வெள்ளி, 31 ஜூலை, 2020

உடற்கூறியல் -15 (தோல், நகம், உரோமம், ஏழுவித உடல் கட்டுகள்)

தோல் / சருமம் (Skin) :
நமது உடலை மூடிக்கொண்டிருக்கிற தோலானது மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. அவை மேல்தோல் (Epidermis), நடுத்தோல் (Dermis), அடித்தோல் (Hypo-Dermis) ஆகும்.
  1. மேல்தோல் (Epidermis) : இது தோலின் மேல்புற எல்லையாகும். இது நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்தல், உடலின் நீர் ஆவியாவதை தடுத்தல், உடலுக்குள் நீர் புகாமல் தடுத்தல், அதிகப்படியான நீரை வியர்வை வழியாக வெளியேற்றல் போன்ற பணிகளைச் செய்கிறது.
  2. நடுத்தோல் (Dermis) : இது தோலின் நடுப்பகுதி அல்லது உள்சருமம் எனப்படும். இது இணைப்பிழைகளால் ஆனது. இதனால் அழுத்தம், இறுக்கம் போன்றவற்றிலிருந்து மெத்தை போலப் பாதுகாக்கிறது. இது தோலில் அதிக ஆழத்தைக் கொண்டுள்ளது. அதனால் இதில் வியர்வை சுரப்பிகள், மயிர்க்கால்கள், தோலை வறண்டு போகாமல் காக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous Gland), நகக்கணு, இரத்த நாளங்கள் ஆகியவை இதில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள பழுப்பும், கருப்பும் கலந்த ஒரு பொருள் (Melanin) நமது தோலுக்கு நிறத்தைத் தருகிறது.
  3. அடித்தோல் (Hypo-Dermis) : இது தோலின் ஒரு பகுதியாக இல்லாமல் நடுத்தோலுக்கு கீழ் அமைந்துள்ள பகுதி. இது எலும்பு, தசை ஆகியவற்றை தோலுடன் இணைக்கும் ஒரு இணைப்புப் பாலமாக உள்ளது.மேலும் நரம்புகள், இரத்தம் ஆகியவற்றை தோலுடன் இணைக்கும் பணியையும் இது செய்கிறது.
நகம் (Nail) : இது வெளித்தோலில் உள்ள ஒருவித புரதப்பொருளால் (Keratin) உண்டாகிறது. இது நமது புறங்கை, புறங்கால் பகுதிகளில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக, சற்று வளைந்த தகடுபோல உள்ள பகுதி. நகத்துக்கும், உடலின் மேல் புறத்தில் அமைந்த மேல்தோலுக்கும் வித்தியாசம் இல்லை.

உரோமம் / மயிர் (Hair) : நடுத்தோலிலிருந்து உரோமம் பிறக்கிறது. சில இடங்களில் உரோமம் அளவில் குறைந்தும், சிரசில் உண்டாகும் ரோமம் அளவில் நீண்டும் காணப்படும். மீசை, தாடி போன்ற பகுதியில் இருக்கும் உரோமம் சற்று தடிமனாக இருக்கும்.

ஏழுவித உடற்கட்டுகள் :
சாரம் : இது உடலையும் மனதையும் ஊக்கமுறச் செய்யும். இது கூடினால் கபம் அதிகரிக்கும், பசி குறையும். இது குறைந்தால் தோல் சுரசுரப்பு, உடல் வருத்தம், வாட்டம், இளைப்பு ஏற்படும்.

இரத்தம் : இது அறிவு, வன்மை, ஒளி, ஒலி செருக்கு இவைகளை நிலைக்கச் செய்யும். இது கூடினால் புருவம், உச்சி, கழுத்து, மார்பு, கொப்பூழ், உதடு, அண்டம், முழங்கால், கணுக்கால், இடுப்பு, கால் பெருவிரல், சுட்டுவிரல், தோலின் உட்புறம், வெளிப்புறம் கொப்புளங்கள் காணும். இடப்பாட்டீரல் (மண்ணீரல்) வீக்கம், கட்டிகள், சூலை, பசியின்மை, ரத்த வாந்தி, ரத்த பித்தம், ரத்த மூத்திரம், மிகச் சிவந்த கண், சிவந்த தடிப்பு, சிவந்த நிறத்தோல், பெருநோய், காமாலை, வெறி முதலியன ஏற்படும். இது குறைந்தால் புளிப்பும் குளிர்ச்சியும் உள்ள பொருளில் விருப்பம், நரம்பு தளர்ச்சி, வறட்சி, உடல் நிறம் மாற்றம் ஏற்படும்.

தசை : இது உடல் உருவத்தை அதன் தொழிலுக்கு ஏற்ப அமைத்தல், எலும்பை வளர்த்தல் போன்றவற்றை செய்யும். இது கூடினால் கண்டமாலை, கிரந்தி, கன்னம், வயிறு, தொடை, ஆண்குறி இவற்றில் கட்டி ஏற்படும். இது குறைந்தால் உடல் சோர்வு, மூட்டுகளில் நோய், தாடை, பிட்டம், ஆண்குறி, தொடை போன்ற இடங்களில் சுருக்கம் ஏற்படும்.

கொழுப்பு : இது சகல உறுப்புகளும் சிரமமின்றி வேலை செய்ய வழவழப்பான பசையை தருகிறது. இது கூடினால் தசை மிகுந்தால் வரும் நோய்களோடு, களைப்பு, பெருமூச்சு, பிட்டம், குறிகள், வயிறு, தொடை, மார்பு போன்ற இடங்களில் தொங்கும் சதை பெருகும். இது குறைந்தால் இடுப்பில் வலிமை குறையும், இடப்பாட்டீரல் வளர்ச்சி, உடல் இளைப்பும் ஏற்படும்.

எலும்பு : இது உடலை ஒழுங்காக நிறுத்தி வைக்கவும், உள்ளுறுப்புகளை பாதுகாக்கவும், உடல் அசைவிற்கு அடிப்படையாகவும் இருக்கும். இது கூடினால் எலும்புகளும், பற்களும் அதிகரிக்கும். இது குறைந்தால் எலும்பு சந்துகளில் வலி, பற்கள் கழன்று விழுதல், மயிர்கள், நகங்கள் வெடித்தல், உதிர்தல் ஏற்படும்.

மஜ்ஜை : இது எலும்பினுள் நுழைந்து அவற்றிற்கு வன்மையும், மென்மையும் தரும். இது கூடினால் உடல் மிகவும் பெருத்தல், விரல் கணுக்களின் அடி பருத்தல், கண் கணத்தல், சிறுநீர் குறைதல் ஏற்படும். இது குறைந்தால் எலும்புகளில் துளை விழுதல், கண்ணில் இருள் கம்மலும் ஏற்படும்.

விந்து : இது கரு உற்பத்திக்கு ஆதாரமாய் விளங்கும். இது கூடினால் பெண்களிடம் காதல் மிகும், கல்லடைப்பு ஏற்படும். இது குறைந்தால் புணர்ச்சியில் விந்து குறைவாக வெளிப்படுதல், ரத்தம் வடிதல், விதையில் குத்தலுடன் வலி, குறியில் அழற்சி மிகுந்து கருத்தல் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக