புதன், 29 ஜூலை, 2020

உடற்கூறியல் -13 (நாடிகள், நாளங்கள் மற்றும் நிண நரம்புகள் - Phlebograph and Lymphatic Vessels)


நாடிகள் (Arteries) :

        இருதயத்திலிருந்து இரத்தத்தை உடல் முழுதும் கொண்டு போகிற உருண்ட குழல்களுக்கு, நாடிகள் என்று பெயர். நமது உடலில் மொத்தமாக 72000 நாடிகள் இருக்கிறது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளிலும் உள்ள நாடிகளின் எண்ணிக்கையானது பின்வருமாறு விவரிக்கப்படுகிறது.

நாடி இருப்பிடம்

தொகை

தலையில்

15000

கண்களில்

4000

செவியில்

3300

மூக்கில்

3380

பிடரியில்

6000

கண்டத்தில்

5000

கைகளில்

3000

முண்டத்தில்

2170

இடுப்பில்

8000

விரல்களில்

3000

லிங்கத்தில்

7000

மூலத்தில்

5000

சந்துகளில்

2000

பாதத்தில்

5150

மொத்தம்

72000

நமது உடலில் மொத்தமுள்ள 72000 நாடிகளில் முக்கியமான நாடிகள் பத்து. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

  1. வலது கால் பெருவிரலிருந்து கத்திரிக்கோல் மாறலாக இடது மூக்கைப் பற்றி நிற்பதான இடகலை
  2. இடது கால் பெருவிரலிலிருந்து கத்திரிக்கோல் மாறலாக வலது மூக்கைப் பற்றி நிற்பதான பிங்கலை
  3. மூலாதாரம் தொடங்கி எல்லா நரம்புகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாய் உச்சி துவாரம் வரைக்கும் இருக்கும் சுழுமுனை
  4. கண்ணில் நிற்பதாகிய காந்தாரியும்
  5. உடலெங்கும் நிற்பதாகிய அத்தியும்
  6. உண்ணாக்கில் நின்று சோறு, தண்ணீர் இவைகளை விழுங்கச் செய்யும் சிங்குவை
  7. செவியளவாய் நிற்பதாகிய அலம்புடை
  8. பாதத்தில் நிற்பதாகிய புருடன்
  9. மார்பில் நிற்பதாகிய சங்கினி
  10. குறி குதத்தில் நிற்பதாகிய குரு

நாளங்கள் (Veins) :

        நாடிகளிலிருந்து தந்துகிகள் எனப்படும் மிகச்சிறிய குழாய்களின் வழியே உடல் முழுதும் பரவிக் கறுத்துக் கேட்ட இரத்தத்தை மறுபடியும் இதயத்தின் வலது பக்கத்திற்கு கொண்டுபோகும் குழல்களுக்கு நாளங்கள் என்று பெயர். இந்த நாளங்களில் மிகமுக்கியமான சில நாளங்களின் பெயர் மற்றும் அவற்றின் இருப்பிடம் ஆகியவற்றைக் காண்போம்.

  1. நெற்றி நாளம் (Facial Vein) : நெற்றியின் மத்தியில் இருக்கும் இரண்டு நாளங்கள் அங்கிருந்து கீழிறங்கி உள்கதகண்ட நாளத்துடன் இணையும்.
  2. சிரோ நாளங்கள் (Sinuses) : சிரசின் உள்பகுதியில் இருக்கு சவ்விலிருந்து பிரியும் இந்த நாளங்கள் வழியே மூளையில் உள்ள கேட்ட இரத்தமானது உள்கதகண்ட நாளங்களுக்குச் செல்லும்.
  3. வெளிக்கதகண்ட நாளம் (External Jugular Vein) : இவை கழுத்தில் மூலைவாட்டமாய் மேலிருந்து கீழிறங்கி தோள் நாளங்களோடு இணையும்.
  4. முன்புறகதகண்ட நாளம் (Anterior Jugular Vein) : இது கழுத்தின் மத்தியிலிருந்து கீழிறங்கும்.
  5. உள்கதகண்ட நாளம் (External Jugular Vein) : இவை வலது, இடது பக்கங்களிலிருந்து கண்ட நாடிகளோடு தொடர்ந்து கீழிறங்கி தோள் நாளங்களோடு இணையும்.
  6. உள்கதபுஜ நாளம் (Basilic Vein) : இது புஜத்தின் உள்புறமாய் மேலேறி கைமூல நாளமாகிறது.
  7. வெளிக்கதபுஜ நாளம் (Cephalic Vein) : இது புஜத்தின் வெளிப்புறமாய் மேலேறி கைமூல நாளத்துடன் இணையும்.
  8. கைமத்திய நாளம் (Median Vein) : இது உள்ளங்கையில் இருக்கும் இரத்தத்தை எடுத்துக் கொண்டு மணிக்கட்டில் தொடங்கி முன்னங்கையின் நடுப்பகுதி மேலேறி முழங்கை பகுதியில் இரண்டாகப் பிரியும். இதில் ஒருகிளை உள்கதபுஜ நாளத்துடனும் மற்றொரு கிளை வெளிக்கதபுஜ நாளத்துடனும் இணையும்.
  9. அக்குள் நாளம் (Axillary Vein) : இது அக்குள் நாடிக்கு உள்புறமாய் ஓடுகிறது.
  10. தோள் நாளம் (Sub-Clavian Vein) : இது தோளில் முதல் பளு எலும்பிற்கு மேல் அமைந்திருக்கும்.
  11. முழங்கால் மடிப்பு நாளம் (Popliteil Vein) : இது முழங்கால் மடிப்பு ஸ்தானத்தில் அமைந்திருக்கும்.
  12. தொடை நாளம் (Femoral Vein) : இது தொடையில் உள்பக்கத்தில் இருக்கும். மேலும் இது தொடையிலிருந்து மேலேறி வயிற்றுக்குள் சென்று மறையும்.
  13. பின்னங்கால் நாளம் (External Saphenous Vein) : இது பாதத்தின் வெளி ஓரத்திலிருந்து கணுக்கால் வெளிமுழிக்கு பின்னாகச் சென்று பின்னங்கால் மத்தியில் மேலேறி முழங்கால் மடிப்பு நாளத்துடன் இணையும்.
  14. கால் உள் நாளம் (Internal Saphenous Vein) : இது கால் பெருவிரலில் தொடங்கி கணுக்கால், உள்முழி வழியாக மேலேறி தொடை நாளத்துடன் இணையும்.
  15. மேல்பிரகன் நாளம் (Superior Vena Cava) : உள்கதகண்ட நாளங்கள் இரண்டும் சேர்ந்து உண்டாகி, இதயத்தின் வலது சிரவத்தின் மேல்பக்கமாய் முடிகிறது. இது 3 அங்குல நீளம் கொண்டது. இது இதயத்தின் மேல் பக்கமாய் இருக்கும், தலை, கண்டம், கை முதலியவற்றில் இருக்கும் கெட்ட இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வரும்.
  16. கீழ்பிரகன் நாளம் (Inferior Vena Cava) : இது இதயத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் கால், குடல், சீரண உறுப்புகள், மூத்திரக்குண்டிக்காய், பீஜம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் கேட்ட இரத்தத்தை இதயத்திற்கு வலது சிரவத்திற்கு கொண்டு வரும்.
  17. புப்புச நாளங்கள் (Pulmonary Veins) : நமது உடலில் 4 புப்புச நாளங்கள் உள்ளது. இவற்றில் 2 நாளங்கள் வலது புறத்தில் இருந்தும், 2 நாளங்கள் இடது புறத்தில் இருந்தும் சென்று இதயத்தின் இடது சிரவத்தில் முடியும். இவை சுவாசப்பையில் உள்ள சுத்த இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வருகிறது.
நிண நரம்புகள் (Lympathic Vessels) :

        நமது உடலில் உள்ள கேட்ட நீரை கிரகித்து நாளங்களுக்குக் கொண்டு செல்லும் குழல்களுக்கு நிண நரம்புகள் என்று பெயர். சிறுகுடலில் இருக்கும் அன்னரசத்தை கிரகித்து இரத்தத்திற்கு கொண்டு செல்லும் குழாய்களுக்கு ரசாயனிகள் (Lacteals) என்று பெயர். இவை கண்ணிற்கு தெரியாத அளவிற்கு மிகச்சிறிய அளவிலிருந்து பிறகு ஒன்றோடு ஒன்று சேர்ந்து பெருத்து முடிவில் ஒரே குழாயாகிவிடுகிறது. மூளை தவிர உடலின் மற்ற பாகங்களில் இந்த நிண நரம்புகள் வியாபித்து இருக்கும். இந்த நிண நரம்புகள் சோஷண குழல்கள் என்றும் அழைக்கப்படும்.

        இந்த நிண நரம்புகளுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கட்டிகளுக்குச் சோஷண கிரந்திகள் (Lymphatic Glands) எனப்படும். இவை கழுத்திலும், அக்குள், கால் சந்து மற்றும் குடல் பகுதிகளில் அதிகம் காணப்படும். நமது உடலிற்கு சக்தியளிக்கும் அன்ன ரசம் குறையும்போது இவை உடலில் உள்ள கொழுப்பைக் கிரகித்து உடலுக்குச் சக்தியளிக்கும். உடலில் கொழுப்பு குறையும்போது தேகம் இளைத்து வீங்கி வேதனை செய்யும்.

ரசதாரை (Thoracic Duct) : சிறுகுடலில் இருக்கும் நிண நரம்புகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து முடிவில் ஒரே குழலாகும். இதற்கு ரசதாரை என்று பெயர். இது முள்ளந்தண்டின் மத்தியின் வழியாக மேலேறி இடது தோள் நாளத்துடன் சேர்ந்துவிடும். அன்னரசம் இந்த ரசதாரை வழியாகத் தான் உடல் முழுவதும் பரவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக