திங்கள், 13 ஜூலை, 2020

உடற்கூறியல் - 6 (எலும்பியல் - Osteology)

(j) உற்காயம் :
நமது உடலில் கைப்பகுதி எலும்புகள் உற்காயம் எனப்படும். இது புயம், முன்கை, கை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். தோளில் உள்ள எலும்புகள் அதகாயத்தில் உள்ள அனாமிகை எலும்புக்கு நிகராக உற்காயத்தை நெஞ்சோடு இணைக்கின்றன.

புய எலும்புகள் (Humerus) :
புய எலும்பு உடலின் மற்ற எலும்புகளிலும் நீண்டது ஆகும். இதன் பருத்த பகுதி மேலந்தம் எனப்படும். இதில் குமிழும், பெரும் கணு, சிறு கணு என்ற இரண்டு கணுக்களும் உண்டு. இதன் காண்டம் மேல்பகுதியில் திரண்ட வடிவானதும், கீழ்பகுதியில் முக்கோண வடிவம் கொண்டதாகவும் இருக்கும். இதன் அடிப்பகுதி சப்பையாகவும், சற்றே முன் வளைந்து விசாலமானக பொருந்தும் முகப்பு இருக்கும்.

முன்கை :

முழங்கைக்கும், மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட முன்கையில் ஆரை, இரத்தினி என்ற இரண்டு எலும்புகள் உண்டு.

ஆரை (Radius) :
இது முன்கையில் இரத்தினி எலும்புக்கு அருகில் உள்ளது. இது இரத்தினியை விடவும் சிறியதாயும், முக்கோண வடிவில் வளைந்ததுமாக இருக்கும் மெல்லிய எலும்பு. இதன் மேல் பகுதி முழங்கை பொருத்தில் சொற்ப பங்காய் சேர்ந்திருக்கும். இது சற்று வளைந்தும், புறத்தில் குவிந்து காணப்படும்.

இரத்தினி (Ulnar) :
இது நீண்ட, முக்கோண வடிவ, மெல்லிய எலும்பு. இதன் மேல்பகுதிபெரிதாயும், முழங்கை பொருத்தின் பிரதான பகுதியாகவும் உள்ளது. இதன் மேல்பகுதியில் உள்ள இரண்டு பள்ளங்கள் முறையே பெரும்பிறை பள்ளம் மற்றும் சிறுபிறை பள்ளம் என்று அழைக்கப்படும்.

கை :
நமது கையானது கிலுத்தம், கரபம், விரல்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

கிலுத்தம் (Carpal Bones) :

நமது கையின் மணிக்கட்டுப் பகுதி எட்டு எலும்புகளைக் கொண்டது. இந்தப் பகுதியே கிலுத்தம் எனப்படும். இந்தப் பகுதியில் உள்ள எட்டு எலும்புகள் என்பன முறையே நாவாய், சரவி, கீலவி, சுத்திரி என்பன மேல் வரிசையில் உள்ள எலும்புகளாகும்.சதுரி, நகவி, மகை, அங்குசி என்பன கீழ் வரிசையில் உள்ள எலும்புகளாகும்.

நாவாய் எலும்பு (Scaphoid) :
இது முதல் வரிசையில் அமைந்த பெரியஎலும்பு. இது ஒருபுறத்தில் கூராகவும், மறுபுறத்தில் விசாலமாகவும் இருக்கும்.

சரவி எலும்பு (Lunate) :
இது முதல் வரிசையில் அமைந்த இரண்டாவது எலும்பாகும். இதன் ஆழமான கவிவினாலும், பிறை வடிவினாலும் அறியப்படும். இதன் முன்புறம் விசாலமாகவும், பின்புறம் பிறைவடிவ ஒடுங்கிய முகடும் உள்ளது.

கீலவி எலும்பு (Tripuetrum) :
இது முதல் வரிசையில் அமைந்த மூன்றாவது எலும்பாகும். இதன் கீல வடிவ அமைப்பால் இது இந்தப் பெயர் பெற்றது. இந்த எலும்பானது பார்ப்பதற்கு முக்கோணத்தின் மேல்பகுதி உள்புறமாக வளைந்தது போலக் காணப்படும்.

சுத்திரி எலும்பு (Pisiform) :
இது முதல் வரிசையில் அமைந்த நான்காவது எலும்பாகும். வடிவில் இது உருண்டை வடிவில் பார்ப்பதற்கு சிறிய பட்டாணியின் அளவில் மட்டுமே இருக்கும். மற்ற எலும்புகளைப் போல இது மணிக்கட்டின் அசைவில் பங்கேற்பதில்லை.

சதுரி எலும்பு (Trapezium) :
இந்த எலும்பானது இரண்டாம் வரிசையில்அமைந்த முதல் எலும்பு.இது நாவாய் எலும்புக்கும், முதலாம் கரப எலும்புக்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் மேல்பகுதி அழுத்தமாக இருப்பதால் கவிந்து காணப்படும். கீழ்பகுதி தட்டையாகக் காணப்படும்.

நகவி எலும்பு (Trapezoid) :
இது இரண்டாம் வரிசையில் அமைந்த இரண்டாவது எலும்பு. இது வடிவில் மிகச்சிறியதாக இருக்கும். இது மிருகத்தின் நகம் போன்ற வடிவம் கொண்டு, இதன் பெரிய பகுதி பின்புறமும், சிறிய பகுதி முன்புறமும் இருக்கும்.

மகை எலும்பு (Capitate) :
இந்த எலும்பானது இரண்டாம் வரிசையில்அமைந்த மூன்றாவது எலும்பாகும். இது நமது உடலில் உள்ள பெரிய மணிக்கட்டு எலும்பாகும். இது எட்டு மணிக்கட்டு எலும்புகளில் மற்ற எலும்புகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இதன் மேல்பகுதி குமிழ்போல இருக்கும். கீழ்ப்பகுதியில் இரண்டாம், மூன்றாம், நான்காம் கரப எலும்புகள் இணைவதற்காக இரண்டு புருவங்களால் மூன்று முகப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கும்.

அங்குசி எலும்பு (Hamate) :
இந்த எலும்பானது இரண்டாம் வரிசையில் அமைந்த நான்காவது எலும்பாகும். இது மணிக்கட்டு எலும்புகளில் உள்புறமுள்ள எலும்பாகும். இது கொக்கி போன்ற அமைப்பினைக் கொண்டது. இதன் மேல்பகுதி குவிந்தும், கீழ்ப்பகுதி நாலாம், ஐந்தாம் கரப எலும்புகளுடன் இணைய புரிவத்தினால் இரண்டு முகப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கரப எலும்புகள் (Metacarpal Bones) :
கரப எலும்புகள் ஐந்து. இவை திரண்ட மெல்லிய நீள எலும்புகள். இதன் காண்டம் வளைந்து, பின் கவிவும், முன் கவிவும் கொண்டதாக இருக்கும். இவற்றின்அக, புற பக்கங்கள் இரண்டும் கவிவாக இருக்கும்.
  1. பெருவிரல் கரப எலும்பு (Metacarpal of Thumb) : மற்ற கரப எலும்புகளைவிடவும் சற்று விலகி அமைந்துள்ளது. இதன் முன்பகுதி சற்று முன்பக்கம் நோக்கிக் கவிந்து இருக்கும். இதன் பின்பகுதி விசாலமாக இருக்கும். இதில் மற்றவைகளில் காணப்படும் புருவம் இல்லை. கிலுத்தத்தின் முடிவில் சதுரி எலும்புடன் சந்திப்பதற்கான கவிவு, குவிவான சந்தி முகப்பு உண்டு. இதற்குப் பக்க முகப்புகள் இல்லை.
  2. இரண்டாம் கரப எலும்பு (Second Metacarpal) : கரப எலும்புகளிலேயே அதிக நீளம் கொண்ட எலும்பு இது. இதன் அடிப்பகுதி மற்ற எலும்புகளைவிடவும் பெரியது. இதன் மேல் அகக் கோணம் புடைத்து நீண்டிருக்கும். இதன் அடியில் நாலு சந்தி முகப்புகள் உண்டு. இதன் அடியில் இருக்கும் கவிந்த முகப்பு நகவி எலும்புடனும், அதற்கு அக்கம் பக்கமாகச் சதுரி, மகை எலும்புகளும், உள்பக்கமாக உள்ள முகப்பு மூன்றாம் கரப எலும்புடனும் சந்திக்கும்.
  3. மூன்றாம் கரப எலும்பு (Third Metacarpal) : இது இரண்டாம் கரப எலும்பை விடவும் சற்று குறுகியது. இதன் அடியின் வெளிப்பக்கத்தின் பின்பகுதி நீண்ட முனையாகும். கவிவான கிலுத்த சாந்தி முகப்பு மகை எலும்புடனும், இப்புறத்தில் இரண்டாம் கரப எலும்பு சந்திக்கும் கவிவான முகப்பும், உள்புறத்தில் நாலாம் கரப எலும்பு சந்திக்க இரண்டு முகப்புகளும் கொண்டது.
  4. நான்காம் கரப எலும்பு (Fourth Metacarpal) : மூன்றாம் கரப எலும்புடன் நோக்கும்போது இது நீளத்தில் சற்று சிறுத்தும், அடி சிறுத்து சதுரமாய் இருக்கிறது. இதன் கிலுத்த பக்கத்தில் அங்குசி மற்றும் மகை எலும்புடன் சந்திக்கும் இரண்டு முகப்புகள் உண்டு. இதன் வெளிப்புறத்தில் மூன்றாம் கரப எலும்புக்குத் தட்டையான இரண்டு முகப்புகளும், உள்புறத்தில் ஐந்தாம் கரப எலும்புக்குக் கவிந்த முகப்பு உண்டு.
  5. ஐந்தாம் கரப எலும்பு (Fifth Metacarpal) : அங்குசி எலும்புடன் சந்திப்பதற்கு அதன் அடியில் இருக்கும் கவிவும், குவிவுமான முகப்பினாலும், நாலாம் கரப எலும்பு சந்திப்பதற்கு பக்க முகப்பு ஒன்று மட்டும் இருப்பதினாலும் அறியப்படும். இதன் உள்புறத்தில் ஒரு கணு உண்டு. இதன் பின்பகுதியில் மேலே அகக்கணுவிலிருந்து கீழ் பகுதியில் வெளிப்புறத்தின் எல்லையில் இருக்கும் சாய்ந்த புருவம் உண்டு.

அங்குலிகள் :
விரல் எலும்புகள் அங்குலிகள் எனப்படும். இவை பெருவிரலில் இரண்டும், மற்ற விரல்களில் மூன்றுமாக மொத்தம் பதினாலு எலும்புகளைக் கொண்டது. இந்த எலும்புகளின் காண்டமானது மேலே பருத்தும், கீழே வர வரச் சிறுத்தும், முன்புறம் கவிந்தும், பின்புறம் குவிந்தும் காணப்படும்.

நக அங்குலிகள் :
இதன் முன்பக்கம் தட்டையாகவும், பின்பக்கம் குவிந்தும் காணப்படும். இவை சிறுத்து இருப்பதினாலும், நுனியின் முன்பகுதியில் இருக்கும் முரணான திடலினாலும் இவை அறியப்படுகிறது. இந்தத் திடலில் பரிச நரம்புகள் கிடக்கும் தசையைத் தாங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக