இதில் கீல்களில் வீக்கம், குத்தல், குடைச்சல், வலி, நீட்டவும் மடக்கவும் இயலாமை எனும் குணங்கள் காணும். இது கீல்களில் வாதம் மிகுந்து உண்டாவதால் “கீல்வாயு” என்றும், மூட்டுகளில் உண்டாவதால் “மூட்டுவாதம்” என்றும், மேக நோயுடன் தொடர்புடையதால் “மேகசூலை“ என்றும், மூட்டுகளை முடக்குவதால் “முடக்கு வாதம்” என்றும், வயிற்றில் மந்தத்தை உண்டாக்கி புளித்து கபத்தை பெருக்குவதால் “ஆமவாதம்” என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இது 10 வகைப்படும்.
கீல்வாயு வரக் காரணங்கள் :
வாதத்தை பெருக்கக்கூடிய உணவுகளை உண்பதாலும், மழையில் நனைதல், குளிர்ந்த காற்றில் இருத்தல், பனியில் படுத்தல், உயர்ந்த மலையில் படுத்தல், தகாத பெண்களின் சேர்க்கையால், பரம்பரையாக என்று பல்வேறு வழிகளில் உண்டாகும்.
கீல்வாயு நோயின் பொதுக் குணங்கள் :
இந்நோய் வருமுன் மூக்கு அடைப்பு, மூக்கில் நீர் பாய்தல், தொண்டை கட்டல், இலேசான சுரம், கைகால்களில் வலி, குத்தல், குடைச்சல், நீட்டவும் மடக்கவும் இயலாமை எனும் குணங்கள் காணும்.
கீல்வாயு நோயின் வகைகள் :
1) வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீல்கள் சிவந்து வீங்கி, நாளுக்கு நாள் வீக்கம் பெருத்து காணும். ஒருபகுதியில் உள்ள கீழ்களின் வலி குறைந்தால் மற்ற பகுதிகளில் உள்ள கீல்களில் வலி உண்டாகும்.
2) பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீழ்களின் பசை வறண்டு கீல்கள் அசையும்போது எல்லாம் நட்டை உடைவதும், “கலுக்” என்ற சத்தமும் காணும்.
3) ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீல்களில் வீக்கமடைந்து சீழ் பிடித்து எலும்பைத் துளைத்து அழுகச் செய்யும்.
4) வாத பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே வாத, பித்த கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.
5) வாத ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே வாத, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.
6) பித்த வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே பித்த, வாத கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.
7) பித்த ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே பித்த, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.
8) ஐய வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே ஐய, வாத கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.
9) ஐய பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே ஐய, பித்த கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.
10) முக்குற்ற கீல்வாயு :
இந்நோயில் வாத, பித்த, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் அனைத்தும் காணும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக