செவ்வாய், 14 ஜூலை, 2020

உடற்கூறியல் - 7 (எலும்பியல் - Osteology)

(k) அனாமிகை எலும்பு (Innominate) :
அனாமிகை எலும்புகள் வலது, இடது இடுப்புகளில் இருக்கும் சதுர வடிவமும், திருகலுமான இரண்டு பெரிய தகட்டெலும்புகள் ஆகும். இது பாலிகம், ஆசனம், மேகனம் என மூன்று பகுதிகளைக் கொண்டது. குழந்தை பருவத்தில் இந்த மூன்று பகுதிகளும் வேவேறாய் இருந்து எலும்பின் வெளிப்பக்கத்தின் நடுவில் இருக்கும் கம்சம் என்ற குழியில் சந்தித்து பொருந்தும்.

பாலிகம் (Illium) : இதன் பின்பகுதி கவிந்தும், முன்பகுதி குவிந்தும் இருக்கும். இதன் குறுத்த மேல்பிறை ரேகை புருவத்தின் பின்பகுதிக்கு சற்று முன்னதாகத் துவங்கி மேல்பீடிகாசன அண் என்னும் வெளியில் முடியும். கீழ்நடுப்பிறை ரேகைகளுக்கு இடையில் உள்ள பகுதிமேல், கீழாகக் கவிந்தும், முன், பின்னாகக் குவிந்தும் காணப்படும்.

ஆசனம் (Ischium) : இது அனாமிகை எலும்பின் பின் கீழ்பகுதியாக அமைந்தது. இதன் காண்டம் வலிமையான முக்கோண வடிவம் கொண்டது. இது கம்சம் என்ற குழியில் பெரும்பாலான பகுதியை உண்டாக்குகிறது. இதன சாகைப் பகுதி உள்புறம் குவிந்தும், வெளிப்புறம் கவிந்தும் காணப்படும்.

மேகனம் (Pubis) : இது அனாமிகை எலும்பின் முன்பகுதியாகும். இது கம்சம் என்ற குழியின் ஐந்தில் ஒருபங்காக இருக்கும். இதன் மேல்பகுதியில் இருக்கும் திடல்மேகனமும், பாலிகையும் இணையும் மேகன பாலிகை புடைப்பு எனப்படும். இதன் உள்பக்கத்தில் வட்டவடிவ முகப்பு உண்டு. இந்தப் பகுதியில் அனுசங்கி எனும் முகப்பு உண்டு. இவை மூன்றும் இணைந்து கூபகத்தை உருவாக்குகிறது.

கூபகம் (Pelvis) : கூபகக் கூடு மேகன பாலிகை ரேகை எனும் புருவத்தால் மேல்கூபகம், கீழ்கூபகம் என இரண்டு பகுதியாகப் பிரிக்கப்படுகிறது. மேல்கூபகத்தை வலமிடமாகப் பாளிகங்களும், பின்பக்கத்தில் முள்ளந்தண்டின் கீழ்ப்பகுதியும் சூழ்ந்திருக்கும். இந்தக் கூபகக்கூடு குடல்களைத் தாங்கும். மேகன பாலிகை ரேகைக்குக் கீழேயுள்ள கீழ்க்கூபகத்தில் மேகன புருவம், மேகன முள், மேகன பாலிகை ரேகை, பீடிகை அடியின் முன்னோரம், பீடிகை புடைப்பு இவைகள் சேர்ந்த பகுதி மேல்பந்தை எனப்படும்.
இதன் கீழ்ப்பகுதியாகிய கீழ்ப்பந்தையானது மூன்று முக்கோண வளையங்களையும், பல்வேறு வளைவுகளையும் கொண்டது. இவற்றில் உள்ள பீடிகாசன வளைவுகள் இரண்டும், பீடிகாசன விசிகளால் கீழ்ப்பந்தைகளிலிருந்து பிரிக்கப்பட்டு இருப்பதால் கீழ்ப்பந்தை சதுர வடிவில் இருக்கும். ஆண் கூபகத்திற்க்கும்,, பெண் கூபகத்திற்க்கும் சற்று வித்தியாசம் உள்ளது. ஆண் கூபகம் தடிமனும், பலமும், வலிமையையும், கூபக அறைகள் ஆழமும், ஒடுக்கமும் உடையது. பெண் கூபகம் இலேசாகவும், அழுத்தமாகவும் இருக்கும். பாலிக பள்ளங்கள் பெரியதும், கூபக அறைகள் விசாலமாகவும் இருக்கும்.

(l) அதகாயம் :
இடைபகுதிக்கு கீழேயுள்ள எலும்புகள் அதகாயம் எனப்படும். இது தொடை, கால், பாதம் என மூன்று பிரிவுகளை உடையது. இவை உற்காயத்தில் உள்ள புயம், முன்கை, கை என்னும் பகுதிகளுக்கு இணையானது.

தொடை (Femur) :
தொடையில் ஒரு எலும்பு மட்டுமே உள்ளது. நமது உடலில் உள்ள எலும்புகளில் அதிக நீளமும், சரீரத்தின் ஒட்டுமொத்த பாரத்தையும் தாங்குவதால் அதிக வலிமையையும் கொண்ட எலும்பாகும். இதன் மேல்பகுதியில் குமிழும், கழுத்தும், பெரியதும், சிறியதுமான இரண்டு கணுக்களும் உள்ளது. இந்தப் பகுதி இடுப்பு எலும்புடன் பொருந்தி நிற்கும். இதன் கீழ்பகுதி மேல்பகுதியை விடவும் பெரியதாய் இருக்கும். இதுவே நமது கால் மூட்டின் மேல்பகுதியை உண்டாக்குகிறது. இந்த எழும்போடு கால் எலும்பு இணையும் இடத்தில் கபோலி எலும்புக் கால் மூட்டின் கிண்ணம் போன்ற முழங்கால் சில்லை உருவாக்குகிறது.

முழங்கால் சில் எனும் கபோலி எலும்பு (Patella) :
இது சிறுத்தும், தட்டையாகவும், முக்கோண வடிவமும் கொண்டு முழங்காலின் முன்பகுதியில் இருக்கிறது. இது தொடை எலும்பின் கீழ் முனையையும், கால் எலும்பின் மேல் முனையையும் பாதுகாக்கிறது. இதன் முன்பகுதி குவிந்தும், பின்பகுதி அழுத்தமாக வட்ட வடிவிலும் இருக்கும்.

கால் எலும்புகள் :
நமது காலில் நளகம், சரகம் என்ற இரண்டு எலும்புகள் உள்ளது.

நளக எலும்பு (Tibia) :
இது காலின் முன்பகுதியில் உள்ள இரண்டாவது பெரிய எலும்பு ஆகும். தொடை எலும்பைவிட சிறியதும், மற்ற எலும்புகளை விடவும் பெரியதுமாகும். இது கால்பகுதியில் உள்புறமாக அமைந்துள்ளது. இது மூன்று கோணலாய் மேல்பகுதி சற்று அதிகம் பருத்தும், வரவரச் சிறுத்தும், மறுபடி கீழ்பகுதியில் சற்று பருத்தும் இருக்கும்.


சரக எலும்பு (Fibula) :
இது காலின் பின்பகுதியில் உள்ள மெல்லிய எலும்பாகும். இது காலின் வெளிப்பகுதியில் அமைந்துள்ளது. இது நளக எலும்போடு அணைந்து இருக்கும். இது முழங்கால் மூட்டில் இணையாது. இதன் மேல்பகுதி ஒழுங்கற்ற குமிழ்போலத் திரண்டும், நளகத்தின் புறக்கணுவின் கீழ்ப்பகுதியுடன் இணைந்து இருக்கும். இதன்அடிப்பகுதி புறங்கால் பகுதியின் பக்கவாட்டில் இணைந்திருக்கும்.

பாதம் (Foot) :
பாதம் அதகாயத்தின் கீழ்ப்பகுதியாகும். இது சரீரத்தின் பாரத்தின் தாங்குவதற்கும், நடப்பதற்கும் உதவும் விசேஷ உறுப்பு. இது குற்பம், புறகுற்பம், அங்குலிகள் என மூன்று வகைப்படும்.

குற்பம் (Tarus) :
குற்ப எலும்புகள் ஏழு. அவை குதி எலும்புகள், சாரி எலும்புகள், கனவி எலும்புகள், நவ்வி எலும்புகள், அகக்கீலவி எலும்புகள், நடுக்கீலவி எலும்புகள், புறக்கீலவி எலும்புகள். குதி எலும்பும், சாரி எலும்பும் சேர்ந்து மேல்வரிசை என்றும், நவ்வி எலும்பும், கீலவி எலும்புகள் மூன்றும் சேர்ந்து கீழ்வரிசை என்றும் அழைக்கப்படும்.

குதி எலும்பு (Calcaneus) :
இது குற்ப எலும்புகளில் பெரியதும், பலமும் கொண்டது. இதன் மேல்பக்கத்தின் பின்பகுதி குதிகால் மொக்கின் மேலோரமாய் உள்ளது. இதன் முன்பகுதியில் முக்கோண கவிவும், பின்பகுதியில் குவிவும், மேல்பகுதியில் ஒடுக்கமும், கீழ்ப்பகுதியில் விசாலமும் கொண்டது.

சாரி எலும்பு (Talus) :
இது காலின் வெளிப்பகுதியில் அமைந்த எலும்பாகும். மேலே நளக எலும்பின் பாரத்தை தாங்கிப் பக்கங்களில் பரடுகளுடன் சந்தித்து கீழே குதி எலும்பில் பொருந்தி முன்பக்கத்தில் நவ்வி எலும்புடன் இணைந்து உள்ளது. இது பெரிய குமிழும், குவிந்த மேல்பக்கமும், விசாலமான சந்தி முகப்பும், கவிந்த கீழ்முகப்பும் கொண்டது. 

கனவி எலும்பு (Cuboid) :
இது பாதத்தின் மேல்பகுதியில் குதி எலும்பிற்கு அடுத்ததாக உள்ளது. இதன் மேல்பகுதியில் கணுவும், பின்பகுதி அழுத்தமான முக்கோண வடிவ கவிவும், உள்பக்கம் தட்டையாகவும், விசாலமாகவும் இருக்கும்.

நவ்வி எலும்பு (Navicular) :
இது காலில் சாரி எலும்புக்கும், கீலவி மூன்றிற்கும் இடையில் உள்ளது. இது முன் குவிவும், பின் கவிவும் பெற்று தோணி போன்ற அமைப்பில் இருக்கும். இதன் உள்பக்கம் திரண்ட கணுவாகவும், வெளிப்பக்கம் விசாலமாகவும் இருக்கும்.

கீலவி எலும்புகள் பொதுவாக ஆப்பு வடிவில் கொண்டவை. இவைகுற்ப எலும்புகளின் கீழ்வரிசையில் இடம்பெற்று இருப்பவையாகும்.

அகக்கீலவி எலும்பு (Medial Cuneiform) :
இது கீலவி எலும்புகளில் பெரியதாகும். இது விசாலமும், சதுரமும், கீழ்ப்பகுதியில் அழுத்தமான சிறு முகப்பும் கொண்டது.இதன் வெளிப்பக்கம் கவிவும், முன்பக்கம் அகன்ற பிறை போன்ற வடிவமும், பின்பகுதியில் முக்கோண கவிவும், மேல்பகுதி ஒடுங்கியும் காணப்படும்.

நடுக்கீலவி எலும்பு (Intermediate Cuneiform) :
இது கீலவி எலும்புகளில்எலும்புகளில் சிறியதாகும். இதன் முன்பக்கம் ஒடுங்கியும், பின்பகுதி முக்கோண வடிவமும், மேல்பகுதி சதுர வடிவிலும், பின்பகுதி விசாலமாகவும்  இருக்கும்.

புறக்கீலவி எலும்பு (Lateral Cuneiform) :
இது நடுக்கீலவி  எலும்பைவிட பெரிதாகவும், அகக்கீலவி எலும்பைவிட சிறிதாகவும் இருக்கும். இது கீலவி எலும்புகளில் நடுத்தரமானது.இதன் முன்பகுதி முக்கோண வடிவிலும், பின்பகுதி நவ்வி எலும்பின் முன்பகுதியில் இருக்கும் புறமுகப்புடன் பற்றுவதற்கு கவிந்தும் நீண்ட சதுரமான மேல்பகுதியும், கீழ்பகுதி திரண்ட கணுவாகவும் இருக்கும்.

புறகுற்பம் (Metatarsals) :
புறகுற்பத்தில் ஐந்து எலும்புகள் உள்ளது. இவை நீள எலும்புகளின் வகையைச் சார்ந்தது. இவை மூன்று கோணங்களைக் கொண்டது. இவை குற்பத்ததுடன் இணையும் இடத்தில் பருத்தும், கீழே வரவரச் சிறுத்தும், மேல்பகுதி குவிவும், கீழ்பகுதி கவிந்தும் காணப்படும்.

அங்குலிகள் (Phalanges) :
கால்விரல் எலும்புகளான அங்குலிகளின் எண்ணிக்கையும், நிரையும் கை அங்குலிகளின் எண்ணிக்கைக்கும், நிரைக்கும் சரியாக இருக்கும். முதல் வரிசை பாத அங்குலிகள், முதல் வரிசை கை அங்குலிகளுக்கு நிகராக இருக்கும். இதன் காண்டம் ஒடுங்கி மேலே குவிந்தும், கீழே கவிவுமாய் இருக்கும். இதன் முன்பகுதி கவிந்தும், பின்பகுதி இரண்டாம் வரிசை அங்குலியுடன் சந்திக்கும். இரண்டாம் வரிசை பாத அங்குலிகள் சிறுத்தும், குறுத்தும் முதல் வரிசையைவிட விசாலமாகவும் காணப்படும். நக அங்குலிகள் கையின் நக அங்குலிகளை விடவும் சிறுத்து தட்டையாகி இரண்டாம் வரிசை அங்குளிகளுடன் பொருந்த விசாலமான அடியும், நகங்களைத் தாங்குவதற்கு விரிந்த நுனியும் கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக