திங்கள், 28 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - வாந்தி / சத்தி

            உண்ட உணவும் - நீரும் செரித்தும் செரிக்காமலும் விரைவாக வாய் வழியாக வெளியேறுதல் வாந்தி எனப்படும். இதற்கு சர்த்திரோகமென்றும், வமனரோகமென்றும் பெயர். இது 11 வகைப்படும்.

வாந்தி நோய் வரக் காரணங்கள் :

            எளிதில் செரிக்காத உணவுகளையும், நஞ்சு வகைகளையும், குன்மம் முதலிய நோய்களாலும் உண்ட உணவு வயிற்றிலேயே தங்கி புளித்து வாந்தியை உண்டாக்கும். மேலும் பெண்கள் கருவுற்ற காலத்திலும், பித்தம் அதிகரிப்பதாலும், சுற்றிச் சுழன்று ஓடுவதாலும், கப்பல் பிரயாணம் முதலியவற்றாலும், வயிற்றில் உண்டாகும் கட்டிகளாலும், ஊழி எனும் நோயிலும் வாந்தி உண்டாகும்.

வாந்தி நோயின் பொதுக்குணங்கள் :

            இந்நோயில் வாயில் நீர் ஊறுதல், வாய் குமட்டல், சுவை மாறல், ஒக்காளம், நாவு தடுமாறல், வயிறு இரைந்து நோதல், குடல் புரட்டல், தாகம், ஏப்பம், விக்கல், களைப்பு, சோர்வு, வியர்வை, கைகால் சில்லிடல், மார்பு படபடத்தல், தலை கிருகிறுத்தல், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

வாந்தி நோயின் வகைகள் :

1. வாத வாந்தி :
இந்நோயில் வாய் வரளல், மார்பிலும் தலையிலும் நோவு, குரற் கம்மல், இருமல், இளைப்பு, கண்டத்தில் வேதனையுடன் சத்தம், கருத்த - துவர்ப்பான - நுரையுடன் கூடிய வாந்தி எனும் குணங்கள் காணும்.

2. பித்த வாந்தி :
இந்நோயில் உப்புநீர் - புகைநிற நீர் - பச்சை மஞ்சள் நிற நீர் போல குருதியுடன் கலந்து புளிப்பு - காரம் - கசப்பு சுவையிலும்  கடுமையாகவும் வாந்தி, தாகம், உடல் எரிச்சல், தலைசுழலல், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

3. சிலேத்தும வாந்தி :
இந்நோயில் வழுவழுப்புடன் கோழையாக - நூல்போல - இனிப்பு உவர்ப்பு சுவையுடன் வாந்தி, மயிர்சிலிர்ப்பு, முகத்தில் கொஞ்சம் அதப்பு, சோர்வு, வாயில் இனிப்பு, மார்பு துடித்தல், இருமல் எனும் குணங்கள் கொண்டது.

4. முக்குற்ற வாந்தி :
இந்நோயில் மார்பு - கண்டம் - தலையில் நோய், இருபக்கத்திலும் இசிவு, கண்கள் பிதுங்குவது போல இருத்தல், உடல் எரிச்சல், அதிக தாகம், பிரமை, மயக்கம், நடுக்கல் எனும் குணங்கள் காணும்.

5. செரியா வாந்தி :
இந்நோய் எளிதில் செரிக்காத உணவுகளை உண்பதால் அவை செரிப்பதற்கு கடினமாகி, கடினமான வயிற்றுவலியுடன் வாந்தியாகும்.

6. நீர்வேட்கை வாந்தி :
இந்நோயில் தாகம் உண்டாகும்போது அதை தணிக்காமல் விட்டால் பித்தம் மீறி வெண்மை - மஞ்சள் நிறத்தில் வாந்தியாகும்.

7. கருப்ப வாந்தி :
இந்நோயில் வாய் நீர் ஊறி, கசப்பு அல்லது வேறு சுவைகளில் வாந்தியாதல், புளிப்பு சுவையுள்ள பொருள்களை விரும்புதல் எனும் குணங்கள் காணும்.

8. திருஷ்டி வாந்தி :
இந்நோயில் வாந்தியில் அசுதி, துர்நாற்றம் இருக்கும். இதற்கு கண்ணேறு வாந்தி என்று பெயர்.

9. புழு வாந்தி :
இந்நோயில் வாந்தியுடன் புழுக்கள் விழும். வயிற்றில் வலி, உடல் நடுக்கல், மார்பு துடித்தல் எனும் குணங்கள் காணும்.

10) மல வாந்தி :
இந்நோயில் நோயாளியை அதிகமாக வருந்தி தலைவலி, வயிற்றுநோய், மிகுந்த சுரம், உளமாந்தை, களைப்பு,மலம் அதிக துர்நாற்றத்துடன் இருத்தல் எனும் குணங்கள் காணும்.

11) வெறுப்பு வாந்தி :
இந்நோயில் அருவருக்கத்தக்க பொருள்களை பார்ப்பதாலும், நினைப்பதாலும், இவை பற்றி அடுத்தவர் கூறக் கேட்பதாலும் உண்டாகும் வெறுப்பால் உணவில் விருப்பம் இல்லாமல் வாந்தியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக