைகால்கள் விதிர்விதிர்த்தல், தன்னை மறந்து அறிவழிதல், இதயம் அதிகமாக துடித்தல் எனும் குணங்கள் காணும்.

மயக்க நோயின் வகைகள் :
1. வாத மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் மயக்கம், தலை சுற்றல், பார்ப்பவை அனைத்தும் கறுப்பு,  சிவப்பு அல்லது நீல நிறத்தில் தோன்றி உடல் கறுக்கும். சிறிது நேரத்தில் தெளியும்.

2. பித்த மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் பார்ப்பவை அனைத்தும் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றி, உடல் மஞ்சள் மற்றும் கருமை நிறத்தில் மாறும். மூர்ச்சையானது உடனே தெளியும்.

3. ஐய மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் மயக்கமடைந்து வாய் கோணும், பற்கள் கடிக்கும், உடல் வியர்க்கும், பலநாழிகை சென்று தெளிவடையும்.

4. முக்குற்ற மூர்ச்சை :
இந்நோயில் முன்சொன்ன மூன்றின் குணங்களும் சேர்ந்து காணும்.

5. குருதி மூர்ச்சை :
இந்நோயில் குருதியை பார்த்தாலும் அல்லது முகர்ந்தாலும் வாய் குமட்டி, தலை சுற்றி, கண்ணிருண்டு, மயங்கி, அறிவழிந்து மரம்போல சாய்ந்து விழுவர். சிலருக்கு உடலில் குருதியின் எடை, நிறை, நிறம் குறைந்த போது மயக்கம் காணும்.

6. நஞ்சு (மருந்தீடு) மூர்ச்சை :
அதிக நாட்கள் மூடியிருந்த வீட்டில் நுழைதல் அல்லது மக்கள் அதிகமுள்ள அறையில் புகுதல், நஞ்சுத்தன்மையுள்ள காற்று பொருள்களை முகர்தல் அல்லது உண்ணுதல், மருந்தீடின் காரணமாகவும், நஞ்சு கடியாலும், அபினி, கஞ்சா, ஊமத்தை முதலிய தாவர நஞ்சை உண்பதாலும் இந்நோய் உண்டாகும்.

7. பெருமூர்ச்சை :
இந்நோயில் முன்சொன்ன நோய்கள் ஏதேனும் ஒன்றில் பலநாட்கள் தொடர்ந்து வருந்தியவருக்கு உடல்நிலை கெட்டு முக்குற்றங்களும் நிலை தவறி பிறழச் செய்து பிணம் போல விழச் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக