திங்கள், 27 ஜூலை, 2020

உடற்கூறியல் - 11 (எலும்பு மூட்டியல் / சந்தியியல் - Arthrology)

எலும்பு பந்தனங்கள் (Ligaments) : எலும்புகளை ஒன்றோடு ஒன்று சேர்த்துக் கட்டி வைத்திருக்கும் பலமான சவ்வுக்கு எலும்பு பந்தனங்கள் என்று பெயர்.

மூட்டு (Joints) : எலும்புகள் சேர்ந்திருக்கும் இடத்திற்கு மூட்டு என்று பெயர். மூட்டுகளில் ஒருசில அசையாமலும், ஒருசில லேசாக அசைந்தும், ஒருசில அதிகமாக அசையும்படியும் அமைந்திருக்கும்.
  1. மண்டையோடு, பற்கள் போன்றவை அசையா மூட்டுகள் (Synarthrosis) எனப்படும்.
  2. முள்ளந்தண்டு, பீடிகை எலும்புகள் லேசாக அசையும் வகையில் இருப்பதால் இவை பகுதி அசையும் எலும்புகள் (Amphi-Orthrosis) எனப்படும்.
  3. புஜ எலும்பு, தொடை எலும்பு போன்றவை அதிகம் அசையும் வகையில் இருப்பதால் இவை அசையும் எலும்புகள் (Diathrosis) எனப்படும்.
  4. தொடை, தோள் போன்ற பகுதிகளில் உள்ள மூட்டுகள் நாலுபக்கமும் சுழன்று கொண்டிருக்கும் வகையில் இருப்பதால் சுழல் அல்லது பந்துகிண்ண மூட்டு (Ball and Socket Joint) எனப்படும்.
  5. கைகளில் முழங்கை, மணிக்கட்டு மற்றும் விரல்களில் உள்ள எலும்புகளும், கால்களில் முழந்தாழ், கணுக்கால் மற்றும் விரல்களில் உள்ள எலும்புகளும் முன்னும், பின்னும் மட்டும் அசையும் வகையில் இருப்பதால் இவை கீல் மூட்டுகள் (Hinge Joint - Ginglymus) எனப்படும்.
முருந்து, குருத்தெலும்பு (Cartilage) : மூட்டுகளில் கூடியிருக்கும் எலும்புகளின் முனைகள தேய்ந்து போகாமல், அவைகளின் மேல் ஒட்டிக்கொண்டு, மழமழவென்று இருக்கும் பொருளுக்கு முருந்து என்று பெயர்.

கீல் ஜவ்வு (Synovial Membrane) : எலும்புகள் சந்திக்கும் இடங்களில் முருந்தை மூடிக்கொண்டிருக்கும் ஜவ்விர்க்கு கீல் ஜவ்வு என்று பெயர்.இந்தச் சவ்வில் சுரக்கும் எண்ணெய் போன்ற திரவம் நிணநெய் (Synovia) எனப்படும்.

தாடைப்பூட்டு (Articulation of lower jaw) : இது கீழ்த்தாடை எலும்பின் மூட்டு மூடிகளானவை காது எலும்புகளையுள்ள பள்ளங்களில் பொருந்துவதால் உருவாகிறது.கீழ்த்தாடை எலும்பு தாழ்ந்தால் வாய் திறக்கும். உயர்ந்தால் வாய் மூடும். இதில் பக்கவாட்டு அசைவுகளும் உள்ளது.

தோள்மூட்டு (Shoulder Joint) : தோள்ப்பட்டை எலும்பின் பள்ளத்தில் புஜ எலும்பு பொருந்துவதால் உண்டாகிறது.இந்த மூட்டு நீட்டல், மடக்கல், நெருக்கல், அகற்றல், சுழற்றல் என ஐந்து வித அசைவுகளைக் கொண்டது.

முழங்கை மூட்டு (Elbow Joint) : புஜ எலும்புடன் முன்னங்கையில் உள்ள ஆரை, இரத்தினி எனும் இரண்டு எலும்புகளும் பொருந்துவதால் உண்டாகிறது. இது நீட்டல், மடக்கல் எனும் இரண்டு வித அசைவுகளைக் கொண்டது. ஆரை எலும்பின் சிகரம், இரத்தினி எலும்புடன் சேர்ந்து உருளுவதால் கைதிருப்புதல் உண்டாகிறது. உள்ளங்கையை கீழ்நோக்கும்படி திருப்புவதை கவித்தல் என்றும், மேல்நோக்கி திருப்புவதால் மலர்த்தல் என்றும் கூறுவர்.

மணிக்கட்டு (Wrist Joint) : ஆரை எலும்பின் அடிப்பகுதியானது நாவாய், சர்வி, அங்குசி எலும்புகளுடன் சேர்வதால் மணிக்கட்டு உருவாகிறது. இது நீட்டல், மடக்கல், நெருக்கல், அகற்றல், சுழற்றல் என்ற ஐந்து வித அசைவுகளைக் கொண்டது.

தொடைச் சந்து (Hip Joint) : தொடை எலும்பின் சிகரமானது கூபக எலும்பின் குழியில் பொருந்துவதால் உண்டாகிறது.இந்த மூட்டுக்கு முடக்கல், நீட்டல், நெருக்கல், அகற்றல், சுழற்றல் என்ற ஐந்து வித அசைவுகளைக் கொண்டது.

முழங்கால் (Knee) : தொடை எலும்பின் கீழ்முனையும், நளக எலும்பின் சிகரமும் இணைவதால் முழங்கால் உண்டாகிறது. இது பதிமூன்று பந்தங்களால் உறுதியாகக் கட்டப்பட்டிருக்கிறது. இது முடக்கல், நீட்டல் என இரண்டு வித அசைவுகளைக் கொண்டது.

கணுக்கால் (Ankle) : நளகம் மற்றும் சரக எலும்புகளின் கீழ்முனையும் குதிகால் எலும்புகளோடு பொருந்துவதால் கணுக்கால் ஏற்படுகிறது. இந்த மூட்டு முடக்கல், நீட்டல் என இரண்டு விதமான அசைவுகளையும் கொண்டு, பக்கவாட்டிலும் கொஞ்சம் அசையும் வகையில் அமைந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக