புதன், 22 ஜூலை, 2020

உடற்கூறியல் - 10 (உறுப்பியல் - Physiology)

உறுப்பியல் (சிறுநீரக மண்டலம்) :

குண்டிக்காய்கள் (Kidneys) : இவை இடுப்பின் முள்ளந்தண்டுக்கு அருகே 4-5 அங்குல நீளம் உடையதாய் இருபுறமும் அமைந்திருக்கும். இவை இரத்தத்தில் உள்ள உப்பு கலந்த நீரான அமுரியை பிரித்து இரத்தத்தை தூய்மையாக்கும். ஒவ்வொரு குண்டிக்காயிலும் இருந்து ஒவ்வொரு குழல்கள் கிளம்பி அடிவயிற்றின் நடுவில் கிடக்கும் நீர்ப்பையுடன் பொருந்தும். இதன் வழியே சிறுநீர் சொட்டுச் சொட்டாக இறங்கி சிறுநீர்பையில் வந்தடையும்.

சிறுநீர்ப் பை (Urinary Bladder) : மனிதர்களிடமும் சில விலங்குகளிலும் சிறுநீரகங்களிலிருந்து வெளியேறும் சிறுநீரை, சிறுநீர்க்கழிப்பாக வெளியேற்றும் முன்னர், சேகரித்து சேமிக்கும் ஓர் வெறுமையான தசை உறுப்பு அல்லது பை ஆகும். மனிதர்களில் இது கூபகத்தளத்தில் அமர்ந்துள்ள வெறுமையான தசையாலான விரிவடையக்கூடிய உறுப்பாகும். சிறுநீர்ப்பைக்கு சிறுநீர்க்குழாய் வழியாக வரும் சிறுநீர் சிறுநீர்வழி மூலமாக வெளியேறுகிறது. இயல்பான மனித நீர்ப்பை சிறுநீர் வரும் உணர்வைத் தூண்டுவதற்கு முன்னர் 300க்கும் 500 மிலிக்கும் அளவிலான சிறுநீரை சேமித்து வைக்க முடியும்.

புராஸ்டேட் சுரப்பி (Prostate Gland) : இது மூத்திரப்பையின் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருக்கும். மலக்குடலில் விரலைவிட்டு பார்த்தால் தட்டுப்படும். இது ஒருவித நீரை சுரந்து நீர்த்தாரையில் விழச் செய்யும். ஆண் - பெண் கலவியின்போது இந்தத் திரவம் விந்துடன் கலந்து பெண்ணின் கருக்குழியில் விந்து நீந்திச் செல்ல உதவுகிறது.

சிறுநீர்வழி (Urethra) : உடற்கூற்றியலில் உடலின் நீர்மக் கழிவுகளை வெளியேற்றுவதற்காகச் சிறுநீர்ப்பையை பிறப்புறுப்புடன் இணைக்கும் குழாயைக் குறிப்பதாகும். ஆண்களுக்குச் சிறுநீர்வழியானது ஆண்குறியின் உள்ளாகச் செல்கிறது. அத்துடன் ஆண்களில் இருக்கும் சிறுநீர்வழியானது, பெண்களில் உள்ளதை விடவும் நீளமானது. ஆண்களில் சிறுநீர்வழியானது சிறுநீரை மட்டுமன்றி விந்தையும் வெளியேற்ற உதவுகின்றது. பெண்களுக்குக் குறைந்த நீளமே உள்ள சிறுநீர்வழி யோனிக்கு மேலாக வெளியே திறக்கின்றது. பெண்கள் சிறுநீர்வழியை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். வரிவரியான வெளி சிறுநீர்வழி சுருக்குதசையானது, கட்டுப்படுத்தக்கூடிய அசைவைக் கொண்டிருப்பதனால், சிறுநீர் கழிப்பதை இச்சைக்கேற்ப கட்டுப்படுத்த உதவுகிறது.

உறுப்பியல் (இனப்பெருக்க மண்டலம்) :

ஆண் - பெண் இனப்பெருக்க உறுப்புகள் பேதம்

பீஜம் (Testicle) : மூத்திரப்பைக்கு அடியில் பக்கத்துக்கு ஒன்றாய் அமைந்திருக்கும். இவை 2 அங்குல நீளம் கொண்டு மலப்பையோடு இணைந்திருக்கும். இவை இனப்பெருக்கத்துக்கு தேவையான விந்தையும், ஆண்மை இயக்கு நீரையும் (Androgens) உற்பத்தி செய்கிறது. இந்த இந்திரிய கமலத்திலிருந்து 3/4 அங்குல நீளத்தில் இருக்கும் ஒரு குழல் (Ejaculatory Duct) நீர்த்தாரையுடன் இணையும். இதன் வழியாகவே கலவியின்போது விந்தானது வெளியேறிப் பெண்ணின் கருக்குழியில் சென்று சேரும்.

ஆண்குறி (Penis) : இது சிறுநீரை வெளியேற்றப் பயன்படுகின்ற கழிவேற்றவும்,  பெண்ணினுள் விந்துவை செலுத்தவும் பயன்படுகிறது. உடலுறவின்போது ஆண்குறியிலிருந்து பெண்குறிக்கு விந்தானது விந்து பீச்சு நாளத்தின் மூலம் செலுத்தப்பெறுகிறது. அந்த விந்து திரவத்திலிருந்து முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட விந்தனுக்கள் கருப்பாதையில் பயனிக்கின்றன. இறுதியாக ஒரே ஒரு விந்தனு மட்டும் அண்டத்தினை துளைத்து கருவினை உண்டாக்குகிறது. மற்றவை கழிவாக வெளியேற்றப்படுகின்றன.பல்வேறு, கலாச்சார, மத, மற்றும் அரிதாக மருத்துவ காரணங்களுக்காக ஆண்குறியின் மொட்டுப் பகுதியை மறைக்கும் முனைத்தோல் எனும் சளிச்சவ்வினை அகற்றுதல் விருத்த சேதனம் (Circumcision) எனப்படுகிறது. காமநூல்கள் ஆணின் லிங்கத்தை நான்கு வகையாகப் பிரிக்கிறது.

இந்திரியம், விந்து (Sperm) : இது இனப்பெருக்கத்துக்கு காரணமாக இருக்கும் ஆணின் இனப்பெருக்க அணுவாகும். இது பெருத்த சிரசோடும், நீண்ட வாலோடும் இருக்கும். இவை பெண்ணின் நாதத்தோடு சேர்ந்து கருபற்றும்படிக்குச் செய்யும்.

யோனி (Vagina) : ஜவ்வும், சதைகளும் சேர்ந்து ஏற்பட்ட யோனியானது சிலருக்கு சிறியதாகவும், சிலருக்கு நீண்டும், வாய் சுருங்கியும் இருக்கும். இதன் ஆழம் 6 - 12 அங்குலம்வரை இருக்கும். கலவியின்போது ஆண்குறியானது யோனியினுள் சென்று வருவதால் இருவருக்கும் கலவி இன்பம் கிடைக்கவும், பேறுகாலத்தில் முழுமையாக வளர்ந்த கருவானது வெளிவரவும் இந்த உறுப்பு பயன்படுகிறது. காமநூல்கள் பெண்ணின் யோனியை நான்கு வகையாகப் பிரிக்கிறது.

சூலகம் (Ovary) : இது கருமுட்டையை உற்பத்தி செய்யும் உறுப்பாகும். இது இனப்பெருக்கத்தில் பங்கெடுக்கும் முக்கியமான ஒரு உறுப்பாகும். கருப்பைக்கு சற்று மேலாக அதற்கு இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்று வீதம் இரு சூலகங்கள் உள்ளன. இச்சூலகங்கள்தான் சூலக முட்டைகளை உருவாக்குகின்றன. இம்முட்டை ஆணின் விந்துடன் சேர்கையில் கருக்கட்டிக் குழந்தை ஏற்படுகிறது. பருவமானபின்பு சூலகங்கள் மாதம் ஒரு முட்டையை வெளிவிடுகிறது. சிலவேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டையையும் வெளிவிடும்.

கருப்பை (Uterus) : இது தட்டையாய் மேற்புரம் அகன்று விரிந்தும், கீழ்புறம் உருண்டு சிறுத்து மலக்குடலுக்கும், மூத்திரப்பைக்கும் இடையே தொங்கிக் கொண்டிருக்கும். இதன் ஒரு முனையானது யோனிப்புழையோடும், மற்ற இரண்டு முனைகள் சூலகங்களோடும் இணைந்திருக்கும். இதன் நீளம் 3 அங்குலமும், அகலம் 2 அங்குலமும், இதன் எடை சாதாரணமாக 11/2 அவுன்ஸ் எடையும், கரு உண்டாகி இருந்தால் 2 - 3 அவுன்ஸ் எடையும், பூரண வளர்ச்சி அடைந்த கருவைக் கொண்டவளுக்கு 2 - 4 அவுன்ஸ் எடையும் இருக்கும்.

சந்திர நாடி (Nymphae) : யோனியின் உள்உதடுகளுக்கு உள்புறத்தில் ஜவ்வு மடிந்து நீண்டிருக்கும். அதற்குச் சந்திர நாடி என்று பெயர். கொக்கோக சாஸ்திரத்தில் இது கூறப்பட்டிருக்கும்.

யோனிலிங்கம் (Clitoris) : யோனியின் உள்உதடுக்கு மேல்பகுதியில் அமைந்த தடித்த மொட்டு போன்ற வடிவில் இருக்கும் உறுப்பாகும். கலவியின்போது இதில் சும்பனம், அங்குலியோகம், கரிகர லீலைகள் செய்வதன் மூலம் பெண்ணிற்கு அதீத இன்பம் தரவல்லது.

தனம், கொங்கை, முலை (Breast) : இது குழந்தைகளுக்குப் பாலூட்டப் பயன்படுத்தப்படுகிறது. ஆண் - பெண் இருவருக்கும் ஒரே கருவியல் இழையங்களிலிருந்து மார்பகங்கள் வளருகின்றன. எனினும், பருவமடையும்போது, பெண்களின் பாலின இயக்குநீர்கள் குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மார்பக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால், ஆண்களில் மிகுந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் காரணமாக மார்பக வளர்ச்சி ஊக்குவிப்பதில்லை. இதன் விளைவாகப் பெண்களின் மார்பகங்கள் ஆண்களைவிட முதன்மை வாய்ந்தாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மார்பகமும் 15 முதல் 20 எளிய பாற்சுரப்பிகளைக் கொண்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக