இது கள், சாராயம், புளிப்பேறிய பழச்சாறுகள் முதலியவற்றை அளவுக்கு மிஞ்சி பருகுவதால் அறிவு குன்றி பலவிதமாக பேசச்செய்யும் இயல்புடையது.
குடி வகைகளின் பண்பும், செயலும் :
குடி வகையின் பண்புகள் :
வெப்பு, வறட்சி, புளிப்பு அல்லது காரம், பரவும் தன்மை ஆகியவை குடிக்கும் கள், சாராயம் முதலியவற்றின் பண்புகளாகும்.
குடி வகையின் செயல்கள் :
உண்டபின்பு உடலுக்குள் ஒருவித அனலை எழுப்பி, மனதைத் தூண்டி, ஒருவித களிப்பைத் தந்து இனிமையாகவும்,கடுமையாகவும் பேசச் செய்து, பின்பு அறிவையும், உடல் நிலையையும் குறையச் செய்யும்.
குடிவெறியின் பொதுக் குணங்கள் :
இந்நோயின் ஆரம்பத்தில் ஒருவித மகிழ்ச்சி, உற்சாகம், உடல் வன்மை பெருகியது போன்ற உணர்வுகள் தோன்றி, பின் அறிவு மங்கி, மயக்கம், கைகால்கள் தளறல், உதறல், நாவறட்சி, நீர்வேட்கை, கண்கள் இருளல், தலைசுற்றல், நெஞ்சு படபடத்தல், மனம் தடுமாறல், புலம்பல், ஆடல் - பாடல், வாயில் நீர்வடிதல், வாந்தி, வியர்த்தல், நாடி தளறல், கைகால்கள் துவளல், மூச்சுத்திணறல் எனும் குணங்களை உண்டாக்கும். குடிவெறியின் குணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
குடிவெறியின் குணங்கள் :
முதல் நிலை :
மனதிற்கு கிளர்ச்சி, ஊக்கம், மகிழ்ச்சி, புத்திகூர்மை அடைந்து மறந்ததை நினைவுபடுத்தல், உடல் வெப்பமடைந்து வலிமை அடைந்தது போன்ற உணர்வு, உணவு எளிதில் செரிக்கும்.
இரண்டாம் நிலை :
உடல் வலிமையும், மன மகிழ்ச்சியும், அறிவும் குறையும், வெறி பிடித்தவன் போல பிறரை இடித்தல், உதைத்தல், திட்டல் எனும் செய்கைகள், அதிக தூக்கம் உண்டாகும்.
மூன்றாம் நிலை :
யாரையும் மதித்து நடக்காத தன்மை, தான் செய்வது இன்னதென்று அறியாத தன்மை, மனதிலுள்ளதை அப்படியே வெளியில் செய்தல் எனும் குணங்கள் உண்டாகும்.
நான்காம் நிலை :
மனநிலை - உடல்நிலை அழியும், கைகால்கள் தளர்ந்து நடை தடுமாறி மரம் போல கீழே விழுவான், நாடிநடை தளர்ந்து,உடல் வியர்த்து, கைகால்கள் சில்லிட்டு உயிர் பிரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக