வெள்ளி, 31 ஜூலை, 2020

உடற்கூறியல் -14 (நரம்பு மண்டலம் - Nervous System)

        மூளை, மூளையின் முள்ளந்தண்டுக் கொடி, அவைகளின் நரம்புகள் ஆகியவை சேர்ந்த தொகுதி நரம்பு மண்டலம் எனப்படும். மூளையில் பெருமூளை, சிறுமூளை, முகுளம் என 3 பகுதிகள் உண்டு. இதே போல மூளையை பாதுகாக்க 3 வித சவ்வுகள் பாதுகாக்கிறது. இவை மூளையை அதிர்ச்சியில் இருந்தும், அதிர்வில் இருந்தும் பாதுகாக்கும்.

மேல்ச் சவ்வு (Dura Mater) : மூளையின் மேல்பகுதியில் மெல்லிய படலம் ஒன்று உண்டு. இது முள்ளந்தண்டுக் கொடியின் துவாரத்தில் இறங்கி முள்ளந்தண்டுக் கொடியைச் சுற்றி இருக்கும்.

நடுச் சவ்வு (Arachnoid Membrane) : இது மேன்சொன்ன சவ்வுக்கு அடுத்ததாக இருக்கும். இது சிலந்திக் கூடுபோல வளைபோல இருக்கும்.

அடிச் சவ்வு (Pia Mater) : இது மூளையை ஒட்டி மற்ற இரண்டு சவ்வுப் பகுதிக்கு அடுத்ததாக இருக்கும். இது இரத்த நரம்புகளால் உண்டாகி மூளையைச் சுற்றிக் கொண்டு பிறகு முள்ளந்தண்டுக் கொடிக்கு இறங்கும்.
பெருமூளை (Cerebrum) : மேற்புறமாய் இருக்கும் இது மூளையின் மிகப்பெரிய பாகமாகும். இதன் மேல்பகுதி சுருண்டிருக்கும். இது மூளைச்சுருள்கள் (Convolutions) எனப் பெயர்படும். இது மூளையை இரு அரைக்கோளங்களாக (Cerebral Hemispheres) பிரிக்கறது. இந்த இரண்டு அரைக்கோளங்களுக்கும் இடையில் வெண்ணிற பொருள் உண்டு. இந்த அரைக்கோளத்துக்கு அடியில் மூன்று மேடுகள் (Lobes) இருக்கும். உடலில் நிகழும் சகல தன்னிச்சைச் செயல்களும் இதன்  உதவியுடன் நிகழ்த்தப்படுகிறன.
சிறுமூளை (Cerebellum) : பெருமூளைக்கு இது 7 பங்கு சிறிதாகவும், அதன் பின்பகுதியின் அடிப்பகுதியில் உள்ளது. இதுவும் இரண்டாகப் பிளந்திருக்கும். நெடுக அறுத்துப் பார்க்கக் கிளைகளுடைய செடியைபோலக் காணப்படும். இது பிராண விருட்சம் (Arbor Vitae Cerebelli) எனப்படும்.
முகுளம் (Medulla Oblongata) : இது முள்ளந்தண்டுக் கொடியின் சிகரம் ஆகும். இது 1 அங்குலம் நீண்டும், மொக்கு போலவும், நீண்ட ரேகைகளும் இருக்கும். இது பிடரி எலும்பில் இருக்கிற பிதுக்கத்தின் மேல் அமைந்திருக்கும்.
முள்ளந்தண்டுக் கொடி (Spinal Cord) : இது மூளையில் தொடங்கி கபால மூலத்துவாரத்தின் வழியாக வெளிப்பட்டு முள்ளந்தண்டுக் குழலில் அமைந்திருக்கும். இது வெள்ளை நிறமாயும், 18 அங்குல நீளமும் கைவிரல் பருமனும் கொண்டிருக்கும். மூளையின் 3 சவ்வுகளும் இதைச் சுற்றிக் கொண்டு இருக்கும். இந்தக் கொடியின் மேல் முன்னும் பின்னும் நீண்ட ரேகை ஒன்று காணப்படும். முள்ளந்தண்டுக் கொடியின் முனையானது, சல்லிவேர்களைப் போலச் சிலும்பலாய், அநேக நரம்புகளாகப் பிரிந்திருக்கும். இதைக்  குதிரை வால் (Cauda Eqina) என அழைக்கப்படும்.

சிரசு நரம்புகள் (Cranial Nerves) :
        நமது உடலில் மூன்று விதமான நரம்புகள் உள்ளது. அவை கண், மூக்கு, செவி, நாக்கு, மெய் என்னும் பஞ்ச இந்திரியங்களின் தொழிலான ஒளி, நாற்றம், ஒலி, சுவை, தொடுதல் என்ற செயல்களுக்குக் காரணமான இந்திரிய நரம்புகள் (Nerves Special of Sence), சதைகளை மனதுக்கு ஏற்பச் செயல்படுத்தும் இயக்க நரம்புகள் (Nerves of Motion), உறுப்புகளை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தும் ஒற்றுணர்வுள்ள நரம்புகள் (Sympathetic Nerves). மூளையிலிருந்து 9 நரம்புகள் பிறக்கிறது. அவை,

1) வாசனை நரம்பு (Olfactory Nerve) : இது மூளையிலிருந்து தோன்றி முன்புறமாக நாசியின்மேல் வந்து அநேக கிளையாகப் பிரியும். அக்கிளைகள் சல்லடைக் கண்களின் வழியாகச் சென்று சளி ஊறும் சவ்வின் மேல் வியாபித்துவிடும்.

2) பார்வை நரம்பு (Optic Nerve) : இது மூளையிலிருந்து தோன்றி முன்னுக்கு வந்து சதுக எலும்பின் மேல் வலது நரம்பு இடது புறமாகவும், இடது நரம்பு வலது புறமாகவும் மாறி நேத்திர நரம்புத் துவாரம் வழியாக நேத்திரக் குழிக்குள் சென்று விழிக்குள் சென்று மலர்ந்துவிடும். மலர்ந்த சவ்வுக்கு ரூப உற்பத்தி சவ்வு (Retina) என்று பெயர்.

3) மோடோரஸ் ஆகியுலோகம் (Motores Oculorum) : இது மூளையிலிருந்து தோன்றி, முன்னுக்கு வந்து கண்குழிக்குள் பிரவேசித்து கண்சதைகளில் பரவிவிடும்.

4) பெதிடிசை (Pathetici) : இதுவும் மேற்படி நரம்புகளைப் போலவே நேத்திர நரம்புத் துவாரம் வழியாகச் சென்று கண் சதைகளில் பரவிவிடும்.

5) டிரைபேஷியல் (Trifacial) : இது சிரசு நரம்புகளுக்குள் பெரியது. மூன்று கிளையாகப் பிரியும்.
  • அப்தால்மிக் (Opthalmic) : இது மேற்படி நரம்பிலிருந்து தோன்றி முன்புறத்தில் கண்குழியின் வழியாக வந்து புருவத்தின் உள்முனை மார்க்கமாக நெற்றிக்கு ஏறிப் பரவிவிடுகிறது. இதன் கிளைகள் கண், மூக்கு, முகம், நெற்றி, கண்ணீர் சுரப்பி ஆகிய இவைகளுக்கு போய்ப் பரவும்.
  • சுபீரியர் மாக்சிலரி (Superior Maxillary) : இது மேற்படி நரம்பிலிருந்து தோன்றி கண்குழிக்கு அடியில் இருக்கும் நீண்ட துவாரம் வழியாகச் சென்று முகத்துக்கு வந்து மேல்வாய் பற்கள், அண்ணம், கண்கீழ்ரெப்பை, கன்னம், மேலுதடு ஆகிய உறுப்புகளுக்குச் சென்று வியாபிக்கும்.
  • இன்பீரியர் மாக்சிலரி (Inferior Maxillary) : இதுவும் மேற்படி நரம்பிலிருந்து தோன்றி கீழ்வாய்ப் பற்கள், ஈறு, நாக்கு, காது, முகம், கீழுதடு, மெல்லும் சதைகள் ஆகிய உறுப்புகளுக்குச் சென்று பரவுகிறது.
6) அப்டியுசென்டல் (Abducentes) : இந்த நரம்புக் கண் சதைகளுக்கு சென்று பரவும்.

7) இதில் இரண்டு நரம்புகள் உண்டு. அவை போர்டியோ டியுரோ, போர்டியோ மொலிஸ்.

போர்டியோ டியுரோ (Portio Dura) : இது காதின் உள்துவாரத்தில் உள்ளே சென்று கேநார எலும்பில் உள்ள துவாரத்தின் வழியே சென்று முகத்துக்குச் சென்று பரவும்.

போர்டியோ மொலிஸ் (Portio Mollis) : இது காதுகளுக்குச் சென்று அநேக இழைகளாகப் பிரிந்து அவ்விடத்தில் காதறைக்குள் இருக்கும் நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும்.

8) இதில் மூன்று நரம்புகள் உண்டு. அவை கிளாஸோ பெரிஞ்சியல், நியுமொகாஸ்ட்ரிக், ஸ்பைனால் அக்செஸ்சொரி.
  • கிளாஸோ பெரிஞ்சியல் (Glosso Pharyngeal) : இது உள்கதகண்ட நாளத்தின் வழியாக வெளியே வந்து நாக்கு, தொண்டை இவைகளில் வியாபிக்கும்.
  • நியுமொகாஸ்ட்ரிக் (Pneumogastric) : இது மேற்படி துவாரத்தின் வழியாக வெளி வந்து கண்ட நாடி, கண்ட நாளம் இவைகளோடு இணைந்து நெஞ்சறைக்கு இறங்கி, குரல்வளை, சுவாசக் குழல், புப்புசம், தொண்டை, திணிப்பை, இருதயம் ஆகிய உறுப்புகளுக்குச் சென்று வியாபிக்கும்.
  • ஸ்பைனால் அக்செஸ்சொரி (Spinal Accessory) : இது பிடரிச் சதைகளின் வழியாகப் போய் வியாபிக்கும்.
9) ஹைபோகிளாஸல் (Hypoglossal) : இது நாக்குச் சதைகள் யாவற்றிலும் போய் வியாபிக்கும்.

முள்ளந்தண்டுக் கொடியின் நரம்புகள் (Spinal Nerves) :
முள்ளந்தண்டுக் கொடியிலிருந்து நரம்புகள் 31 தோன்றுகிறது. இதை 5 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
  • கழுத்து நரம்புகள் (Cervical Nerves) - 8
  • முதுகு நரம்புகள் (Dorsal Nerves) - 12
  • இடுப்பு நரம்புகள் (Lumbar Nerves) - 5
  • பீடிகை நரம்புகள் (Sacral Nerves) - 5
  • புச்ச நரம்புகள் (Coccygeal Nerves) - 1
அக்குள் நரம்புக் கூடம் (Brachial / Axillary Plexus) : இது அக்குளில் அமைந்து இருக்கும். இதிலிருந்து ஒரு பெரிய நரம்பு தோன்றி புஜ நாடியோடு இணையும். அதற்கு மத்திய நரம்பு (Median Nerve) என்று பெயர். முழங்கையின் உட்குழியின் மேல் ஒரு சிறிய நரம்பு (Ulnar Nerve) ஓடும்.

முதுகு நரம்பு (Dorsal Nerve) : இதன் 12 நரம்புகளும், முதுகுச் சதைகளுக்கும், பழுவெலும்புச் சதைகளுக்கும், தோலுக்கும் சென்று வியாபிக்கும்.

இடுப்பு நரம்புகள் (Lumbar Nerve) : இதன் 5 நரம்புகளும், அடிவயிற்றுச் சதைகள், தோல், தொடை, பீஜகவசம் ஆகிய உறுப்புகளுக்குப் சென்று வியாபிக்கும்.

பீடிகை நரம்புகள் (Sacral Nerve) : இதன் 5 நரம்புகளும், பிட்டம், மூத்திரப்பை, யோனி, ஆசனம், ஆண்குறி, பீஜகவசம், தொடை, முழங்கால், கெண்டைச் சதை, பாதம் ஆகிய உறுப்புகளுக்குச் சென்று வியாபிக்கும். இந்த நரம்புக் கூட்டத்திலிருந்து ஒரு பெரிய நரம்பு (Great Ischiatic Nerve) தோன்றி, தொடையின் பின்புறமாகக் கீழிறங்கும். உட்காரும்போது இதன் மீது அழுத்தம் அதிகரித்தால் காலில் திமிர் காணும்.

ஒற்றுணர்வுள்ள நரம்புகள் (Sympathetic Nerve) : இவை முள்ளந்தண்டின் இரண்டு புறத்திலும் மணிக்கோவை போலச் சிரசிலிருந்து ஆசனம்வரை நீண்டு சரீர நரம்புகளோடு இணைந்திருக்கும். இதன் பிரதான இடம் இரைப்பைக்கு பின்புறம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக