வெள்ளி, 31 ஜூலை, 2020

உடற்கூறியல் -16 (உடலின் வேகங்கள் பதினான்கு)

நம் உடலில் இயற்கையாய் தோன்றும் வேகங்கள் பதினான்கு. இவற்றைத் தடுத்தாலோ, அடக்கினாலோ நோய்கள் ஏற்படும். அவை யாதெனில்..,

அபான வாயு : இதை தடுத்தாலோ, சிறிது சிறிதாக வெளியேற்றினாலோ மார்பு நோய், வாதகுன்மம், குடல் வாயு, உடல் முழுதும் குத்தல், குடைச்சல், வல்லை வாதம் ஏற்படும்.

தும்மல் : மூக்கில் உள்ள கிருகர வாயுவின் தொழிலாகிய தும்மலை தடுத்தால் அது சூடாகி மேலேறும். அதனால் தலை முழுவதும் வலி, உடல் தெரித்து விழுவது போலத் தோன்றுதல், முகவாதம், இடுப்பு வலி ஏற்படும்.

சிறுநீர் : இதைத் தடுத்தால் நீரடைப்பு, நீர்த் தாரையில் புண், சீழ் மற்றும் ரத்தம் வடிதல், ஆண்குறி சோர்வுடன் குத்தல், மூட்டுகளில் வலி, வயிற்றில் அபான வாயு சேர்தல் ஏற்படும்.

மலம் : இதைத் தடுத்தால் அபான வாயு பெருகி சலதோடம், முழங்காலின் கீழே நோய் ஏற்படும். இந்த அபான வாயு சூடாகி மேலேறி தலையில் சேர்ந்து தலைபாரம், ஒலியுடன் அபான வாயு பிரிதல், உடல் வலிமை குறைதல் ஏற்படும்.

கொட்டாவி : இதைத் தடுத்தால் முகம் வாடல், இளைப்புக்குறி காணுதல், செரியாமை, நீர்நோய், வெள்ளை நோய், அறிவு மங்கல், வயிற்றில் நோய் ஏற்படும்.

பசி மற்றும் தாகம் : இவற்றைத் தடுத்தாலோ அடக்கினாலோ உடல் உறுப்புகள் சரிவர இயங்காது, சூலை, பிரமை, உடல் இளைப்பு, முக வாட்டம், எலும்பு சந்துகளில் நோய் ஏற்படும். மேலும் பலநாள் பசியை அடக்கி வர மூலத்தில் சூடு கண்டு அதனால் தாதுக்கள் வற்றி இளைப்பு நோய் ஏற்படும்.

இருமல் மற்றும் இளைப்பு : இவற்றில் இருமலை தடுத்தால் கடும் இருமல், மூச்சுக் காற்றில் கெட்ட நாற்றம், தமரக (இதயம்) நோய் ஏற்படும். இளைப்பை தடுத்தால் அதிக வெப்பம் உண்டாகி நீர் மேகம், குன்மம், மூர்ச்சை, குளிர் ஏற்படும். மேலும் தும்மலை தடுத்தால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும்.

தூக்கம் : இதை அடக்கினால் தலைக்கணம், கண் சிவந்து பீளைகட்டி எரிதல், செவிட்டுத் தன்மை, தெளிவற்ற பேச்சு, சோம்பல் ஏற்படும்.

வாந்தி : இதை அடக்கினால் புழுக்கடியால் ஏற்படும் தடிப்புகள் போன்ற தடிப்புகள் காணும், நமைச்சல், பாண்டு, கண்நோய், பித்த விடபாகம், சுரம், இரைப்பு, இருமல் ஏற்படும்.

கண்ணீர் : இதைத் தடுத்தால் தமர்வாயு, பீனிசம், கண்நோய், தலையில் புண் ஏற்படும்.

சுக்கிலம் : இதைத் தடுத்தால் சுரம், நீர்க்கட்டு, தானாக விந்து வெளியேறுதல், கைக்கால் மூட்டுகளில் நோய், மாரடைப்பு, வெள்ளை ஏற்படும்.

மூச்சு : இதை அடக்கினால் இருமல், வயிறு பொருமல், சுவை அறியாமை, சூலை நோய், சுரம், வெட்டை ஏற்படும். (இதன் காரணமாகவே ஹடயோக பிராணாயாம பயிற்சிகளில் வரும் மூச்சை அடக்கும் கும்பக பயிற்சி கூடாது என்று தமிழ்ச் சித்தர்கள் தெளிவுபட கூறினர். சித்தர்கள் வகுத்த யோக முறைகளில் மூச்சு தானாக அடங்கும் முறைகள் மட்டுமே நமக்கு அளிக்கப்பட்டது..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக