செவ்வாய், 21 ஜூலை, 2020

உடற்கூறியல் - 9 (உறுப்பியல் - Physiology)

நமது உடலில் வாய் முதல் ஆசனவாய் வரையுள்ள உறுப்புகள் சீரண மண்டலம் எனப்படும். இது பல், நாக்கு, உமிழ்நீர் சுரப்புகள், மிடறு, இரைப்பை, கணையம், கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், மலவாய் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் வயிறும், குடலும் சேர்ந்த பகுதியை “இரை அகக் குடல் பாதை (Gastro Intestinal Tract)” எனப்படும்.
நாக்கு (Tongue) : சுவை அல்லது இரசமாகிய புலனைச் சுவைக்கும் நாக்கு நீர் ஊறும் சவ்வினால் மூடப்பட்ட தசை இழைகளின் கூட்டமாகும். நாவின் மேற்புறம் மூடப்பட்டுள்ள நாக்கடி என்ற சிறு கூர்மையான முளைகளில் சுவை நரம்பு இழைகள் சென்று மூடியுள்ளன. மிக்க புளிப்புச் சுவையுள்ள பொருள்களை நாவில் தடவ நாக்கடிகள் நீண்டு காட்டும். இச்சுவைப் புலனால் உயிரினங்கள் தங்களுக்கு ஏற்ற உணவுகளைத் தெரிந்து கொண்டு, பொருத்தமில்லாத உணவுகளை நீக்கிவிட இயலுகிறது.
பற்கள் : கீழ்த்தாடை, மேல்த்தாடை எலும்புக் குழிகளில் முறையே 16 வீதம் 32 பற்கள் உள்ளன. இதில் மேல்வரிசை பற்கள் 6-க்கும் மூன்று மூன்று வேர்களும், கீழ்வரிசை பற்கள் 6-க்கும் இரண்டிரண்டு வேர்களும் மற்றவைகளுக்கு ஒரு வேரும் உண்டு. பற்களின் உருவம் மற்றும் அதன் அமைவிடத்தை பொறுத்து இவை நான்கு வகையாகப் பிரிக்கப்படும்.
  1. வெட்டும் பற்கள் : வெட்டும் பற்கள் வாயின் முன் பகுதியில் உள்ளன. இவை உணவுப் பண்டங்களைக் கடிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருளி மேல் கோடரியால் வெட்டுவதை போலக் கூரிய நீண்ட பள்ளத்தை உருவாக்குவதன் மூலம் உணவை இரு துண்டாக உடைக்கின்றன.
  2. கோரைப் பற்கள் : கோரைப் பற்கள் அல்லது வேட்டைப் பற்கள் வாயின் இரு பக்கங்களிலும், வெட்டும் பற்களை அடுத்து உள்ளன. இவை கடினமான உணவுப் பண்டங்களைக் கிழிக்க உதவுகின்றன. இப்பற்கள் கடிவாயில் கடிக்கப் படும் பொருன் மேல் ஆணிபோலக் குத்தி கிழிக்கின்றன.
  3. முன்கடைவாய்ப் பற்கள் : முன் கடவாய்ப் பற்கள் வாயிலுள்ள பற்களில் நடுப் பக்கத்தில் கோரை பற்களை அடுத்து, உள்ளன. இவை உணவுப் பண்டங்களை நொறுக்க உதவுகின்றன. கடவாய்ப் பற்களால் கடிப்பதன் மூலம் சம்மட்டியால் அடிப்பது போல் உணவுப் பண்டங்கள் நொறுங்குகின்றன.
  4. கடைவாய்ப் பற்கள் : பின் கடவாய் பல்லானது கடினமான உணவுகளை நசித்து, அரைத்து மெதுமையான துகள் போன்று ஆக்குகின்றன.
அண்ணம் (Palate) : வாயினுள் மேற்பகுதியில் கூரைப் போன்று மூடப்பட்டுள்ள பகுதி அண்ணம் ஆகும். இது மூச்சுக்குகையையும் வாய்க்குகையைப் பிரிக்கிறது. இதே போன்று ஊர்வனவைகளின் நாற்காலிகளிலும் காணப்படுகிறது. ஆயினும் பெரும்பாலான நாற்காலிகளில் வாய்க்குகையும், மூச்சுக்குகையும் சரிவரப் பிரிக்கப்படவில்லை. அண்ணம் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. முன்புறம், எலும்பையுடைய வன்னண்ணம் மற்றும் பின்புறத்தில் தசைகளையுடைய மென்னண்ணம் ஆகும்

உமிழ்நீர்ச் சுரப்பிகள் (Salivary Glands) : இவை நமது உடலில் அமைந்த, உமிழ்நீரைச் சுரக்கும் புறச்சுரப்பு நாளங்கள் ஆகும். இவை பக்கத்திற்கு இரண்டாய் நாவின் அடியிலும் (நாவடி சுரப்பி), தாடையின் உள்பகுதியிலும் (கீழ்த்தாடைச் சுரப்பி), காதின் கீழ்ப்பகுதியிலும் (கன்னச் சுரப்பி) அமைந்துள்ளன. உமிழ்நீரானது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், சுவையையும், உணவின் செரிமானத்திற்கும் உதவுகிறது.
மிடறு (Pharynx) : மிடறு தலையினையும் உடலினையும் இணைக்கும் கழுத்தின் முன்புற பகுதியாகும். இது உணவு மற்றும் நீரை விழுங்கவும், பேச்சினை உருவாக்கவும் உதவுகிறது.
இரைப்பை (Stomach) : இது உணவுக்குழாய் (Oesophagus), சிறுகுடல் ஆகியவற்றிற்கு இடையில் சற்று இடப்புறமாய் அமைந்துள்ளது. உதரவிதானத்திற்குக் (Thoracic diaphragm) கீழாக உள்ளது. இது மூன்று சவ்வுப் படலங்களைக் கொண்டுள்ளது. அதில் வெளிப்படலாம் அழுத்தமாகவும், நடுப்படலம் நுண்ணிய இழைகளாலான இரு அடுக்குகளுடனும், உள்படலம் நன்கு விரிந்து, பலமடிப்புகளுடனும் இருக்கும்.

கணையம் (Pancreas) : இது தட்டையாய் 6 அங்குல நீளமும், 3 முதல் 4 அவுன்ஸ் எடையும் கொண்டு இரைப்பைக்கு குறுக்காக அமைந்திருக்கும். இதில்தான் உணவு செரிமானத்துக்குத் தேவையான  சுரப்புகள் சுரக்கின்றன.  செரிமானத்தின்போது, கணையத்திலிருந்து சுரக்கப்படும் சுரப்புகள், கணைய நாளம் வழியாக முன் சிறுகுடலில் போய்க் கலக்கிறது. இந்தச் சுரப்புகள்  அங்கே செரிவுற்றதாக மாறி உணவுப் பொருள் செரிக்க உதவுகிறது.
கல்லீரல் (Liver) : இது மேல்வயிற்றில் வலது புறத்தில் அமைந்துள்ளது. நமது  உடலில் உள்ள உறுப்புகளில் பெரியது. இதன் மேல்பகுதி உப்பலாகவும், அடிப்பகுதி குடைந்தது போன்றும் காணப்படும். இதன் நீளம் 12 அங்குலம் இருக்கும். இதன் அடிப்பகுதியில் பித்தப்பை ஒட்டிக்கொண்டு இருக்கும்.

பித்தப்பை (Gall Bladder) : இது கல்லீரலுக்கு கீழ்பகுதியில் இருக்கும் பிளவில் ஒட்டிக்கொண்டு இருக்கும். கல்லீரலில் சுரக்கும் பித்தநீரானது பித்தப்பையில் போய்ச் சேர்ந்து தேவையானபோது உணவுடன் துளித்துளியாகக் கலந்துவிடும். இது உண்ணும் உணவினை அன்னரசமாகவும், திப்பி என்னும் கழிவாகவும் தனித்தனியாகப் பிரிக்கிறது.
மண்ணீரல், பீளிகம் (Spleen) : இது வயிற்றின் இடது பகுதியில் சிகப்பும் நீளமும் கலந்த நிறமும், 5 அங்குல நீளமும், 6 அவுன்ஸ் எடையும் கொண்டு, கடல்பாசியைப் போன்ற வடிவத்தில் உள்ளது. இது உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்தும், இறந்த சிவப்பணுக்களைப் பித்தமாக மாற்றிக் கல்லீரலுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது.
சிறுகுடல் (Small Intestine) : இது 20 - 25 அடி நீளம் வரை இருக்கும். இது முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், பின்சிறுகுடல் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
  1. முன்சிறுகுடல் (Duodenum) : இது ஆங்கில எழுத்து “C” போல வளைந்திருக்கும்.இங்குச் செரிமான திரவங்களான கணையநீரும், பித்த நீரும் உணவுடன் சேர்ந்து அதைக் கூழாக்கும்.
  2. நடுச்சிறுகுடல் (Jejunum) : இங்குச் செரிமானமான உணவில் இருக்கும் சத்துக்கள் உறிஞ்சப்படும். இந்தச் சத்துக்களை உறிஞ்சுவதற்கு துணைக்குச்சிகள் என்னும் குடல் உறிஞ்சிகளைக் கொண்டுள்ளது.
  3. பின்சிறுகுடல்  (Ileum) : இங்கும் குடல் உறிஞ்சிகள் உள்ளது. நடுச்சிறுகுடலில் உறிஞ்சப்பட்டது போக ஏதேனும் சத்துக்கள் சரியாக உறிஞ்சப்படாமல் இருப்பின் அவை அனைத்தும் இங்கு உறிஞ்சப்படும்.
பெருங்குடல் (Large Intestine) : இது 5-6 அடி நீளத்தில் இருக்கும். இது அடிவயிற்றின் வலது கீழ்ப்பகுதியிலிருந்து தொடங்கி மேலேறி, வயிற்றுப்பகுதியில் குறுக்காகச் சென்று பின் மீண்டும் இடது பக்கமாக இறங்கி இடது கீழ்வயிற்றின் அடிப்பகுதியில் வளைந்து மலவாயில் முடியும். இது சிறுகுடலில் செரித்த உணவின் திப்பியை கழிவாக மலவாயின் வழியாக வெளியேற்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக