திங்கள், 6 ஜூலை, 2020

உடற்கூறியல் - 1 (கருவியல் - Embryology)

        உடற்கூறு என்பது நமது உடலையும், அதன் உள்ளுறுப்புகளையும் பற்றி அறிவது அல்லது படிப்பது ஆகும். சித்த மருத்துவத்தில் உடற்கூறு என்பதை அங்காதி பாதம் என்பர். அதாவது ஒரு மனிதனின் தலை முதல் கால்வரை பற்றிப் படிக்கும் பாடம் என்று இதற்குப் பொருள். இதை விவரண அங்காதி பாதம், இரண அங்காதி பாதம் என்று இருவகையாகப் பிரிக்கலாம். 

        விவரண அங்காதி பாதம் என்பது மனித தேகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளின் வடிவம், செயல்பாடுபற்றித் தெளிவாய் விளக்கும் பகுதி. இரண அங்காதி பாதம் என்பது அறுவை மருத்துவம் சார்ந்த அங்காதி பாதம் என்பர். விவரண அங்காதி பாதம் மனித உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகளுக்கு ஏற்பப் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

        நாம் உடற்கூறைப் பற்றிப் பார்க்கும் முன்னர் கருவின் உற்பத்தி சித்தர்களின் நூல்களில் என்னென்ன கூறியுள்ளனர் என்று சுருக்கமாகப் பாப்போம்.

கரு உற்பத்தி :

        பெண்களின் கருப்பையின் பக்கத்திற்கு ஒன்றாக உள்ள இலுப்பைக் கொட்டையின் வடிவில் திரண்ட வெண்மையான வெவ்வேறு பைகளில் 1 1/2 அங்குல நீளமும், 1 அங்குல அகலமும் கொண்டுள்ள அண்டப்பைகளே (Overy - சினைப்பைகள்) கருக்கூடுகள் ஆகும். இவற்றிலிருந்து தான் நாதம் உற்பத்தி ஆகிறது. இவற்றின் வடிவம் மாதவிடாய் காலத்திலும், கருவுற்ற காலத்திலும் மட்டும் அளவில் சற்று பெரியதாக இருக்கும். சினைப்பைகளில் ஏராளமான முட்டைகள் இருப்பினும் நன்கு பக்குவப்பட்ட முத்துப் போன்ற முட்டைகள் 10 முதல் 30 வரை மட்டுமே இருக்கும்.
        மாதவிடாய் ஆன முதல்நாளில் பெண்ணின் கருக்குழியானது 14 அல்லது 16 இதழ்களுடைய தாமரைப் பூவைப் போல மலர்ந்து, பின் 14 அல்லது 16 நாட்கள்வரை தினம் ஒரு இதழாக மூடிவரும். அந்தக் காலங்களில் ஓரிரு கருமுட்டைகள் முற்றி வெடித்து கருக்குழியில் விழித்திருக்கும். இந்த நாட்களில் கணவன், மனைவி இருவரும் உடலுறவு கொள்ளும் வேளையில் பெண்ணின் கருக்குழியில் ஆணின் விந்தானது பாய்ந்து நாதத்துடன் கலந்து உறவாகி திரண்டு கருவாயிலை மூடும். அப்போது அபானவாயு வெளியில் நின்று கருவாயை காக்கும். உள்சென்ற பிராண வாயு கருவைப் பல பிளவுகளாக ஆக்கும், உதானவாயு கருவை வளர்க்கும். எனவே பரமாணுக்களை ஒத்த நாதவிந்து சேர்க்கையின் போதே படைத்தல், காத்தல், வளர்த்தல் ஆகிய தொழில் புரியும் வாத, பித்த, கபம் விளைவதை நாம் அறியலாம்.

        சினைப்பையில் உள்ள கருமுட்டை முற்றி வெளிப்பட்ட நாளில் அதாவது மாதவிடாய் ஆன நாள் மற்றும் இரண்டாம் நாளில் ஆண் - பெண்  சேர்க்கையில் ஈடுபட உண்டாகும் கருவானது வயிற்றிலேயே அழியும். மூன்றாம் நாள் சேர்க்கையால் உண்டாகும் கருவானது அற்ப ஆயுள் உடையது. மீறி வாழ்ந்தாலும் தரித்திரத்தையே அடையும்.  எனவே தான் அந்த மூன்று நாட்களும் ஆண் - பெண் சேர்க்கை கூடாது என்று வகுத்தனர். ஆனால் நான்காம் நாள் முதல் 16ம் நாள்வரையில் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த 16 நாட்களுக்குப் பிறகு கரு உண்டாகாது. மீறி உண்டானாலும் கரு தங்கி வளர வசதி இல்லை.

ஆண் - பெண் தோன்றும் விதம் :

        ஆண் - பெண் சேர்க்கையின்போது விந்து வெளிப்படும் சமயம் பிராணவாயு இயக்கம் வலது நாசியில் ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், சுழுமுனை ஓடினால் அலியாகப் பிறக்கும் என்று அறியலாம்.

        ஆண் - பெண் சேர்க்கையின்போது ஆணுக்குப் பெண்ணின் மீது அதிக அன்பு உண்டானால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும், பெண்ணுக்கு ஆண்மீது அதிக அன்பு உண்டானால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அறியலாம்.

        நாத - விந்து கூடும்போது விந்து பெருகினால் ஆண் குழந்தை என்றும், நாதம் பெருகினால் பெண் குழந்தை பிறக்கும் என்றும், இரண்டும் பெருகினால் அலியாகப் பிறக்கும் என்றும் அறியலாம்.


கரு ஆணா? பெண்ணா?

        மிதமான பசி, வலதுபுற முலை அதிகம் கனமாக இருத்தல், முலைக் காம்பை நசுக்கினால் வெண்மையும் கலங்களுமான பொருள் வெளிப்படல், சிறுநீர் பலநிறத்தில் இருத்தல், கரு வலது புறம் சாய்ந்தது போல இருப்பது போன்ற தோற்றம், அமருதல் - எழுதல் - வேலை செய்யும் போது வலது கையை ஊன்றிக் கொள்ளல், வலது புறமாகவே திரும்பிப் படுத்தல் முதலிய குணங்கள் இருந்தால் ஆண் குழந்தை என்று அறியலாம்.

        அதிக சோம்பல், இடது முலை அதிக கனமாக இருத்தல், அற்ப உணவில் ஆசை, பொய்ப்பசி, முகம் ஒளி குறைதல், அமருதல் - எழுதல் - வேலை செய்யும் போது இடது கையை ஊன்றிக் கொள்ளல், இடது புறமாகவே திரும்பிப் படுத்தல் முதலிய குணங்கள் இருந்தால் ஆண் குழந்தை என்று அறியலாம்.

மெய், பொய் கர்ப்பம் :
        உண்மையிலேயே கருவுற்ற பெண்ணின் உடல் இயற்கையை விட பூரிப்படையும். நாடி படபடத்து நடக்கும். கண்கள் மஞ்சள், நீல நிறமடையும். முலைகள் விம்மிப் பருக்கும். முலைக் காம்புகள் கருத்து, சுற்றிலும் முடிச்சுகள் போல தோன்றும். காலையில் வாந்தி ஏற்படும். மயக்கமும் காணும். வாயில் எச்சில் பெருகும். வயிறு படிப்படியாக பெருக்கும். மூன்றாம் மாதம் வயிற்றில் பிண்டம் புரளுவது தெரியும். அதற்கு முன்னர் அசைவதில்லை. விரலினால் அடிவயிற்றை அழுத்தினால் கல் போல இருப்பதுடன், விரலை எடுத்தவுடன் பழைய நிலையை மெதுவாகவே அடையும். இது உண்மை கர்ப்பத்தின் அறிகுறிகள் ஆகும்.

        அதிக வாயுவால் தடைபட்ட சூதகம் கட்டியாகி கருப்பையிலேயே நின்றுவிடும். இதில் ஆரம்பத்திலேயே வயிறு மீறி பெருத்துவிடும். முதல் மாதத்திலேயே கரு புரளுவது போல தோன்றும். வயிற்றில் விரலை வைத்து அழுத்த அழுத்திய விரலை எடுத்தவுடனேயே பள்ளம் மறைந்துவிடும். இது பொய்க்கர்ப்பத்தின் அறிகுறிகள் ஆகும்.


கரு வளர்ச்சியும், வெளித் தோற்றமும் :

1 ம் நாள் : கரு உற்பத்தியான முதல் நாளன்று நாத - விந்து கூடி கடுகு போல இருக்கும்.

2 ம் நாள் : கொத்துமல்லி விதை போல வரிகளுடன் இருக்கும்.

3 ம் நாள் : சீரற்ற வரிகளுடன் மிளகு போல இருக்கும் (இங்கு பிராணவாயுவால் கரு பிரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க).

4 ம் நாள் : உருண்டை மாறி சற்று நீண்டு முனைகள் சிறிது மழுங்கி நடுவில் கனத்து அவரை விதை போல தோன்றும்.

5 ம் நாள் : வளரும் நாதத்தில் வெற்றிடம் உண்டாகி நீர்க்குமிழி போல இருக்கும்.

6 ம் நாள் : நாதத்திலும் கருத்தோன்றி புரையினால் மூடி புன்னைக்காய் அளவு இருக்கும். இன்றே கரு, புரை என்ற பிரிவு தோன்றுவதால் கருவே குழந்தையாகும், புரையே நஞ்சுக்கொடி ஆகும்.

8 ம் நாள் : கருவில் ஐந்து பிரிவுகளும், நிறங்களும் தோன்றும்.

9 ம் நாள் : காக்கையின் முட்டை போல இருக்கும்.

10 முதல் 15 நாள் வரை : கோழி முட்டை போல நீண்டு இருக்கும். 

1ம் மாதம் : கருவின் தலைப்புறம் கனத்தும் அடிப்புறம் சற்று நீண்டு வாழைப்பூ போல இருக்கும்.

2 ம் மாதம் : கரு சற்று நீண்டு உருவின்றி தோன்றும். உடலை விட தலை கனத்து இருக்கும். தலை, கழுத்து, முதுகு, தோள், மார்பின் மேல் எலும்பு, தாடை எலும்பு முதலியன தோன்றும். இம்மாத முதல் தாய்க்கு தொடக்க அறிகுறியுடன் முலைக்காம்பை சுற்றி கருப்பு வட்டம் காணும். பச்சை நரம்புகள் பருத்தும், கழலை முடிச்சுகளுடன் முலைகள் கனத்து வலிக்கும். மசக்கை என்ற தலை சுற்றல், வாந்தி, வாய்நீரூரல், சகியாமை முதலியன ஏற்படும்.

3 ம் மாதம் : கரு சுண்டெலியின் அளவில் சுமார் ஆறு ரூபாய் எடை (28 g), சுமார் 5 அங்குல நீளமும் இருக்கும். இடுப்பு, கை, கால், விரல்கள், ஆண் - பெண் குறிகள், கல்லீரல் ஆகியன தோன்றும். இம்மாதம் கரு புரளுவதை தாய் உணருவாள். வயிறும், முலைகளும் பருக்கும். முலைக்காம்புகளை நசுக்க பால் போல பிசுபிசுத்த திரவம்  வெளிவரும். இந்த நேரத்தில் சிலருக்கு வயிற்று வலியும், இரத்தபேதியும் ஆகும்.

4 ம் மாதம் : கரு 6 அங்குல நீளத்திலும், ஆண் - பெண் குறிகள் பாகுபாடு அடையும். வாய், நாக்கு, மூக்கு, காது, நகங்கள், தலைமயிறு ஆகியன வளரும். பித்தப்பை தோன்றும். மேல் குடலில் மலம் தங்கும். கரு சதைப் பிடிப்புடன் வளர்ந்து தோல் சிவக்கும். இம்மாதம் சிலருக்கு அடிவயிற்று வலியும், யோனி வழியே இரத்தமும் காணும்.

5 ம் மாதம் : சிசுவின் நகம், தலை மயிர் நன்கு தெரியும். மூத்திரக்காய் (Kidney) நன்கு பருக்கும். தலை உடலுக்கேற்ப மாறும். மூளையில் வெண்ணிறப் பொருள் தோன்றும். இம்மாதம் தாயின் அடிவயிறு கனத்து முன்னால் தள்ளும். இச்சமயம் சிலருக்கு மிக்க வயிற்றுவலி, பாத எரிச்சல், பாத வெடிப்பு, படுத்து அல்லது அமர்ந்து எழுந்தால் கை, கால் சுண்டி இழுக்கும்.

6 ம் மாதம் : சிசு இரண்டு ராத்தல் (0.907 g) எடையுடன், உடலில் வழுவழுப்பான பொருள் படிந்து இருக்கும். நீர், மலத்துவாரம் திறந்து, நரம்புகள் காணும். விரல்கள் சிவந்து பருக்கும். பீஜங்கள், குண்டிக்காயின் (Kidney) அருகில் இருக்கும். கண்ணிமைகள் தெரியும். ஆயினும் புருவத்தின் அடியில் ஒட்டி இருக்கும். இச்சமயம் சிலருக்கு வயிறு முறுக்கி வலிக்கும். நீர்ச்சுருக்கு, குடல் அழற்சி முதலியன காணும்.

7 ம் மாதம் : சிசுவின் எலும்புகள் வலுவுற்று மூன்று ராத்தல் (1.5kg) எடையுடன் இருக்கும். குடல், கொப்பூழ், சுவாசாசயங்கள் அகன்று கைகால்கள் முதலியன தெளிவு பெறும். 72000 நரம்புகளும் முழுமை பெறும். மூத்திரக்காய்கள் (Kidney) வலுத்து, மூளை அழுத்தமாகி, கண்ணிமைகள் திறக்கும். இம்மாதம் அடிவயிறு கனத்து தொப்பூழுக்கு முன்னால் இரு அங்குலம் தள்ளும். சிலருக்கு மிக்க வயிற்றுவலியும், பொய்க்கர்ப்பமாக இருப்பின் பிரசவ வலியும் தோன்றும்.

8 ம் மாதம் : சிசு நான்கு ராத்தல் (1.814 kg to 2.721kg) எடையுடன் 16 அங்குல நீளமும் இருக்கும். உடலில் அதிகம் மாவு படிந்தும், சிவந்தும், மயிர் துவாரங்களும், அதன் குருத்துகளும் இருக்கும். மூளை வலுத்து ரேகை போன்ற சிவந்த நரம்புகளுடன் காணும். பீஜங்கள் மேலும் சிறிது கீழிறங்கும். இச்சமயம் தாய் உண்ட உணவின் சாரம் தலையுச்சி வழியே சிசுவினுள் சென்று உடலைப் பருக்க வைக்கும். கழிவுப் பொருட்கள் தொப்புழின் வழியே வெளியேறும். சிசுவினுள் அன்னரசம் அன்றி இரத்தம் செல்வது இல்லை. பெண் குறியினுள் விரலை விட்டுப் பார்க்க சிசுவின் தலையை உணரலாம். இச்சமயம் சிலருக்கு பசியின்மையும், அசதியும் காணும்.

9 ம் மாதம் : சிசு முழுமை பெற்று ஆறரை ராத்தல் (2.5kg to 2.9kg) எடையுடன் இருக்கும். ஆண் சிசு எடை சற்று கூடி இருக்கும். மூளை வெண்மையாகவும், சாம்பல் நிறமாகவும் இருக்கும். ஆண் சிசுவின் பீஜங்கள் (விரைகள்) மெதுவாக கீழிறங்கி பீஜக் கொடித்துவாரம் வழியே அந்தப்பையை அடையும். பெண்குறி திறந்து யோனியின் உள்உதடுகளை மேல் உதடுகள் மூடி இருக்கும். அறிவு தோன்றும். உச்சிவழி மூலமாகவே அன்னரசம் அதனதற்குச் செல்லும். சிசு தலை வணங்கி, கண்மூடி, கைகட்டி மார்பின் முன் வைத்து காலை மடக்கித் தவமியற்றும் நிலையில் இருக்கும். இம்மாதம் உயிர் வரும் என்று கூறுவர். அப்படியாயின் இதற்கு முன்னால் பிறக்கும் குழந்தை பிழைப்பது அரிது. அல்லது அற்ப ஆயள் உடையது. இம்மாதம் தாயின் வயிறு நெஞ்சுக்குழிவரை பருத்திருக்கும். மேலும் இச்சமயம் ஒருசிலருக்கு நச்சுவழி ஏற்படும்.

10 ம் மாதம் : சிசு 22 அங்குல நீளமும், ஏழு ராத்தல் (3.175kg) எடையுடன் இருக்கும். பிரசவத்தில் தீயும், காற்றும் கூடி அபானவாயுவின் சக்தியால் சிசுவை தலைகீழாகத் திருப்பி யோனி வழியே தலை வெளிப்படும். இம்மாத தொடக்கத்தில் இருந்தே தாயின் யோனியில் இருந்து வெண்ணிற பிசின் போன்ற திரவம் தோன்றும். இதுவே பிரசவ அறிகுறியாகும். சிலருக்கு சீதபேதியும் ஆகும். இம்மாத முடிவிற்குள் பிரசவ வலியுடன் குழந்தை நலமுடன் பிறக்கும்.


கருவில் அமையும் உடலின் தன்மை :

        கருவில் தோன்றும் பொழுது நமது சித்த மருத்துவ முறையின் அடிப்படை தத்துவமாகிய முக்குற்றகளின் தன்மையை முதன்மையாகக் கொண்டே அமைகிறது. அதாவது வாதம் வாயுவின் தன்மையை ஒத்தும், பித்தம் நெருப்பின் தன்மையை ஒத்தும், கபம் நீரின் தன்மையை ஒத்தும் இருப்பதால் நாத - விந்து ஒன்றாக இணையும் போது இந்த முக்குற்றங்களில் எது அதிகமாக நாத - விந்துவில் கலக்கிறதோ, அதுவே கருவினுள் அமையும் சிசுவிற்கும் பற்றி வாத உடல், பித்த உடல், கப உடல், கலப்பு உடல் என்று அமைகிறது.

        இதில் வாத, பித்த, கப உடல்கள் முறையே அதம, மத்திம, உத்தம உடல்கள் எனப்படும். இதில் நாய், நரி, ஒட்டகம், எலி, பருந்து, காகம், கோட்டான் முதலியன வாத உடலுக்கும், புலி, பூனை, கரடி, குரங்கு, பாம்பு முதலியன பித்த உடலுக்கும், சிங்கம், யானை, குதிரை, பசு, எருது, கருடன், அன்னம் முதலியன கப உடலுக்கும் உதாரணமாவதால் அந்த வகை உடலினரும் இவற்றின் குணங்களை பெற்றிருப்பர். இந்தவகை உடல்களின் அமைப்பு, குறி குணங்கள், உண்டாகும் நோய்கள் பற்றி பார்ப்போம்.

1) வாத உடல் : உடல் பருத்து, குளிர்ந்து, அசதியுடன், கருமை நிறமாக இருக்கும். மந்த புத்தியும், அசட்டையும், பெண் ஆசையும், அதிக உணவும், அதிக காரமும், பொய்யும் இவரது குணமாகும். இவர்களுக்கு நாடி மெதுவாக நடக்கும். வயிறு உப்புசம், வாயு திரட்சி, நீர்க் கிரிச்சரம், கிராணி, நீராமை, சீதபேதி, சூலை, மூலம், அண்ட வாயு, மகோதரம் போன்ற நோய்கள் ஏற்படும்.

2) பித்த உடல் : உடல் மெலிந்து, சூடாக, வெண் பசுமை நிறத்தில் இருக்கும். அதிக பெண் ஆசையும், குறைந்த உணவும், அதிக புளிப்பும், கடினமான செயல்களை செய்வதும், பொய்யும், மெய் நூல்களை ஆராய்வதும், இனிய சொற்களால் பெரியோரை உபசரிப்பதும், கடைக்கண் சிவந்து இருப்பதும், இளநரையும் இவரது குணமாகும். இவர்களுக்கு நாடி விரைவாக நடக்கும். இவர்களுக்கு உடல் சூடு, அஸ்தி சுரம், எரிச்சல், உஷ்ண வாயு, சோபை, பைத்தியம், மனக்கவலை, தாகம், மயக்கம், தயக்கம், ரத்த பித்தம், பிரமேகம், பெரும்பாடு (பெண்கள்) போன்ற நோய்கள் ஏற்படும்.

3) கப உடல் : உடல் தணிந்து வியர்வையுடன், சிவந்த நிறமாக இருக்கும். அதிக இனிப்பும், அடக்கமும், தெளிவான மற்றும் முடிவான வார்த்தையை பேசுவதும், பெண் ஆசையும், சமய விருப்பமும், உண்மை போல பொய் பேசுவதும், நீண்ட தலை முடியும் இவரது குணமாகும். இவரது நாடி அதிக மிரட்சியுடன் பலவீனமாக இருக்கும். இவர்களுக்கு ஈளை, சயம், மந்தார காசம், சுவாச காசம், பாண்டு, சோபை, காமாலை, சுரம், சன்னி, விஷதோடம், கரப்பான், விரணம், மாரடைப்பு, தூக்கம் போன்ற நோய்கள் ஏற்படும்.

4) வாத பித்த உடல் : உடல் மெலிந்து, கருமை நிறத்தில் இருக்கும். கோபம், அறிவின்மை, பெண் ஆசையும், பொய் கலந்து பேசுதல், உணவில் அதிக காரமும், புளிப்பும் இவரது குணமாகும். இவர்களுக்கு செரியாமை, வாந்தி, ஏப்பம், உஷ்ண வாயு, பசியின்மை, குன்மம், உடல் உளைச்சல், கை கால் அசதி, சோர்வு, தாது நஷ்டம், நீர் எரிச்சல் ஆகிய நோய்கள் ஏற்படும்.

5) வாத கப உடல் : உடல் தடித்தும், மதயானை போன்ற நடையும், சிவந்த நிறமாகவும் இருக்கும். யோகப் பயிற்சி, பெண் ஆசையும், உணவில் அதிக புளிப்பும், காரமும் குணமாகும். இவர்களுக்கு இருமல், ஈளை, சுரம், சன்னி, மந்தார காசம், திமிர், உளைச்சல், உள்வீச்சு, புறவீச்சு, வீக்கம், வெடிசூலை போன்ற நோய்கள் ஏற்படும்.

6) பித்த வாத உடல் : உடல் வரண்டு, வெள்ளை சிவப்பு நிறமாக இருக்கும். அறிவுடைமை, குயிலின் குரலோசை, நறுமணங்களில் பிரியம், சிணுக்கிருமல் ஆகியவற்றுடன் உணவில் அதிக காரமும் புளிப்பும் விரும்புவர். இவர்களுக்கு முறைசுரம், செரியாமை, வயிறு இரைச்சல், கிராணி, குன்மம், நீர்க்கோவை, வீக்கம், ஆயாசம், மயக்கம், மூர்ச்சை, மூலவாயு, சூலை, தாது நஷ்டம் போன்ற நோய்கள் ஏற்படும்.

7) பித்த கப உடல் : உடல் செண்பக மலரின் நிறத்தில் இருக்கும். தர்ம சிந்தனை, கற்றோரை ஆதரித்தல், இனிய குரலோசை, நடுநிலையான யோக பயிற்சி, அதிக பெண் ஆசையும் இவரது குணமாகும். இவர்களுக்கு காமாலை, வயிறு பொருமல், உளமாந்தை, சோபை, பீனிசம், எலும்பு சுரம், ஈளை, குருதி வீக்கம், கண் காது மலம் மஞ்சளாக இருத்தல் போன்ற நோய்கள் ஏற்படும்.

8) கப பித்த உடல் : உடல் சிவப்பு, பசுமை நிறமாக இருக்கும். சிவந்த மயிர்கள், வெடிப்பான குரலோசை, சத்திய நெறி, பெண் வசியம், அதிக இனிப்பும் புளிப்பும் விரும்புவர். இவர்களுக்கு இருமல் சுவாசம், வாந்தி, விக்கல், பாண்டு, வீக்கம், மாரடைப்பு, குளிர் சுரம், அதிசாரம், உளைச்சல் போன்ற நோய்கள் ஏற்படும்.

9) கப வாத உடல் : உடல் தடித்தும், கருப்பு சிவப்பு நிறமாக இருக்கும். பலகலைகளை அறிதல், யோகங்களை கற்றல், தைரியம், பெரியோரை ஆதரித்தல், பெண் ஆசையும், அதிக காரமும் புளிப்பும் விரும்புவர். இவர்களுக்கு சன்னி, வலி, வீக்கம், சூலை, ஈளை, இருமல், தோடம், சோபை, வயிறு பொருமல், பாண்டு, பக்கவாதம், சக்தி, குன்மம், விக்கல் முதலிய நோய்கள் ஏற்படும்.

இவை தவிர மேற்கூறிய உடலினருக்கு வாத, பித்த, கபம் அதிகரிக்கும் போது மேலும் சில நோய்கள் ஏற்படும். அவை,


வாதம் அதிகரித்தால்...

1) வாத உடலினர்க்கு - உள்வீச்சு, புறவீச்சு, திமிர், ஆனந்த வாயு, நரம்பு இழுப்பு, பக்கசூலை, தொடை-குறுக்கு-விலா-பிடரி-நெஞ்சு-நரம்பு இவற்றில் வலி, உடலில் குத்தல், மாரடைப்பு போன்ற நோய்களும்,

2) பித்த உடலினர்க்கு - அசதி, செரியாமை, புளியேப்பம், தாது நஷ்டம், தலை கிறுகிறுப்பு, பைத்தியம், வலி, குன்மம், வாந்தி, சூலை, விக்கல், அரோசகம், ஈரல் வலி, மார்பு வலி போன்ற நோய்களும்,

3) கப உடலினர்க்கு - குன்மம், சுவாச காசம், மாரடைப்பு, குரல் கம்மல், வாய்நீர் ஊறல், திமிர் வாயு, வலி, இழுப்பு, பாண்டு, மயக்கம், தயக்கம், நா வழுவழுப்பு, மலத்துடன் சீதம் விழுதல், உடல் குத்தல் போன்ற நோய்களும் ஏற்படும்.


பித்தம் அதிகரித்தால்...

1) வாத உடலினர்க்கு - அதிசாரம், பெரும்பாடு, உளைச்சல், அக்னி மாந்தம், சூலை, ரத்த பிரமேகம், நீர்க்கோவை, கரப்பான் போன்ற நோய்களும்,

2) பித்த உடலினர்க்கு - சயம், சக்தி, அதிசாரம், அஸ்தி சுரம், வயிறு வலி, குன்மம், மூலவாயு, நாக்கு கசப்பு, இரவில் கனவு, பைத்தியம், எரிவு, தாகம் முதலிய நோய்களும்,

3) கப உடலினர்க்கு - சயம், இருமல், சுவாச காசம், நாசி நோய், விக்கல், கொட்டாவி, மந்தார காசம், விப்புருதி போன்ற நோய்களும் ஏற்படும்.


கபம் அதிகரித்தால்...

1) வாத உடலினர்க்கு - சன்னி, வலி, நளிர் சுரம், மலக்கட்டு, இளைப்பு, இருமல், வாந்தி, விரணம், சோர்வு, மயக்கம், வீக்கம், சூலை, பாண்டு, தனுர்வாதம், தோஷம் போன்ற நோய்களும்,

2) பித்த உடலினர்க்கு - பசியின்மை, மூலக்கடுப்பு, தோஷம், வாந்தி, வீக்கம், சோகை, காமாலை, இருமல், குளிர் சுரம், நாக்கு வழுவழுப்பு போன்ற நோய்களும்,

3) கப உடலினர்க்கு - சன்னி தோடம், சுவாச அடைப்பு, வீச்சு, மயக்கம், மூர்ச்சை, விக்கல், வியர்வை, வயிற்று பொருமல் முதலிய நோய்களும் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக