புதன், 21 அக்டோபர், 2020

ரோக நிதானம் - குஷ்ட ரோகம்

            இந்நோயில் உடல் பளபளப்பு, நிறமாற்றம், தோல் தடித்து கடினமடைதல் , தோலில் தினவு வியர்வை, எரிச்சல், மயிர்க்கூச்சம், கொஞ்சம் காயம் பட்டாலும் அது உலராமல் பெரிதாதல், அதில் கறுத்த உதிரம் வடிதல், அதிக ரணம், குழி ரணம் முதலிய குணங்களைப் பெற்றிருக்கும். இதற்குக் குறைநோய், தொழுநோய், பெரும்வியாதி என வேறு பெயர்களுமுண்டு. இது 18 வகைப்படும்.


பெருநோய் உண்டாகக் காரணங்கள் :
            இந்நோய் அழுகிய மீன், நண்டு, நத்தை, சிப்பி இவற்றை தொடர்ந்து அதிகமாக உண்ணுதல், சரியாக வேகாத பொருட்களை உண்ணுதல், மந்தமான பொருட்களை உண்ணுதல், வயிறு நிறைய உண்டவுடன் யோக நிலைகளில் இருத்தல், இந்நோய் கொண்டவர்களுடன் நெருங்கி இருத்தல், அவர்கள் படுக்கையில் படுத்தல், அதிக உஷ்ணம், அதிக குளிர்,அழற்சி, வாந்தி, தகாத பெண்களுடன் உறவு கொள்ளுதல், தாய் தந்தையர் வழியில் வருதல் எனும் காரணங்களால் உண்டாகிறது.

பெருநோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் முகம், கை, கால்கள், மார்பு, தொடை, காது, மூக்கு பகுதிகள் மினுமினுத்துக் காணும். நாட்கள் செல்லச் செல்ல தோல் கடினப்பட்டு, தோலின் நிறம் மாறுபாடு அடைந்து, மயிர்க்கால்களின் இடைவெளி அகன்று அதிக வியர்வை காணும். பின் தோல் உருண்டு திரண்டு கறுத்து அல்லது சிவந்து காணும். அந்த இடங்களின் தினவு காணும். மேலும் தோலில் திமிருடன் அல்லது உணர்ச்சியற்று காணும். கைகால்களில் அடிபட்ட புண்கள் உலராது பெரிதாகிக்கொண்டே வரும்.

பெருநோயின் வகைகள் :
1. கபால (மண்டை) குஷ்டம் :
கபாலத்தைப்போல் வெளுத்த கொப்புளங்களும் இரணங்களும் உண்டாகி பின்னர் குழிவிழுந்து சினைத்தண்ணீர் ஒழுகுதல் காணும்.

2. அத்திக்காய் குஷ்டம் :
அத்திப்பழம் போன்ற கொப்புளங்களும் இரணங்களையும் உடையது. இரணத்தில் இரத்தம் வடிதலும், புழு ஊருவதும், தினவும், உடல் உளைச்சல், மயக்கம் காணும்.

3. மண்டல (வளைய) குஷ்டம் :
இதில் கொப்புளங்கள் பலவித நிறம் கொண்டு மினுமினுத்து பின் உடைந்து ஒன்றாகச் சேர்ந்து வளைவான இரணத்தை உண்டாகும். அதில் புழுக்களும் சீழும் ஒழுகும். இரணத்தை சுற்றி மஞ்சள் நிறமான தோல் உண்டாகும். தலையிலும், உடலிலும் இரணங்கள் தடித்து கறுத்து இரத்தம் வடிதல் எனும் குணங்கள் காணும்.

4. சொறி குஷ்டம் :
இதில் கொப்புளங்கள் கறுப்பு நிறமாயும் பின்பு உடைந்து விரணமாகி அவைகளில் சினைநீர் ஒழுகுதல், அதிக ஊரல், எண்ணைய் தடவியது போல இருத்தல், வெளிறல், எரிச்சல், வேதனை, சிவந்த தடிப்பு காணும்.

5. முள் குஷ்டம் :
கொப்புளங்கள் முள்ளைப்போல் மெல்லியதாய் நீண்டும் பிசுபிசுத்தும் சுறசுறத்தும் உள்ளில் கறுத்தும் முனையில் சிவந்தும் நெருக்கமாக எழும்பி விரணங்களாகி அவைகளில் புழுக்களும் எரிச்சலும் உண்டாகும்.

6. தோல் குஷ்டம் :
தோலானது மஞ்சள் நிறமாயும் சிவந்த நிறமாயும் மீன்களின் செதிலைப் போல சுறசுறத்து தடித்து கிள்ளினாலும் காயம்பட்டாலும் உணர்ச்சியற்று இருக்கும். தோல் தடித்தல், சீழ்வடிதல், சொறியுண்டாதல், எரிச்சல், துண்டு துண்டான தடிப்பு எனும் குணங்கள் காணும். இதனை மேகப்படை திமிர்படை என்றும் கூறுவர்.

7. யானைத்தோல் குஷ்டம் :
உடலின் தோல் முழுதும் யானையின் துதிக்கைபோல் தடித்து பார்வைக்கு விகாரமாயிருக்கும். உடல் முழுதும் தோல் உரிந்து சிவத்தல், வறவறப்பு, சொறி, தினவு, திமிர், கால் விரல்கள் கனத்தல் உடலில் வீக்கம் எனும் குணங்கள் காணும்.

8. பன்றித்தோல் குஷ்டம் :
இதில் தோலின் நிறம் பச்சை நிறத்தில் பன்றியின் தோல் போல தடித்து, தினவும், சொறியும் உண்டாகும். அதில் அதிக நமைச்சல், தடித்தல், அடிக்கடி சிவந்த நிறத்தில் சிறுநீர் இறங்கல், தேகத்தில் சினைநீர் வடிதல், தாங்க முடியாத துர்நாற்றம் எனும் குணங்கள் காணும்.

9. நாக்கு குஷ்டம் :
இதில் உடல் சுரைப்பூ நிறத்தில் வெண்மையாகி பின் பசுமஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். உடல் முழுதும் திமிருடன் தடித்தல், மஞ்சள் நிறம், அதில் ரத்தம் கசிதல்,தாங்க முடியாத திமிர், மறதி எனும் குணங்கள் காணும்.

10. அலச குஷ்டம் :
இதில் இரத்த நிறமான சிறு கூழாங்கற்களைப்போல் கொப்புளங்கள் பெரிதாக உண்டாகி உடைந்து இரணங்களாகி அதில் அதிக நமைச்சல் உண்டாகும்.

11. செங்குஷ்டம் :
கால்களிலும் கைகளிலும் சிவந்த கடினமான கொப்புளங்களாகி இரணங்களாகும். தேகத்தில் வெடித்தலுடன் தாங்க முடியாத அருவருப்பு, கை, கால், கண், கழுத்து இவைகளில் வெடிப்புடன் வீக்கம் பாம்பைப் போன்ற மணம் எனும் குணங்கள் காணும்.

12. தடிப்பு குஷ்டம் :
முதலில் வளைந்த கொப்புளங்கள் எழும்பி பிறகு கலங்கி கறுப்பு அகத்திப்பூ நிறங்களைப் போல் இரணங்களாகும். உடலில் சிவந்த தடிப்பு, ஊறலுடன் திமிர் எனும் குணங்கள் காணும்.

13. புரைக்குஷ்டம் :
சிவந்தும் கறுத்தும் அடி அகன்றும் அதிக கொப்புளங்கள் உண்டாகி உடல் முழுதும் இரணங்களாகி அதில் எரிச்சல், வலி, புழு ஊறுதல், மூக்கு, கண், காது, கன்னம் இவைகளில் தடிப்பு காணும்.

14. படர்தாமரை குஷ்டம் :
கொப்புளங்கள் மிக உயர்ந்து முனையில் சிவந்தும், நடுவில் வெளுத்தும், பின்னர் தாமரைப்பூ நிறத்திலும் இரணங்களாகி, எரிச்சல், நமைச்சல், சினைநீர் வடிதல் எனும் குணங்கள் காணும்.

15. கொப்புள குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்தும் வெளுத்தும் பெரிதாக எழும்பி இரணமாகி தினவு, எரிச்சல், தோல் மிருதுவாக இருத்தல், விஷ எரிச்சல், எனும் குணங்கள் காணும்.

16. சிரங்கு குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்தும் கறுத்தும் பருத்தும் நெருக்கமாக இரண்டு முனையிலும் முழங்காலிலும் தொண்டையிலும் இரணங்களாகி அதில் வறவறப்பும், தினவும், சினைத்தண்ணீர் கசியும், தோல் விரிந்து வீக்கம் கால் கை குறைதல் எனும் குணங்கள் காணும்.

17. தோல் வெடிப்பு குஷ்டம் :
கொப்புளங்கள் தோன்றும் இடங்களில் சிவந்து, அதிக தினவு, குத்தல், எரிச்சல், உண்டாகும். உடலில் கீற்று கீற்றாக வெடித்தல், தாங்க முடியாத வேதனை, இரத்தம் வடிதல், வயிற்றுவலி எனும் குணங்கள் காணும்.

18. காகச குஷ்டம் :
கொப்புளங்கள் சிவந்த நிறத்துடன் உண்டாகி பிறகு கறுகி கிராம்பு மொக்கின் உருவத்தை பெற்று உடைந்து விரணங்களாகி அவைகளில் அதிக எரிச்சல் நோய் முதலிய குணங்களும் உண்டாகும்.

19. கர்ண குஷ்டம் :
உடலில் பச்சை வண்ணத்துடன் பொரி பொரியாக வெடித்தல், உடல் பருத்து திமிருடன் காணும். காதுகளின் விளிம்புகள் காக்கட்டான் பூபோல கறுத்த நீல நிறத்தில் காணும்.

20. கருங்குஷ்டம் :
உடல் முழுதும் கறுத்து தோலில் திமிருடன் நாற்றம் வீசுதல், உடலில் சூடும் வலியும் காணும். இடுப்பு புறங்கால், தலை பகுதியில் இந்நோய் உண்டாகும்.

21. அபரிச குஷ்டம் :
உடல் முழுவதும் கறுத்த ரத்தம் வடிதல், வீக்கம், வெடிப்பு எனும் குணங்கள் காணும்.

வியாழன், 15 அக்டோபர், 2020

ரோக நிதானம் - கீல்வாயு

            இதில் கீல்களில் வீக்கம், குத்தல், குடைச்சல், வலி, நீட்டவும் மடக்கவும் இயலாமை எனும் குணங்கள் காணும். இது கீல்களில் வாதம் மிகுந்து உண்டாவதால் “கீல்வாயு” என்றும், மூட்டுகளில் உண்டாவதால் “மூட்டுவாதம்” என்றும், மேக நோயுடன் தொடர்புடையதால் “மேகசூலை“ என்றும், மூட்டுகளை முடக்குவதால் “முடக்கு வாதம்” என்றும், வயிற்றில் மந்தத்தை உண்டாக்கி புளித்து கபத்தை பெருக்குவதால் “ஆமவாதம்” என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இது 10 வகைப்படும்.

கீல்வாயு வரக் காரணங்கள் :
            வாதத்தை பெருக்கக்கூடிய  உணவுகளை உண்பதாலும், மழையில் நனைதல், குளிர்ந்த காற்றில் இருத்தல், பனியில் படுத்தல், உயர்ந்த மலையில் படுத்தல், தகாத பெண்களின் சேர்க்கையால், பரம்பரையாக என்று பல்வேறு வழிகளில் உண்டாகும்.

கீல்வாயு நோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோய் வருமுன் மூக்கு அடைப்பு, மூக்கில் நீர் பாய்தல், தொண்டை கட்டல், இலேசான சுரம், கைகால்களில் வலி, குத்தல், குடைச்சல், நீட்டவும் மடக்கவும் இயலாமை எனும் குணங்கள் காணும்.

கீல்வாயு நோயின் வகைகள் :
1) வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீல்கள் சிவந்து வீங்கி, நாளுக்கு நாள் வீக்கம் பெருத்து காணும். ஒருபகுதியில் உள்ள கீழ்களின் வலி குறைந்தால் மற்ற பகுதிகளில் உள்ள கீல்களில் வலி உண்டாகும்.

2) பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீழ்களின் பசை வறண்டு கீல்கள் அசையும்போது எல்லாம் நட்டை உடைவதும், “கலுக்” என்ற சத்தமும் காணும்.

3) ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு கீல்களில் வீக்கமடைந்து சீழ் பிடித்து எலும்பைத் துளைத்து அழுகச் செய்யும்.

4) வாத பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே வாத, பித்த கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

5) வாத ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே வாத, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

6) பித்த வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே பித்த, வாத கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

7) பித்த ஐய கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே பித்த, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

8) ஐய வாத கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே ஐய, வாத கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

9) ஐய பித்த கீல்வாயு :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முறையே ஐய, பித்த கீல்வாயு நோய்களின் குணங்கள் காணும்.

10) முக்குற்ற கீல்வாயு :
இந்நோயில் வாத, பித்த, ஐய கீல்வாயு நோய்களின் குணங்கள் அனைத்தும் காணும்.

ரோக நிதானம் - பக்கவாதம் (பாரிச வாயு)

            இது உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியற்று போகச் செய்யும் அல்லது கை, கால், விரல்கள், நாக்கு, வாய், கண் முதலியவற்றை கேடடையச் செய்யும் நோயாகும்.

பக்கவாத நோய் வரக் காரணங்கள் :
இது வாதத்தை பெருக்கும் உணவுகளை அதிகமாக உண்ணுதல், கள் சாராயம் முதலியவற்றை அதிகமாக குடித்தல், மேக நோய் மற்றும் தமரக நோயின் துணை நோயாக உண்டாகும்.

பக்கவாத நோயின் குணங்கள் :
இந்நோயில் வாதம் மிகுந்து உடலின் ஒருபக்கத்தில் மட்டும் வலிப்பு கண்டு பின் அந்த பக்கம் முழுதும் செயலிழந்து போகும். மேலும் உடல் வியர்த்து வெளுக்கும், உடல் மெலியும், கால்கள் அசைக்க முடியாமலும், கைகள் எதையும் பிடிக்கும் வலிமை இல்லாமலும் போகும், வாய் கோணி உமிழ்நீர் தானாகவே வடியும் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - வலிப்பு நோய் (இசிவு)

            இது அறிவு குன்றித் தன்நிலை கெட்டு, தன்னை அறியாமல் கையும், காலும் வலித்து இழுத்தல்,வாயில் நுரைத் தள்ளல், வாய்க் கோணிக் கொள்ளுதல், கண்பார்வை ஒருபுறமாக இழுத்துக் கொள்ளுதல், எனும் குணங்களைக் கொண்டது. இது 21 வகைப்படும்.

வலிப்பு நோய் வரக் காரணங்கள் :
            உடல்நிலை மற்றும் மனநிலை கெடுவதாலும், ஐயம் அதிகரிப்பதாலும், அதிக பென்போகத்தாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது.

வலிப்பு நோயின் பொதுக் குணங்கள் :
            வலிப்பு வருவதற்கு முன்பு அதிக கோபம், மயக்கம், மனச்சோர்வு, சோம்பல், அதிக பசி, வெருண்ட பார்வை எனும் குணங்கள் காணும். மேலும் அடிக்கடி தும்முதல், கொட்டாவி, சதை துடித்தல், வாயில் நுரையும்  இரத்தமும் தள்ளல், கைகால் விரல்கள் கொருக்குவலி போல மடங்கி துடித்தல், தலையும் கண்ணும் ஒருபுறமாக இழுத்தல், அறிவு குறைந்து மயங்குதல், உடலை வளைத்து கூக்குரலிடுதல், வாய் கோணி பற்களைக் கடித்தல், மூச்சு திணறல், தொண்டைக் கட்டி உடல் கறுத்தல் எனும் குணங்களும் காணும்.

வலிப்புநோயின் வகைகள் :
1) குமரக்கண்ட வலிப்பு :
இந்நோயில் நாக்கும் முகமும் கோணும். கழுத்தும்,தோளும் விம்மும். காதுகள், கண்கள், தாடை, உதடு இவைகள் ஒருபக்கமாக சாய்ந்து நிற்கும். மயக்கமும் வயிற்றில் வலியும் காணும்.

2) அமரக்கண்ட (குதிரை) வலிப்பு :
இந்நோயில் வலிப்பு வருமுன் உடலில் தினவு கண்டு, கைகள் அடித்தது போல குத்தல் குடைச்சலுடன் மயக்கம் காணும். பிறகு வலிப்பு வந்து பல் இளிக்கும், கழுத்து - தோள் - முகம் - தலை பகுதிகளில் அதிக வியர்வை, நாவும் முகமும் ஒருபுறமாக இழுத்துக் கொள்ளும். வலிப்பு நின்ற பிறகு தொண்டை - தோள் - முதுகு பகுதிகளில் வீக்கமும் எரிச்சலும் வலியும் காணும்.

3) பிரமகண்ட (குரங்கு) வலி :
இந்நோயில் கைகால்கள் நீட்டியபடியே உதறுதல், கண்களை சிமிட்டாது மேல்நோக்கியே பார்த்துக் கொள்ளுதல்,பற்களை கடித்தல், உடல் முழுதும் வலி எனும் குணங்கள் காணும்.

4) காக்கை வலி :
இந்நோயில் கண்கள் மேல்நோக்கி மலரமலர விழித்தல்,தொடை மடக்க முடியாமல் விரித்துக் கொள்ளல், தொண்டையும் நாவும் உலர்தல், தொண்டையில் கோழை கட்டிக்கொண்டு கக்குதல், அதிக மலமும் சிறுநீரும் வெளியாதல்,வியர்வை உண்டாதல் எனும் குணங்கள் காணும்.

5) முயல் வலி :
இந்நோய் தலையில் நீரைக் கொட்டினாலும், உடலில் நெருப்பு பட்டாலும் வலித்து இழுக்கும். பிறகு வயிற்றில் வலி, வாயில் நுரைத் தள்ளல், கைகால், கண் இவைகள் விறைத்துக் கொள்ளுதல் எனும் குணங்கள் காணும்.

6) திமிர் வலிப்பு :
இந்நோயில் அதிக கொட்டாவி, படுக்கை பொருந்தாமை, உடல் குளிரல், நரம்புகள் நோதல், தூக்கமின்மை எனும் குணங்கள் காணும்.

7) கோணு வலிப்பு :
இந்நோயில் உடலில் சொரியும் கட்டிகளும் தோன்றும், மூக்கில் மணம் அரிய இயலாமை, தொண்டை கம்மல், பேச்சொலி குன்றல், அறிவு தடுமாறல், சுரம் எனும் குணங்கள் காணும்.

8) சண்டாள வலிப்பு :
இந்நோயில் உடல் பதைபதைத்து முறுக்கி வலி தோன்றும்,திமிருடன் பெருமூச்சுவிடும், சிணுக்கு இருமல், வாந்தி, விக்கல், மேல்மூச்சு, நரம்புகள் வலிமையற்று போதல், கழுத்து நோதல் எனும் குணங்கள் காணும்.

9) மரண வலிப்பு :
இந்நோய் ஒருவர் மரணிக்கும் தருவாயில் வரும். இதில் தொண்டை கம்மல், நரம்புகள் அசைந்து துடித்தல், உடல் நடுக்கம், வாந்தி, கைகால்கள் முடக்கி வலித்து உயிர் பிரிதல் எனும் குணங்கள் காணும்.

10) மனோ வலிப்பு :
இந்நோய் தாங்க இயலாத துன்பத்தின் காரணமாக கண்களில் நீர் வடிதல், கண்டவாறு பேசல், அழுதல் எனும் குணங்களுடன் வலிப்பு உண்டாகும்.

11) நஞ்சு வலிப்பு :
இந்நோய்நஞ்சுத்தன்மையுள்ள ஈடுமருந்து, எட்டி, நாபி போன்றவற்றை உண்பதால் கண்கள் மிரண்டு, சித்தம் கலங்கி, நரம்புகளை இழுத்து வலிப்பு காணும்.

12) முக்குற்ற வலிப்பு :
இந்நோய் வாத - பித்த - ஐயம் எனும் முக்குற்றங்களின் கேட்டால் விளையும்.

13) ஐய வலிப்பு :
இந்நோயில் விலா புறத்தில் குத்தல், இருமல், கண்ணிமை கோணி பார்வை கெடுதல், காதுகேளாமை, உடல் வியர்த்தல், மயக்கம், அறிவு கலங்கல் எனும் குணங்களைக் காட்டி வலிப்பு காணும்.

14) தனுர் வலிப்பு :
இந்நோயில் உடலை வில்போல வளையச் செய்யும். இதில் உடல் முன்புறமாக வளைவது முன்இசிவு என்றும், பின்புறமாக வளைவது, பின்இசிவு என்றும், பக்கவாட்டில் வளைவது பக்கஇசிவு என்றும் அழைக்கப்படும்.

15) சுர வலிப்பு :
இந்நோய் அதிகளவு சுரத்தின் காரணமாக உண்டாகிறது.

16) விக்கல் வலிப்பு :
இந்நோயில் விக்கலுடன் வலிப்பு காணும்.

17) தலை வலிப்பு :
இந்நோயில் தலையில் நீர்க் கோர்த்து ஐயம் அதிகமாகி, பேச இயலாமல், தலை இடித்து நோதல், மூட்டுகளில் வலி, பிடரி வலித்து நோதல், ஈட்டியால் குத்துவது போல குத்தல் காணும்.

18) கோழை வலிப்பு :
இந்நோயில் வாதம் மிகுந்து மார்பில் கோழைக் கட்டல், வாய் பிதற்றல், மூச்சடைத்தல், குறட்டைவிடல், வாந்தியாதல், கோழைக் கக்கல் எனும் குணங்களுடன் வலிப்பு காணும்.

19) ஓடு வலிப்பு :
இந்நோயில் அதிக சுரம், தொண்டையில் ஓய்ச்சல், நா உலர்தல், வியர்த்தல், கால்கள் வலிமையற்று போதல், மிகுதியாக நுரையுடன் கழிதல், கண்கள் நோதல், விரல் திமிர்தல் எனும் குணங்கள் காணும்.

20) மார்பு வலிப்பு :
இந்நோயில் தொண்டையில் கோழைக் கட்டல், இடைவிடாத சுரம், இருமல், கோழையோடு கூடிய வாந்தி, உடலி முறுக்கி வலிப்பு காணும்.

21) தமரக வலிப்பு :
இந்நோயில் அடிக்கடி திடுக்கிடல், மார்பில் கோழை கட்டல் எனும் குணங்களுடன் வலிப்பு காணும்.

ரோக நிதானம் - மயக்க நோய் (மூர்ச்சை)

            இது திடீரென கண்கள் இருண்டு, சுரணையற்று, அறிவழிந்து, மூச்சடைத்து, மயக்கமுற்று, மரம் போல விழச் செய்யும் இயல்புடைய நோய். இது 5 வகைப்படும்.

மூர்ச்சை உண்டாகக் காரணங்கள் :
            செரிக்கக்கூடாத உணவுகளை உண்ணுதல், உடல் வலிமை கேட்டு குருதி குறைதல், நாடி நரம்புகள் தளர்தல், குருதியை பார்த்தல், காற்றில்லாத இடத்தில் அடைத்து வைத்தல் எனும் காரணங்களால் மூர்ச்சை உண்டாகும்.

மூர்ச்சை நோயின் பொதுக் குணங்கள் :
            இதில் தலைசுற்றல், வாய் குமட்டல், வாய் நீரூறல், வாயில் நுரை தள்ளல், கொட்டாவி விடல், கைகால்கள் சோர்வடைதல், கைகால்கள் விதிர்விதிர்த்தல், தன்னை மறந்து அறிவழிதல், இதயம் அதிகமாக துடித்தல் எனும் குணங்கள் காணும்.

மயக்க நோயின் வகைகள் :
1. வாத மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் மயக்கம், தலை சுற்றல், பார்ப்பவை அனைத்தும் கறுப்பு,  சிவப்பு அல்லது நீல நிறத்தில் தோன்றி உடல் கறுக்கும். சிறிது நேரத்தில் தெளியும்.

2. பித்த மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் பார்ப்பவை அனைத்தும் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் தோன்றி, உடல் மஞ்சள் மற்றும் கருமை நிறத்தில் மாறும். மூர்ச்சையானது உடனே தெளியும்.

3. ஐய மூர்ச்சை :
இந்நோயில் பொதுக் குணங்களுடன் மயக்கமடைந்து வாய் கோணும், பற்கள் கடிக்கும், உடல் வியர்க்கும், பலநாழிகை சென்று தெளிவடையும்.

4. முக்குற்ற மூர்ச்சை :
இந்நோயில் முன்சொன்ன மூன்றின் குணங்களும் சேர்ந்து காணும்.

5. குருதி மூர்ச்சை :
இந்நோயில் குருதியை பார்த்தாலும் அல்லது முகர்ந்தாலும் வாய் குமட்டி, தலை சுற்றி, கண்ணிருண்டு, மயங்கி, அறிவழிந்து மரம்போல சாய்ந்து விழுவர். சிலருக்கு உடலில் குருதியின் எடை, நிறை, நிறம் குறைந்த போது மயக்கம் காணும்.

6. நஞ்சு (மருந்தீடு) மூர்ச்சை :
அதிக நாட்கள் மூடியிருந்த வீட்டில் நுழைதல் அல்லது மக்கள் அதிகமுள்ள அறையில் புகுதல், நஞ்சுத்தன்மையுள்ள காற்று பொருள்களை முகர்தல் அல்லது உண்ணுதல், மருந்தீடின் காரணமாகவும், நஞ்சு கடியாலும், அபினி, கஞ்சா, ஊமத்தை முதலிய தாவர நஞ்சை உண்பதாலும் இந்நோய் உண்டாகும்.

7. பெருமூர்ச்சை :
இந்நோயில் முன்சொன்ன நோய்கள் ஏதேனும் ஒன்றில் பலநாட்கள் தொடர்ந்து வருந்தியவருக்கு உடல்நிலை கெட்டு முக்குற்றங்களும் நிலை தவறி பிறழச் செய்து பிணம் போல விழச் செய்யும்.

ரோக நிதானம் - பைத்தியம் (வெறிநோய், உன்மத்தம்)

            இது மனநிலை மாறி, அறிவழிந்து, கண்டது கண்டவாறாக பேசுதல், ஆடல், பாடல், அடாவடி செய்தல், அடித்தல், திட்டல், துணிகளைக் கிழித்தல் முதலிய இயற்கைக்கு மாறான செய்கைகளை கொண்டது. இது ஆறு வகைப்படும்.

வெறிநோய் வரக் காரணங்கள் :
            உடல் நிலையும் மனநிலையும் கெடுவதாலும், பொருளின் மீது அளவுகடந்த இச்சை வைத்தல்,அளவுகடந்த இன்பம் அல்லது துன்பம் அனுபவித்தல், வாதம் மீறுதல், பெற்றோர் வழியில் வருதல், யோக நிலையில் ஆதாரங்களைக் கடந்து துரிய நிலையை அடையும்போதும் இந்நோய் உண்டாகும்.

வெறிநோயின் பொதுக் குணங்கள் :
            இதில் மனநிலை குன்றல், எதற்கும் அஞ்சுதல் அல்லது துணிச்சல் கொள்ளுதல், பெண்களின் மேல் விருப்பம் அல்லது வெறுப்பு, மெலிந்து பேசுதல் அல்லது உரத்துப் பேசுதல்,முணுமுணுத்தல், செயல் பேச்சு இவைகளில் இயற்கைக்கு மாறாக இருத்தல்.

வெறிநோயின் வகைகள் :
1. வாத வெறி :
இந்நோயில் உணவில் வெறுப்பு அல்லது குளிர்ந்து ஆறிய உணவு, தாழ்ந்த வகை உணவில் விருப்பம், ஆடுதல், பாடுதல், அழுதல், வாயைக் கோணி பேசுதல், இயற்கை நடைமாறி நடத்தல், கைகளை தட்டுதல், நகைத்தல், ஒருவனை பிடிக்க எழுந்திருத்தல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த வெறி :
இந்நோயில் பரபரப்புடன் ஓடுதல், பொறுமையின்மை, துணியை அவிழ்த்தெறிந்து உலாவல், கடிந்து பேசுதல், யாவரையும் பயப்படுத்தல்,  சீதள உணவில் விருப்பம் எனும் குணங்கள் காணும்.

3. ஐயவெறி :
இந்நோயில் பெண்கள் மேலும் விருப்பம், அடிக்கடி தூக்கம், வாயின் சுவை கெடுதல், வாய்நீர் ஊறி எச்சில் வடிதல் என்னும் குணங்களை உண்டாக்கும்.

4. முக்குற்ற வெறி :
இந்நோயில் முன்சொன்ன மூன்று நோய்களின் குணங்களும் காணும்.

5. சோக வெறி :
இந்நோய் பணத்தை இழந்த துன்பத்திலும், மனைவியை இழந்த துக்கத்திலும், இன்னும் பற்பல மனவியாதிகளாலும், பயம் போன்ற காரணங்களால் உடல் வெளுத்து, காரணமில்லாமல் அழுதல், அடிக்கடி சிரித்தல், மனதிலுள்ளதை வெளிப்படையாக கூறிவிடுதல், ஆச்சரியப்படுதல், உறக்கமின்மை எனும் குணங்கள் காணும்.

6. நச்சு வெறி :
இந்நோய் இடுமருந்து, மூளையை கெடுக்கக்கூடிய நஞ்சு வகைகளை உண்ணுதல் முதலியவைகளினால் உண்டாகி முகம் கறுத்தல், உடல் ஒளி, நிறம், ஐம்புலன்களின் செயல்கள் குறைதல், உடல் கறுத்தல், கண்கள் சிவத்தல் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - செருக்கு நோய் (மதநோய்)

            இது குடியின் காரணமாக கண்டவாறு பேசுதல், சீறி விழுதல், சினம் கொள்ளுதல், காரணமின்றி மகிழ்ச்சி அடைதல் எனும் குணங்களை உண்டாக்கும். இது ஏழுவகைப்படும்.

மதநோய் வரக் காரணங்கள் :
            அதிக குடியின் காரணமாக இந்நோய் உண்டாகிறது.

மதநோயின் பொதுக் குணங்கள் :
            குடியின் கேட்டால் அறிவு மங்கி, உடல் வலிமை குறைந்து,உடல் இளைத்தல், சுவை அறியும் திறம் குறைதல், நீர் வேட்கை, உடல் எப்போதும் சூடாக இருத்தல், மார்பு துடித்தல் எனும் குணங்கள் காணும்.

மதநோயின் வகைகள் :
1. வாதமதம் :
இந்நோயில் உடல் வலிமை குறைந்து, உடல் கறுத்து, தோல் சுருங்கி,முகம் வறண்டு, விக்கல், மேல்மூச்சு, நாடி தளறல், கை கால் தலை நடுங்குதல், தூக்கமின்மை, உடல் குத்தல், பக்கசூலை, குரல் கம்மல், வாய் பிதற்றல் எனும் குணங்கள் காணும்.

2. பித்தமதம் :
இந்நோயில் நாவறட்சி, உடல் சூடாக இருத்தல், வியர்த்தல், தலை சுற்றல், கிறுகிறுத்தல், சுரம், தாகம், மயக்கம், கழிச்சல், உடல் மஞ்சள் அல்லது சிகப்பாக மாறுதல் எனும் குணங்கள் காணும்.

3. ஐயமதம் :
இதில் உடல் பருத்தல், பளுவாக தோன்றுதல்,உடல் சில்லிட்டு இருத்தல், வாந்தி, நாக்கு சுவை அறியாமை, மார்பு துடித்தல், சோம்பல், அதிக தூக்கம் எனும் குணங்கள் காணும்.

4. தொந்தமதம் :
இந்நோயில் முன்சொன்ன மூன்று மதநோயின் குணங்களும் சேர்ந்து காணும்.

5. இரத்தமதம் :
இந்நோயில் குடிவெறியின் காரணமாக குருதி கொதிப்படைந்து பெருகிக் கண்கள் சிவந்து, பித்தமத நோயின் குணங்களும் சேர்ந்து கொள்ளும்.

6. மத்தியபான மதம் :
உடலில் பலவித கெடுதி, முகத்தில் ஒளி நீங்குதல், குரல்கம்மல், எவரிடத்தும் விருப்பமின்மை என்னும் குணங்களுடையது.

7. விஷமதம் :
இந்நோயில் மற்ற மதநோயின் குணங்களை விட அதிகமான கெடுதல்களை உடையது. உடல் நடுக்கல், மிக அதிக தூக்கம் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - குடிவெறி நோய்

            இது கள், சாராயம், புளிப்பேறிய பழச்சாறுகள் முதலியவற்றை அளவுக்கு மிஞ்சி பருகுவதால் அறிவு குன்றி பலவிதமாக பேசச்செய்யும் இயல்புடையது.


குடி வகைகளின் பண்பும், செயலும் :
குடி வகையின் பண்புகள் :
            வெப்பு, வறட்சி, புளிப்பு அல்லது காரம், பரவும் தன்மை ஆகியவை குடிக்கும் கள், சாராயம் முதலியவற்றின் பண்புகளாகும்.

குடி வகையின் செயல்கள் :
            உண்டபின்பு உடலுக்குள் ஒருவித அனலை எழுப்பி, மனதைத் தூண்டி, ஒருவித களிப்பைத் தந்து இனிமையாகவும்,கடுமையாகவும் பேசச் செய்து, பின்பு அறிவையும், உடல் நிலையையும் குறையச் செய்யும்.

குடிவெறியின் பொதுக் குணங்கள் :
            இந்நோயின் ஆரம்பத்தில் ஒருவித மகிழ்ச்சி, உற்சாகம், உடல் வன்மை பெருகியது போன்ற உணர்வுகள் தோன்றி, பின் அறிவு மங்கி, மயக்கம், கைகால்கள் தளறல், உதறல், நாவறட்சி, நீர்வேட்கை, கண்கள் இருளல், தலைசுற்றல், நெஞ்சு படபடத்தல், மனம் தடுமாறல், புலம்பல், ஆடல் - பாடல், வாயில் நீர்வடிதல், வாந்தி, வியர்த்தல், நாடி தளறல், கைகால்கள் துவளல், மூச்சுத்திணறல் எனும் குணங்களை உண்டாக்கும். குடிவெறியின் குணங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

குடிவெறியின் குணங்கள் :
முதல் நிலை :
மனதிற்கு கிளர்ச்சி, ஊக்கம், மகிழ்ச்சி, புத்திகூர்மை அடைந்து மறந்ததை நினைவுபடுத்தல், உடல் வெப்பமடைந்து வலிமை அடைந்தது போன்ற உணர்வு, உணவு எளிதில் செரிக்கும்.

இரண்டாம் நிலை :
உடல் வலிமையும், மன மகிழ்ச்சியும், அறிவும் குறையும், வெறி பிடித்தவன் போல பிறரை இடித்தல், உதைத்தல், திட்டல் எனும் செய்கைகள், அதிக தூக்கம் உண்டாகும்.

மூன்றாம் நிலை :
யாரையும் மதித்து நடக்காத தன்மை, தான் செய்வது இன்னதென்று அறியாத தன்மை, மனதிலுள்ளதை அப்படியே வெளியில் செய்தல் எனும் குணங்கள் உண்டாகும்.

நான்காம் நிலை :
மனநிலை - உடல்நிலை அழியும், கைகால்கள் தளர்ந்து நடை தடுமாறி மரம் போல கீழே விழுவான், நாடிநடை தளர்ந்து,உடல் வியர்த்து, கைகால்கள் சில்லிட்டு உயிர் பிரியும்.

செவ்வாய், 13 அக்டோபர், 2020

ரோக நிதானம் - வெள்ளை வெட்டை (பிரமியம்)

            சிறுநீர் இறங்குவதற்கு முன்போ அல்லது பின்போ வெண்ணிற சீழ் போன்ற திரவம் இறங்குதல். சிறுநீர்த்தாரையில் எரிச்சலுடன்  கடுப்பு உண்டாதல் என்பதை வெள்ளை வெட்டை என்பர். இது 21 வகைப்படும்.

வெள்ளை வெட்டை உண்டாகக் காரணங்கள் :
            அதிக புணர்ச்சி, இந்நோய் கண்டவருடன் கூடுதல், யோகத்தில் நிலைத்து மூலக்கனலை எழுப்பும்போதும் இந்நோய் உண்டாகும்.

வெள்ளை வெட்டை நோயின் பொதுக் குணங்கள் :
            கலவி செய்த ஒருசில தினங்களுக்குள் குறியில் நமைச்சல், நீர்த்தாரையில் எரிச்சல்,சிறுநீர் இறங்கும்போது அதனுடன் சீழ் கலந்து வெளியாதல், நூல் தொங்குவதுபோலும், வெண்டைக்காய் கழுவிய நீர் போலும் வெளியாதல் எனும் குணங்கள் காணும்.

வெள்ளை வெட்டை நோயின் வகைகள் :
1. வாதப் பிரமியம் :
இந்நோயில் பசுமூத்திரம் போல் நீரிறங்கல், தண்டின் அடியில் வலி, வெளுத்து கட்டியாக சீழ்வடிதல், அடிவயிற்று மற்றும் அதன் இரு பக்கத்தில் பரபரத்த வேதனை, கனகனப்பு, வயிற்றில் இசிவு, உடல் வற்றல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த பிரமியம் :
இந்நோயில் உடல் கறுத்தல், தயக்கம், கீல்களில் வலி, எரிச்சல், ஆசனவாய் மற்றும் குறியில் கடுப்பு, மஞ்சள் நிறமான சீழ்வடிதல், கைகால் ஓய்ச்சல் எனும் குணங்களை உண்டாக்கும்.

3. ஐய பிரமியம் :
இந்நோயில் குறியில் கடுப்பு, அடிக்கடி வெண்மையாக நீர் இறங்கல், நீர்த்தாரையில் எரிச்சல், தேகத்தில் வெளுத்த நிறம் எனும் குணங்கள் காணும்.

4. வாத பித்த பிரமியம் :
இந்நோயில் சர்வாங்கத்திலும் நோய், குறியில் அடைத்தது போல் இருத்தல், மாவைக் கரைத்ததுப் போல் சுருக்குடன் நீரிறங்கல், வயிற்றில் கட்டி எழும்புவதுப்போல் இருத்தல், மலமிறுகல் எனும் குணங்கள் காணும்.

 5. பித்த ஐய பிரமியம் :
இந்நோயில் வாய் கசத்தல், அடிவயிற்றில் பொருமலுடன் இசிவு, கோசம் சுருங்குதல், மஞ்சளாயும் வெண்மையாயும் நீரிறங்கல், கீல்களிலே வலி, பகல் நித்திரை, பசிஇன்மை, சரீரம் ஊதல் எனும் குணங்கள் காணும்.

6. தொந்தப் பிரமியம் :
இந்நோயில் உடலில் புழுக்கள் ஊருதல் போல் இருத்தல், அடிக்கடி கடுத்து நீரிறங்கல், வெள்ளை பலநிறமாகதல் எனும் குணங்கள் காணும்.

7. கட்டிப் பிரமியம் :
இந்நோயில் உடல் முழுதும் கட்டிகள் தோன்றி உடல் வற்றும், தண்டில் சொறியுடன் தினவு, பருக்கைப்போல் சீழ் வடிதல், குறியில் நீர் கசிதல் எனும் குணங்கள் காணும்.

8. நீர்ப் பிரமியம் :
இந்நோயில் வாந்தி, மயக்கம், சிறுநீருடன் வெளுத்த நீரிறங்குதல், அடிவயிற்றில் வலி, மலத்தில் சீதம் விழுதல், இடுப்பில் கட்டிகள் தோன்றுதல் எனும் குணங்கள் காணும்.

9. தந்திப் பிரமியம் :
இந்நோயில் அடிவயிற்று புண்போல் நோதல், குறியின் அடியில் விருவிருப்பு விம்மல், நீர் இறங்கியவுடன் கம்பிபோல் வெள்ளை விழுதல், எப்போதும் வெள்ளை கசிந்து உள்ளாடை நனைதல், கைகால் எறிவு எனும் குணங்கள் காணும்.

10. ரத்த பிரமியம் :
இந்நோயில் முயல் ரத்தம் போல சிவந்த சுருக்குடன் அடிக்கடி வேதனையுடன் நீர் இறங்குதல், அடிக்கடி நீர் சிவந்து இரங்கல், பேய்போல் அலைதல் எனும் குணங்கள் காணும்.

11. கீழ்ப் பிரமியம் :
இந்நோயில் குறியின் துவாரத்தில் கடுப்புடன் வெள்ளைக் காணல், இடுப்பில் கட்டி, பவுத்திரம், நாபியில் புண், கணுக்காலில் குடைச்சல், அடிக்கடி நீர் இறங்குதல், அதிக குளிரோடு சுரம், மயக்கம், வேதனை எனும் குணங்கள் காணும்.

12. ஒழுக்கு பிரமியம் :
இந்நோயில் இது குறியின் துவாரத்திலிருந்து சீழும் ரத்தமும் கலந்து சிறுநீர் இறங்குதல், உடல் முழுதும் கருமையுள்ள கட்டிகள் உண்டாகி உடைந்து புண்ணாதல், குடைச்சல், எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

13. மஞ்சள் பிரமியம் :
இந்நோயில் மஞ்சள் நிறமான வெள்ளை காணும், சூடாக நீர் இறங்க, அந்த இடத்தில் நெருப்பைக் கொளுத்தினது போல் எரிச்சலுடன் கூடிய கடுப்பு, விருவிருப்பு, அதிக உஷ்ணம், முகத்தில் மஞ்சள் நிறம், நாவில் கசப்பு, மனது திடுக்கிடல் எனும் குணங்கள் காணும்.

14. நீர்ச்சுருக்கு பிரமியம் :
இந்நோயில் குத்தலுடன் மஞ்சள் நிறத்தில் கடுப்புடன் நீர் இறங்கல்,  சிறுநீர்க்கட்டு, உறக்கமின்மை, உஅன்வில் வெறுப்பு, மனசஞ்சலம், உடல் உளைச்சல் எனும் குணங்கள் காணும்.

15. கரப்பான் பிரமியம் :
இந்நோயில் வயிற்றில் உளைச்சல், சீதத்துடன் மலம் இறங்கல், நீரானது உஷ்ணமாக கடுப்புடன் இறங்கி நீர்துவாரத்தைப் புண்ணாக்கி, சுண்ணாம்புக் கல்லைக் கரைத்த சலம்போல் குத்தலுடன் இறங்கல், கைகால் உளைச்சல், உடம்பெல்லாம் வெப்பத்தால் பொங்கி எழும் புண்கள் கரப்பான் நோய் போல உடல் முழுதும் பரவும்.

16. கல் பிரமியம் :
இந்நோயில் குறியில் கள்ளைப்போல் வெள்ளை கசிதல், உடலில் கற்றாழை நாற்றம் வீசுதல், சிறுசிறு கற்கள் நீர்ப்புழையை அடைத்துக் கொண்டு வயிறு விம்மும், வயிறு முதல் விலா வரையில் விறுவிறுத்து நோதல் எனும் குணங்கள் காணும்.

17. தந்துப்பிரமியம் :
இந்நோயில் குறியில் சிலந்தி நூலைப்போல வெள்ளை இறங்கும், குறி விம்மி வலி கண்டு குருதி காணும், விலாவில் குத்தல், சிறுநீர் துளி துளியாக விழுதல் எனும் குணங்கள் காணும்.

18. நீச்சுப் பிரமியம் :
இந்நோயில் கள்ளை ஒத்த சிறுநீருடன் வெளுத்த சீழ் வடிதல், குறியின் தண்டு வீங்கி விம்மும்போது குத்தல், விருவிருப்பு, நரம்பு சுருங்குதல், அடிவயிற்றில் சூலை, குளிர் எனும் குணங்கள் காணும்.

19. வலி பிரமியம் :
இந்நோயில் குறியின் அடிநரம்பு, பிட்டம் ஆகியவை குத்தலுடன் வலித்தல், உடல் வற்றி மயக்கம், நாவு கசத்தல், புறங்காலில் திமிர், வெள்ளை காணுதல், குறித்தண்டு வீங்கி நீர் இறங்கும்போது இற்றுப்போன சதைத் துணுக்குகள் சேர்ந்து இறங்குதல் எனும் குணங்கள் காணும்.

20. மதுப் பிரமியம் :
இந்நோயில் ஆண்குறி நொந்து தேன் போல் வண்டலாய் நீரிறங்கல், அதில் எறும்பு மொய்த்தல், நீர்த்தாரை புண்ணாகி நீர் இறங்கும் போது ஒருவித நாற்றம், நா வறட்சி, சுவையின்மை, மயக்கம் எனும் குணங்கள் காணும்.

21. விரண பிரமியம் :
இந்நோயில் உடல் முழுதும் பொங்கி புண்ணாகி குறி வீங்கி சிறுநீருடன் குருதியும் கலந்து இறங்குதல், முட்டிக்கீல்கள் நொந்து கறடு கட்டியது போல நீட்டவும் முடியாமல், மடக்கவும் முடியாமல் இருத்தல், கீல்களில் அதிகவலி, உடல் வெதும்பல், விறுவிறுத்தல் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - எருவாய் நோய் (மூலம்)

            ஆசன வளையங்களில் கிழங்கு முளைகளைப்போலும், வேர்களைப் போலும், மாமிச முளைகளை உண்டாக்கி வலி, கடுப்பு, எரிச்சல், நமைச்சல், அரிப்பு, வீக்கம், மலம் தீய்தல், மலம் கட்டுதல், இரத்தம் வழிதல் எனும் குணங்களை உண்டாக்கும் காரணத்தினால் மூல நோயென பெயர் பெற்றது. இந்நோய் 21 வகைப்படும்.

மூலநோய் உண்டாகக் காரணங்கள் :
            அதிகபுணர்ச்சி, நீண்ட நேரம் அமர்ந்து இருத்தல், உடல் இளைப்பு, அபானவாயு, மலம், சிறுநீர் இவற்றை அடக்குதல், குடலில் அதிக மலம் சேருதல் போன்றவற்றாலும், குன்மம், அதிசாரம், சோகை, பாண்டு, கிராணி முதலிய நோய்களாலும் இந்நோய் உண்டாகும்.

மூல நோயின் பொதுக் குணங்கள் :
            உடல் இளைத்து நிறம் மாறல், கணுக்கால், அடித்தொடை பகுதிகளில் வலி, தலை, முதுகு, மார்பு இவைகளில் வலி, பசியின்மை, வயிறு உப்புசம்,  கண்களில் வீக்கம், முகம் மாறுதல், மலச்சிக்கல், அடிவயிற்றில் இரைச்சலும் கடுப்பும் உண்டாதல், சோம்பல், தலைசுற்றல், உற்சாகமின்மை, ஆசனத்தில் வலி, கடுப்பு, நமைச்சல், அரிப்பு, எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

மூலநோயின் வகைகள் :
1. நீர் மூலம் :
இந்நோயில் வயிற்றை சுற்றி சுருட்டி வலித்தல், கீழ்வயிறு பொருமல், மலம் வெளியேறாமல் காற்று மட்டும் பிரிதல், மலம் வருவது போன்ற உணர்வு தோன்றி மலம் வெளியேறாமல் நுரையுடன் கூடிய நீர் வெளியேறல் எனும் குணங்கள் காணும்.

2. செண்டு மூலம் :
இந்நோயில் மூலமுளை கருணைக்கிழங்கு போல தோன்றி அடிசிவந்து , பருத்து வெளித்தள்ளி, வறண்டு, கடினப்பட்டு, கன்றி அதிக வலியுடன் குருதியும், நிணமும் வெளிப்பட்டு, தினவெடுக்கும்.

3. பெருமூலம் :
இந்நோயில் மூலமுளை மஞ்சள் கிழங்கு போல தோன்றி கடுத்து, தடித்து, எரிச்சலை உண்டாக்கி அடிவயிறு கல்போலாகும். வயிற்றில் காற்று கூடி இரைச்சல், ஏப்பம் உண்டாகும். மலம் தீய்ந்து குருதியுடன் வெளியேறும்.

4. சிறுமூலம் :
இந்நோயில் எருவாயில் சிறு முளைகள் உண்டாகி  எரிச்சலுடன் குருதியும் வெளிப்படும். வயிற்றில் குத்தல், வயிறு இழுத்து நோதல், வயிறு ஊதல் எனும் குணங்கள் காணும்.

5. வரள் மூலம் :
இந்நோயில் பித்தம் அதிகமாகி, குடல் வறண்டும், மலம் உலர்ந்து இறுகி வெளியாகாமல் தடைபடும். உடல் வெளுத்து, வலிமை குறைந்து, மலத்துடன் இரத்தம் வெளியேறும்.

6. இரத்த மூலம் :
இந்நோயில் தொப்புளில் வலித்து மலத்துடன் குருதியும் பீறிட்டு பாயும். மேலும் கைகால் உளைச்சல், மயக்கம், மார்பு நோய், தலைவலி, கண்கள் மஞ்சளாதல் எனும் குணங்கள் காணும்.

7. சீழ் மூலம் :
இந்நோயில் ஆசனவாயை சுற்றிலும் கடுப்பும் எரிச்சலும் உண்டாகி, மலம் கழியும்போது சதை இற்று அதனுடன் சீழும் நீரும் கலந்து, இறங்கும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் கழியும்.

8. ஆழி மூலம் :
இந்நோயில் மூலமுளை வள்ளிக்கிழங்கை போல பருத்து நீண்டு, குருதியும் நிணமும் வழியும். மலம் இறங்காது. 

9. தமரக மூலம் :
இந்நோயில் மூலமுளை வெளித்தள்ளி உலக்கை பூண் அல்லது தாமரை பூப்போல காணும். மேலும் தினவும், நமைச்சலும் உண்டாகி, உடல் மெலிந்து, மலத்துடன் குருதியும் சேர்ந்து கழியும்.

10. வாத மூலம் :
இந்நோயில் மூலமுளை கோவை பழம் போல சிவந்து, பின் கறுத்து மெலிந்து,கடுப்பு, நமைச்சல், குத்தல், குடைச்சல், திமிர்தல் உண்டாகி, மலம் கறுத்து இறங்கும். மேலும் தலையிலும் குடலிலும் வலி உண்டாகும்.

11. பித்த மூலம் :
இந்நோயில் மூலமுளை பருத்திக்கொட்டை அல்லது நெல்லின் அளவில் தோன்றி, கடுப்பு, எரிச்சல், தாகம், மயக்கம், சோர்வு, மலத்துடன் சீழும்,, குருதியும் கலந்து வெளியேறுதல் எனும் குணங்களை உண்டாக்கும். மேலும் இதில் மலம் வறண்டு, திரிதிரியாய் வெளியேறும்.

12. ஐய  மூலம் :
இந்நோயில் மூலமுளை வெண்ணிறத்தில் தோன்றி, எரிச்சல், தினவு, கடுப்பு, மலத்துடன் சீழும் குருதியும் கலந்து இறங்கும். மேலும் உடல் வெளுத்து, வலிமை குறையும்.

13. தொந்த மூலம் :
இந்நோயில் மூலமுளை கோழிக்கொண்டையை போல தோன்றி நடக்க இயலாமல் செய்யும்.

14. வினை மூலம் :
இந்நோயில் உணவு செரியாமை, புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், நரம்பு இசிவு, கடுப்பு, உடல் காந்தல் எனும் குணங்கள் காணும்.

15. மேக மூலம் :
இந்நோயில் மூலமுளையில் இருந்து குருதி கொட்டும், ஆண்குறியில் இருந்து வெள்ளை வடியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறிநீர் எரிந்து இறங்கும். தலையில் வலியும், உடலில் திமிரும், சிறுநீர் இனிப்பு தன்மையோடும் இருக்கும்.

16. பவுத்திர மூலம் :
இந்நோயில் மூலமுளைக்கு அருகில் கட்டி தோன்றி உடைந்து உலராது துளையுடன் சீழ் வடியும். கைகால்கள் வீங்கும். ஆசனமும், குறியும் வீங்கும்.

17. கிரந்தி மூலம் :
இந்நோயில் குறியில் புண் உண்டாகி அது மூலமுளை வரையில் பரவி சீழும் குருதியும் வடியும். ஆசனவாய் வெடித்து, மலம் வறண்டு இறங்கும்.

18. குதமூலம் :
இந்நோயில் மூங்கில் குருத்து போல அடிக்குடல் வெளித்தள்ளும். மூலமுளையில் இருந்து சீழும் குருதியும் வடியும். நா வறண்டு தாகம் உண்டாகும்.

19. புறமூலம் :
இந்நோயில் ஆசனவாயின் வெளிப்புறத்தில் சிறு பருக்களைப் போல முளைகள் தோன்றி கடுத்து சீழ் இறங்கி, கடுப்பு, நமைச்சல், தினவு உண்டாகும். உடலில் சிறுசிறு சிரங்கு, சொறி உண்டாகும்.

20. சுருக்கு மூலம் :
இந்நோயில் ஆசனவாய் சுருங்கி தடிக்கும், பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் சீழும் குருதியும் இறங்கும்.

21. சவ்வு மூலம் :
இந்நோயில் மூலமுளையானது குழகுழத்து நீண்டு சவ்வு போல தொங்கி, சீழும் குருதியும் வடியும்.

ரோக நிதானம் - ஊழி நோய் (வாந்தி பேதி)

            உண்ட உணவு செரிக்காமல் அதிக வாந்தி, கழிச்சல், நீர்வேட்கை, கண் பஞ்சடைத்தல், கெண்டை சதை வலித்தல், கைகால்கள் சில்லிடல், பேச்சொலி குறைதல் எனும் எனும் இயல்பை இந்நோய் கொண்டிருக்கும்.

ஊழி நோய் உண்டாகக் காரணங்கள் :
            பூமியின் தட்பவெப்ப மாறுதலாலும், அருந்தும் நீரில் உள்ள நுண் கிருமியாலும், உடலில் பித்தம் திடீரென குறைந்து ஐயம் அதிகரிப்பதாலும் இந்நோய் உண்டாகிறது. இது 3 வகைப்படும்.

ஊழி நோயின் பொதுக் குணங்கள் :
            உண்ட உணவு செரியாமல் மந்தமாகி, வயிறு இறைந்து, ஏப்பம், விக்கல், குரல் கம்மல், வயிறு ஊதல்,மேல் மூச்சு, நாடிநடை தளறல், பிசுபிசுத்த வியர்வை எனும் குணங்களுடன் வாந்தியும், பேதியும் அன்னம் வடித்த கஞ்சி போல இருக்கும். உடல், நாவு, மூச்சு வாழை தண்டு போல சில்லிடும். கண்கள் குழி விழுந்து உடலும், முகமும் வாடும். விரல் சிறுத்து, வாய், உதடு, உடல் நீலமாகும். வயிற்றிலும், சதைகளிலும் வலி எடுக்கும். சிறுநீர் சுத்தமாக இறங்காது. அதிக தாகம் எடுக்கும்.


ஊழி நோயின் வகைகள் :
1. வாத ஊழிநோய் :
வயிற்றில் இரைச்சல், பேதி, உடல் கறுத்தல், விழி மூடாது இருத்தல், மனக்கலக்கம், சுரம், குடல் குமுறி புரட்டல் எனும் குணங்கள் காணும்.

2. பித்த ஊழிநோய் :
பேதி, உடல் சூம்பல், விக்கல், பிதற்றல், வாந்தி, மயக்கத்துடன் அரட்டல் புரட்டல் எனும் குணங்கள் காணும்.

3. ஐய ஊழிநோய் :
நாடி விரைவில் அடங்கி, குறுக்கில் வலி, மேல்பார்வை, நடக்க இயலாமை, புரளல், உடல் வெளுப்பு எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - கடுப்புக்கழிச்சல் / சீதபேதி

            வயிறு கடுத்து அடிக்கடி சிறிதாகவோ அல்லது கடுப்பு அதிகமின்றி அதிகமாகவோ சீதமும் (சளியும்), இரத்தமும் கலந்து கழியும்.

சீதபேதி உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக காரம், புளிப்பு சேர்ந்த உணவுகளை உண்ணல்
  2. எளிதில் செரிக்காத உணவை உண்ணல்
  3. கடும் வெயிலில் அலைதல்
  4. அதிக குளிரில் அலைதல்
  5. இரவில் கண் விழித்தல்

சீதபேதியின் பொதுக் குணங்கள் :
இந்நோயில் தலைவலி, வாந்தி, குமட்டல், வயிறு கடுத்து இரைந்து புரட்டல் எனும் குணங்கள் காணும்.

ரோக நிதானம் - குடல் பிடிப்பு நோய்

            இந்நோய் வயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டு வலிக்கும் நோய். மேலும் இதில் வயிற்று இரைச்சல், வயிற்றுவலி, வயிறு புரட்டல், மலக்கட்டு, பெருமூச்சு, சுரம் எனும் குணங்களை உண்டாக்கி வயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டு நிமிர முடியாதவாறு வலிக்கும். இது அட்டிலம், பிரதி அட்டிலம், துநி, பிரதிதுநி என 4 வகைப்படும்.

குடல் பிடிப்பு நோய் உருவாகக் காரணங்கள் :
  1. அதிக உழைப்பு
  2. விரைவாக ஓடுதல்
  3. வயிற்றில் அடிபடல்
  4. அதிக பட்டினி மற்றும் அதிக உணவு
  5. எளிதில் செரிக்காத உணவுகளை உண்ணுதல்

குடல் பிடிப்பு நோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் ஆரம்பத்தில் வயிறு இரைந்துபோகும். பின் வயிறு ஊதி, வயிற்றில் தாங்க முடியாத வலி, குடல் புரட்டல், மூச்சுவிட இயலாமை, வயிற்றை இழுத்துப் பிடித்து நிமிர இயலாமல் செய்தல், வாந்தி, ஏப்பம், சுரம், மலம் தடைபடுதல்.

ரோக நிதானம் - ஊதல் (சோபை) நோய்

            உடலில் இரத்தம் கெட்டு நீர்க் கோர்த்து உடல் வெளுத்து வீங்கி ஊதுதல் சோபை எனப்படும். இந்நோய் 4 வகைப்படும்.

சோபை நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. நஞ்சை உண்ணுதல்
  2. வெளுப்பு நோயின் தாக்கம்
  3. மலைகள், நீர்நிலைகளின் கரைகளில் வசித்தல்
  4. சாம்பல், மண், தவிடு போன்றவற்றை அதிகமாக உண்ணுதல்

சோபை நோயின் பொதுக் குணங்கள் :
இந்நோயில் உடல் வெளுத்து வலிமை குறைந்து, நடந்தால் கணுக்காலில் வீக்கம், சோர்வு, இளைப்பு, தலை சுற்றல், மயக்கம் உண்டாகி, பின் உடல் நாளுக்கு நாள் வீங்கும்.

சோபை நோயின் குணங்கள் :
1) வாத சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு செரியாமை, மயிர் சிவந்து, தூக்கம் கெடும்.

2) பித்த சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வாந்தி, மயக்கம், நீர்வேட்கை, இளைப்பு, சோர்வு, உடல் மஞ்சள் நிறத்தில் அல்லது சிவந்து காணும்.

3) ஐய சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு தோலில் தினவெடுத்து, மயிர்க்கால்கள் வெளுத்து, குரல் கம்மல், கண் எரிச்சல் எனும் குணங்கள் காணும்.

4) முக்குற்ற சோபை :
இந்நோயில் பொதுக் குணங்களோடு முன்சொன்ன மூன்று குணங்களும் கலந்து காணும்.

ரோக நிதானம் - கல்லீரல் (வலப்பாட்டீரல்) நோய்

            கல்லீரல் தன அளவில் நிற்காமல் பெருத்துக் கொண்டே வந்து தன் இயற்கை தொழிலை இழத்தல் அல்லது சிறுத்துக் கொண்டே வந்து பல நோய்களை உண்டாக்கும் இயல்பைக் கொண்டிருப்பது. இது 3 வகைப்படும்.

கல்லீரல் நோய் வரக் காரணங்கள் :
  1. அதிக உணவு அல்லது உடலுக்கு ஒவ்வாத உணவை உண்ணல்
  2. குழந்தைகளுக்குப் பால் உணவின் மாறுபாட்டால் வருவது
  3. பாலியல் நோய் மற்றும் சுரத்தின் கூட்டால் வருவது
  4. கள், சாராயம் அதிகமாகக் குடித்தல்

கல்லீரல் நோயின் பொதுக் குணங்கள் :
            இந்நோயில் வாய் கசத்தல், சுவையின்மை, வாய்நீர் ஊறல், பசியின்மை, பித்த வாந்தி, முகம் சுருங்கி எலும்புகள் எடுத்துக் காட்டல், கைகால் சூம்பல், வயிறு பெருத்தல், அடிக்கடி சுரம், உடல் இளைத்துக் கறுத்தல்.

கல்லீரல் நோயின் வகைகள் :
1) வாத கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு நிணநீர் குழாய்களின் முடிச்சுகள் கனத்தல்,  உடலில் குருதியின் அளவு குறைந்து வெளுத்தல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு பித்தநீர் உடல் முழுதும் கலந்து மஞ்சள் நிறத்தில் காணும்.

3) ஐய கல்லீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு சிறுநீர் அளவில் குறைந்தும், சிவந்தும் காணும்.

ரோக நிதானம் - மண்ணீரல் (இடப்பாட்டீரல்) நோய்

            மண்ணீரல் தன் அளவில் இருக்காமல் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டே வந்து உடலின் இரத்த அளவைக் குறைப்பது மண்ணீரல் நோய் எனப்படும். இது 4 வகைப்படும்.

மண்ணீரல் நோய் வரக் காரணங்கள் :
  1. உணவில் பால், நெய், எண்ணெய் இவைகளை அளவுக்கதிகமாக உண்ணுதல்
  2. வயிறு நிறைய உண்டவுடன் ஆடல், பாடல், குதித்தல், நீந்துதல்
  3. உடலுக்கு ஆகாத குருதியை கெடுக்கும் உணவை உண்ணுதல்
  4. குளிர்க் காய்ச்சல், பாண்டு, சுரம் போன்ற நோய்களின் தாக்கம்
  5. கழிச்சல் மருத்துகளை அடிக்கடி எடுத்தல்
  6. உண்டவுடன் உறங்குதல்

மண்ணீரல் நோயின் பொதுக்குணங்கள் :
            இந்நோயில் வாயில் சுவையறிய இயலாமை, குமட்டல், உணவில் வெறுப்பு, வாந்தி, வயிறு பொருமல், உடல் சூடு அதிகரித்தல், வயிறு பெருத்து உடல் இளைத்துக் கொண்டே வருதல், மேலும் உடல் கறுத்துக் காணுதல், மண்ணீரல் பெருத்துக் கொண்டே வருதல், வயிற்றில் பளு மற்றும் வலி, உணவு செரியாமை, வயிற்றில் நீர் கோர்த்து கொள்ளுதல்.

மண்ணீரல் நோயின் வகைகள் :
1) வாத மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வயிற்றின் மேல் குருதிக் குழல்கள் புடைத்துப் பச்சை நிறத்தில் காணுதல், கைகால் சோம்பல், மலம் சிறுநீர் சுருங்குதல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு வாந்தி, குமட்டல், மயக்கம், தலை சுற்றல், கழிச்சல் போன்ற குணங்கள் காணும்.

3) ஐய மண்ணீரல் நோய் :
இந்நோயில் பொதுக் குணங்களோடு உடல் வலிமை குறைந்து நிணநீர் குழாய்களின் முடிச்சுகள் வீங்கித் திரண்டு கட்டிகளைப் போலக் காணும்.

4) முக்குற்ற மண்ணீரல் நோய் :
இந்நோயில் முன்சொன்ன மூன்று குணங்களும் கலந்து தோன்றும்.