செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - எருவாய் நோய் (மூலம்)

            ஆசன வளையங்களில் கிழங்கு முளைகளைப்போலும், வேர்களைப் போலும், மாமிச முளைகளை உண்டாக்கி வலி, கடுப்பு, எரிச்சல், நமைச்சல், அரிப்பு, வீக்கம், மலம் தீய்தல், மலம் கட்டுதல், இரத்தம் வழிதல் எனும் குணங்களை உண்டாக்கும் காரணத்தினால் மூல நோயென பெயர் பெற்றது. இந்நோய் 21 வகைப்படும்.

மூலநோய் உண்டாகக் காரணங்கள் :
            அதிகபுணர்ச்சி, நீண்ட நேரம் அமர்ந்து இருத்தல், உடல் இளைப்பு, அபானவாயு, மலம், சிறுநீர் இவற்றை அடக்குதல், குடலில் அதிக மலம் சேருதல் போன்றவற்றாலும், குன்மம், அதிசாரம், சோகை, பாண்டு, கிராணி முதலிய நோய்களாலும் இந்நோய் உண்டாகும்.

மூல நோயின் பொதுக் குணங்கள் :
            உடல் இளைத்து நிறம் மாறல், கணுக்கால், அடித்தொடை பகுதிகளில் வலி, தலை, முதுகு, மார்பு இவைகளில் வலி, பசியின்மை, வயிறு உப்புசம்,  கண்களில் வீக்கம், முகம் மாறுதல், மலச்சிக்கல், அடிவயிற்றில் இரைச்சலும் கடுப்பும் உண்டாதல், சோம்பல், தலைசுற்றல், உற்சாகமின்மை, ஆசனத்தில் வலி, கடுப்பு, நமைச்சல், அரிப்பு, எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

மூலநோயின் வகைகள் :
1. நீர் மூலம் :
இந்நோயில் வயிற்றை சுற்றி சுருட்டி வலித்தல், கீழ்வயிறு பொருமல், மலம் வெளியேறாமல் காற்று மட்டும் பிரிதல், மலம் வருவது போன்ற உணர்வு தோன்றி மலம் வெளியேறாமல் நுரையுடன் கூடிய நீர் வெளியேறல் எனும் குணங்கள் காணும்.

2. செண்டு மூலம் :
இந்நோயில் மூலமுளை கருணைக்கிழங்கு போல தோன்றி அடிசிவந்து , பருத்து வெளித்தள்ளி, வறண்டு, கடினப்பட்டு, கன்றி அதிக வலியுடன் குருதியும், நிணமும் வெளிப்பட்டு, தினவெடுக்கும்.

3. பெருமூலம் :
இந்நோயில் மூலமுளை மஞ்சள் கிழங்கு போல தோன்றி கடுத்து, தடித்து, எரிச்சலை உண்டாக்கி அடிவயிறு கல்போலாகும். வயிற்றில் காற்று கூடி இரைச்சல், ஏப்பம் உண்டாகும். மலம் தீய்ந்து குருதியுடன் வெளியேறும்.

4. சிறுமூலம் :
இந்நோயில் எருவாயில் சிறு முளைகள் உண்டாகி  எரிச்சலுடன் குருதியும் வெளிப்படும். வயிற்றில் குத்தல், வயிறு இழுத்து நோதல், வயிறு ஊதல் எனும் குணங்கள் காணும்.

5. வரள் மூலம் :
இந்நோயில் பித்தம் அதிகமாகி, குடல் வறண்டும், மலம் உலர்ந்து இறுகி வெளியாகாமல் தடைபடும். உடல் வெளுத்து, வலிமை குறைந்து, மலத்துடன் இரத்தம் வெளியேறும்.

6. இரத்த மூலம் :
இந்நோயில் தொப்புளில் வலித்து மலத்துடன் குருதியும் பீறிட்டு பாயும். மேலும் கைகால் உளைச்சல், மயக்கம், மார்பு நோய், தலைவலி, கண்கள் மஞ்சளாதல் எனும் குணங்கள் காணும்.

7. சீழ் மூலம் :
இந்நோயில் ஆசனவாயை சுற்றிலும் கடுப்பும் எரிச்சலும் உண்டாகி, மலம் கழியும்போது சதை இற்று அதனுடன் சீழும் நீரும் கலந்து, இறங்கும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் கழியும்.

8. ஆழி மூலம் :
இந்நோயில் மூலமுளை வள்ளிக்கிழங்கை போல பருத்து நீண்டு, குருதியும் நிணமும் வழியும். மலம் இறங்காது. 

9. தமரக மூலம் :
இந்நோயில் மூலமுளை வெளித்தள்ளி உலக்கை பூண் அல்லது தாமரை பூப்போல காணும். மேலும் தினவும், நமைச்சலும் உண்டாகி, உடல் மெலிந்து, மலத்துடன் குருதியும் சேர்ந்து கழியும்.

10. வாத மூலம் :
இந்நோயில் மூலமுளை கோவை பழம் போல சிவந்து, பின் கறுத்து மெலிந்து,கடுப்பு, நமைச்சல், குத்தல், குடைச்சல், திமிர்தல் உண்டாகி, மலம் கறுத்து இறங்கும். மேலும் தலையிலும் குடலிலும் வலி உண்டாகும்.

11. பித்த மூலம் :
இந்நோயில் மூலமுளை பருத்திக்கொட்டை அல்லது நெல்லின் அளவில் தோன்றி, கடுப்பு, எரிச்சல், தாகம், மயக்கம், சோர்வு, மலத்துடன் சீழும்,, குருதியும் கலந்து வெளியேறுதல் எனும் குணங்களை உண்டாக்கும். மேலும் இதில் மலம் வறண்டு, திரிதிரியாய் வெளியேறும்.

12. ஐய  மூலம் :
இந்நோயில் மூலமுளை வெண்ணிறத்தில் தோன்றி, எரிச்சல், தினவு, கடுப்பு, மலத்துடன் சீழும் குருதியும் கலந்து இறங்கும். மேலும் உடல் வெளுத்து, வலிமை குறையும்.

13. தொந்த மூலம் :
இந்நோயில் மூலமுளை கோழிக்கொண்டையை போல தோன்றி நடக்க இயலாமல் செய்யும்.

14. வினை மூலம் :
இந்நோயில் உணவு செரியாமை, புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், நரம்பு இசிவு, கடுப்பு, உடல் காந்தல் எனும் குணங்கள் காணும்.

15. மேக மூலம் :
இந்நோயில் மூலமுளையில் இருந்து குருதி கொட்டும், ஆண்குறியில் இருந்து வெள்ளை வடியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறிநீர் எரிந்து இறங்கும். தலையில் வலியும், உடலில் திமிரும், சிறுநீர் இனிப்பு தன்மையோடும் இருக்கும்.

16. பவுத்திர மூலம் :
இந்நோயில் மூலமுளைக்கு அருகில் கட்டி தோன்றி உடைந்து உலராது துளையுடன் சீழ் வடியும். கைகால்கள் வீங்கும். ஆசனமும், குறியும் வீங்கும்.

17. கிரந்தி மூலம் :
இந்நோயில் குறியில் புண் உண்டாகி அது மூலமுளை வரையில் பரவி சீழும் குருதியும் வடியும். ஆசனவாய் வெடித்து, மலம் வறண்டு இறங்கும்.

18. குதமூலம் :
இந்நோயில் மூங்கில் குருத்து போல அடிக்குடல் வெளித்தள்ளும். மூலமுளையில் இருந்து சீழும் குருதியும் வடியும். நா வறண்டு தாகம் உண்டாகும்.

19. புறமூலம் :
இந்நோயில் ஆசனவாயின் வெளிப்புறத்தில் சிறு பருக்களைப் போல முளைகள் தோன்றி கடுத்து சீழ் இறங்கி, கடுப்பு, நமைச்சல், தினவு உண்டாகும். உடலில் சிறுசிறு சிரங்கு, சொறி உண்டாகும்.

20. சுருக்கு மூலம் :
இந்நோயில் ஆசனவாய் சுருங்கி தடிக்கும், பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் சீழும் குருதியும் இறங்கும்.

21. சவ்வு மூலம் :
இந்நோயில் மூலமுளையானது குழகுழத்து நீண்டு சவ்வு போல தொங்கி, சீழும் குருதியும் வடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக