திங்கள், 28 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - மாந்தம் (அலசகம்)

            உண்ட உணவு செரிக்காமலும், வாந்தியாகாமலும், பேதியாகமலும் வயிற்றிலேயே நின்று தங்கி இரைதல், ஏப்பம் - வாந்தி ஆகாமை எனும் துன்பங்களை விளைவிக்கும் நோய் மாந்தநோய்  ஆகும்.  இந்நோய் மூன்று வகைப்படும்.

மாந்த நோய் உண்டாகக் காரணங்கள் :
            மாமிசம், ஆட்டுப்பால்,  மாவுப்பொருட்கள், சோறு முதலியவற்றை அளவுக்கு அதிகமாக உண்பதாலும், சரியாக பக்குவம் செய்யாத உணவுகளை உண்பதாலும், உணவுண்ணாமல் அதிக பட்டினி கிடப்பதாலும், நோயால் உடல் மெலிந்தவர்களும் அதிக உணவை உண்பதால் முக்குற்றங்களும் கேடடைந்து இந்நோய் உண்டாகும்.

மாந்த நோயின் பொதுக்குணங்கள் :
            உணவு வயிற்றில் தங்கி புளித்து வாய் குமட்டல், வாய்நீர் ஊறல், ஏப்பம் வராமை, வயிறு இரைந்து நோதல், புரட்டல், தலை சுற்றல், உடல் நடுக்கல், நாவறட்சி, அதிக தாகம், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

மாந்த நோயின் வகைகள் :
1. ஐய (சீதக்கட்டு) மாந்தம் :
இந்நோயில் உடலுக்கு வேண்டிய அளவு உணவு உண்ணாமல் இருத்தல், அளவுக்கு அதிகமாக உணவு உண்ணல், வேளைதவறி உண்ணுதல் போன்ற காரணங்களால்உணவானது வாந்தியாகாமலும், பேதியாகாமலும், செரிக்காமலும் சீதத்துடன் (ஐயம்/கபம்) பிசறிக்கொண்டு வயிறு ஊதல், வயிறு புரட்டல், வயிற்றில் வலி, மூச்சு விடஇயலாமை, வாய்நீர் ஊறல், நாவறட்சி, அதிக தாகம் எனும் குணங்கள் காணும்.

2. கோல் மாந்தம் :
இந்நோயில் உண்ட உணவு செரிக்காமல் வயிற்றை ஊதச் செய்து, வயிற்றில் இரைச்சல், புரட்டல், வலி முதலிய குணங்கள் உண்டாகி, தாங்க முடியாத வயிற்றுவலியுடன் புரளச் செய்யும். மேலும் அதிக தாகம், உடல் சிலிர்த்தல், கைகால் சில்லிடல், பிசுபிசுத்த வியர்வை,உடல் நிறமாறல், உடல் கோல் (கம்பு) போல வளைக்கவும், நிமிரவும் இயலாத நிலை போன்ற குணங்கள் காணும்.

3. நஞ்சு மாந்தம் :
இந்நோயில் நாட்பட்ட பழைய உணவுகளை உண்ணுதல், ஊசிப்போன - அழுகிய - பூஞ்சைபடிந்த உணவுகளை உண்பதால் வாயில் சுவை மாறி, வாய்நீர் ஊறல், குமட்டல், மயக்கம், வயிற்றுவலி, வாந்தி, குடல் புரட்டல், கழிச்சல், தாங்க முடியாத வயிற்றுவலி, வியர்வை, கைகால் சில்லிடல் எனும் குணங்கள் காணும்.



ரோக நிதானம் - வாந்தி / சத்தி

            உண்ட உணவும் - நீரும் செரித்தும் செரிக்காமலும் விரைவாக வாய் வழியாக வெளியேறுதல் வாந்தி எனப்படும். இதற்கு சர்த்திரோகமென்றும், வமனரோகமென்றும் பெயர். இது 11 வகைப்படும்.

வாந்தி நோய் வரக் காரணங்கள் :

            எளிதில் செரிக்காத உணவுகளையும், நஞ்சு வகைகளையும், குன்மம் முதலிய நோய்களாலும் உண்ட உணவு வயிற்றிலேயே தங்கி புளித்து வாந்தியை உண்டாக்கும். மேலும் பெண்கள் கருவுற்ற காலத்திலும், பித்தம் அதிகரிப்பதாலும், சுற்றிச் சுழன்று ஓடுவதாலும், கப்பல் பிரயாணம் முதலியவற்றாலும், வயிற்றில் உண்டாகும் கட்டிகளாலும், ஊழி எனும் நோயிலும் வாந்தி உண்டாகும்.

வாந்தி நோயின் பொதுக்குணங்கள் :

            இந்நோயில் வாயில் நீர் ஊறுதல், வாய் குமட்டல், சுவை மாறல், ஒக்காளம், நாவு தடுமாறல், வயிறு இரைந்து நோதல், குடல் புரட்டல், தாகம், ஏப்பம், விக்கல், களைப்பு, சோர்வு, வியர்வை, கைகால் சில்லிடல், மார்பு படபடத்தல், தலை கிருகிறுத்தல், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

வாந்தி நோயின் வகைகள் :

1. வாத வாந்தி :
இந்நோயில் வாய் வரளல், மார்பிலும் தலையிலும் நோவு, குரற் கம்மல், இருமல், இளைப்பு, கண்டத்தில் வேதனையுடன் சத்தம், கருத்த - துவர்ப்பான - நுரையுடன் கூடிய வாந்தி எனும் குணங்கள் காணும்.

2. பித்த வாந்தி :
இந்நோயில் உப்புநீர் - புகைநிற நீர் - பச்சை மஞ்சள் நிற நீர் போல குருதியுடன் கலந்து புளிப்பு - காரம் - கசப்பு சுவையிலும்  கடுமையாகவும் வாந்தி, தாகம், உடல் எரிச்சல், தலைசுழலல், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

3. சிலேத்தும வாந்தி :
இந்நோயில் வழுவழுப்புடன் கோழையாக - நூல்போல - இனிப்பு உவர்ப்பு சுவையுடன் வாந்தி, மயிர்சிலிர்ப்பு, முகத்தில் கொஞ்சம் அதப்பு, சோர்வு, வாயில் இனிப்பு, மார்பு துடித்தல், இருமல் எனும் குணங்கள் கொண்டது.

4. முக்குற்ற வாந்தி :
இந்நோயில் மார்பு - கண்டம் - தலையில் நோய், இருபக்கத்திலும் இசிவு, கண்கள் பிதுங்குவது போல இருத்தல், உடல் எரிச்சல், அதிக தாகம், பிரமை, மயக்கம், நடுக்கல் எனும் குணங்கள் காணும்.

5. செரியா வாந்தி :
இந்நோய் எளிதில் செரிக்காத உணவுகளை உண்பதால் அவை செரிப்பதற்கு கடினமாகி, கடினமான வயிற்றுவலியுடன் வாந்தியாகும்.

6. நீர்வேட்கை வாந்தி :
இந்நோயில் தாகம் உண்டாகும்போது அதை தணிக்காமல் விட்டால் பித்தம் மீறி வெண்மை - மஞ்சள் நிறத்தில் வாந்தியாகும்.

7. கருப்ப வாந்தி :
இந்நோயில் வாய் நீர் ஊறி, கசப்பு அல்லது வேறு சுவைகளில் வாந்தியாதல், புளிப்பு சுவையுள்ள பொருள்களை விரும்புதல் எனும் குணங்கள் காணும்.

8. திருஷ்டி வாந்தி :
இந்நோயில் வாந்தியில் அசுதி, துர்நாற்றம் இருக்கும். இதற்கு கண்ணேறு வாந்தி என்று பெயர்.

9. புழு வாந்தி :
இந்நோயில் வாந்தியுடன் புழுக்கள் விழும். வயிற்றில் வலி, உடல் நடுக்கல், மார்பு துடித்தல் எனும் குணங்கள் காணும்.

10) மல வாந்தி :
இந்நோயில் நோயாளியை அதிகமாக வருந்தி தலைவலி, வயிற்றுநோய், மிகுந்த சுரம், உளமாந்தை, களைப்பு,மலம் அதிக துர்நாற்றத்துடன் இருத்தல் எனும் குணங்கள் காணும்.

11) வெறுப்பு வாந்தி :
இந்நோயில் அருவருக்கத்தக்க பொருள்களை பார்ப்பதாலும், நினைப்பதாலும், இவை பற்றி அடுத்தவர் கூறக் கேட்பதாலும் உண்டாகும் வெறுப்பால் உணவில் விருப்பம் இல்லாமல் வாந்தியாகும்.

ரோக நிதானம் - செரியாமை / அசீரணம்

            உண்ட உணவானது செரிக்காமல் வயிற்றில் தங்கி பேதி, ஏப்பம், வயிறு ஊதல், வாந்தி, விக்கல் எனும் குணங்களைக் காட்டுவது செரியாமை எனப்படும். இது 9 வகைப்படும்.

செரியாமை நோய் வரக் காரணங்கள் :

எளிதில் செரிக்காத உணவுகளாகிய கொழுப்பு, இறைச்சி, மீன், கிழங்கு, கடலை, மொச்சை இவற்றை அளவுக்கு மிஞ்சி உண்பதாலும், ஊசிய உணவு வகைகள் மற்றும் பழைய உணவுகளை அதிகமாக உண்பதால் வயிற்றில் புளிப்பு மிகுந்து உணவை செரிக்கும் அமிலம் தன்வலிமை இழந்து உணவு செரிமானம் ஆகாமல் போகும். மேலும் நிலம் குளிர்ச்சியடைவதல் அல்லது குளிர்ந்த பகுதிகளில் இருப்பவர்களுக்கு உண்டாகும் மந்தம், தூக்கமின்மை, மனக்கலக்கம், பேராசை, பயம் முதலிய காரணங்களாலும் இந்நோய் உண்டாகும்.

செரியாமை நோயின் பொதுக்குணங்கள் :

            வயிறு உப்புதல், வயிறு இரைதல், தொடர் ஏப்பம், அடிக்கடி விக்கல், தொண்டையில் உப்பு கரித்தல், வயிற்றிலுள்ள நீர் எதிரெடுத்தல்

செரியாமை நோயின் வகைகள் :

1. வாத அசீரணம் :
இந்நோயில் உடல் இளைத்தல், தாகம், வயிற்றில் பசிமந்தம் எனும் குணங்கள் காணும்.

2. பித்த அசீரணம் :
இந்நோயில் உடல்சூடு அதிகரித்தல், தாகம், சோர்வு, புளித்த ஏப்பம் என்னும் குணங்கள் காணும்.

3. ஐய அசீரணம் :
இந்நோயில் வாயில் நீர் ஊறல், வயிற்றில் வலியுடன் சிரமம், உடல் கனத்து வலி, கண்கள் - தாடை இவற்றில் அதைப்பு, அடிக்கடி ஏப்பம் எனும் குணங்கள் காணும்.

4. பித்த - ஐய அசீரணம் :
இந்நோயில் உண்ணும் உணவு வாந்தியாதல், உடலும் நாவும் வறளல், ஏப்பம், உடல் எரிச்சல், கழுத்தில் வியர்த்தல், உடல் திடீரென்று குளிரல் எனும் குணங்கள் காணும்.

5. வாத - பித்த அசீரணம் :
இந்நோயில் புளித்த ஏப்பம், உணவு வாந்தியாதல், வயிறு உப்பல், வயிறு இரைந்து புளித்த பேதி, முகம் கருத்தல், உடல் வாடல், மயக்கம், தாகம் எனும் குணங்கள் காணும்.

6. கப - வாத அசீரணம் :
இந்நோயில் உடல் முழுதும் நோதல், கோழை உண்டாதல், உடலும் கண்களும் வெளுத்தல், நுரையாக பேதியாதல், வெளுத்த வாந்தி, இருமல், பொய்ப்பசி எனும் குணங்கள் காணும்.

7. நாட்பட்ட அசீரணம் :
இந்நோயில் உண்ட உணவு வயிற்றிலேயே தங்கி கனத்து நாள்பட்ட மந்தமாக இருக்கும்.

8. விருப்ப அசீரணம் :
இந்நோயில் உண்ணும் உணவு செரிக்காமல் புளித்த ஏப்பம்,  வயிற்றில் இரைச்சல், வயிறு பொருமல், வயிற்றில் வலி எனும் குணங்கள் காணும்.

9. வல்லுணவு அசீரணம் :
இந்நோயில் வாந்தி, மயக்கம், நினைவு அழிதல், நாக்கு - கண் - மூக்கு - உடல் எனும் இவைகள் கருத்தல், உடல் உலர்தல், உணவு மற்றும் நீரின் மீது வெறுப்பு, மலம் வெளுப்பு மற்றும் கறுத்த நிறத்தில் பேதியாதல் எனும் குணங்கள் காணும்.

சனி, 26 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - தமரக (மார்பு) நோய்

            இந்நோய் மார்பு வலி, பெருமூச்சு,மூச்சடைப்பு,இளைப்பு, சோர்வு, கால் வீக்கம் முதலிய குணங்களைக் காட்டி உயிரைக் கொல்லும். இந்த மார்பு நோயானது 5 வகைப்படும்.

தமரக நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக கோபத்தால் பித்தம் மிகுந்து தமரக நோய் உண்டாகும்
  2. புளிப்பு, கசப்பு, துவர்ப்பு உணவை அதிகமாக உண்ணுதல்
  3. அதிக சூடுள்ள உணவை அதிகமாக உண்ணுதல்
  4. உடலை அதிகமாக வருத்தி வேலை செய்யுதல்
  5. அதிகமாக உண்ணுதல்
  6. மார்பில் அடிபடுதல்
  7. மலசலம் அடக்குதல்
  8. உடல் வற்றல்

தமரக நோயின் பொதுக்குணங்கள் :

            சிறிது தூரம் நடந்தாலும், ஓடினாலும் பெருமூச்சு வாங்குதல், மார்பு துடித்தல், மார்பில் வலி, தலை சுற்றல், மயக்கம், கண்கள் இருளல், உதடு - முகம் சிலசமயம் நீலநிறமாதல், தூக்கமின்மை, வாய் பிதற்றல், மார்பில் புகைச்சலுடன் இருமல் போன்ற குணங்கள் காணும்.

தமரக நோயின் வகைகள் :
1) வாத மார்பு நோய் :
இந்நோயில் மார்பு வறண்டு வெடிப்பது போலவும், குத்துவது போலவும் காணும். மேலும் முகம் வெளுத்தல், மார்பு கனத்து நொந்து படபடக்கும், வயிறு கடுத்து நெஞ்சு பாரமாக இருக்கும், அதிக சத்தத்தை தாங்க இயலாமை, அற்ப உறக்கம், உடல் வலி, மயக்கம், பயம், உடல் கருமை நிறம் அடைதல், மூச்சு பிடிப்பது போன்ற உணர்வு எனும் குணங்கள் காணும்.

2) பித்த மார்பு நோய் :
இந்நோய் அதிகமாக ஆடல், பாடல் செய்வதால் திடீரென மார்பு நொந்து, உடல் துடித்து, உயிர் போய்விடும் என்ற பயத்தை உண்டாகும். மேலும் தலை கிறுகிறுத்து மயக்கம், நாவறட்சி அல்லது வாயில் அதிகமாக நீர் ஊறல், உடல் அழற்சி, தொண்டை அடைப்பது போன்ற உணர்வு, வியர்வை எனும் குணங்கள் காணும்.

3) ஐய மார்பு நோய் :
இந்நோயில் மார்பை கெட்டியாக இழுத்து பிடித்தது போலும், மூச்சு பிடித்தது போலவும், பாறாங்கல்லை வைத்தது போலவும் இருக்கும். மேலும் இருமல், மார்பில் தாங்க முடியாத வலி, இடது மார்பிலிருந்து, தோள்பட்டை, கை, புஜம், கை விரல்கள் போன்ற பகுதிகளில் வேதனை, இந்த பகுதிகளில் சில்லிடல் மற்றும் மரத்து போதல், முக வாட்டம், மூச்சு திணறல் போன்ற குணங்கள் காணும்.

4) முக்குற்ற மார்பு நோய் :
இந்நோயில்மார்பில் குத்துவது போன்ற வலி எரிச்சல், மார்பு பளுவாக இருத்தல், நீர் வேட்கை, மயக்கம், கீல்களில் வீக்கம், சுரம், தலைவலி போன்ற குணங்கள் காணும்.

5) கிருமி மார்பு நோய் :
இந்நோய் வயிற்றில் உண்டாகும் கிருமிகள் சிலவேளைகளில் மார்பு வரையில் வந்து உலவுவதால் உண்டாகும். இதில் மார்பில் துடிதுடித்து அதறல், வீக்கம், அதிக நமைச்சல், அதிர்ச்சி,கண்கள் பஞ்சடைதல், இருமல், கோழை, மூச்சு தடுமாறல், முகமும் கண்களும் கறுத்தல் போன்ற குணங்கள் காணும்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - குருதி அழல் / இரத்த பித்தம்

            இந்நோய் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், இரத்தத்தில் பித்தத்தின் அளவு அதிகரித்து இரத்தம் கெடுவதாலும் உண்டாகிறது. இந்நோயில் இரத்தம் கண், காது, மூக்கு, வாய், ஆசனவாய், நீர்த்தாரை, யோனி ஆகிய வழிகளில் வெளியேறும். இந்நோய் 8 வகைப்படும்.

குருதி அழல் நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. உள்ளுறுப்புகள் சீர்குலைந்து, வறண்டு, வெதும்பி இரத்தம் கெடுதல்
  2. அதிக வியர்வையால் உடல் வலிமை குறைந்து பித்தம் அதிகரித்தல்
  3. அதிக காரம், உப்பு, புளிப்பு உணவுகளை உண்ணுதல்
  4. உஷ்ணம் / குளிர்ந்த உணவுகளை அதிகமாக உண்ணுதல்
  5. வெயிலில் அதிகமாக அலைந்து திரிதல்
  6. அதிக நடை, அதிக புணர்ச்சி

குருதி அழல் நோயின் பொதுக்குணங்கள் :

            இருமல், குளிர்ச்சியும் புளிப்பும் கலந்த உணவில் விருப்பம், வாந்தி, தலைபாரம், வாய் சிவத்தல், பித்த வாந்தி அல்லது இரத்த வாந்தி, உடல் நலிவடைதல், இருமல், வாந்தி, இரைப்பு, செரியாமை, உடல் எரிச்சல், உடல் வெளுத்தல், உணவில் வெறுப்பு, பெருமூச்சு, அதிக தாகம், விக்கல், கை கால் முகம் வீங்குதல், நடுக்கம், இருமும்போதும் வாந்தியின்போதும் இரத்தம் வருதல், கண், காது, மூக்கு, வாய், ஆசனவாய், யோனி, நீர்த்தாரையில் இரத்தம் வருதல் போன்ற குணங்கள் உண்டாகும்.

குருதி அழல் நோயின் வகைகள் :
1) வாத குருதி அழல் :
இந்நோயில் நுரையுடன் இரத்தம் கறுத்து வெளியாதல், உடலில் வலி, மலம் கட்டுதல், மலம் கழிக்கும்போது வலியுடனும், குருதி கலந்தும் வெளிப்படும்.

2) பித்த குருதி அழல் :
இந்நோயில் இரத்தம் சருகு ஊறிய நீரின் நிறத்தில் வெளியாகும். உடல் வெளுத்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். கண், நாக்கு, தோல் ஆகியவை பசுமை கலந்த மஞ்சள் நிறத்திலும் காணும்.

3) ஐய குருதி அழல் :
இந்நோயில் இரத்தம் வெளுத்து, கோழையுடன் சேர்ந்தும், நாற்றத்துடனும் வெளிப்படும். மேலும் ஓயாத இருமல், அற்பசுரம், மூக்கில் நீர் வடிதல் எனும் குணங்கள் காணும்.

4) வாதபித்த  குருதி அழல் :
இந்நோய் வாத மற்றும் பித்த குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

5) வாதகப குருதி அழல் :
இந்நோய் வாத மற்றும் ஐய குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

6) கபவாத குருதி அழல் :
இந்நோய் ஐய மற்றும் வாத குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

7) கபபித்த குருதி அழல் :
இந்நோய் ஐய மற்றும் பித்த குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

8) முக்குற்ற குருதி அழல் :
இந்நோய் வாத - பித்த - ஐய குருதி அழலின் குணங்களைக் கொண்டது.

ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - மூக்கடைப்பு / பீனிசம் (Sinusitis)

            இந்நோயில் மூக்கின் உள்பகுதி சிவந்து, தும்மல், கண் சிவத்தல், மூக்கிலும், கண்ணிலும் நீர் வடிதல், தலைவலி, அடிக்கடி மூக்கைச் சிந்திச் சளி சீழ் அல்லது இரத்தம் வெளியாதல் எனும் குணங்கள் தோன்றும். இந்நோய் 6 வகைப்படும் என்றும், 9 வகைப்படும் என்றும் கூறினாலும், ஒருசில நூல்களில் வேறுசில வகைகளும் கூறப்படுகிறது.

பீனிசம் வரக் காரணங்கள் :
  1. குளிர்ந்த நீரினை பருகுதல்
  2. குளிர்ந்த உணவுகளை உண்ணுதல்
  3. பனி - குளிர்ந்த காற்றில் திரிதல்
  4. புகை அல்லது புழுதி படிந்த காற்றை சுவாசித்தல்
  5. உடலில் வெப்பம் அதிகரித்த நிலையில் தலை முழுகல்
  6. யோகப் பயிற்சிகளால் மூலச்சூடு அதிகரித்து மூளை வரை சென்று பரவுதல்

மூக்கடைப்பு நோயின் வகைகள் :

1) வாத பீனிசம் :
இந்நோயில் மூக்கு, நெற்றி, புருவம், கண், காது, வாய் இவற்றில் ஏதோ புழு ஊறுவது போன்ற உணர்வு, நமைச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூக்கும், வாயும் உலர்தல் போன்ற குணங்கள் காணும்.

2) பித்த பீனிசம் :
இந்நோயில் மூக்கில் எரிச்சல், தலை சுற்றல், மூக்கும், அதன் உட்புறமும் சிவந்து காணுதல், மூக்கில் மணம் அறிய இயலாமை, நீர் வேட்கை, மூக்கடைப்பு, மனக்கலக்கம்மூக்கில் கொப்புளம், புண், மஞ்சள் நிற சளி வெளியேறல் எனும் குணங்கள் காணும்.

3) சிலேஷ்ம பீனிசம் :
இந்நோயில் மூக்கிலும் கண்ணிலும் நீர் வடிதல், வெண்ணிற சளி, சளி முற்றி நாற்றத்துடன் கட்டியாக வெளியேறல், காதடைப்பு, மூக்கில் எரிச்சல், நமைச்சல் போன்ற குணங்கள் காணும்.

4) திரிதோஷ பீனிசம் :
வாத பித்த கப பீநசங்களின் குணங்கள் ஒரேநேரத்தில் உண்டாகும். இக்குணங்கள் காரணமின்றி அதிகரிப்பதும், குறைவதுமாய் இருக்கும்.

5) ரத்த பீனிசம் :
இந்நோயில் மூக்கில் நமைச்சலுடன் திமிர், சிவந்த சளியும் ரத்தமும் ஒழுகுதல், கண்ணிலும் காதிலும் தினவு, சருமம் கண் முதலியவைகள் சிவத்தல், ருசி தெரியாமை எனும் குணங்களை உண்டாக்கும்.

6) துஷ்ட பீனிசம் :
மேற்கூறிய ஐவகை பீனிச ரோகங்களை நிவர்த்தி செய்யாவிடில் இந்நோய் உண்டாகி அவைகளைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும்.

7) நீர் பீனிசம் :
இந்நோயில் மூக்கிலிருந்து நீர் தெளிவாக இருக்கும். தலை நோய், சிறு சுரம், சோம்பல், கைக்கால்கள் நோதல் எனும் குணங்கள் காணும்.

8) அதிதும்மல் பீனிசம் :
சுவாசத்தை நிறுத்திக் கும்பகம் செய்தல், சூரியனை சிமிட்டாது பார்த்தல், மூக்குத்தண்டின் எலும்பில் அடிபடுவதாலும், வாயுவானது அதிகரித்து நாசி, வாய், கண், செவி ஆகிய இடத்து நரம்பின் துவாரங்களை அடைத்து எந்நேரமும் தும்மலை உண்டாக்கும்.

9) நாசிகா சோஷம் :
இந்நோய் வாயு அதிகரித்து மூக்கில் சேரும்போது நாசி துவாரங்கள் வரளல், அத்துவாரத்தின் பக்கத்து தண்டுகளில் முள்ளால் குத்துவது போலிருத்தல், அதிக கபம், மூச்சு விடச் சிரமம் எனும் குணங்கள் உண்டாகும்.

10) நாசிகா நாகம் :
இந்நோய் கபமானது அதிகரித்து வாயுவை எழுப்பி நாசி துவாரங்களை அடைத்து மூக்கடைப்பு, மூச்சு திணறல் முதலிய குணங்களை உண்டாக்கும்.

11) கிராண பாகம் :
இந்நோய் பித்தத்தை கொண்டு நுனிமூக்கு பக்கங்களின் உட்புறத்தை வெந்தது போல் செய்து, அவ்விடத்தின் தோலிலும், மாமிசத்திலும் எரிச்சலுடன் காணும்.

12) நாசிகா சிராவம் :
இந்நோயில் கபம் அதிகரித்து மூக்கிலிருந்து கலங்கல் இல்லாத தெளிந்த சுத்த நீரை மிகவும் வடியச் செய்யும்.

13) அபிநசம் :
இந்நோயில் கபம் அதிகரித்து மூக்கின் நரம்புகளை அடைத்து முன்பு சொன்ன பீனிசங்களை விட அதிக உபத்திரவம் செய்யும்.

14) நாசிகா தீபிகை :
இந்நோயில் மூக்கில் நெருப்பில் பட்டது போலவும், இரத்தம் குழப்பியது போலவும் சிவந்து உட்புறமும், வெளியிலும் தொடக்கூடாத வேதனையுடன், மூச்சானது புகையைப் போல் வெப்பமாய் வருதல் எனும் குணங்கள் உண்டாகும்.

15) பூதி நாசிகம் :
இந்நோய் வாத பித்த கபங்களானவை தாடையில் மூலத்தைப் பற்றி நாசியில் சலம் வடிதல் மற்றும் துர்நாற்றம் எனும் குணங்கள் உண்டாகும்.

16) பூயாசிர நாசிகம் :
இந்நோய் திரிதோஷத்தினால் உண்டாகி நாசியில் சீழானது ரத்த நிறமாக விழுதலும், சிரசில் நோயுடன் எரிச்சலும் உண்டாகும்.

17) நாசிகா புடகம் :
இந்நோய் பித்த கபங்களினால் நாசியில் உண்டாகி சளி வறண்டு கட்டியாக விழுந்து, மூக்கில் கொப்புளமும் உண்டாக்கும்.

18) நாசா ரசம் :
இந்நோய் நாசியின் மூலத்தில் முளைபோல் கெட்டமாமிசத்தை வளர்பதுடன் வாத கப பீனிசக் குணங்களையும் உண்டாக்கும்.

19) நாசிகா அற்புதம் :
நாசியில் வீக்கத்துடன் பித்த கப பீனிசக் குறிகளையும் உண்டாக்கும்.

ரோக நிதானம் - குரல் கம்மல் நோய்

            இந்நோயில் பேசும்போது குரலொலி இயற்கையாய் இல்லாமல் தாழ்ந்தும், சில நேரங்களில் சத்தமில்லாமலும், கீச்சுக்குரலாகவும் இருக்கும். மேலும் தொண்டையில் ஏதோ பூசியது போலத் தொண்டை உலர்ந்து, இருமித் தொண்டை இறுக்கியது போல இருக்கும். இதன் காரணமாக இந்நோய் குரல் கம்மல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது 6 வகைப்படும்.

குரல் கம்மல் நோய் வரக் காரணங்கள் :
  1. அதிக குளிரான காற்றில் இருத்தல்
  2. குளிர்ச்சியான பொருட்களை உண்ணுதல்
  3. தொண்டை புண்ணாகும் அளவில் சூடான நீரை பருகல்
  4. இளைப்பு நோயினால் தொண்டையில் புண்ணாதல்
  5. குரல்வளையில் உள்ள கொழுப்பு மற்றும் சதை வீங்குதல்
  6. மிகவும் சத்தமாகப் பேசுதல் - பாடுதல்
  7. கழுத்தில் அடிபடுதல்
  8. நச்சுப்பொருட்களை உண்ணுதல்

குரல் கம்மல் நோயின் வகைகள் :

1. வாதக் குரல் கம்மல் :
இந்நோயில் வறட்சியான - வழுவழுப்பான பொருட்களை உண்ணுதல், கடும் வெயிலில் திரிதல் போன்ற காரணங்களால் குரல்வளை வறண்டு முள்சொருகியது போல் வேதனையை உண்டாக்கி, குரலில் நடுக்கம் காணப்படும்.

2. பித்த குரல் கம்மல் :
இந்நோய் பித்தத்தை பெருக்கக்கூடிய உணவு வகைகளை உண்பதால் குரல்வளை சிவந்து புண்ணாகி, தொண்டை நொந்து, குரல் சிறுத்து குரல் வளையில் எரிச்சலுடன், வரட்டல், பேச முடியாமை, கம்மிய பேச்சு என்னுங் குணங்களுடையது

3. கப குரல் கம்மல் :
இந்நோய் பனிக்காற்று, குளிர்ந்த பொருட்களை உண்ணுதல் போன்ற காரணங்களால் தொண்டையில் கோழை கட்டி, புண்பட்டு, இருமலுடன் குரல் ஒலியை மங்கச் செய்யும்.

4. திரிதோஷ குரல் கம்மல் :
இந்நோய் நாட்பட்ட நோய்கள் குணமாகும் வேளையில் வாத - பித்த - கப தோஷங்களின் கேடினால் உண்டாவதால் எளிதில் குணமாகாது. இந்நோயில் தொண்டையை இறுக்கிப் பிடித்தது போலப் பேச இயலா நிலை உண்டாகும்.

5. இளைப்பு குரல் கம்மல் :
இந்நோய் இளைப்பு நோயின் தாக்கத்தால் உன் உண்டாகும்.

6. நிணக் குரல் கம்மல் :
இந்நோய் தொண்டையில் சதை வளர்ச்சி அடைவதால் உண்டாகும்.


குரல் கம்மல் நோய் சாத்திய அசாத்தியங்கள் :
வாதம், பித்தம், சிலேஷ்ம, கஷயரோம குரற்கம்மல்கள் சாத்தியம். திரிதோஷமேதோகுரற் கம்மல்கள் அசாத்தியம்.

ரோக நிதானம் - அம்மை / வைசூரி

            “அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது” எனும் கொள்கைக்கு ஏற்ப சீதோஷ்ண நிலையின்  மாறுபாட்டால், நமது உடலின் தட்பவெட்ப மாறுதலால் இந்நோய் உண்டாகிறது. அது எவ்வாறெனில் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கத்தால் உடல் அதிக சூடாகி பித்தம் மாறுபாடு அடைகிறது. அந்நேரத்தில் கோடைமழையின் போது கபமும் சேர்ந்து கேட்டு உடலில் மாறுபாடு அடைந்த “பித்தகபத்தால்” இந்நோய் உண்டாகிறது. அதேபோல மழைக்காலத்தில் வெப்பம் அதிகமானால் முதலில் கபம் கேடடைந்து பின் பித்தமும் பாதித்து “கபபித்த” மாறுதலால் இந்நோய் உண்டாகிறது. இது 14 வகைப்படும். இவை தவிர வேறு சில வகைகளும் நடைமுறையில் உள்ளது.

அம்மை நோயின் பொதுக்குணங்கள் :

திடீர் சுரம், உடல்வலி, தலைவலி, இடுப்பில் உளைச்சல், தலைபாரம், உடலில் எரிச்சல் தும்மல், வாந்தி, மூக்கில் நீர் வடிதல் எனும் குணங்கள் தோன்றி முத்துகள் போல சிறிதும், பெரிதுமாக கட்டிகள் எழும்பி உடல் முழுதும் பரவும். பிறகு மலம் கட்டுதல் அல்லது பேதி, தொண்டைவலி, அறிவு தடுமாறல், பிதற்றல், மயக்கம், உணவுண்ண இயலாமை, எனும் குணங்களுடன் இந்தக் கட்டிகள் பெருத்து நீர் கொண்டு, கொப்புளமாகி, வெளுத்து, உடைந்து, பக்கு வைத்து ஆறி இயல்பு நிலைக்கு வரும். அப்போது வாயுலரல், கீல்களில் தளர்ச்சி, உடல்சோர்வு, மயிர்க்கூச்சம், கொப்புளங்கள் ஒன்பது நாள் இருக்கும்.

அம்மை நோயின் வகைகள் :

1) வாயம்மை :
இந்நோயில் வாயில் சிறு கொப்புளங்கள் உண்டாகி உணவு உண்ண முடியாத நிலை ஏற்படும்.

2) கோணியம்மை :
இந்நோய் கோணியில் உறங்கும்போது உடல் முழுவதும் சிவந்து உண்டாகும்.

3) பனைமுகரியம்மை :
இந்நோயில் மிதமான சுரம் காய்ந்து உடல் கடுக்கும். கண் சிவந்து எரிச்சல், கழுத்து வீங்கும், சன்னி, பிதற்றல், பெண்களுக்கு பெரும்பாடும் தோன்றும்.

4) பாலம்மை :
இந்நோயில் கடும் சுரமுடன் மூன்று நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் கடுக்கும். 7-ம் நாளில் நீர் கோர்த்து,9-ம் நாளில் இறங்கும். 15-ம் நாளில் தலை முழுகலாம்.

5) வரகுதரியம்மை :
இந்நோயில் அதிக சுரமுடன் 3-ம் நாளில் தலையில் கட்டைகள் தோன்றும். வாயிலும், நீர்த்தாரையிலும் குருதி கண்டு, 7-ம் நாளில் நீர் கட்டி, 11-ம் நாளில் இறங்கும்.

6) கொள்ளம்மை :
இந்நோயில் சுரம், சன்னி, பிதற்றல், வலிப்பு கண்டு, 3-ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, 13-ம் நாளில் இறங்கும்.

7) கல்லுதரியம்மை :
இந்நோயில் கடும் சுரம், வாந்தி, பேதி கண்டு 3ம் நாளில்தலையில் கட்டி தோன்றி, 7ம் நாளில் சங்கம்பழம் போல நீர் கட்டி, 10ம் நாளில் இறங்கும். 11ம் நாளில் தலை முழுகலாம்.

8) கடுகம்மை :
இந்நோயில் சுரமடித்த 3-ம் நாளில் தலையில் கடுகு போல கட்டிகள் தோன்றி உடலெங்கும் பரவி, வீக்கம், பேதி, சிறுநீர் சுருங்கல், சிறுநீருடன் குருதி வெளியாதல், குரல்கம்மல் எனும் குணங்கள் தோன்றி, 13ம் நாளில் குணமாகும்.

9) மிளகம்மை :
இந்நோயில் சிறுசுரமாக தோன்றி உடல் வீங்கி கடுக்கும், இடுப்பு விளங்காது, கீல்களில் வீக்கம் மற்றும் வலி, உடல் வலிமை குறைதல் எனும் குணங்கள் உண்டாகி 7ம் நாளில் கட்டிகள் தோன்றும்.

10) உப்புதரியம்மை :
இந்நோயில் சுரம் கண்டு 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி உடல் முழுதும் உப்பு போலிருக்கும். 5ம் நாளில் நீர் கட்டி 7ம் நாளில் வடியும். 11ம் நாளில் தலை முழுகலாம்.

11) கரும்பனசையம்மை :
இந்நோயில் சுரம் கண்ட 4ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் முழுதும் குத்திக் கருகும். பேதி, மயக்கம், மலம் கட்டி 13ம் நாளில் வடியும், உடல்முழுதும் விரிந்து, இரணமாகி கிருமி உண்டாகும். நினைவின்றி, மேல்மூச்சு வாங்கும். 21 நாளில் குணமாகும்.

12) வெந்தய அம்மை :
இந்நோயில் சுரம் கண்ட 3ம் நாளில் தலையில் கட்டி தோன்றி, 7ம் நாளில் நீர் கட்டி, 9ம் நாளில் வடியும். 15ம் நாளில் தலை முழுகலாம்.

13) பாசிப்பயற்றம்மை :
இந்நோயில் சுரமும், பிதற்றலும் கண்டு, 3 நாளில்  தலையில் கட்டிகள்தோன்றி, 7ம் நாளில் நீர் கட்டி, 9ம் நாளில் வடியும். 17ம் நாளில் தலை முழுகலாம்.

14) விச்சிரிப்பு அம்மை :
இந்நோயில் சுரம், கண் சிவத்தல், வாந்தி, பேதி காணும். 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, உடல் முழுதும் உமி போல வாரியிட்டு மறையும், வயிறு உளையும். 7ம் நாளில் தலை முழுகலாம்.

15) நீர்க்குளுவன் அம்மை :
இந்நோயில் சுரம் கண்டு 3ம் நாளில் சங்கம்பழம் போல தோன்றி, 7ம் நாளில் இறங்கும். 9ம் நாளில் தலை முழுகலாம்.

16) தவளையம்மை :
இந்நோயில் சுரம் கண்டு நடக்க முடியாமல் சூலை போல வலிக்கும். உணவு செல்லாது. 3ம் நாளில் தலையில் கட்டிகள் தோன்றி, 9ம் நாளில் இறங்கும். 11ம் நாளில்  தலை முழுகலாம்.

17) பெரியம்மை :
இந்நோயில் அதிக சுரம் கண்டு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், தலைவலி, கீல்களில் வலி, முதுகு வலி, வாந்தி, கண் சிவத்தல் எனும் குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கட்டிகள் தோன்றி, 7ம் நாளில் குளிர்சுரமும், தாகமும் உண்டாகும். இந்நோய் 15 அல்லது 16 நாட்களில் குணமடையாவிட்டால் நோயின் தாக்கத்தால் பித்தம் கேடடைந்து இரத்தத்தை கெடுத்து மரணத்தை விளைவிக்கும்.

18) சிறியம்மை :
இந்நோயில் தலைவலி, சிறுசுரம், சோம்பல், முதுகுவலி போன்ற குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கழுத்து , மார்பு பகுதிகளில் கட்டிகள் தோன்றி, நீர் கட்டி, ஒரு வாரத்திற்குள் இறங்கும்.

19) தட்டம்மை :
இந்நோயில் தும்மல், இருமல், கண் சிவத்தல், கண் எரிச்சல், மூக்கில் நீர் வடிதல், கண் ரெப்பை வீங்குதல், வாய் சிவந்து புன்னாதல், உணவருந்த இயலாமை, நீர் பேதி, உடல் இளைத்தல், சுரம் எனும் குணங்கள் தோன்றி, 3ம் நாளில் கட்டிகள் தோன்றும். 10 நாட்களுக்குள் இறங்கும்.

20) பூட்டுத்தாளம்மை (புட்டாளம்மை) :
இந்நோயில் சுரம் காய்ந்து தாடை (தாள்) மற்றும் கீல்களில் (பூட்டு) பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்நோயில் சுரம் காய்ந்து தாடையின் பூட்டுகள் மற்றும் கழுத்தின் பக்கவாட்டில் கட்டிபோல வீங்கி சிவந்து காணும். இதனால் வாயை திறக்க முடியாத நிலை உண்டாகும். மேலும் சிலருக்கு விரையும் சேர்ந்து வீங்கும். பெண்களுக்கு முலைகள் வீங்கும்.

சனி, 12 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - சந்நிபாதம் / சன்னி (Convulsion)

            ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு வாத, பித்த, கபம் எனும் மூன்று நாடிகளும் ஒருசேர தன்னளவில் அதிகரித்து பல்வேறு பாதிப்புகளைச் செய்தால் அதைச் சந்நிபாதம் அல்லது சன்னி என்று கூறுவார். பொதுவாகச் சன்னி நோய்களின் வகைகள் 13 என்று கூறினாலும் பல்வேறு நூல்களை ஆராயும்போது நமக்கு 20க்கும் மேற்பட்ட சன்னி வகைகள்பற்றிய விவரங்கள் கிடைக்கிறது.

சந்நிபாதம் பொதுக்குணங்கள் :
  1. கண்கள் சிவத்தல் அல்லது பசுமை நிறத்தில் இருத்தல்
  2. கழுத்து - நெற்றி - மார்பு பகுதிகளில் வியர்த்தல்
  3. உடல் வலி - எரிச்சல் - மயிர்க்கூச்சம்
  4. தயக்கம் - இருமல் - வீக்கம்
  5. சுரம் - பிரமை - பிதற்றல்

சந்நிபாத நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. வாத - பித்த - கப குற்றத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தொடர்ந்து உண்ணுதல்
  2. மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட காலத்தில் பத்திய மீறல்
  3. அகால நேரத்தில் எண்ணெய் தேய்த்து தலை முழுகுதல்
  4. ஆண் - பெண் தகாத உறவு
  5. கட்டி, தீப்புண், பலத்த காயம்
  6. பிரசவ காலத்தில் ஏற்படும் சுரம்

சந்நிபாத நோயின் வகைகள் :

1) வாத சன்னி :
இந்நோயில் வாதம் அதிகரிப்பதால் தலை நடுக்கல், பற்களைக் கடித்தல், சீறிவிழுதல், இருமல், கைகால்களை தூக்கிப் போடல், முகம் மற்றும் கண்கள் மினுமினுத்தல், மார்பு துடித்தல், நாவறட்சி, விடாத சுரம், பிரமை, உடல் தளர்ச்சி, உளைச்சல், நடுக்கம், தாகம், வாயில் கசப்பு தோன்றல், நா கறுத்தல், மூக்கில் நாற்றம், பெருமூச்சு, கழிச்சல், பெருமூச்சு, வயிறு நொந்து உளைதல் எனும் குணங்கள் காணும்.

2) பித்த சன்னி :
இந்நோயில் பித்தம் அதிகரிப்பதால் உடல் குளிர்தல், மயக்கம், பேசாது இருத்தல், சோர்வு, தளர்வு, கண் - தலை - செவி மந்தமடைதல், தாகம், அதிக சுரம், கழிச்சல், விக்கல், வாந்தி, வியர்வை, மேல்மூச்சு போன்ற குணங்கள் காணும்.

3) கப சன்னி :
இந்நோயில் கபம் அதிகரிப்பதால் கைகால்கள் சில்லிடல், உடல் தளர்தல், சோர்வு, உடல் வலி, அறிவு குலைதல், நாடுகள், மேல்மூச்சு, கண்கள் விரித்து நிலை குத்திப் பார்த்தல், நாடியில் தளர்வு, மயிர் சிலிர்த்தல் எனும் குணங்கள் காணும்.

4) கீல்வாத சன்னி :
இந்நோயில் வாத - கபம் மீறுவதால் கீல்களில் வலி, வீக்கம், கைகால்களை நீட்டவும், மடக்கவும் இயலாமை, மயக்கம், இருமல், பெருமூச்சு, தொண்டையில் கோழை, வயிற்றுவலி, குளிர், அதிசுரம், மயக்கம் எனும் குணங்கள் காணும்.

5) அந்தக சன்னி :
இந்நோயில் அதிக சோர்வு, மந்தம், விக்கல், வயிறு உப்புசம், உடல் நடுக்கம், தலை சுற்றல், நாடியில் தளர்வடைந்து உயிர் பிரியும். (அந்தகன் - எமன்).

6) உடல்கடுப்பு சன்னி :
இந்நோயில் உடல் முழுதும் கடுத்து, எரிச்சலுடன் சோர்வு, தூக்கமின்மை, உதடு உலர்தல், பேதி, நெற்றியில் வியர்த்தல் எனும் குணங்கள் காணும்.

7) சித்தவிப்பிரம சன்னி :
இந்நோயில் சித்தம் மயங்கி, பயத்துடன் விழித்தல், நினைவு மாறுதல், வாதபித்த தோஷங்கள் அதிகரித்து உயிர் பிரியும்.

8) சீதள சன்னி :
இந்நோயில் உடல் முழுதும் குளிர்ந்து, உடல் வலி, குரல் கம்மல், பேதி, ஒக்காளம், விக்கல், மூர்ச்சை, நடுக்கல், புலம்பல் எனும் குணங்கள் காணும்.

9) தாந்திரீக சன்னி :
இந்நோயில் உடலின் பலம் குறைந்து பெருமூச்சு, புகைந்து இருமல், பிதற்றல், தொண்டையில் தினவு, நாமுள், வயிறு உளைந்து கழித்தல் எனும் குணங்கள் காணும்.

10) கண்ட குருக்கல் சன்னி :
இந்நோயில் காதுவலி, கழுத்தில் முள் சொருகியது போல வலி, தலை வளைதல், பயம், திடுக்கிடல், விக்கல், வாந்தி, இருமல் எனும் குணங்கள் காணும்.

11) செவிமூல சன்னி :
இந்நோயில் காதில் வலி, வீக்கம், காதுகேளாமை, வாய்ப்புண், நாகறுத்தல், தலை கனத்து அரற்றல் எனும் குணங்கள் காணும்.

12) கண்ணிடுக்கு சன்னி :
இந்நோயில் கண்கலங்கி, சிவந்து இடுக்குதல், கண் இமைகள் ஒட்டிக் கொள்ளுதல், தொடை, கீல்கள், எலும்புகளில் அதிக வலி, வாத இழுப்பு எனும் குணங்கள் காணும்.

13) இரத்த வாந்தி :
இந்நோயில் வாந்தியில் கோழையுடன் இரத்தம் கலந்து வெளியேறும்.

14) பிரலாப சன்னி :
இந்நோயில் உடல் எரிச்சல், வலி, மயக்கம், பிதற்றல், மயிர்க்கூச்சம் எனும் குணங்கள் காணும். (பிரலாபம் - பிதற்றல்)

15) நாவாத சன்னி :
இந்நோயில் நா கறுத்து, வறண்டு, முள்போல் இருக்கும்.

16) முப்பிணி சன்னி :
இந்நோயில் வாத - பித்த - கப தோஷங்கள் மூன்றும் ஒருசேர அதிகரித்து ஐம்புலன்களையும் தாக்கி 15 நாட்களுக்குள் கொல்லும்.

17) நிப சன்னி :
இந்நோயில் அறிவு  முற்றிலும் மங்கிப் போயிருக்கும்.

18) சோக சன்னி :
இந்நோயில் பெண்களுக்கு நாபியிலும், மூலத்திலும் நின்று நாதம் தீய்ந்து, பெண்ணுறுப்பை  வீங்கச் செய்யும்.

19) மோகன சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்களோடு உடல் நைந்து போய், உயிர் பிரியும்வரை தெளிவுடன் இருப்பதைப் போன்ற குணத்தை உண்டாக்கும்.

20) நஞ்சு சன்னி :
இந்நோய் பாம்பின் விஷம்போல உடலில் பரவித் தீவிரமாகும்.

21) தீச்சன்னி :
இந்நோயில் கண்கள் சிவத்தல், அதிக சுரம், மூச்சு குறைதல்,  நாவறட்சி, விழிசுழலல், வார்த்தை தடுமாறல் எனும் குணங்கள் காணும்.

22) மந்த சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்களோடு பசிமந்தம், செரியாமை, புளியேப்பம், வயிறு பொருமல் எனும் குணங்கள் காணும்.

23) சண்ட சன்னி :
இந்நோயில் சன்னியின் பொதுக்குணங்கள் தோன்றி நோய் நீங்குவது போலக் காண்பித்து உயிரைப் பறிக்கும்.

24) இயற்கை இரணசன்னி :
இந்நோய் உடலில் தோன்றும் வெம்மையால் பருக்கள் தோன்றி, உடைந்து காய்ந்து, அதன் சீழ் உடலில் ஊறி சன்னியை உண்டாக்கும்.

25) செயற்கை இரணசன்னி :
இந்நோய் வலி பொருந்திய காயத்தினால் புண் உண்டாகி, மருந்துகளால் குணமாகாமல், சீழ் பிடித்துப் புரையோடி, அதிக வேதனையோடு சன்னி சுரத்தை உண்டாக்கும்.

26) சுக சன்னி :
இந்நோய் வயிறு மந்தமாக இருக்கும்போது எண்ணெய் தேய்த்துத் தலை முழுகியபின், தயிரும் சோறும் சேர்ந்து உண்ட பிறகு, பெண்ணுடன் சேர்வதால் வாயு அதிகரித்து சன்னி உண்டாகும்.

27) பிரசவ சன்னி :
இந்நோய் பிரசவ காலத்தில் உண்டாகும் சுரத்தால் உண்டாகும்.

28) சூதக சன்னி :
இந்நோய் மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு உண்டாகும்.

29) தாகபூர்வ சன்னி :
இந்நோயில் பித்தம் மிகுந்து அதிக எரிச்சலுடன் சுரம் உண்டாகி, பின் வாத - கபத்தின் இயல்பால் சீதளம் (குளிர்) கண்டு சன்னி காணும். (தாகம் - எரிச்சல்).

30) சீதபூர்வ சன்னி :
இந்நோயில் வாத மற்றும் கபத்தின் மிகுதியால் சீதளம் உண்டாகி பிறகு பித்தத்தின் இயல்பால் எரிச்சலுடன் சுரமுண்டாகும்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - விக்கல் (Hiccup) நோய்

        கபத்தால் உண்டாகும் நோய்களில் விக்கல் நோயும் ஒன்றாகும். இது “விக்” எனும் ஒலியுடன் எழுவதால் விக்கல் என்றும், “இக்” எனும் ஒலியுடன் எழுவதால் இக்மா என்றும் அறியப்படுகிறது. விக்கல் நோய் மொத்தம் 5 வகைப்படும். இருப்பினும் சில நூல்களில் வேறு விதமாகவும் கூறப்பட்டுள்ளது.

விக்கல் நோய் உண்டாகக் காரணங்கள் :
  1. அதிக இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் காரமான பொருட்களை உண்பதால்
  2. நாட்பட்ட உணவுகளை உண்பதால் வயிற்றில் புளித்து காற்றை பெருக்குவதால்
  3. வாயுவைப் பெருக்கும் உணவுகளை அதிகமாக உண்பதாலும்
  4. மூச்சை அதிகமாக அடக்கி யோகப் பயிற்சிகள் செய்வதால் வயிற்றில் கபம் மிகுந்து வாயுவைப் பெருக்கியும்
  5. சன்னி, அதிக தாகம், அதிக பசியில் வாடுதல், நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் உடையவருக்கும்
  6. அதிக உணவு அல்லது நீரால் இரைப்பை விரிவடைதல்
  7. சாராயம், கள் முதலியவைகளை அதிகமாகக் குடித்தல்
  8. குடலில் அடைப்பு ஏற்படுதல்
  9. வயிற்றில் கட்டி அல்லது புற்று
  10. மார்பில் கட்டி, சோபை முதலியவற்றால்
  11. உணவுக்குழாயில் கட்டி
  12. தொண்டையில் சுருக்கம்
  13. மூளையின் மேல்சவ்வில் ஈளை நோயால் உண்டாகும் சோபை
  14. மூளை பாதிப்பு அல்லது கட்டிகள்
  15. கால்கை வலிப்பு
  16. மூளையின் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு
  17. நீரடைப்பு
  18. உடல் மற்றும் வயிற்றில் அமில ஆதிக்கம்
  19. மூச்சடைப்பு
  20. தொற்றுநோய்களின் தீவிர நிலை

விக்கல் நோயின் வகைகள் :
1) அன்ன தோஷ விக்கல் :
அதிக காரம், அதிக சூடு, எளிதில் சீரணமாகாத உணவை உண்ணுதல் போன்ற காரணங்களால் உண்டாகும். இது செரியா விக்கல் அல்லது சூத்திர விக்கல்  என்றும் அறியப்படும்.

2) அற்ப விக்கல் :
இது சாப்பிடும்போதும், பசிக் களைப்பிலும் அதிகரித்த வாயுவினால் உண்டாகும்.

3) அடுக்கு விக்கல் :
உணவு செரிக்கும்போது சற்று நேரம் பொறுத்து பொறுத்து இலேசான அடுக்கடுக்கான விக்கல், வயிறு உப்புசம், வாந்தி, பேதி, கண்கலங்கல், கொட்டாவி என்னும் குணங்கள் உடையது.

4) மகா விக்கல் :
அதிக விக்கலினால் இரண்டு கண்புருவம், நெற்றிகள் தெறித்து விழுவது போலிருத்தல், கண்ணில் நீர்வடிதல், கண்கலங்கல், உடல் மரத்தல், நினைவு மாறல், உணவு தொண்டையில் அடைபடுதல், கால்களில் நோய், நெஞ்சு உலரல் என்னும் குணங்கள் உடையது. இது மிகவும் கொடியது.

5) நீட்டொலி விக்கல் :
நாபி அல்லது விலா பகுதியில் பிறந்த மேற்கூறிய குணங்களுடன் கொட்டாவி, தேகமுறுக்கல், அதிக சத்தத்துடன் நீண்டு வரும் விக்கல் என்னும் குணங்கள் உடையது.

6) வளி விக்கல் :
அதிக மகிழ்ச்சி, அதிக ஓட்டம், வெயிலில் திரிதல், உடலில் நீர்சத்து வறண்ட பிறகு நீரை பருகுதல் போன்ற காரணங்களால் உண்டாகும்.

7) அழல் விக்கல் :
அதிக பசி, இளைப்பு, கவலை, பித்தத்தை அதிகரிக்கும் உணவு வகைளை உண்பது போன்ற செயல்களால் விக்கல் உண்டாகி, உடல் கன்றிப்போதல், கொட்டாவி, அறிவு மங்கல், அடிக்கடி சினம் என்னும் குணங்களைக் கொண்டிருக்கும்.

8) ஐய விக்கல் :
கபத்தை பெருக்கும் உணவுகளை உண்ணுவதால் மார்பில் கோழை கட்டி விக்கலை உண்டாக்கும். இதனால் மூக்கும், கண்ணும் வெளுத்து, நொந்து தெறிப்பது போன்ற உணர்வும், கண்கலங்கி, உணவு விழுங்க இயலாமை, உணவில் வெறுப்பு, நெஞ்சு உலர்தல் என்னும் குணங்கள் உண்டாகும்.

9) சன்னி  விக்கல் :
நாட்பட்ட நோய்களால் உடல் வலிமை குறைந்து வாத - பித்த - கப தோஷங்கள் ஒருங்கிணைந்து மூச்சுத்திணறல், சோர்வு, உடல் ஓய்ச்சல் முதலிய குணங்களுடன் இந்நோய் உண்டாகும்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ரோக நிதானம் - இருமல் /இரைப்பு (Cough)

            இது கபம் அதிகரித்தல், அசீரணபேதி, வாந்தி, விஷப்பாண்டு, விடாது சுரம், புகை, காற்று, தானியச்சுனை, அதிசீதள கபம் முதலிய காரணங்களால் உண்டாகும். இதனால் அற்ப சுவாசம், மார்பிலும் விலாப்பக்கங்களிலும் குத்தல், திணறித் திணறி மூச்சு வாங்கல், வயிறு உப்புசம்  எனும் குணங்கள் உண்டாகும். இது ஐந்து வகைப்படும்.

இருமல் நோயின் வகைகள் :
1) சுர இருமல் :
இந்நோயில் நாட்பட்ட சுரத்தால் உடல் வற்றி வெளுத்து, கடும் இருமல், தோல் சுருங்கல், மூச்சுத் திணறல், கண் நரம்புகள் பச்சை நிறமாதல் எனும் குணங்கள் காணும்.

2) மது இருமல் :
இந்நோய் மது அருந்துவதால் உண்டாகும். இந்நோயில் நெஞ்சு உலர்தல், தொண்டை வற்றல், உடலில் திணவு, நாபியில் ரணம், ஈரல்கள் வீங்கி வெதும்பல், தலையில் தாக்கிப் பிரமித்தல் எனும் குணங்கள் காணும்.

3) மருந்தீடு இருமல் :
இந்நோய் ஈடு மருந்தால் உண்டாகும். இந்நோயில் உடல் இளைத்தல், உடல் சூடு அதிகரித்தல், உணவில் வெறுப்பு, அடிக்கடி பயப்படுதல், புலம்பல், மயக்கம், வறட்டு இருமல், இரைப்பு, வாயில் புலால் மனம் வீசுதல், நா வழவழப்பு, ஒரே நினைவில் இருத்தல் எனும் குணங்கள் உண்டாகும்.

4) கஞ்சா இருமல் :
இந்நோய் அபின், கஞ்சா, புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதால் உண்டாகும். இந்நோயில் உடலில் ஒளி குறைதல், தொடர் இருமல், பிரமித்தல் எனும் குணங்கள் காணும்.

5) இரத்த இருமல் :
இந்நோயில் காயங்களின் குருதிப் பெருக்கை கண்டு மனம் அஞ்சி, நுரையீரல் மற்றும் இருதயத்தின் செல்கள்  மாறுபட்டு, உடல் தீப்போல எரிந்து, வறட்டு இருமல் காணும்.

ரோக நிதானம் - ஈளை / சுவாசகாசம் (Asthma)

            இந்நோய் கபத்தின் குற்றத்தால் உண்டாகும் நோய்களில் ஒன்றாகும். இந்நோயில் மார்பிலும், தொண்டையிலும் சேர்ந்த கோழையானது வெளியேறும்போது ஓசையுடன் வெளியேறுவதை இருமல் அல்லது ஈளை என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்நோய் 13 வகைப்படும்.

ஈளை நோய் வரக் காரணங்கள் :

  1. குளிர் காற்று - அதிக வெயிலில் இருத்தல்
  2. அதிக சூடான - குளிர்ச்சியான பொருளை உண்ணுதல்
  3. சத்தமாகக் கத்துதல் - பாடுதல்
  4. புழுதி, சுண்ணம், பூநீறு, புகை, அதிக காரம், நறுமணம், துர்நாற்றம் உள்ள பொருட்களை முகர்தல்
  5. இளைப்பு, இரைப்பு, நுரையீரல் புற்று, இதயம் சார்ந்த நோய்களின் தாக்கம்
  6. புகைப்பிடித்தல், கஞ்சா, மதுப்பழக்கம்
  7. நாக்குப்பூச்சி முதலிய கிருமித் தொற்று

ஈளை நோயின் வகைகள் :

1) வாத ஈளை :

இந்நோயில் தொண்டையில் புண்பட்டதுபோலச் சிவத்தல், காதுநோய், காதடைப்பு, மார்புநோய், மூச்சு வாங்கவும் - விடவும் முடியாமை, தொண்டையை அடித்ததுபோல வலி, பெருமூச்சுவிடல், விலாவில் வலி, வாய் ஓயாத இருமல், நுரையுடன் கறுநிறத்தில் கோழையை உமிழச் செய்தல், வாந்தி எனும் குணங்கள் தோன்றும்.

2) பித்த ஈளை :

இந்நோயில் ளிர்ந்த பொருட்களை உண்பதால் இருமல் உண்டாகி, தலைவலி, உடல்வலி, சுரம், தாகம், இருமி இரத்தம் கக்கல், உடல் வறண்டு இளைத்தல், உணவில் வெறுப்பு, மயக்கம், புளியேப்பம், மனம் தடுமாறல் எனும் குணங்கள் தோன்றும்.

3) கப ஈளை :

இந்நோயில் முகம் ஊதல், மூக்கில் நீர் வடிதல், தொண்டையில் புண், வாய் ஓயாது இருமல், மார்பு நொந்து இருமல், கோழை வெளுத்துச் சீழ் போல வெளியேறுதல், பெருமூச்சு, அடிவயிறு நோதல், வயிற்றில் காற்று நிரம்பல், சுரம், மனக் கலக்கம், உடல் இளைத்தல், வாந்தி, உடல்வலி, அடிவயிறு நோதல் எனும் குணங்கள் தோன்றும்.

4) வாதபித்த ஈளை :

இந்நோயில் தொண்டை உலர்ந்து புண், வாய் ஓயாது இருமி இரத்தம் வெளியாதல், காதடைப்பு, காதிரைச்சல், செரியாமை, பேதி, வயிறு உப்பல், மார்பு நோய், மார்பு எலும்பு - முதுகுத்தண்டில் வலி, மூச்சு படபடத்தல் எனும் குணங்கள் தோன்றும்.

5) பக்கமந்தார ஈளை :

இந்நோயில் இடுப்புவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை கம்மல், வயிறு பொருமல் எனும் குணங்கள் தோன்றும்.

6) சுடர் ஈளை :

இது பிள்ளை பெற்ற பின் தாய்க்கு வரும் நோய். இந்நோயில் தொண்டை - மார்பு - மூக்கில் குத்தல், மூக்கில் நீர் வடிதல், நீர்வேட்கை, சுரம், இடைவிடாத இருமல், இழுப்பு, பெருமூச்சு, கண்கள் சிவந்து முட்டுதல் எனும் குணங்கள் தோன்றும்.

7) இழுப்பு ஈளை :

இந்நோயில் மூக்கிலிருந்து வெளியாகும் காற்றில் அனல் வீசும், தொண்டை கட்டி மூச்சு எலி கத்துவது போல இருத்தல், மார்பில் கோழை கட்டி இருமல், வயிறு உப்பல், உணவு செரியாமை, நோய் முற்றிய நிலையில் மூச்சு பாம்பு சீறுவது போல இருத்தல் எனும் குணங்கள் தோன்றும்.

8) இரத்த ஈளை :

இந்நோயில் தொண்டையில் வலி, குரல் கம்மல், வாந்தியில் கோழையும், குருதியும் கலந்து வருதல், வயிறு நோதல், கைகால் ஓய்ச்சல், மார்பிலும் விலாவிலும் ஊசியால் குத்துவது போல வலி, தாகம், குரல் மாற்றம், நெஞ்சில் குறுகுறு சத்தம், பெருமூச்சு எனும் குணங்கள் தோன்றும்.

9) பீனிச ஈளை  :

இந்நோயில் கோழை கோழி இறைச்சி நாற்றத்துடன் வெளியேறுதல், சோர்வு, இரைப்பு, உடல் இளைத்தல், மலமும் சிறுநீரும் கருநிறம் அடைதல், உணவு செல்லாமை, வயிறு பொருமலுடன் வலி, மூக்கில் நீர் வடிதல், உடல் குளிர்தல் எனும் குணங்கள் தோன்றும்.

10) மருந்தீடு ஈளை :

இந்நோய் ஈடு மருந்தால் உண்டாகும். இந்நோயில் உடல் மெலியும், தொண்டை புண், வாய் ஓயாத இருமல், வாய் நாற்றம், தலை கிறுகிறுப்பு, மயக்கம், அதிகபசி எனும் குணங்கள் தோன்றும்.

11) கஞ்சா ஈளை :

இந்நோய் கஞ்சா, அபின், புகையிலை முதலிய பொருட்களைப் பயன்படுத்துவதால் தொண்டை, மூச்சுக்குழாய், நுரையீரல் எனும் உறுப்புகள் வெதும்பி உண்டாகிறது. இந்நோயில் உடல் மெலிந்து, இருமல் தீராமல் நிலைத்து இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல இருமலும், கோழையும் அதிகமாகி, கோழையானது கறுத்து கெட்டியாக வெளியாகும்.

12) மது ஈளை :

இந்நோய் கள், சாராயம் ஆகியவற்றை அதிகமாக அருந்துவதால் உண்டாகிறது. இந்நோயில் உடல் வலிமை குறைந்து, தொண்டை, ஈரல் முதலியன வெதும்பி இருமல் உண்டாகும். மேலும் இடைவிடாது இருமல், மேல்மூச்சு, சோர்வு, இளைப்பு எனும் குணங்கள் தோன்றும்.

13) சுர ஈளை  :

இந்நோய் நாட்பட்ட சுரத்தால் உடல் மெலிந்த நிலையில் உண்டாகிறது.