திங்கள், 13 ஜூலை, 2020

உடற்கூறியல் - 5 (எலும்பியல் - Osteology)

(g) நெஞ்செலும்புகள் (Sternum) :
இது நெஞ்சு அறையின் முன்பக்க நடுவில் இருக்கும் வாள் போன்ற ஒடுங்கிய தகட்டெலும்பு. இதன் மூன்று துண்டுகளுள் வாளின் பிடி போன்ற மேல்பகுதி பரிஞ்சு எனவும், வாளின் அலகு போன்ற நடுப்பகுதி அசி எனவும், வாளின் நுனியை போன்ற கீழ்ப்பகுதி ஏதி என்றும் பெயர் பெரும்.

மேல்துண்டு அல்லது பரிஞ்சு (Manubrim) : இது தடித்த, விசாலமான இரண்டாம் துண்டுடன் பொருந்துகிற வகையில் கீழ்ப்பகுதி ஒடுங்கியும் இருக்கும். இதன் முன்பகுதி குவிந்தும், ஒழுங்கற்றதுமாக இருக்கும். பின்பகுதி கவிந்தும், அழுத்தமாகவும் இருக்கும்.

நடுத்துண்டு  அல்லது  அசி  (Body) : மேல்துண்டை விட நீண்டும், ஒடுங்கியும், மெல்லியதுமாக இருக்கும். குழந்தையில் இது நான்கு எலும்பாக இருந்து ஒன்றாகப் பொருந்தியதால் இதில் மூன்று மெல்லிய கோடுகள் இருக்கும்.

அடித்துண்டு ஏதி (Xiphoid) : இது மெல்லியதும், ஒடுங்கியதும், வால் போன்றும் இருக்கும். இதன் மேலோரம் அசியுடன் பொருந்தும். இது சிலரில் கூராகவும், சிலரில் விசாலமாகவும், சிலரில் துளை உள்ளதாகவும், சிலரில் கவை போன்றும் இருக்கும்.

(h) பழு எலும்புகள் (Ribs) :
இவை நெஞ்சறையில் ஒரு பக்கத்திற்கு பன்னிரெண்டாக இருக்கும் வலிமையான, வளைந்த, நீண்ட, மெல்லிய எலும்புகலாகும். முதல் ஏழு பழுக்களும் முன்னே நெஞ்செலும்புடனும், பின்னே முள்ளந்தண்டுடனும் இணைந்திருக்கும். இவை முழுப்பழு எலும்புகள் எனப்படும். அடுத்த ஐந்து பழுக்களும் பின்னே முள்ளந்தண்டுடனும், முன்னே மற்ற இது பழுக்களுடனும் இணைந்திருக்கும். இவை குறைப்பழு எலும்புகள் எனப்படும்.

(i) வாகெலும்புகள் (Scapula) :
இது தோளின் பின்பகுதியில் இருக்கும் முக்கோண வடிவ பெரிய தகட்டெலும்பு. இது முதுகின் மேல்பகுதியில் இரண்டாம், ஏழாம் பழுக்களிடையே இருக்கும். தோள் மூட்டுக்கு மேலே அதற்குப் பாதுகாப்பாக முக்கோண வடிவ பெரிய தகடு பாதுகாப்பாக இருக்கும்.

செந்துரு எலும்பு (Clavicle Bone) :
இது இருவளைவுள்ள மெல்லிய எலும்பு. இது நெஞ்சின் முன்மேல் பகுதியில் முதல் பழுவுக்கு மேலே இணைந்துள்ளது. நமது உடலில் படுக்கைவசமாக உள்ள ஒரே எலும்பு இதுவேயாகும். இதன் உள்பகுதியில் முன் குவிவும், வெளிப்பகுதியில் முன் கவிவும் கொண்டிருக்கும். இது தோள்பட்டை எலும்புடனும், நெஞ்செலும்புடனும், முதலாம் பழுவுடனும் இணைந்து இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக