வியாழன், 9 ஜூலை, 2020

உடற்கூறியல் - 3 (எலும்பியல் - Osteology)

(a) மண்டை (தலை) எலும்புகள் :

மண்டை (தலை) எலும்புகள் கபாலம், முகம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

தலை எலும்புகள் - 22

கபால எலும்புகள் - 8

பிடர் - 1, பித்திகை - 2, கேநாரம் - 2, நெற்றி - 1, சதுகம் - 1, பாடீரம் - 1

முக எலும்புகள் - 14

நாசி - 2, மேல்தாடை - 2, அசுரு - 2, கவுள் - 2, தாலு - 2, கீழ்சுருள் - 2, கூடக - 1, கீழ்த்தாடை - 1

இதில் செவி, பற்கள், கரோடிய எலும்புகள் இந்தக் கணக்கில் சேர்க்கவில்லை.

கபால எலும்புகள் :

1) பிடர் எலும்பு (Occipital Bone) : பிடர் எலும்பு கபாலத்தின் பின் பகுதியில் கீழ்ப் பகுதியாய் இருக்கிறது.இது நாற்கோண வடிவில் அமைந்த வளைந்த எலும்பு ஆகும். இதுவே தலையைத் தாங்கும் வேலையைச் செய்கிறது. இதில் மகாதொளை அமைந்துள்ளது.

  1. மகாதொளை (Foramen Magnum) : பிடர் எலும்பின் மையத்தில் அமைந்த இந்த மகாதொளையினூடாகக் கசேருக் கொடி எனும் முள்ளந்தண்டு செல்கிறது.

2) பித்திகை எலும்பு (Parietal Bone Right and Left) : பித்திகை எலும்புகள் இரண்டும் கபாலத்தின் இரு பக்கங்களிலும் மேற்பகுதியாக அமைந்துள்ளது. இவை கிட்டத்தட்ட சதுர வடிவில் அமைந்திருக்கும்.

நெற்றி எலும்பு (Frontal Bone) : இது கொக்கு மட்டி வடிவில் அமைந்த தகட்டெலும்பு. இது விவரிப்பதற்கு இரண்டு பங்குகளாகப் பிரிக்கப்படும். அவை நெற்றியை உண்டாக்கும் நெற்றிப் பங்கு, கண்குழி மற்றும் நாசிக் குழியை உருவாக்கும் மடக்குப் பங்கு.

  1. நெற்றிப் பங்கு (Squama) : இதன் மேல்பகுதி சற்று வளைந்து இருக்கும். இதன் கீழ் மையப் பகுதியில் முன்பிணைப்புகளின் எச்சங்கள் காணப்படும், இது குழந்தைகளில் இந்தப் பொருத்தானது நுதல் எலும்பை இரண்டாக பிரிக்கின்றது, குழந்தையின் வளர்ச்சியின் போது  இது படிப்படியாக மறைந்துவிடும்.
  2. மடக்குப் பங்கு (Pars Orbitalis) : இந்தப் பகுதி இரண்டு முக்கோண வடிவ தகடுகள் உள்ளது. இவை கண்குழியை தங்கும் மேற்பகுதியாகும். இவைகளுக்கு மத்தியில் ஆறு குழிகளை உடைய அறுவாயை கொண்டுள்ளது.

கேநார எலும்பு (Temporal Bone) : கபாலத்தின் இரு பக்கங்களிலும் சுவர்போலக் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது வல்க பாகம், குசுக பாகம், கிராவ பாகம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

  1. வல்க பாகம் (Squama) : இது கேநார எலும்பின் முன்மேல்பகுதியாகும்.
  2. குசுக பாகம் (Petromastoid) : இது இது இந்த எலும்பின் பிற்ப்பகுதியாகும். இதன் வெளிப்பக்கம் சற்றே சொறிவுள்ளதும், அநேக சிறு சிறு துவாரங்களையும் கொண்டிருக்கும்.
  3. கிராவ பாகம் (Tympanic) : இது திண்மையும், வன்மையும் கொண்டது. இது பிடர் எலும்புக்கும், சதுக எலும்புக்கும் இடையே ஆப்பு போலச் செருகப்பட்டு இருக்க உதவும்.

சதுக எலும்பு (Sphenoid Bone) : இது கபாலத்தின் நடுவே அமைந்த தரைதள  எலும்பாகும். இது சிறகு விரிந்த வௌவால் அல்லது பட்டாம்பூச்சியைப் போல இருக்கும். இதைக் காண்டம், பெருஞ்சிறகு, சிறுஞ்சிறகு, பாதவலிகம் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

        1) காண்டம் (Corpus) :

  • இதன் மேற்பகுதியில் பாடீர எலும்புடன் பொருந்தும் பாடீர விகமும் பார்வை நரம்புகள் செல்ல ஒரு பார்வை தொளையும், முகுளம் தங்கும் பகுதியும் உள்ளது.
  • இதன் பிற்பகுதி சதுர வடிவில் பிடர் எலும்புடன் பொருந்தும் மகாவிகம் உள்ளது.
  • இதன் முன்பகுதியில் உள்ள தகடானது பாடீர எலும்புடன் பொருந்தும்.
  • இதன் கீழ்ப்பகுதியில் உள்ள ஏராப்புருவம் எனும் பாடீர முள் கூடக எலும்புடன் பொருந்தும்.இந்தப் பகுதியில் பாதவகாதம் எனும் துவாரம் உள்ளது. இதன் வழியே தொண்டை நரம்புகள் செல்கிறது.

        2) பெருஞ்சிறகு (Alisphenoid) : இவை காண்டத்தின் இரு பக்கங்களிலும் இருந்து எழும்பிய பலமான தகடுகள் ஆகும். இதன் மேல்பகுதி சற்று குடைந்ததைப் போலவும், மேல்பகுதி குவிந்ததைப் போலவும், முன்பகுதி குவளையைப் போலவும் இருக்கும்.

        3) சிறுஞ்சிறகு (Orbito-Sphenoid) : சதுக எலும்பின் முன் பகுதியிலிருந்து எழும்பி அதன் புறப்பகுதியை நோக்கிச் செல்லும் மெல்லிய தகடு போன்ற அமைப்பே சிறுஞ்சிறகுகள் எனப்படும்.

        4) பாதவலிகம் (Pterygoid) : காண்டத்தின் பக்கத்தில் பெருஞ்சிறகு எழும்பும் இடத்தில் துவங்கி கீழே இறங்கி நிற்கும்.இதில் இரண்டு தகடுகள் இருக்கும். இவை முன்பகுதியில் பொருந்தியும், பின் பகுதியில் பிரிந்தும் பிரிந்தும் காணப்படும்.

        5) சதுகச்சுருள் : இரண்டு மெல்லிய வளைந்த தகடாக அமைந்த எலும்புகள். இவை      பதினைந்து வயது வரை சதுக எலும்புடன் இணையாமல் இருக்கும். பிறகு இதன் உள்பகுதி பாதவவிகமும், சதுக வேருக்கும் இடையே பொருந்தி வெளிப்பகுதி தாலு எலும்புடன் சந்திக்கும்.

பாடீர எலும்பு (Ethmoid Bone) : இது சதுர வடிவம் கொண்ட மெல்லிய எலும்பாகும். இது கபாலத்தின் அடியில் கண்குழி இரண்டுக்கும் மத்தியில் சொருகப்பட்டிருக்கும். இதில் திகந்த (சல்லடை) தகடு, இலம்பத் தகடு, அரைத் திரளையென மூன்று பகுதிகளை உடையது.

  1. திகந்த தகடு (Cribriform Plate) : இது கபாலத்தின் முன்குழியின் நடுவில் நெற்றி எலும்பின் கண்குழி தகடுகளுக்கு இடையில் இருக்கும்.
  2. இலம்பத் தகடு (Ethmoidal Labyrinth) : திகந்த தகட்டின் கீழ்ப்பகுதியிலிருந்து நாசி அறைகள் இரண்டுக்கும் இடையில் இருக்கும்.
  3. அரைத் திரளை (Perpendicular Plate) : இது ஏராளமான அறைகள் கொண்டது. இவைகள் ஒன்றோடொன்று தொடர்பு இல்லாமல் இருக்கும். இதன் முன்பகுதி அதிக எண்ணிக்கையில் அமைந்த சிறிய அறைகளைக் கொண்டு நாசியின் கீழே நடுக்கால்வாயுடன் இணையும். இதன் பின்பகுதி குறைந்த எண்ணிக்கையில் பெரிய அறைகளைக் கொண்டு நாசியின் மேல் கால்வாயுடனும், சதுக அறையோடும் இணையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக