வெள்ளி, 17 ஜூலை, 2020

உடற்கூறியல் - 8 (உறுப்பியல் - Physiology)

கண்கள் :
            ஒளி அல்லது உருவமாகிய புலனைக் காணும் கண்கள் உருண்டை வடிவில், தலைமண்டை ஓட்டின் முன்புறமுள்ள குழியில், மூன்று வகையான நீர் (சுவச்சம்) நிறைந்த, மூன்று சவ்வுக் கவசங்களுடன் உள்ளது. இவை கண்ணில் உள்ள நுண்ணிய பொருட்களை அழியாமல் காக்கும். கண்விழியின் கவசங்கள் மூன்று. அவை,
  1. கடினையும், சிருங்கியும் (வெளிக்கவசங்கள்)
  2. தாரகமும், வருணியும், சக்கரவமும் (நடுக்கவசங்கள்)
  3. தரிசி (உள்க்கவசங்கள்)

கண்விழியின் சுவச்சங்கள் மூன்று. அவை,
  1. வனம் (முன்பகுதி நீர்)
  2. இயவமும், அதன் உறையும் (நடுப்பகுதி நீர்)
  3. படிகம் (உள்பகுதி நீர்)
            கண் உருண்டையின் முன்புறம் வெள்ளையாய் உள்ள வெள்ளை விழிச்சவ்வு இரட்டையாய் அதிக பரப்புடன் கண்ணாடிபோல உருவொளியும், மினுமினுப்பும், பளபளப்பும் கொண்டிருக்கும். இதன் பின்னால் இருக்கும் கருமைநிற சவ்வு மிக மிக நுண்ணியதாய் குருதிக்குழல்களினால் வலைபோலப் பின்னப்பட்டு இருக்கும்.

            இதன் பின்னால் சற்று தூரத்தில் கண்கள் வேற்றுமையாய் காணும்படி நிறம் கொடுக்கும் ஒரு சவ்வு உள்ளது. இவ்விரு சவ்வுகளுக்கும் இடையில் உள்ள ஒரு கரும்புள்ளி கண்ணில்படும் ஒளிக்கு ஏற்பச் சிறிது வெளிச்சத்தில் விரிவடைவதாகவும், அதிக வெளிச்சத்தில் சுருங்குவதாகவும் இருக்கும். அந்த வளையின் சுற்று விளிம்பிலிருந்து கருமை குறைந்த சுமார் 60 வரிகள் பரந்து செல்பவையாகவும், இவை ஒன்றோடொன்று அடுத்து இருப்பதாகவும், ஒரு வட்டம் உள்ளது.

            மேற்படி கருமை நிறச்சவ்வை அடுத்து உட்புறம் உள்ளதொரு மிகமெல்லிய வெள்ளைச் சவ்வு பார்வை நரம்புக்கு உள்ளுறையாகும். இந்தப் பார்வை நரம்பு மூலையிலிருந்து கிளம்பி கண்ணின் பின்பகுதி வரையில் சென்று, கண்ணுக்குள் விரிந்து கிடக்கும். இதுவே காட்சிப்புலன் நகருமிடம் ஆகும்.

            கண்களை மூடித்திறக்கும் வகையில் கண்மடலில் உள்ள ஆறு தசை நரம்பு இலைகளின் ஒருமுனை கண்குழி எலும்புகளுக்கும், அடுத்தமுனை கண்விழிகளிலும் செல்லும் வகையில் உள்ளது. கண்ணுக்குக் கேடு நேராமல் கண்குழிகள் எப்புறமும் சுழல நிணம் சூழ்ந்து உள்ளது.

            கண்குழியின் மேல்விளிம்பில், கடைக்கண்ணின் அருகில் உள்ள கண்ணீர் கோளத்திலிருந்து சுரக்கும் கண்ணீர் கண்ணில் பாய்ந்து கண்ணின் இமைகள் மூடுவதால்  கண்ணில் பரந்து அங்குள்ள தூசுகள் கண்ணீருடன் சேர்ந்து கண்ணினுள் உள்ள இரு குழாய்கள்மூலம் மூக்கினுள் செல்லும். கண் அழற்சி, மனக்கவலை இவற்றின்போது கண்ணீர் இவ்விரு குழாய்களில் செல்லும் அளவிற்கு மிகுந்து ஊருவதால் ததும்பி வடிகிறது.

            கண்புலனுக்கு இன்றியமையாத ஒளி ஒரு பொருளிலிருந்து கதிர்களாகக் கண்ணுக்குள் செல்கையில் ஒன்றுக்கொன்று கத்திரிக்கோல் மாறலாய் சென்று, பொருளின் வடிவம் தலைகீழாக மாறிக் கண்ணில் உள்ள விழிச்சவ்வினுள் (தரிசியம்) விழுகிறது. கண்புருவங்களும், விழி மடல்களும் கண்ணில் அளவுக்கு மீறிய ஒளி, தூசி, வியர்வை விழாதபடி காக்கிறது.


காதுகள் :
            ஒலி அல்லது சத்தமாகிய புலனைக் கேட்கும் காதுகள் வெளிக்காது, நடுக்காது, உள்காது என மூன்று பிரிவுகளாக உள்ளது. இவற்றில் வெளிக்காது தலைக்கு வெளியே சிலவிளிம்புகளுடன், சற்று துளையுடனும், தோலினால் மூடப்பட்டிருக்கும். துளையினுள் இருக்கும் குறும்பியும், மயிரும் புழுபூச்சிகள் அதனுள் செல்லாதவாறு தடுக்கிறது. காதின் வெளித்திரையின் உள்பகுதியில் வெளி மற்றும் நடுக்காதுகளுக்கு இடையில் ஒரு சவ்வு இருக்கும்.

            நடுக்காதில் உள்ள மிகநுண்ணிய நான்கு எலும்புகளின் ஒரே கோவையில் ஒரு பகுதி தம்பட்டத்திலும் அடுத்த பகுதி வெளிக்காதிலும் தொடுக்கப்பட்டிருக்கும். நடுக்காதிலிருந்து பின்தொண்டை முனைவரை செல்லும் குழலின் வழியாகக் காற்று போய் வருவதால் அக்குழல் அடைபட்டாலும், தொண்டை நெறி வீங்கினாலும் கேட்கும் திறன் குறையும்.

            உள்காது எலும்பினாலான மூன்று அறைகளால் ஆனது. இங்குத் தான் மூளையிலிருந்து கிளம்பும் கேள்வி நரம்பு உள்காதின் உள்ளுரையாய் உள்ள சவ்வுக்குள் இருக்கும் நீரில் மிதந்து கொண்டிருக்கும். வெளிக்காது தன்னுள் மோதும் அலை ஒளிகளை ஒன்று திரட்டி, நடுக்காதினுள் செலுத்துகையில், அதற்கும் நடுக்காதுக்கும் இடையில் சவ்வுத் தம்பட்டம் அதிர்ந்து உட்காதில் உள்ள எலும்புக்கோவை வழியாக அந்த அதிர்வைச் சேர்த்துவிடும். இப்படி தோன்றிய ஒலியின் அதிர்வுக் கேள்வி நரம்பின் வழியாக மூளைக்குச் செல்வதால் கேட்கும் திறன் உண்டாகிறது.

மூக்கு :
நாற்றம் எனும் புலனை நுகரும் மூக்கில் உள்ள (மூச்சுக் காற்று செல்வதற்கான) இரு துவாரங்களில் மூடிக் கொண்டுள்ள சளி ஊறும் சவ்வில் நாற்ற நரம்புகளின் வழியாக வந்து சேரும். இச்சவ்வில் நீர் சுரப்பும், கொதிப்பும் கண்டால் (சலதோஷம்) நீர் வடியும். காற்றும், காரமுள்ள நாற்றம்பட்டு நாற்ற நரம்பின் இலேசான நரம்பிழைகள் சேதம் அடையாதபடி அதில் மூடியுள்ள சவ்வில் சதா சளி ஊறிக்கொண்டே இருக்கும். பொருள்களின் வாசனையை நுகருகையில் அந்த நரம்பிழைகளின் வழியே நாற்றமானது மூளைக்குச் செல்ல, அதை மனமானது உணர்ந்து கொள்ளும். இப்புலன் நறுமணங்களால் இன்பமுறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக